ஹஜ் யாத்திரையை வினைத்திறனாக ஒழுங்கமைக்க ஹஜ் குழு நடவடிக்கை
பெப்ரவரி 14க்கு முன் யாத்திரிகர்களை பதிவு செய்யுமாறும் அழைப்பு
எம்.ஆர்.எம்.வசீம்
ஹஜ் யாத்திரை செல்வதற்கு பதிவு செய்தவர்கள் பெப்ரவரி 14ஆம் திகதிக்கு முன்னர் தங்களது முகவர் நிறுவனங்களை சந்தித்து பயண ஏற்பாடுகளை பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். அத்துடன் தெரிவு செய்யப்பட்டுள்ள 92 முகவர் நிறுவனங்களைத் தவிர வேறு எந்த முகவர் நிறுவனங்களுக்கும் தங்களின் கடவுச்சீட்டை வழங்கவேண்டாம் என ஹஜ் குழுவின் தலைவர் ரிஸ்வி மிஹுலார் தெரிவித்தார்.
எதிர்வரும் ஹஜ் யாத்திரைக்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஊடகங்களை தெளிவுபடுத்தும் செய்தியாளர் சந்திப்பு வெள்ளிக்கிழமை முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு விளக்கமளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
இந்த வருடம் ஹஜ் யாத்திரைக்காக சவூதி ஹஜ் அமைச்சிடமிருந்து இலங்கைகு 3500 கோட்டாக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அந்த கோட்டாக்களை பெற்றுக்கொள்ள 117 ஹஜ் முகவர் நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன. அவர்களின் விண்ணப்பங்கள் சுயாதீன குழுவொன்றினால் பரீட்சிக்கப்பட்டு, 92 முகவர் நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டன. நேர்முகப்பரீட்சையில் அவர்களுக்கு வங்கப்பட்ட புள்ளிகளின் அடிப்டையில் ஹஜ் கோட்டாக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. அதன் பிரகாரம் ஆகக்குறைந்த கோட்டாவாக 20 கோட்டாவும் ஆகக்கூடிய கோட்டாவாக 49 கோட்டாவும் புள்ளிகள் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன.
ஹஜ் வணக்க வழிபாட்டுக்கு செல்வதற்கு இதுவரை 4400 பேர் பதிவு செய்துள்ளனர். முன்னுரிமையின் அடிப்படையில் இவர்களுக்கான ஹஜ் விசா வழங்கப்படும். எஞ்சியவர்களின் பெயர் காத்திருப்பு பட்டியலில் இருக்கும். 3500 பேரில் யாராவது ஹஜ் யாத்திரை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டால், அந்த இடத்துக்கு காத்திருப்பு பட்டியலில் இருந்தே தெரிவு செய்யப்படுவார்கள்.
அத்துடன் ஹஜ் யாத்திரைக்கு செல்வதற்கு பதிவு செய்தவர்கள் மிக விரைவாக தங்களின் முகவர் நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு தேவையான அனைத்து ஆவண நடவடிக்கைகளையும் பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். எதிர்வரும் 14ஆம் திகதிக்குள் ஹஜ் யாத்திரிகர்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களும் பூர்த்திசெய்யப்பட்டு சவூதி ஹஜ் அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். அதனால் யாத்திரிகர்கள் தாமதிக்காது இது தொடர்பில் விரைவாக செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஹஜ் யாத்திரிகர்களுக்கு தேவையான சேவையை வழங்க சவூதியில் உள்ள பிரதன மூன்று சேவை நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன. அந்த மூன்று நிறுவனங்களின் சேவையை எமது சுயாதீன குழு பரீட்சித்து பார்த்து, அதில் ஆகச் சிறந்த சேவையை வழங்குவதற்கு முன்வந்திருந்த அல் பைத் நிறுவனத்தின் சேவையை எமது சுயாதீன குழு அனுமதித்தது. யாத்திரிகர்கள் வழங்கும் பணத்துக்கு தகுந்த சேவையை அவர்கள் வழங்குகிறார்களா என பார்ப்பதற்கு அவர்கள் வழங்கும் சேவையை எழுத்துமூலம் பெற்று அவர்களுடன் ஒப்பந்தம் செய்ய இருக்கிறோம்.
மினாவில் விசேட தங்குமிட வசதி
ஒவ்வொரு வருடமும் ஹஜ் யாத்திரிகர்கள் மினாவில் தங்கும் காலப்பகுதியிலேயே பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொள்கின்றனர். மினாவில் ஹாஜிகள் தங்குவதற்கு ஏ,பி,சீ என வலயங்கள் பிரிக்கப்பட்டிருக்கின்றன. அதில் சீ வலயம் கட்டணம் குறைந்ததாகும். அதனால் அதிகமானவர்கள் அங்கு தங்கச் செல்வதால் அங்கு நெருக்கடி நிலைமைகள் ஏற்படுகின்றன. அதனால் இந்த முறை நாங்கள் 2ஆம் வலயத்தில் பீ தரத்தில் தங்குவதற்கு தீர்மானித்திருக்கிறோம். அதில் நடுத்தரமான வசதி வாய்ப்புக்கள் செய்து கொடுக்கப்படும். சீ வலயத்தைவிட சிறியதொரு தொகை கட்டணம் அதிகமாக இருக்கும். தூங்குவதற்கு சோபா கட்டில் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
ஒரு ஹஜ் குழுவுக்கு ஒரு பஸ்
அதேபோன்று அரபாவில் இருந்து முஸ்தலிபா மற்றும் மினாவுக்கு பயணிப்பதற்கு ஒரு ஹஜ் குழுவுக்கு ஒரு பஸ் அடிப்படையில் தயார்படுத்தி இருக்கிறோம். இதன்மூலம் ஹாஜிகள் அனைவரும் ஒரே நேரத்தில் குறித்த இடங்களுக்கு செல்ல முடியுமாக இருக்கிறது. கடந்த காலங்களில் ஒரு பஸ் இரண்டு மூன்று தடவைகள் ஹாஜிகளை இந்த இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டி இருந்ததால், பல்வேறு அசெளகரிய நிலை மற்றும் நேர வீண் விரயங்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்தன. இந்த நடவடிக்கை மூலம் கட்டணம் சற்று அதிகரிக்கும் என்றாலும் அங்கு ஏற்படும் கடுமையான நெருக்கடி நிலைகளை தவிர்த்துக்கொள்ளவே இந்த தீர்மானங்களை எடுத்திருக்கிறோம்.
முகவர் நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தை வாசித்து கையொப்பமிடவும்
ஹஜ் யாத்திரிகர்கள் முகவர் நிறுவனங்களுடன் பயண வசதிகள் தொடர்பில் ஒப்பந்தம் கைச்சாத்திடும்போது குறித்த ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் விடயங்களை நன்கு வாசித்துப் பார்த்து கைச்சாத்திட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால், ஹஜ் கடமைக்குச் சென்றபின்னர் அங்கு அவர்களுடன் முரண்படுவதில் பயனில்லை. அதேநேரம் முகவர் நிறுவனங்கள் வாக்குறுதி அளித்த வசதி வாய்ப்புகளில் குறைபாடு செய்திருந்தால், அது தொடர்பில் ஹாஜிமார்கள் எங்களிடம் முறையிடலாம். அதனால் முகவர் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடும் போது நன்கு வாசித்து, சந்தேகங்களை தெளிவுடுத்திக்கொண்டு கைச்சாத்திட வேண்டும்.
ஹாஜிகளை ஒன்றிணைத்து
வட்ஸ்அப் குழு
இம் முறை இலங்கையில் இருந்து 3500 பேருக்கு ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்ல அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. அவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து, வட்ஸ்அப் குழுவொன்றை அமைக்க இருக்கிறோம். இதன் மூலம் அவர்களுக்கு ஏதாவது தெரிவிக்க வேண்டி இருந்தால் நாங்கள் இந்த வட்ஸ்அப் குழுமம் ஊடாக அறிவிப்போம். அதேநேரம் அவர்களுக்கு அங்கு ஏதாவது பிரச்சினை இருந்தால் அவர்களும் எங்களுக்கு இந்த வட்ஸ்அப் குழுமத்தினூடாக தெரிவிக்க முடியும்.
கோட்டாவை மாற்ற முடியாது
ஹஜ் முகவர் நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கும் ஹஜ் கோட்டாவை முகவர் நிறுவனங்கள் வேறு முகவர் நிறுவனங்களுக்கு கை மாற்ற முடியாது. ஏதாவது முகவர் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் கோட்டாவின் அடிப்படையில் அவர்களுக்கு ஹாஜிமார்களை அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டால், அந்த கோட்டாவை வேறு நிறுவனங்களுக்கு கைமாற்ற முடியாது. நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் கோட்டா ஹஜ் குழுவுக்குரியதாகும். அதனால் அந்த கோட்டாக்களை ஹஜ் குழுவுக்கே மீள ஒப்படைக்க வேண்டும்.
அனுமதிக்கப்பட்ட முகவர்களிடம்
மாத்திரம் கடவுச்சீட்டை ஒப்படைக்கவும்
ஹஜ் யாத்திரிகர்களை அழைத்துச்செல்ல 92 முகவர் நிறுவனங்களுக்கே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஹஜ் யாத்திரை மேற்கொள்ள அனுமதி கிடைக்கப்பெற்றவர்கள் இந்த 92 முகவர் நிறுவனங்களில் தாங்கள் விரும்பிய முகவர் நிறுவனத்திடம் மாத்திரம் தங்களின் கடவுச்சீட்டை ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் வேறு முகவர் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டாம். இதன் மூலம் உங்களின் ஹஜ் பயணத்துக்கான கட்டணம் அதிகரிக்கப்படலாம். அதனால் இதுதொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டும்.
ஹஜ் கடமையை
வியாபாரமாக்க வேண்டாம்
இஸ்லாத்தின் கடமைகளில் இறுதி கடமையாகவே ஹஜ் கடமை அமைந்துள்ளது. அதனால் ஹஜ் யாத்திரை மேற்கொள்பவர்களுக்கு அரசாங்கம் பல்வேறு வசதிகளையும் சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதனை நாங்கள் துஷ்பிரயோகம் செய்துவிடக்கூடாது. குறிப்பாக ஹஜ் பயணத்தை முடித்துவிட்டு வரும்போது எமக்கு அனுமதிக்கப்பட்ட பொருட்களை மாத்திரம் எடுத்துவர வேண்டும். ஏனெனில் விமான நிலையத்தில் பரிசோதனை பிரிவுகளில் ஹஜ் கடமைக்குச் சென்று வருபவர்களை மதித்து, அங்கு எமது பொருட்கள் பாரியளவில் பரிசோதிக்கப்படுவதில்லை. இதனை பயன்படுத்திக்கொண்டு யாரும் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. இதனால் எதிர்காலத்தில் பல்வேறு அசெளகரியங்களுக்கு நாம் முகம்கொடுக்க நேரிடலாம். அதனால் ஹஜ் கடமைக்கு சென்றவர்களும் முகவர் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் இந்த கடமையை வியாபாரமாக்காமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அதேபோன்று உங்களுடை பொருட்களை தவிர வேறு யாருடைய பொருட்களையும் நீங்கள் விமான நிலையத்தில் பெற்றுக்கொள்ள வேண்டாம்.
முகவர் நிறுவனங்களுக்கு பதக்கம்
ஹஜ் கடமை முடிந்த பின்னர் ஹஜ் முகவர் நிறுவனங்களின் சேவை தொடர்பில் ஆராய்ந்து பார்த்து, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு தங்கம், வெள்ளி மற்றும் வெங்கல பதக்கம் வழங்கி கெளரவிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். சிறந்த சேவையை வழங்கும் நிறுவனங்களுக்கு தங்க விருது கிடைப்பதுடன் அடுத்த வருடம் ஹஜ் சேவைக்கு அந்த முகவர் நிறுவனத்துக்கு அதிக கோட்டாக்களை பெற்றுக்கொள்ள உதவியாக அமையும் என்றார். – Vidivelli