இலங்கை முஸ்லிம்களில் பெரும்பான்மையானோர் ‘சோனகர்’ ஆவர். சிங்கள மொழியில் “யொன்” அல்லது “யொன்னு” எனவும் பாளியில் “யொன்ன” என்றும் சமஸ்கிருத மொழியில் “யவன” எனவும் பிரயோகிக்கப்படும் வார்த்தைகளின் அர்த்தம் ‘அறபு நாட்டவர்’ என்பதாகும். தற்போது சிங்களத்தில் ‘யோனக’ என்ற பதம் பயன்படுத்தப்படுகின்றது.
பண்டைய சிங்களவர்கள் “சோனகர்” என்பதைக் குறிப்பிட “யொன்” என்ற சொல்லைப் பயன்படுத்தியதற்கு இடப் பெயர்களும், பதவிப் பெயர்களும் ஆதாரமாயுள்ளன. “யொன் வீதிய” (சோனகத் தெரு), “யொன் கல” (சோனகக் குன்று), “யொன் பிஸவ்வ” (சோனக இராணி) போன்றன இதற்கு உதாரணங்களாகும்.
கடலோடிகள் எனப் பொருள்படும், “மரக்கல மினின்ஸு” என்ற சிங்களச் சொல்லும் இவர்களையே குறிக்கின்றது. இச்சொல் சோனகர்களின் பூர்வீகத்தையும் தொழிலையும் விளக்குவதாய் அமைகின்றது. வர்த்தகத்தில் திறமைமிக்க இவர்கள், இலங்கையில் பிரசித்திபெற்றிருந்த பொருட்களை சர்வதேச ரீதியில் சந்தைப்படுத்தி, இலங்கையின் புகழை மேலோங்கச் செய்தனர். இலங்கைச் சோனகர்கள், இந்நாட்டின் மன்னர்களுக்கு விசுவாசமாக, தேசிய இறைமைக்கும் பாதுகாப்புக்குமாகப் போர்களில் ஈடுபட்டுள்ளதுடன் காலனித்துவ ஆட்சிக்கு முன்னிருந்தே அரசியல், பொருளாதார, மருத்துவத் துறைகளிலும் தமது பங்களிப்பை வழங்கி வந்துள்ளனர்.
இலங்கைச் சோனகர்கள் அறபிகளின் சந்ததியினர் என வரலாற்று மூலாதாரங்கள் நிரூபிக்கின்றன. புராதன இந்து, புவியியல் நூல்களில், ‘அறேபியா’ என்பது “சோனகம்” என அழைக்கப்பட்டது. எனவே “சோனகர்” என்போர் அறேபியர் அல்லது சோனக தேசத்தைச் சேர்ந்தோர் என Rottler அகராதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கைச் சோனகர்கள், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் குடியேறிய அறபுக் குடியேற்றவாசிகளின் வழித் தோன்றல்களே.
கி.பி. எட்டாம் நூற்றாண்டிலே அறேபிய ஹாஷிம் சந்ததியினர், இலங்கையில் குடியேறினர் என இலங்கையின் முதல் பிரதம நீதியரசரும் மாட்சிமை தங்கிய மன்னரின் ஆள்சபைத் தலைவருமான சேர் அலெக்சாந்தர் ஜோன்ஸ்டன் குறிப்பிடுகிறார். இவர்கள் கீர்த்திமிக்க முஸ்லிம் வம்சத்தவர் ஆவர். எனினும் இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னரிருந்தே அறபு, பாரசீக வர்த்தகர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர். பாவா ஆதம் மலை (Adam’s Peak)இங்கு அமைந்திருப்பதும் இதற்கு ஒரு பிரதான காரணமாகும்.
போர்த்துக்கேயர் இலங்கையில் காலடி எடுத்துவைத்ததன் பின்னர், இங்கு வாழ்ந்த முஸ்லிம்களை அவர்கள், “மொரொஸ்” அல்லது “முஅர்ஸ்” என்று அழைக்கலாயினர். போர்த்துக்கேயர் அந்த வார்த்தையை அறபிகளுக்கும் அவர்களுடைய வழித் தோன்றல்களுக்குமே உபயோகித்தனர் என காலனித்துவ ஆட்சியாளர் சேர் ஜேம்ஸ் எமெர்சன் டெனண்ட் கூறுகிறார். ஆங்கிலேய ஆட்சியின்போது ‘முஹம்மதியர்’ (Mohammedan) எனவும் முஸ்லிம்கள் அழைக்கப்பட்டனர். ஆனால் போர்த்துக்கேயரின் வருகைக்கு முன்னரே சிங்களவர்கள், இலங்கை முஸ்லிம்களை “யொன்” அல்லது “யொன்னு” என்றும் தமிழர்கள் இவர்களை, “சோனகர்” என்றும் அழைத்தமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய காலனித்துவ நிர்வாகிகளும், இலங்கையரான முதல் சிவில் சேவை உத்தியோகத்தர், கல்பிட்டியைச் சேர்ந்த சைமன் காசிச் செட்டி (1834) போன்றோரும் தமது வர்த்தமானித் தொகுப்புகளுக்காக, ‘சோனகர்’ என்ற தனித்துவமான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வகையை உருவாக்கினர். அதேவேளை ஆங்கிலேயர் காலத்தில், ‘இலங்கைச் சோனகர்’ (Ceylon Moors) என்ற தனித்துவ அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டிய அவசியமும் உருவானது.
இலங்கை சோனகர்கள், ஏனைய இனங்களிலிருந்தும் வேறுபட்டோர் என்பதை நிறுவ, சோனக சங்கத் தலைவரான ஐ. எல். ஏம். அப்துல் அஸீஸ் அவர்கள் பெரும் சிரத்தையெடுத்தார். இதன் தொடர்ச்சியாக, இலங்கை வாழ் சோனகர்கள், ஆங்கிலேய அரசுக்கு விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க தேசாதிபதி கோர்டன் என்பவர் எம்.சீ. அப்துர்ரஹ்மான் அவர்களை 29.10.1889 இல் சட்டவாக்க சபையின் முதலாவது சோனகர் பிரதிநிதியாக நியமித்தார்.
புத்தளம் பிரதேசத்தில் சோனகர் செல்வாக்கு மிக நீண்டகாலமாக இருந்துள்ளதை வரலாற்றுக் குறிப்புக்கள் வாயிலாக அறிய முடிகின்றது. புத்தளம் பிரதேசத்துக்குத் தெற்கே, தெதுறு ஓயாவும் வடக்கே, கலா ஓயாவும் இந்து சமுத்திரத்தில் சங்கமிக்கின்றன. கலா ஓயாவானது பொன்பரப்பி ஆறு எனவும் அழைக்கப்படுகின்றது. இது கடலுடன் கலக்கும் இடத்துக்கு நேர் எதிர்த் திசையில் தென் இந்தியாவின் பண்டைய துறைமுகமான காயல் நகரில், தாமிர வருணி ஆறு கடலில் வந்து விழுகின்றது. காயல் பட்டினமானது, “சோனகர் பட்டினம்” எனவும் அழைக்கப்பட்டுள்ளது.
வரலாற்றில் தெதுறு ஓயா, கலா ஓயா ஆகிய இரண்டுமே ‘சோனகர் நதி’ என அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இவ்விரு நதிகளுக்கும் இடைப்பட்ட புத்தளம் பிரதேசத்தில் பண்டைய அறபுக் குடியிருப்புக்கள் அமைந்திருந்ததாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். பொன்பரப்பி, குதிரைமலைப் பிரதேசங்களில் அறபுக் குடியிருப்புக்கள் அமைந்திருந்தன. அதன் எச்சமாக இன்றும் குதிரை மலையில் பழைமையான ஸியாரம் ஒன்று உள்ளது.
மகாவம்சத்துக்கு மூன்று நூ.ஆ. முன்னர், கி.பி. 150 இல் வரையப்பட்ட தொலமியின் வரைபடத்தில் (Claudius Ptolemy) தெதுறு ஓய என்ற ஆறானது, சோனா நதி (Soana Fluvius) அல்லது அறபிகள் நதி (River of the Arabs) எனக் குறிப்பிடப்பட்டிருப்பதானது இலங்கை – அறபு உறவின் தொன்மையை நிரூபிப்பதாகவும் அவர்களின் வணிகக் குடியேற்றங்கள் இங்கு காணப்பட்டதற்கான ஆதாரம் எனவும் Lorna Dewaraja (1994) குறிப்பிடுகிறார்.
கலா ஓயாவும் தொன்மையான தேசப்படங்களில் ‘சோனகர் நதி’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளதானது இப்பிரதேசத்தில் அறேபியர் வாழ்ந்ததை உறுதிப்படுத்துவதாயுள்ளது. சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் (கி.மு. 327 -– 326) மகா அலெக்சாந்தரின்ஆணையின் பிரகாரம் இலங்கையின் பூகோள வரைபடத்தை வரைந்த கிரேக்க மாலுமி, Onesicritus, இன்றைய புத்தளம் மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசத்தில் ‘சோனாள்’ களின் குடியற்றங்களைக் கண்டதாகவும் இது விஜயனின் வருகைக்கு முற்பட்டது எனவும், சீ. சுந்தரலிங்கம் குறிப்பிட்டிருப்பதாக 1969 மார்ச் 30 த டெய்லி மிரர் பத்திரிகையில், மர்சூக் புர்ஹான் எழுதியுள்ளார்.
பேராசிரியர் எம்.எஸ்.எம், அனஸ் அவர்கள், தனது “புத்தளம் முஸ்லிம்கள் வரலாறும் வாழ்வியலும் (2009) என்ற நூலில், Soana Fluvius நதியை J.R. சின்னத்தம்பி அவர்கள், ‘கலா ஓயா’ என அடையாளப்படுத்துவதாகக் குறிப்பிடுவதுடன் ‘சோனா’ எனப்படுவது சோனகரைச் சுட்டுவதாகவும் சொல்லுகிறார். மேலும் சமஸ்கிருதப் பேராசிரியரான தோமஸ் அவர்கள், கலா ஓயாவை, மகாவம்சத்தில் குறிப்பிட்டுள்ள ‘கோனக’ அல்லது ‘ஹோனக்க நதி’ என அடையாளப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிடுகிறார்.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் சமூகத் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். அப்பதவிகளுள் ஒன்று Head Moorman என்பதாகும். புத்தளம் நகரில், தர்ஹா அல்லது பிரதான பள்ளிவாசல் தலைமைப் பொறுப்பில் இருப்பவருக்கு ‘சோனகர் தலைவர்’ பதவி கொடுக்கப்படுவது மரபாக இருந்துள்ளது.
தற்போது புத்தளம் பெரியபள்ளி அமைந்திருக்கும் இடத்தில் முன்னர் அழகிய தர்ஹா ஒன்று இருந்ததாக, சைமன் காசிச்செட்டி குறிப்பிடுகிறார். அதனை “ஊர் மரைக்கார்” என அழைக்கப்பட்ட ‘மரைக்கார் குடும்பத்தினர்’ நிருவகித்து வந்துள்ளனர். இவர்களின் மூதாதையர் கல்பிட்டியை சேர்ந்தவர்களாவர். ‘சோனகர் தலைவர்’ பதவி இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
புத்தளம் சோனகர் தலைவர்கள் வரிசையில் 1803 மாசி 01 இல் முதலாவதாக அஹுமது நெய்னா மரைக்கார் நியமிக்கப்பட்டார். அவரே தர்ஹா டிரஸ்டியுமாவார். இவரின் மரணத்தின் பின்னர் 1845 ஆனி மாதம் 25 ஆம் திகதியன்று அ. முஹம்மது நெய்னா மரைக்கார் சோனகர் தலைவரானார். பின்னர் 1899 மார்கழி 06 அன்று முஹம்மது அலிமரைக்கார் சோனகர் தலைவரானார். அவருக்குப் பின்னர் தர்ஹாவைப் பொறுப்பேற்ற, அவரின் புதல்வர் உ.சி.ம.மு. முஹம்மது காசிம் மரைக்கார் 1917 புரட்டாதி 14 அன்று சோனகர் தலைவரானார்.
சாலிஹ் மரைக்காரின் தந்தையான சி.அ.க. ஹமீது ஹுசைன் மரைக்கார் 1923 இல் தேசாதிபதி வில்லியம் மாணிங் அவர்களால் இரண்டாவது ‘ஹெட் மூர்மேன்’ ஆக நியமிக்கப்பட்டு சிறிது காலத்தின் பின்னர், ‘மூர்மேன்’ஆனார். 1946 இல் எம்.ஏ. சாலிஹு வெளியிட்ட புத்தளம் முஹியத்தீன் தர்ஹா என்ற கையேட்டில் இத்தகவல்கள் உள்ளன.
கொழும்பு, கல்பிட்டி, சிலாபம், திருகோணமலை, காலி, மாத்தறை போன்ற பிரதேசங்களிலும் சோனகர் தலைவர்கள் நியமனம் இடம்பெற்றுள்ளது. 1824 க்கு முன்னர் கல்பன்டைனில் (கல்பிட்டி) சின்னத்தம்பி அவர்களும் சிலாபத்தில் கலெக்டர் பதவிக்கு அடுத்தபடியாக உமர் மரைக்கார் சேகு லெப்பை மரைக்கார் அவர்களும் சோனகர் தலைவர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். 1772–1847 காலப்பகுதியில் ஷெய்க்கடி மரைக்கார் எனப்படும் Dr. உதுமா லெப்பை மரைக்கார் ஷெய்க் அப்துல் காதர் மரைக்கார் கொழும்பில் சோனகர் தலைவராயிருந்துள்ளார். இணையத்தில் இத்தகவல்களைப் பெறலாம்.
போர்த்துக்கேய எழுத்தோவியங்களில் காணப்படும் ‘ஜனவம்ச’ பரம்பரைக் கதைகளின் பிரகாரம் 14 ஆம் நூற்றாண்டளவில் சோனகர்கள் இலங்கைக்கு நெசவுத் தொழிலை அறிமுகம் செய்துவைத்துள்ளனர். இவர்கள் ‘சலாகம’ அல்லது ‘சாலியர்’ எனவும் அழைக்கப்பட்டனர். (அல் இஸ்லாம் – ஜனவரி 1967) சிலாபம் நகரில் ‘சோனகர் தெரு’ என்ற ஒரு வீதி இருக்கின்றது.
இவர்கள் குடியேறிய பிரதேசங்களில் புத்தளமும் ஒன்று. இவர்கள் வாழ்வதற்காகத் தற்போதைய மஸ்ஜித் வீதி, இரண்டாம்குருக்குத் தெரு, மரைக்கார் தெரு, போல்ஸ் வீதி ஆகிய எல்லைகளுக்கிடையிலான பரந்த நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டிருந்தது. அன்று இத்தெருக்கள் “பெரிய பாவோடித் தெரு”, “சிறிய பாவோடித் தெரு” என அழைக்கப்பட்டன. “பாவோடுதல்” என்பது நெசவுத் தொழிலைக் குறிக்கும்.
இலவத் தம்பி அம்பலகாரனார், சேக்காலி அம்பலகாரனார், செய்யது ஆகிய குடும்பத்தினர் முதலில் இங்கு குடியேறினர். அவர்களின் பரம்பரையினர் இன்று புத்தளம் நகரில் வாழ்கின்றனர். வான் வீதியில் இவர்கள் தோண்டிய குளம், அம்பலகாரனார் குளம் என்று பெயர்பெற்றது. கோடை காலத்தில் பொன்பரப்பி ஆற்றில் இவர்கள் தங்கும் இடம் இன்றும் “அம்பலகாரனார் விடுதி” என அழைக்கப்படுகின்றது. இவை பற்றிய மேலதிகத் தகவல்களை, ஏ.என்.எம். ஷாஜஹான் எழுதிய “புத்தளம் வரலாறும் மரபுகளும்” என்ற நூலில் காணலாம்.
இலங்கை முஸ்லிம்களில் சோனகர், மலாயர், மேமன், போராக்கள் போன்ற பல பிரிவினர் அடங்குவர். சமய ரீதியில் இவர்கள் ஒன்றுபட்டாலும் கலாசார ரீதியிலும் வேறு சில இன ரீதியான அம்சங்களிளும் இவர்களுக்கிடையில் வேறுபாடுகளுண்டு. சோனகர் மத்தியில், தமது தனித்துவ அடையாளங்களைப் பேணுவது அருகிவரும்போதிலும் இன்னும் அவை முற்றுமுழுதாக மறைந்துவிடவில்லை. இலங்கை சோனகர் பற்றிய ஆய்வுகள் நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்றைய உலகில், நவீன விஞ்ஞான முறைகளைக் கையாளுவதன் மூலம் மேலும் பல தீர்க்கமான முடிவுகளுக்கு வரலாம்.- Vidivelli