இளம் ஊடகவியலாளர்களை உருவாக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்ட மீடியா போர தென்பகுதி விஜயம்
மாணவர்களுக்கு ஊடகப் பயிற்சி வழங்கவும் திட்டம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்த தென்பகுதிக்கான ஊடக மற்றும் சமூக நலன் சார் கலந்துரையாடல் கடந்த ஞாயிறன்று வெலிகம அறபா தேசிய பாடசாலை மற்றும் காலி மல்ஹருஸ்ஸுல்ஹியா தேசிய பாடசாலை என்பவற்றில் நடைபெற்றது.
அமைப்பின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் மீடியா போர செயற்குழு உறுப்பினர்களும் மாவட்ட அமைப்பாளர்களும் கலந்து கொண்டனர். பிரதேச சமூக சேவை அமைப்புகளின் பிரதிநிதிகள்,பாடசாலை அதிபர்கள்,உலமா சபை பிரதிநிதிகள், பள்ளி பரிபாலன சபை உறுப்பினர்கள், பிரதேச ஊடகவியலாளர்கள்,எழுத்தாளர்கள், பாடசாலை ஊடகக் கழக மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் போன்றோரின் பங்களிப்புடன் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.
வெலிகம அறபா தேசிய பாடசாலையில் இரு அமர்வுகளாக இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததோடு முதல் அமர்வில் மாத்தறை மாவட்டத்தில் இளம் ஊடகவியலாளர்களை ஊக்குவிப்பது, பாடாசாலை மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவது, வாசிப்புத் திறனை அதிகரிப்பது, சிங்கள மொழிமூலம் செயற்படும் ஊடகவியலாளர்களை அடையாளங் கண்டு அவர்களை ஊக்குவித்தல் உட்பட பல முக்கியமான விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது. கல்வியியலாளர்களும் ஊடக ஆர்வலர்களும் இதன் போது கருத்துக்களை முன்வைத்தனர். சமூகம் சார்ந்த விடயங்களை அச்சு இலத்திரனியல் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளிப்படுத்தி அவற்றிற்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதன் முக்கியத்துவம் பற்றியும் இதன் போது கருத்து முன்வைக்கப்பட்டது. இங்கு மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்கம் இல்யாஸும் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டார். அமைப்பின் தலைவர் என்.எம்.அமீன், செயலாளர் ஸாதிக் சிஹான் ஆகியோரும் உரையாற்றியதோடு பிரதி செயலாளர் ஷம்ஸ் பாஹிம் நன்றியுரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பாடசாலை மாணவர்களுக்கான அமர்வில் ஊடகப் பயிற்றுவிப்பாளர்களான இஸ்பஹான் சாப்தீன், ஜாவிட் முனவ்வர் ஆகியோர் கருத்துத் தெரிவித்தனர்.
பகலுணவின் பின்னர் மீடியா போர செயற்குழு உறுப்பினர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அர்கம் இல்யாஸுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றது. சமூகம் சார்ந்த பல்வேறு விடயங்கள் இதன் போது ஆராயப்பட்டது.
காலி மாவட்ட சமூக நலன்சார் கலந்துரையாடல் காலி மல்ஹருஸ்ஸுல்ஹியா தேசிய பாடசாலையில் பிற்பகல் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதேச சமூக சேவை அமைப்புகளின் பிரதிநிதிகள், பாடசாலை அதிபர்கள், உலமா சபை பிரதிநிதிகள், பள்ளி பரிபாலன சபை உறுப்பினர்கள், உலமாக்கள், கல்வியியலாளர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பங்கேற்றதோடு பாடசாலை மாணவ மாணவிகளும் இதில் இணைந்திருந்தனர். இதன் போதும் பிரதேச ஊடக ஆர்வலர்கள், கல்வியலாளர்கள் போன்றோர் கருத்துக்களை வெளியிட்டதோடு எதிர்காலத்தில் மாணவர்களுக்கு ஊடகப் பயிற்சிகளை நடத்துவது குறித்தும் இளம் ஊடகவியலாளர்களையும் உருவாக்குவது தொடர்பிலும் ஆராயப்பட்டது.
இதன் போது அமைப்பின் தலைவர் என்.எம்.அமீன் மொழிபெயர்ந்த உயிர்த்த ஞாயிறு அனர்த்தம் நூலின் பிரதிதிகள் முக்கியஸ்தர்களுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தென்பகுதி விஜயத்திற்கு தொழிலதிபரும் நலன்விரும்பியுமான எம்.ஏ.சி.மஹ்சூம் பிரதான அனுசரணை வழங்கியிருந்ததோடு டிரான் மொபைல் உரிமையாளர் எம்.வை.எம்.முகர்ரம், டீன் பிரதர்ஸ் முகாமைத்துவப் பணிப்பாளர் நஜீப்தீன் ஆகியோரும் அனுசரணை வழங்கியிருந்தனர்.
அமைப்பின் பிரதிச் செயலாளர் சம்ஸ் பாஹிம் இந்த விஜயத்திற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்திருந்ததோடு மாவட்ட இணைப்பாளர்களான எம்.எப்.பர்ஹான், இஸ்பஹான் மற்றும் பிரதேச ஊடக ஆர்வலர்கள் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.- Vidivelli