டிஜிட்டல் போஷாக்கினைப் பேணுதல்
தமது டிஜிட்டல் போஷாக்கினை பேணும் முறை தொடர்பாக சிறுவர்களையும் இளைஞர்களையும் விழிப்புணர்வூட்டும் அதேவேளை, முதியவர்களும் அது பற்றி தெரிந்து வைத்திருப்பது கட்டாயமாகும்.
பின்வரும் உத்திகளை பயன்படுத்தி முதியவர்கள் சிறுவர்களுக்கு வழிகாட்டலாம்.
முன்னுதாரணமாக நடந்து கொள்ளுதல்
ஏனைய விடயங்களை போல, இணையத்தளப்பாவனை தொடர்பாகவும் சிறுவர்கள் தமக்கான முன்மாதிரியை தம்மைச் சூழ உள்ள முதியவர்களிடம் குறிப்பாக பெற்றோர்களிடம் இருந்து பெறுகின்றனர். பெற்றோர் தமது இணையதள பாவனையை நெறிப்படுத்தாதவரை சிறுவர்களிடம் எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது.
சிறுவர்களுடன் வரையறைகள் வகுத்தல்
ஒவ்வொரு பெற்றோரும் பராமரிப்பாளரும் சிறுவர்களின் இணையப்பாவனை தொடர்பான வெளிப்படையான உரையாடலில் ஈடுபட வேண்டும். பார்வையிட தகுந்த அல்லது தகாத உள்ளடக்கங்கள் தொடர்பாக வெளிப்படையான உரையாடலில் ஈடுபடவேண்டும். டிஜிட்டல் திரைகளிலிருந்து தவிர்ந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். ஒரு வாரத்தில் எந்தெந்த வேளைகளில் டிஜிட்டல் திரையைப் பார்க்க வேண்டும் அல்லது தவிர்க்க வேண்டும் என்பது பற்றி சிறுவர்களுக்கு வலியுறுத்த வேண்டும். முக்கியமாக, பெற்றோரும் தமக்கான வரையறைகளை வகுத்துக்கொள்ள வேண்டும். பிள்ளைகள் தமது பெற்றோரும் வரையைறைகளைப் பேணிக்கொள்கின்றார்கள் என்பதை அறிய வேண்டும். சிறுவர்கள் வயதாகின்ற போது தம்மைத் தாமே நிர்வகித்துக் கொள்ளும் வாய்ப்பினை வழங்க வேண்டும்.
காத்திரமான டிஜிட்டல் செயல்பாடுகள்
ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைகளுக்கு காத்திரமான இணையச் செயற்பாடுகளை எடுத்துக் கூற வேண்டும். பார்வையிட பொருத்தமான பொருத்தமற்ற உள்ளடக்கங்களை விளக்க வேண்டும். பெற்றோரும் அவற்றை விளங்கி நடக்க வேண்டும். பெற்றோர், பிள்ளைகளுக்கு திரை நேரத்தை பரிசாக கொடுக்க கூடாது. சில பெற்றோர் பிள்ளைகள் செய்யும் நற்காரியங்களுக்காக அல்லது அவர்களின் அடைவுக்காக அவர்களுக்கு டிஜிட்டல் கருவிகளை பார்வையிட அனுமதிப்பதுண்டு. இது லஞ்சம் வழங்குவது போன்றது. ஆபத்தானது. இதனால் அதிக நேரத்தை பெற்றுக் கொள்வதை இலக்காகக் கொண்டு சிறுவர்கள் கற்றல் போன்ற விடயங்களில் ஈடுபடுவார்கள். இது தவறான முன்மாதிரியாகும்.
தூக்கம், உடற்பயிற்சி, தேக அப்பியாசம்
மேற்குறிப்பிட்டவை இணையத்தை அதிகமாக பயன்படுத்தும் சிறுவர்களுக்கு முக்கியமானதாகும்.
சமூக ஊடகங்களும் மனநல ஆரோக்கியமும்
சமூக ஊடகங்கள் மனநல ஆரோக்கியத்தை பாதிக்கின்றதா இல்லையா என்பது பற்றிய ஆய்வுகள் இணைய உளவியல் கற்கைத்துறையில் முக்கிய இடம்பிடித்துள்ளன. இந்த வினாவுக்கான விடைகள் பல ஆய்வுகளில் கிடைத்துள்ளன. எனினும், எந்த ஒரு ஆய்வையும் சர்வதேச நியமமாக கொள்ள முடியாது. சகல ஆய்வுகளும் குறிப்பிட்ட தேச, வயது, கல்வித் தகமை, சமூகப் பின்புலம் மற்றும் பல்வேறு காரணிகளால் பாதிக்கப்படுகின்றன. எனவே அற்றைப் பொதுமைப்படுத்த முடியாது. எனினும், பெரும்பாலான ஆய்வுகள் சமூக ஊடகப் பாவனையின் பாரதூரமான விளைவுகள் பலவற்றை பற்றி அக்கறையுடன் பேசுகின்றன.
அத்தகைய ஆய்வுகள் பற்றி நோக்குவதற்கு முன்னர் சில அடிப்படையான விடயங்கள் பற்றி நாம் புரிந்து கொள்வது முக்கியமானதாகும். முதலில், நாம் யாவரும் சமூக பிராணிகள். சிறுவர்களும் அவ்வாறுதான். எமது வாழ்வில் மானிடம் தொடர்பான தேவைகளிலிருந்து நாம் விலகி வாழ முடியாது. உணவு, உடை, வீடு, பாதுகாப்பு மற்றும் நண்பர்கள் இல்லாமல் எம்மால் வாழ முடியாது. இது சிறுவர்களுக்கும் பொருந்தும். சிறுவர்களும் தமக்கான நண்பர்களை எங்கோ ஒரு இடத்தில் தேடிக் கொள்கின்றார்கள். தமக்காக நண்பர்கள் இருப்பதை பெருமையாகவும் கருதுகிறார்கள். நட்பும் சமூகத் தொடர்பும் இல்லாதவர்கள் பெரும்பாலும் வாழ்வில் ஏதோ ஒன்றை இழந்து விட்டவர் போல எண்ணுகின்றனர். நல்ல நட்பும் உறவுகளும் எமக்கு மகிழ்ச்சி, காதல், மன அமைதி, நம்பிக்கை, மற்றும் மானசீகப் பாதுகாப்பு என்பவற்றை வழங்குவதால் நாம் அவற்றை தேடிக் கொண்டே இருக்கின்றோம். இத்தகைய நட்புத் தேடல் ஆரோக்கியமானதாக இல்லாதபோது, அது வருத்தமளிக்கும் அனுபவத்தை தந்துவிடுகின்றன.
சமூக ஊடகம் என்பது மாயையான வர்த்தக உலகமாகும். சமூக ஊடகம் தரும் புதிய உறவுகள் அன்றாட வாழ்வில் எமக்குள்ள நட்புகளை பிரதி ஈடு செய்ய முடியாது. நிஜ வாழ்வில் எமது உறவுகளும் நண்பர்களும் எம்மை விட தூரத்தில் இருக்கின்றார்கள். ஆனால், சமூக ஊடக நண்பர்கள் நமது காற்சட்டைக்குள் இருக்கின்றார்கள். நாம் செல்லும் இடமெல்லாம் அவர்களும் நம்முடன் வருகின்றார்கள். நம்முடனேயே உறங்குகின்றார்கள். நம்மை எப்போதும் பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். எனவே, அவர்கள் நமக்கு மிகவும் நெருக்கமாக இருக்கின்றார்கள். நிஜவுலக நண்பர்கள் அவ்வாறல்ல. அவர்கள் பெரும்பாலும் தூரத்திலிருக்கின்றார்கள். சமூக ஊடக நண்பர்களின் அண்மித்த நிலை எம்மை உளவியல் ரீதியாக பாதிக்கும் விடயங்களில் ஒன்றாகும். அண்மித்த நண்பர்களிடம் எமக்கு மானசீக ரீதியான தேவை அதிகம். அவர்களிடம் நாம் பலவற்றை உடனுக்குடன் எதிர்பார்க்கின்றோம். அவர்கள் எமது பதிவுகளுக்கு பின்னூட்டல்கள் வழங்காத போது அது எம்மை அதிகம் பாதிக்கின்றது. அல்லது தர்க்கரீதியான பின்னூட்டங்களை வழங்கும் போதும் இவ்வாறுதான். சமூக ஊடகங்களின் மௌனம் கவலை தரக்கூடியது.
பயன்கள்
சமூக ஊடகங்கள் பல நன்மைகளைக் கொண்டுள்ளன. கல்வி, தகவல், தொழில்துறை, உளவளம், ஆளுமைவிருத்தி என பல துறைகளில் இதன் நன்மைகளை காண முடியும். வித்தியாசமான துறைகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் சமூக ஊடகங்கள் வெவ்வேறு குழுக்களுடன் தொடர்பாடலை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. வலைப்பின்னலையும் பிரதிநிதித்துவத்தையும் வழங்குகின்றன. புதிய தகவல்களையும் செய்திகளையும் உடனுக்குடன் வழங்குகின்றன. கருத்து வெளிப்பாட்டுக்கான களத்தை பெற்றுக்கொடுக்கின்றன (Uhls et al, 2017). உறவுகளை பேணிக்கொள்வதற்கான வாயில்களை திறந்து விடுகின்றன. சமூகத் தொடர்புகளை பாரியளவில் ஏற்படுத்திக் கொடுக்கின்றன. புதிய வாய்ப்புகளை ஏற்படுத்துகின்றன (Anderson and Jiang, 2018). பால்நிலை, வயது, இனம், ஏனைய சமூக வித்தியாசங்கள் காரணமாக தனிமைபட்டுள்ள இளையவர்களுக்கு மன அமைதியை தேடித் தருவதாக அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் (2022) குறிப்பிடப்பட்டுள்ளது.
வைபர்ரா ((Ybarra) மற்றும் நண்பர்கள் (2015) மேற்கொண்ட ஆய்வு இதனை உறுதி செய்கின்றது. பால்நிலை வித்தியாசங்கள் அடிப்படையில் ஓரங்கட்டப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு நண்பர்களிடம் இருந்து ஆறுதல், உள அமைதி, மற்றும் உதவிகளை பெற்றுக் கொள்ள சமூக ஊடகங்கள் உதவுகின்றன. பர்ஜர் (Berger) மற்றும் நண்பர்கள் 2022 இல் மேற்கொண்ட ஆய்வில் நிற அடிப்படையில் ஓரங்கட்டப்பட்ட இளம் தலைமுறையினருக்கான சமூக உதவிகளை பெற்றுக்கொள்ள சமூக ஊடகங்கள் உதவுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாய்வில் நிற அடிப்படையில் வித்தியாசமான சுமார் 10 பேருள் குறைந்தது 7 பேராவது தமக்கான சமூக உதவியை சமூக ஊடகங்களில் பெற்றுக் கொள்வதாக அறியப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் வாழும் பல இளைஞர்கள் யுவதிகள் தமக்கான அடையாளத்தை சமூக ஊடகங்களின் வாயிலாக பெற்றுக் கொள்கின்றனர். சமூக ஊடகங்கள் தமக்கான அங்கீகாரத்தை நட்புடைமையை இள வயதினருக்கு வழங்குவதாக பல ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெவ் ஆய்வு நிலையத்தின் ஆய்வுகளின் படி உதவி தேவைப்படுகின்ற ஓரங்கட்டப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு சமூக ஊடகங்கள் சமூக உதவியை பெற்றுக் கொடுக்கின்றன. அதேபோன்று, இளம் தலைமுறையின் படைப்பாற்றல் திறனை உலகறியச் செய்ய சமூக ஊடகங்கள் உதவுகின்றன. கல்வி, தொழில் வாய்ப்பு என்பவற்றையும் சமூக ஊடகங்கள் ஏற்படுத்திக் கொடுக்கின்றன. விழிப்புணர்வு ஏற்படுத்தல் மற்றும் சமூக வலைப்பின்னல்களை பேணுதல் என பல்வேறு மேலதிக நன்மைகள் சமூக ஊடப்பாவனையின் மூலம் கிடைக்கின்றன.
மூளை வளர்ச்சி
சமூக ஊடகங்கள் மன நலனை பாதிக்கும் விதம் தொடர்பாக ஆராயும் போது மூளை வளர்ச்சி பற்றி தெரிந்து கொள்வது முக்கியமானதாகும். புஹுர்மன் – Fuhrmann (2015) மற்றும் Blackmore (2014) ஆகியோர் மேற்கொண்ட ஆய்வில் 10 தொடக்கம் 19 வயது வரையான காலப்பகுதியை மூளை வளர்ச்சியின் பொற்காலமாகவும் சிக்கலான காலப்பகுதியாகவும் கருதுகின்றனர். இக்காலத்தில் இளையவர்கள் ஆபத்துக்களை சந்திப்பதை பொருட்படுத்துவதில்லை. மாறாக எந்த ஒரு ஆபத்தான விடயத்தையும் பரீட்சித்துப் பார்க்க முற்படுகின்றனர். மனநலன் அதிக தளம்பல் நிலையை சந்திக்கின்றது. இளையவர்கள் தமக்கான அடையாளத்தை கட்டமைக்கின்றார்கள். சுய கௌரவம் பற்றி சிந்திக்கத் தொடங்குகின்றார்கள். சக தோழர்களின் கருத்துக்கள் சமூகத்தாக்கம் என்பனவும் அவர்களின் மூளை வளர்ச்சியை பாதிக்கின்றன. தம்மைச் சுற்றியிருப்பவர்களிடம் தமக்கான அங்கீகாரத்தை எதிர்பார்க்கின்றனர். தமது உடை, உடற்தோற்றம், சிகை அலங்காம் தமது அணிகலன்கள் என்பன பற்றிய நண்பர்களின் மதிப்பீடுகள் சிறுவர்களை அதிகம் பாதிக்கின்றன. நல்ல கருத்துக்கள் அதிக மனத்திருப்தியை வழங்குகின்றன. குறிப்பாக, “மகிழ்ச்சியான ஹார்மோன்கள்” ஆக்ஸிடாக்ஸின் மற்றும் டோபமைன் ஏற்பிகள் மூளையின் வென்ட்ரல் ஸ்ட்ரைட்டம் என்று அழைக்கப்படும் ஒரு பகுதியில் பெருகி, மற்றவர்களின் கவனத்திற்கும் பாராட்டுதலுக்கும் கூடுதல் உணர்திறன் அளிக்கிறது. “சமூக ஊடக செயல்பாடு வென்ட்ரல் ஸ்ட்ரைட்டத்துடன் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது என்பதை நாங்கள் அறிவோம்” என்று அமெரிக்க உளவியலாளர் சங்கத்தின் தலைமை அறிவியல் அதிகாரி மிட்ச் பிரின்ஸ்டீன் கூறினார். “நாங்கள் சமூக வெகுமதிகளை அனுபவிக்கும் போதெல்லாம் இந்த பகுதி டோபமைன் மற்றும் ஆக்ஸிடாக்ஸின் பெறுகிறது.”
அத்தோடு, சக நண்பர்களுடன் தம்மை ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்குகின்றனர். இதனாலேயே Crone மற்றும் Kanjith (2018) ஆகியோர் இக்காலப்பகுதியில் சமூக ஊடகத்தொடர்பாடல் செயல்பாடு மற்றும் சமூக ஊடகத்தின் கவர்ச்சி என்பன சிறுவர்களை அதிகம் பாதிப்பதாக குறிப்பிடுகின்றனர். அதிக சமூக ஊடகப் பாவனை எமது மூளைக்கு ஊக்க சக்தியை வழங்குகின்றன. மூளைக்கு களிப்பினை வழங்குகின்றன. சூதாட்டத்தின் போதும் போதையின் போதும் ஏற்படும் நடத்தை மாற்றத்தைப்போல அதிக சமூகப் பாவனையின் போதும் நடத்தை மாற்றம் ஏற்படுகின்றது. சமூக ஊடகங்கள் மூளையின் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன (கஸ் மற்றும் கிரிப்பித் – Kuss and Griffith, 2011). எனவே, நல்ல உள்ளடக்கங்களை இக்காலப்பகுதியில் பெற்றுக்கொள்வது மிகவும் கட்டாயமாகும். அத்தோடு, பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இக்காலத்தில் மூளை வளர்ச்சி தொடர்பான கரிசனைகள் அதிகம் தேவைப்படுகின்றன.- Vidivelli