இணையவழித் துன்புறுத்தல்
இணையவழித் துன்புறுத்தல் என்பது, தகவல் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி ஒருவரை துன்புறுத்துவதை குறிக்கின்றது. புகைப்படங்கள், குறுஞ்செய்திகள், சமூக ஊடகப் பின்னூட்டங்கள், வீடியோ காட்சிகள் மற்றும் ஏனைய தொடர்பாடல் கருவிகள் மூலம் ஒருவரை மன உளைச்சலுக்கு உட்படுத்தலும் இதில் அடங்கும். இது பற்றி வேறொரு பகுதியில் பின்னர் நோக்ககலாம். இப்பிரிவில் நாம் குறிப்பிட விரும்புவது, அளவுகடந்த இணையப் பயன்பாடு மற்றும் சமூக ஊடகப் பயன்பாடு என இத்தகைய நோவினை தரக்கூடிய அனுபவங்களை ஏற்படுத்தும் என்பதாகும். இதனால், சிறுவர்களும் இளைஞர்களும் பல தவறான முடிவுகளை எடுத்த பல சம்பவங்கள் நடந்துள்ளன. பள்ளி மற்றும் பல்கலைக்கழக வயதினரை இத்தகைய துன்புறுத்தல்கள் அதிகம் பாதிக்கின்றன. அவர்களின் நடத்தையில், கிரகித்தலில், கடமை உணர்வில், சமூக செயற்பாட்டில் பாரிய தாக்கத்தை செலுத்துகின்றது.
இளவயதினரின் உணர்வுகளையும் உள நலனையும் இது அதிகம் பாதிக்கிறது. தனிப்பட்டவர்களில் இதன் தாக்கம் எப்போதும் அதிகமாக காணப்படும்.
போதை போன்றது
இணையதள பாவனையும் சமூக ஊடகத்தில் நேரத்தை செலவிடுவதும் போதை போன்றது.
அதனால், இணைய நண்பர்களின் தொடர்பிலிருந்து விலகி இருக்க முடியாத நிலை ஏற்படுகிறது. நாம் வலைத்தளங்களில் பதிவிடும் சிறுகதைகளை, கருத்துக்களை மற்றும் படங்களை யார் யார் கமெண்ட் செய்கிறார்கள், யார் லைக் செய்கிறார்கள், அல்லது யார் செயார் செய்கிறார்கள் என எப்போதும் எண்ணத் தோன்றும். நமக்கு நெருக்கமானவர்களிடமிருந்து பின்னூட்டங்கள் கிடைக்காத போது மனம் துடிக்கும். சிலருக்கு இதனை தாங்கிக் கொள்ள முடிவதில்லை. பல்கலைக்கழக விரிவுரை ஒன்றின் போது, எவ்வளவு நேரம் கைப்பேசியைப் பயன்படுத்தி இணையத்தில் நேரம் செலவிடுவீர்கள் எனக் கேட்டபோது, இரவில் தூக்கம் வரும் வரை இணையத்தில் இருப்போம் எனப் பதிலளித்தார்கள். பின்னர், எத்தனை மணிக்கு தூக்கம் வரும் எனக் கேட்ட போது, கைப்பேசியில் சார்ஜ் முடியும்வரை தூக்கம் வராது எனக் கூறினார்கள்.
இதுதான் இணையத்தின் போதை என்பது. பெரிய பெரிய எழுத்தாளர்கள் கூட தமது எழுத்துக்களுக்கு குறிப்பிட்ட சிலரிடமிருந்து துலங்கள் கிடைக்காத போது அதனை மீண்டும் பொதுவெளியில் எழுதி தமது ஆத்திரத்தை வெளிப்படுத்துவார்கள். சிலருக்கு ஏதாவது ஒன்றை சமூக ஊடகத்தில் பகிர்ந்து கொண்டே இருக்க தோன்றும். முக்கியமான வேலைகளின் போதும் கை தன்னைறியாமலேயே கைப்பேசிக்குச் செல்லும். முக்கிய கூட்டங்களின் போதும் கைப்பேசியை பிரிந்து, அதனைப் பார்க்காமல் இருக்க முடிவதில்லை. இத்தகைய போதை இலத்திரனியில் கருவிகளின் உருவாக்கத்திலேயே உள்ளன. இத்தகைய ஈர்ப்பு, மயக்க சக்தி, பிரிந்திருக்க முடியாத நிலை என்பது இணையம் மற்றும் டிஜிட்டல் கருவிகளின் அமைப்பிலேயே உள்ளது.
பார்ப்பதெல்லாம் உண்மை இல்லை
தொழில்நுட்ப வளர்ச்சியும் அதீத ஸ்மார்ட்போன் பாவனையும் தகவல் வழங்குவதையும் பெறுவதையும் இலகுபடுத்தி உள்ளது. இப்போது யார் வேண்டுமானாலும் தகவல்களை வெளியிடலாம். எப்போது வேண்டுமானாலும் வெளியிடலாம். இந்த திறந்த நிலை, முன்னர் குறிப்பிட்டது போன்று, ஒரு வகைத் தகவல் வெள்ளத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. முன்பைவிட இலகுவில் எம்மிடம் தகவல்கள் வந்து சேர்கின்றன. நாம் விரும்பாவிட்டாலும் தகவல் கிடைப்பதிலிருந்து எம்மால் பிரிந்து வாழ முடிவதில்லை. அனைவரது கைபேசியும் எண்ணிலடங்காத தகவல்களை நம்மிடம் கொண்டு சேர்க்கின்றன. இதனால், எமது தகவல் சூழல் மாசடைகின்றது. உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளிப்படுகின்றன. உண்மையையும் பொய்யையும் பிரித்துப் பார்க்க முடியாத நிலை உருவாகின்றது. போலி, இட்டுக்கட்டப்பட்ட திரிவுபடுத்தப்பட்ட, உணர்ச்சிவசப்பட்ட செய்திகள் என எண்ணிலடங்காத – -உண்மைக்கு புறம்பான செய்திகள், நம்மிடம் வந்து சேர்கின்றன. உண்மையை விட பொய் ஆறு மடங்கு வேகத்துடன் பரவுகின்றது என ஆய்வுகள் கூறுகின்றன. பிரசாரப் பணிகளில் -குறிப்பாக, வியாபார அரசியல் ரீதியான பிரசாரப் பணிகளில் ஈடுபடுபவர்கள் ஏனையவர்கள் நம்பச் செய்யும் வகையில் பொய்களை உண்மையாக அலங்காரப்படுத்தி வழங்குகின்றனர். எனவே, இணைய வெளியில் அதிக நேரத்தை செலவிடும் இளம் தலைமுறையினரும் வயது முதிர்ந்தவர்களும் இணைய வழிச் செய்திகளில் உண்மைத்தன்மை பரிசோதிக்கின்ற ஆற்றல்களை பெற்றிருப்பது கட்டாயமாகும். இவ்வாறு உண்மையை கண்டறியும் செயற்பாடு (Verification) எனப்படுகின்றது. எனவே, இணையத்தில் அதிக நேரம் செலவிடுபவர்கள் அதில் உள்ள மதி மயக்கும் தன்மை தொடர்பில் அதிக கவனத்துடன் நடந்து கொள்வது முக்கியமாகும்.
இணையதள பாவனைக்கு
அடிமையாதலை எவ்வாறு மதிப்பிடுவது?
இணையதள பாவனைக்கு அடிமையாதல் பற்றி மதிப்பிட பல அளவுகோல்கள் உள்ளன. இவற்றில் முதன்மையானது யங் (Young) என்பவர் 1996, 1998களில் வெளியிட்ட அடிமையாதல் மதிப்பீட்டுக் கருவியாகும். இணையப் பாவனைக்கு அடிமையாதல் பற்றிய ஆய்வுத் துறையின் ஆரம்பகால முன்னோடியாக யங் கருதப்படுகின்றார். இவர் இணையதள பாவனைக்கு அடிமைதலை சூதாட்ட வெறிப் பிறழ்வுடன் ஒப்பிடுகின்றார். சூதாட்ட வெறி எதனை இழந்தாலும் மீண்டும் மீண்டும் சூதாடத்தூண்டும். இணையத்திற்கு அடிமையாதலும் அவ்வாறு தான். சூதாட்ட வெறி போல கட்டுப்பாட்டை மீறி செல்லும் பிறழ்வாக இணையதளத்தில் அடிமையாதல் உள்ளது என யங் உறுதியாகக் குறிப்பிடுவார். இதனை இந்திய ஆய்வாளர்கள் சிலர் மனக்கட்டுப்பாட்டு இழப்பு பிறழ்வு என்கின்றனர். ஒரு செயலில் ஈடுபடுவதன் மூலம் ஏற்படக்கூடிய இழப்பு, அவமானம் மற்றும் ஆபத்து என்பவற்றை பொருட்படுத்தாமல் தவறான செயல்களில் ஈடுபடுவதை மனக்கட்டுப்பாடு இழப்பு பிறழ்வு குறிக்கின்றது. இணைய பாவனைக்கு அடிமையாதலிலும் இவ்வாறுதான். அடிமைத்தனத்திற்கு உட்பட்டவர்கள் அந்த நிலையிலிருந்து விடுபட முடியாமல் சிரமப்படுகின்றார்கள். இணைய பாவனைக்கு அடிமையானவர்கள் தம்மைத்தாம் சுயவிசாரணையும் மதிப்பீடும் செய்து கொள்வது முக்கியமானதாகும். இதற்கு யங் சிறந்த வகைப்படுத்தலையும் வினாக்களையும் வினவுகின்றார்.
லயித்திருத்தல்
நீங்கள் இறுதியாக இணையதளத்தில் பிரவேசித்துப் பார்த்தவை பற்றி தொடர்ந்தும் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? அல்லது இணையத்தளத்தைப் பயன்படுத்தும் அடுத்த முறை எப்போது வரும் என காத்துக்கொண்டிருக்கின்றீர்களா? மறுபடியும் தன்னிடம் உள்ள டிஜிட்டல் கருவியை பயன்படுத்தும் நேரத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கின்றீர்களா? அவ்வாறெனில், இது இணையப்பாவனைக்கு அடிமையாதலின் ஒரு அறிகுறியாகும்.
பொறுமை
அதிக நேரம் இணைய உலகில் மூழ்கி இருப்பதால் ஒருமித்த திருப்தியை உணர்கின்றீர்களா? அதீத இணையத்தளப் பாவனையின் மூலம் உங்களது கல்வி, சமூகக் கடமை, குடும்பப் பொறுப்புகள் பாதிக்கப்படுவதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் இருக்கின்றீர்களா? அவ்வாறெனில், இதுவும் இணையப்பாவனைக்கு அடிமையாதலின் அறிகுறியாகும்.
விலகிச் செல்லுதல்
நீங்கள் இணையதளத்தை பாவித்துக் கொண்டிருக்கும் போது யாராவது அதனை தடுத்தால் அல்லது இணையத்தை பயன்படுத்தும் போது எதிர்பாராத தடைகள் ஏற்பட்டால் திடீரென அமைதியிழந்து விடுகின்றீர்களா? மன அழுத்தம் ஏற்படுகின்றதா? உளச் சோர்வடைகின்றீர்களா? அதிக இணையத்தளப் பாவனையினால் உங்களது கல்வி, சமூகக் கடமை, குடும்பப் பொறுப்புகளிலிருந்து விலகியிருக்க தோன்றுகின்றதா? அவ்வாறெனில், இதுவும் இணையப்பாவனைக்கு அடிமையாதலின் அறிகுறியாகும்.
உடலியல் தீங்குகள்
என்டஸன் மேற்கொண்ட ஆய்வுகளில், கட்டுப்பாட்டை மீறிய இணையப் பாவனை உடற்பருமனை ஏற்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது. அத்தோடு சீரற்ற வாழ்க்கை முறையுடன் உடல் வளர்ச்சியை பேணுதல் ஆர்வமின்மை ஏற்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கைபேசியில், தொலைக்காட்சிக்கு அல்லது மடிக்கணினிக்கு முன்னால் நேரம் செல்வதே புரியாமல் மடிக்கணக்கில் செலவிடுபவர்களை நீங்கள் கண்டிருக்கலாம். இத்தகையவர்களில் ஏற்படும் உடற்பருமன் நீரிழிவு இதய நோய்கள் என்பவற்றை ஏற்படுத்த முடியும்.
தூக்கமின்மை
கட்டுப்பாட்டை மீறிய இணையப்பாவனை தூக்கத்தை பாதிக்கும். சீரற்ற தூக்கம் பல பின் விளைவுகளை ஏற்படுத்த முடியும். கல்வி, சமூக வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, மற்றும் உளநிலை என்பவற்றை பாதிக்கின்றது. கணனி திரையில் அதிகம் மூழ்கி இருப்பவர்களுக்கு கண் சோர்வு ஏற்படும். உரிய வேளைக்கு தூக்கத்திலிருந்து எழுந்திருக்க முடியாது போகும். உரிய முறையில் உறக்கத்திற்கு செல்லாத மாணவர்கள் பெரும்பாலும் கல்வி அடைவுகளில் முன்னிலையில் இருக்க மாட்டார்கள். இணையத்தளப் பாவனைக்கு அடிமைப்பட்டவர்களின் கல்வியடைவு பாதிக்கப்படும். சில இணைய உள்ளடக்கங்களை புரிந்து கொள்ள, ரசிக்க, உள்வாங்கிக் கொள்ள, சிரமத்தை ஏற்படுத்திக் கொள்கிறது. இது எரிச்சலை ஏற்படுத்துகின்றது. விடயங்களை உள்வாங்கிக் கொள்ள சிரமத்தை ஏற்படுத்துகின்றது. இவை சேய் மற்றும் குழுவினர் மேற்கொண்ட ஆய்வுகளில் உறுதிப்படுத்துகிறது.
மிகை இயக்கம்
பல ஆய்வாளர்கள் கட்டுப்பாட்டை மீறிய இணையப் பாவனை அவதான குறைபாடு மற்றும் மிகை இயக்க குறைபாடு என்பனவற்றுடன் தொடர்புபடுகின்றனர். ஒரு பொருளைக் கொண்டுவரும் படி கூறினால் வேறு ஒரு பொருளுடன் பிள்ளை வந்து நிற்பார். கையிலெடுத்த விடயத்தை தட்டுத்தடுமாறிச் செய்வார். அல்லது கருத்தில் எடுக்காமலேயே மேற்கொள்வார். இத்தகைய அறிகுறிகளை சிறுவர்களில் அவதானித்தால் அவர்களுக்கு அவசரமாக உதவி செய்யும் நேரம் வந்து விட்டது என்பதை பெற்றோரும் ஆசிரியர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
காட்சிப் பிறழ்வுகள்
கட்டுப்பாட்டை மீறிய இணையப் பாவனை பல வகையான காட்சி பிறழ்வுகளை அல்லது பார்வை தொடர்பான குறைபாடுகளை ஏற்படுத்துவதாக பல ஆய்வுகளில் குறிப்பிட்டுள்ளன. கண் சோர்வடைதல், கண் வறட்சி அல்லது கண் உலருதல், தலைவலி என்பனவும் ஏற்படுகின்றன.
டிஜிட்டல் கருவிகளின் திரைகளை நீண்ட நேரம் பயன்படுத்துவது கண் சோர்வடைதலுக்கு இட்டுச் செல்லும். அதிக சோர்வடைதல் பார்வையை பாதிக்கும். ஹாங்காங்கில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், 8 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஸ்மார்ட்ஃபோன் பயன்பாட்டிற்கும் கண் சோர்வடைதலுக்குமிடையிலான தொடர்பை ஆய்வுக்குட்படுத்தியது. 1,508 மாணவர்களில், 1,298 பேர் ஒரு வருடத்திற்குப் பிறகு பகுப்பாய்வுக்கான முழுமையான தரவை வழங்கியுள்ளனர்.
பொதுவான சோர்வடைதலில் அறிகுறிகளில் கண் சோர்வு, மங்கலான பார்வை மற்றும் எரியும் கண்கள் ஆகியவை அடங்கும். ஒரு நாளைக்கு 4 மணி நேரத்திற்கும் மேலாக ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துபவர்களுடன் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகப் பயன்படுத்துபவர்களுடன் ஒப்பிடும்போது, அதிக மதிப்பெண்க ளைப் பெற்றுள்ளதாக ஆய்வில் கண்ட றியப்பட்டுள்ளது. அதாவது குறைவாகப் பயன்படுத்தினால் சோர்வடைதலும் குறைவாகும். ஒரு வருடத்தில், அதிக ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் அதிக கண் திரிபு அறிகுறிகளைக் காட்டியதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது (Chu et al. (2023)
கல்வி மற்றும் ஏனைய அடைவுகள் பாதிக்கப்படுதல்
கட்டுப்பாட்டை மீறிய இணையப்பாவனை அதிக நேரத்தை டிஜிட்டல் கருவிகளுடன் செலவிடுதல் என்பன கல்வியைப் பாதிக்கின்றது. இரவு முழுக்க விழித்திருப்பதால் பல மாணவர்கள் வகுப்பறையில் தூங்குகின்றனர். கற்றல் மற்றும் பரீட்சை விடயங்களை கிரகிக்க முடிவதில்லை. கற்றலில் மாத்திரமன்றி சமூக விடயங்களிலும் தாக்கம் செலுத்துகின்றது. உடல் பயிற்சி, சமூக உறவுகளை பேணுதல், பொதுப்பணிகளில் ஈடுபடுதல் என்பனவற்றில் ஆர்வம் இல்லாமல் போகின்றது. வாசிப்பின் மீதான ஆர்வம் மங்கிப் போகின்றது. கற்றலை பிற்போடத் தோன்றும். கல்விசார் உள்ளடக்கங்களை ஆழமாகக் கிரகிக்காமல் அவசர அவசரமாக வெறுமனே பார்வையிட தூண்டும். எவ்வாறு பெற்றோர்கள் உதவலாம் என்பதை வேறு பிரிவுகளில் விளக்குவோம்.- Vidivelli