ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்த “உயிர்த்த ஞாயிறு அனர்த்தம் -மறைகரம் வெளிப்பட்டபோது” மற்றும் “நாங்கள் வேறானவர்கள் அல்ல மண்ணின் வேரானவர்கள் – முஸ்லிம்கள் மீது கட்டமைக்கப்பட்ட சந்தேகங்களை களைதல்” ஆகிய இரு மொழிபெயர்ப்பு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு ஜனவரி 30 ஆம் திகதி, வியாழக்கிழமை கொழும்பு -7இல் அமைந்துள்ள இலங்கை மன்றக் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
பேராசிரியர் ராஜன் ஹூல் ஆங்கிலத்தில் எழுதிய “SRI LANKA’S EASTER TRAGEDY .Wheh the deep state gets out of its depth” என்ற ஆங்கில நூலை முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தமிழில் மொழிபெயர்த்திருந்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஆங்கிலத்தில் எழுதி வெளிவந்த “WE ARE A PART NOT APART -Demystifying Myths Against Muslims of Sri Lanka” என்ற நூலின் தமிழாக்கம் ஆகும் .
இந்த நூல்கள் இரண்டினதும் ஆய்வுரையை பேராசிரியர் எம்.எஸ். எம் அனஸ் நிகழ்த்தினார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைர்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், சிரேஷ்ட ஊடகவியலாளர் மஹிந்த ஹத்தக்க, ஸ்ரீ லங்காமுஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் தலைவர் என் .எம்.அமீன் ஆகியோரும் இந்நிகழ்வில் உரையாற்றினர்.
இவ்விரு நூல்களும் அண்மைக் காலத்தில் இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உள்ளிட்ட அதிர்ச்சியான சம்பவங்களையும், அச்சுறுத்தல்களையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்டவையாகும். இந்நிகழ்வில் இடம்பெற்ற சில முக்கிய உரைகளின் தொகுப்பு வருமாறு:
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.ஸுஹைர்
இந்நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணியும் தேசிய சூறா சபையின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எம்.ஸுஹைர் உரையாற்றுகையில்,
ரவூப் ஹக்கீம் எழுதியுள்ள நூலில் கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் கட்டுரைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இலங்கையில் முஸ்லிம்களின் சனத்தொகை உயர்வடைந்து செல்கிறது எனும் குற்றச்சாட்டைக் குறிப்பிடலாம். இந்த குற்றச்சாட்டை முறியடிப்பதற்கு ரவூப் ஹக்கீம் ஆதாரமான புள்ளிவிபரங்கள் மூலம் இந்நூலில் பதிலளித்துள்ளமை வரவேற்கத்தக்கதாகும்.
முஸ்லிம் சமூகத்தின் வாழ்வொழுங்கு இந்நாட்டின் பெரும்பான்மை மக்களின் கலாசாரத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கும் முஸ்லிம்களின் ஆடைக்கலாசாரம் தொடர்பான விமர்சனங்களுக்கும் ரவூப் ஹக்கீம் சிறப்பாகவும் தெளிவாகவும் பதிலளித்துள்ளார். சுமார் 4000 வருடங்களுக்கும் மேலாக முஸ்லிம்கள் இலங்கையில் பெரும்பான்மை சமூகத்துடன் சமாதானமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து வருகின்றனர் என்பதை வரலாற்று ஆதாரங்கள் மூலம் நூலாசிரியர் விளக்கியுள்ளார்.
அதேபோன்றுதான் பேராசிரியர் ராஜன் ஹூல் எழுதிய ‘மறைகரம் வெளிப்பட்ட போது’ எனும் நூலும் முக்கியமானதாகும். இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ள பல விடயங்களை கடந்த காலங்களில் நான் பல்வேறு உரைகளிலும் கட்டுரைகளிலும் சுட்டிக்காட்டியுள்ளேன். இந்நூலை எழுதிய பேராசிரியர் ராஜன் ஹூல் பலத்த உயிரச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருபவர். இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி தொடர்பில் பல்வேறு உண்மைகளை அவர் இந்த நூல் மூலம் வெளிக் கொணர்ந்துள்ளார். அரசாங்கத்தின் உள்ளிருந்து செயற்படும் நிழல் அரசாங்கமொன்று இந்த தாக்குதலின் பின்னணியில் இருப்பதாக அவர் இந்நூலில் வாதிடுகிறார். இந்நூலை என்.எம்.அமீன் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்துள்ளமை பாராட்டுக்குரியதாகும் என்றார்.
சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்
இந்நிகழ்வில் உரையாற்றிய இலங்கைத் தமிழரசுக்கட்சியின் ஊடகப்பேச்சாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை ஒழுங்கமைத்தவர்கள் யார் என்பதை அடையாளம் காண்பதற்கான போதுமான தகவல்கள் உள்ள நிலையில் அவற்றை விசாரணை செய்து வெளிப்படுத்தாது விட்டால் உண்மைகளை கண்டறிவதற்கான முதுகெலும்பு அரசாங்கத்துக்கு இல்லையென்றே பொருள்படும் எனக் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் பேசுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமான பாராளுமன்ற விசாரணைக்குழுவின் உறுப்பினர்களாக நானும், ரவூப் ஹக்கீமும் இருந்தோம். எங்களுடைய குழுவின் விசாரணை அறிக்கை தயாரிக்கப்படுவதற்கு முன்னதாக பேராசிரியர் ராஜன் ஹூலின் நூல் வெளியிடப்பட்டது. பாராளுமன்றக்குழுவின் விசாரணை அறிக்கையின் நிறைவேற்றுச் சுருக்கத்தில் நாட்டில் ஒருவருட இடைவெளியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வலிமையான ஆட்சியாளர் ஒருவர் உருவாக்கப்படுவதற்கான சூழலை தோற்றுவிப்பதை நோக்காக கொண்டா உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்ற கேள்வியை எழுப்பியுள்ளோம். அதற்கு சில வருடங்கள் பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் செயலாளராக இருந்த அசாத் மௌலானா அது தான் நடைபெற்றது என்று தனது சாட்சியத்தில் கூறியிருக்கின்றார். இந்த விடயங்களையே பேராசிரியர் ராஜன் ஹூலும் வெளிப்படுத்தியுள்ளார்.
அத்துடன், இனக்குழுமமொன்றின் தலைவராக இருந்துகொண்டு, ரவூப் ஹக்கீம் தன்னுடைய நூலில் பக்கச்சார்பற்ற வகையில் சமூகத்தில் பேசப்பட வேண்டிய விடயங்களை, வெளிப்படுத்தியிருக்கின்றார். நூல் முழுவதும் பக்கச்சார்பின்றி விடயங்களை தொகுத்துச் சென்றிருக்கின்றார். இதுமிகவும் கடினமானதொரு பணியாகும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விடயத்தில் தாக்குதல்களை தடுப்பதற்கு தவறியவர்கள் உயர்நீதிமன்ற விசாரணைகளின்போது அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். வேறு விசாரணைகளின்போதும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால் இதுவரையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை ஒழுங்கமைத்தவர்கள் அடையாளம் காண்பிக்கப்படவில்லை. அவ்வாறான நிலைமைகள் தொடர்வது எவ்வாறு என்ற கேள்விகள் உள்ளன என்றார்.
ரவூப் ஹக்கீம் எம்.பி.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் உரையாற்றுகையில், நாட்டின் பெரும்பான்மை மக்களின் தொகையை முஸ்லிம்களின் சனத்தொகை விகிதாசாரம் விஞ்சிப்போய்விடும் என்பது விஞ்ஞானபூர்வமாக உறுதியான விடயமல்ல.
பேர்ட்ரம் ரசல் எனும் தத்துவாசிரியர் ‘இந்த உலகம் தீவிரவாதிகளாலும், முட்டாள்களாலும் நிறைந்ததாக இருந்தாலும் அவர்கள் எல்லோரும் தம்மைப் பற்றி மிகத்திடகாத்திரமான உணர்வுடன் இருக்கின்றார்கள். ஆனால் அறிவுள்ளவர்கள் எப்போதும் சந்தேகத்துடன் வாழ்கின்றார்கள்’ என்று கூறுகின்றார். முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் இந்த வார்த்தைகள் மிகவும் பொருத்தமானவையாக இருக்கின்றன.
சமூகத்தில் தீவிரவாத சிந்தனைகளுடன், முட்டாள்தனமான சிந்தனையுடன் இருப்பவர்கள் உள்ளார்கள். அவர்கள் தங்களுடைய விடயத்தில் உறுதியாக இருக்கையில் நாங்கள் தான் ஒவ்வொரு விடயத்தினையும் அச்சத்துடன், பீதியுடனும் பார்கின்றோம். இந்த மனோநிலையில் இருந்து நாங்கள் மாறவில்லை என்றால் எமது அடுத்த சந்ததியினருக்கான சமூகக் கட்டமைப்பினை அமைப்பதில் நாங்கள் தவறிப்போவோம்.
முஸ்லிம்களாக நாம் தற்பாதுகாப்பு நிலைப்பாட்டை எடுக்கும் காரணத்தினால் பல்வேறு சந்தேகங்களுக்கு எதிரான கருத்துக்களை முன்வைப்பதில் தவறியிருக்கின்றோம்.
முஸ்லிம்களின் சனத்தொகை விகிதாசாரம் இந்த நாட்டின் பெரும்பான்மையை விஞ்சிப்போய்விடும் என்றொரு அச்சம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக விஞ்ஞான பூர்வமாக உறுதி செய்வதற்காக சனத்தொகைவளர்ச்சி விஞ்ஞானம் சம்பந்தமான பேராசிரியர் திசாநாயக்கவுடன் நீண்ட கலந்துரையாடல்களைச் செய்து அதன்மூலமாகப் பெற்றுக்கொண்ட தகவல்களின் அடிப்படையில் விடயங்களை முன்வைத்துள்ளேன். இந்த விடயங்கள் சமூக மயப்படுத்தப்பட வேண்டும் என்பதோடு பெரும்பான்மை மக்களுக்கும் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்றார்.
பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ்
முஸ்லிம்கள் தொடர்பில் சிங்கள மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டுள்ள பல்வேறு நச்சுக்கருத்துக்களை எவ்வாறு அவர்களின் மனதிலிருந்து அகற்றலாம் என்ற முயற்சியின் வெளிப்பாடாகவே ரவூப் ஹக்கீம் அவர்களின் நூல் அமைந்துள்ளது. அந்த வேட்கையில் தான் அவர் இந்நூலை எழுதியுள்ளார்.
முஸ்லிம் சமூகம் தன்னைத்தானே சுயவிசாரணை செய்து கொள்ள வேண்டியுள்ளது. இலங்கையில் வாழும் பன்மைச்சமூகத்தின் மத்தியில் முஸ்லிம் சமூகத்தை வெற்றிகரமான சமூகமாக கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. என்னைப் பொறுத்தவரையில் முஸ்லிம்கள் இன்னமும் அதற்குத் தயாராகவில்லை என்றே கருதுகிறேன்.
ராஜன் ஹூல் எழுதிய நூல் முஸ்லிம் சமூகத்தின் உள்ளக விவகாரங்கள் குறித்தும் உயிர்த்த ஞாயிறு தா
க்குதலின் பின்புலம் பற்றியும் விரிவாகப் பேசுகிறது. இதன் பின்னணியில் உண்மையில் என்ன நடந்தது என்பதை முஸ்லிம்கள் சார்பில் நின்று பேராசிரியர் எழுதியுள்ளார். குறிப்பாக காத்தான்குடி பற்றி இந்நூலில் பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அங்கு நிலவும் சூபி வஹாபிய முரண்பாடு பற்றி எழுதப்பட்டுள்ளது. சஹ்ரான் எப்படி ஓர் ஆயுததாரியாக மாறினான் என்பது பற்றி இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தவ்ஹீத் ஜமாஅத்துக்கள் பற்றியும் இதில் உள்ளது. சாதாரண மொழியில் சொல்வதானால் முஸ்லிம் சமூகத்தின் உள்ளக விவகாரங்களை நூலாசிரியர் போட்டுடைத்துள்ளார் என்றுதான் சொல்லலாம். இவற்றை நாம் இனியும் மறைத்துப் பிரயோசனமில்லை. நமக்குள் உரையாடலுக்கு உட்படுத்தி தீர்வுகளை நோக்கி நகர வேண்டும். அதனைத்தான் இந்த இரண்டு நூல்களும் சொல்ல வருகின்றன என்றார்.
இங்கு உரையாற்றிய சிரேஷ்ட ஊடகவியலாளர் மஹிந்த ஹத்தகவும் இந்நூல்களின் உள்ளடக்கம் தொடர்பில் தனது அவதானத்தைப் பகிர்ந்து கொண்டார்.
மறைகரம் வெளிப்பட்டபோது நூலின் மொழிபெயர்ப்பாளர் என்.எம். அமீன் ஏற்புரையாற்றினார்.- Vidivelli