பலஸ்தீனத்தை உருவாக்காமல் இஸ்ரேலுடன் எந்தவித இராஜதந்திர உறவுகளும் கிடையாது
சவூதி அரேபியா திட்டவட்டமாக தெரிவிப்பு
(எம்.ஐ.அப்துல் நஸார்)
சுதந்திர பலஸ்தீன அரசிற்கான தனது ஆதரவை சவூதி அரேபியா மீண்டும் வலியுறுத்தியதுடன், கிழக்கு ஜெரூசலத்தைத் தலைநகராகக் கொண்ட அத்தகைய அரசை உருவாக்கும் வரை இஸ்ரேலுடன் எந்தவித இராஜதந்திர உறவுகள் இருக்காது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்கா காஸா பகுதியை கைப்பற்றும் என்று அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பின்னர் சவூதி அரேபியாவின் அறிக்கை வந்துள்ளது.
நேற்று புதன்கிழமை வெளியிடப்பட்ட குறித்த அறிக்கையில், பலஸ்தீன அரசை நிறுவுவது குறித்த நாட்டின் நிலைப்பாடு “‘உறுதியானது மற்றும் அசைக்க முடியாதது” என சவூதி அரேபியாவின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது
மேலும் கடந்த ஆண்டு செப்டம்பர் 18 ஆந் திகதியன்று ஷூரா சபையின் ஒன்பதாவது பதவிக்காலத்தின் முதல் அமர்வின் அங்குரார்ப்பண நிகழ்வில் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவுத் தனது உரையின் போது தெரிவித்த கருத்தை அவ்வறிக்கை நினைவு கூர்ந்துள்ளது.
“பலஸ்தீன அரசை நிறுவுவது குறித்த சவுதி அரேபியாவின் நிலைப்பாடு உறுதியானது மற்றும் அசைக்க முடியாதது என்பதை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு உறுதிப்படுத்துகிறது. பட்டத்து இளவரசரும் பிரதமருமான இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவுத், செப்டம்பர் 18, 2024 அன்று ஷூரா சபையின் ஒன்பதாவது பதவிக்காலத்தின் முதல் அமர்வின் அங்குரார்ப்பண நிகழ்வில் ஆற்றிய அவரது உரையின் போது இந்த நிலைப்பாட்டை தெளிவாகவும் சந்தேகத்திற்கு இடமின்றியும் மீண்டும் உறுதிப்படுத்தினார். கிழக்கு ஜெருசத்தை தலைநகராகக் கொண்ட ஒரு சுதந்திர பலஸ்தீன அரசை நிறுவுவதற்கான சவூதி அரேபியா தனது இடைவிடாத முயற்சிகளைத் தொடரும் என்றும், அது இல்லாமல் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தாது’ எனவும் அவர் தெரிவித்திருந்தார் எனவும் எக்ஸ் தளத்தில் இல் பகிரப்பட்ட அறிக்கையொன்றில், சவுதி அரேபியாவின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது,
இஸ்ரேலிய குடியேற்றக் கொள்கைகள், நில இணைப்பு அல்லது பலஸ்தீனர்களை அவர்களின் பிரதேசத்திலிருந்து வெளியேற்ற முயற்சிகள் என்பனவற்றின் மூலம் பலஸ்தீன மக்களின் நியாயமான உரிமைகளை மீறுவதை சவுதி அரேபியா நிராகரிக்கிறது. சவுதி அரேபியா அதன் அசைக்க முடியாத நிலைப்பாடு ‘பேச்சுவார்த்தைக்கு உட்பட்டதுமல்ல, சமரசங்களுக்குட்பட்டதுமல்ல’ என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
‘இஸ்ரேலிய குடியேற்றக் கொள்கைகள், நில இணைப்பு அல்லது பலஸ்தீன மக்களை அவர்களின் நிலத்திலிருந்து வெளியேற்ற முயற்சிகள் மூலம் பலஸ்தீன மக்களின் சட்டபூர்வமான உரிமைகள் மீதான எந்தவொரு மீறலையும் சவுதி அரேபியா நிராகரிக்கின்றது’ என சவூதி அரேபியாவின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பலஸ்தீன மக்கள் தங்கள் நிலத்தில் உறுதியாக இருப்பார்கள், அதிலிருந்து நகர மாட்டார்கள், தாங்கிக் கொள்ள முடியாத கடுமையான மனிதாபிமான துன்பங்களைத் தணிக்க சர்வதேச சமூகம் இன்று கடமைப்பட்டுள்ளது.’
“இந்த அசைக்க முடியாத நிலைப்பாடு பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது அல்ல, சமரசங்களுக்கு உட்பட்டதும் அல்ல என்பதை சவுதி அரேபியா இராச்சியம் வலியுறுத்துகிறது. முன்னாள் மற்றும் தற்போதைய அமெரிக்க நிருவாகங்களுக்கு முன்னர் தெளிவுபடுத்தப்பட்டபடி, சர்வதேச தீர்மானங்களின்படி பாலஸ்தீன மக்கள் தங்கள் சட்டப்பூர்வமான உரிமைகளைப் பெறாமல் நீடித்த மற்றும் நியாயமான அமைதியை அடைவது சாத்தியமற்றது,” எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli