இஸ்லாமிய விழுமியங்களையும் போதனைகளையும் பாதுகாப்பதற்கும் பரப்புவதற்கும் அல்–குர்ஆன் பெரும் பங்களிப்புச் செய்துள்ளது: அமைச்சர் சுனில் செனவி
(றிப்தி அலி)
தூய அரபு மொழியில் எழுதப்பட்ட புனித அல்-குர்ஆன், இஸ்லாமிய மத விழுமியங்கள் மற்றும் போதனைகள் ஆகியவற்றை பாதுகாப்பதற்கும் பரப்புவதற்கும் பெரும் பங்களிப்புச் செய்துள்ளது என புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்தார்.
மகத்தான கலாசார அடையாளங்களைக் கொண்ட உலகளாவிய மொழியாகவுள்ள அரபு மொழியினை 450 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் பேசுகின்றனர். அத்துடன் சுமார் 25 நாடுகளின் உத்தியோகபூர்வ மொழியாகவும் அரபு மொழி காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டார்.
கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயத்தின் ஆதரவுடன் 2வது தடவையாக இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்ட புனித அல்-குர்ஆன் மனனப் போட்டியின் பரிசில்கள் வழங்கும் இறுதி நிகழ்வு கடந்த திங்கட்கிழமை (20) கொழும்பில் இடம்பெற்றது.
இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானியின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி பிரதம அதிதியாகவும் சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார மற்றும் வழிகாட்டல் அமைச்சின் உயர் அதிகாரியான சவுத் ஒலைபி அல்கம்தி விசேட அதிதியாகவும் கலந்துகொண்டனர்.
பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதுவர்கள் எனப் பலர் பங்கேற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் ஹினிதும சுனில் செனவி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், காலஞ்சென்ற மன்னர் அப்துல் அஸீஸ் மற்றும் தற்போதைய மன்னரும் இரண்டு புனித ஸ்தலங்களின் பாதுகாவலருமான சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆகியோரை கௌரவிக்கும் முகமாக தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாக அல்-குர்ஆன் மனனப் போட்டிகளை நடத்தி பெறுமதியான பரிசில்களை சவூதி அரேபியாவினால் வழங்கப்படுவதையிட்டு நான் மிகவும் சந்தோசமடைகின்றேன்.
சவூதி அரேபியாவினால் நீண்ட காலமாக புனித அல்-குர்ஆனுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்ற பாரம்பரியம் இன்று வரை தொடர்கின்றது. இது போன்று அல்-குர்ஆன் மனனப் போட்டிகளை சவூதி அரேபியாவிலும் உலகளாவிய ரீதியிலும் நடத்தி மில்லியன் றியால்கள் பரிசாக வழங்கப்படுகின்றன.
இதன் கீழ் முதற் தடவையாக 2023ஆம் ஆண்டு அல்-குர்ஆன் மனனப் போட்டி இலங்கையில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. வரலாற்று முக்கியத்துவமிக்க இந்த நிகழ்வு சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார மற்றும் வழிகாட்டல் அமைச்சுடன் இணைந்து இலங்கைக்கான சவூதித் தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானியின் தலைமைத்துவத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டது.
எனது அமைச்சும் அதன் கீழுள்ள முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இந்த அல்குர்ஆன் மனனப் போட்டிக்கு தேவையான முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கி வருகின்றன.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமைத்துவத்தின் கீழ் மத்திய கிழக்கு பிராந்தியம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படுகின்றது. சுமார் 10 இலட்சம் இலங்கையர்கள் அப்பிராந்தியத்தில் உள்ளனர்.
இந்த வகையான அரபு மொழி, அல் குர்ஆன் மற்றும் கலாசார ஊக்குவிப்பு நிகழ்வுகள் உலகத்தைப் பற்றி மேலும் அறிய வழி வகுக்கின்றன, குறிப்பாக இது பல்வேறு கலாசார வேறுபாடுகளை குறைப்பதற்கான ஒரு பாலமாகவுள்ளது.
புனித அல்-குர்ஆனை மனனம் செய்வதன் மூலம் சர்வவல்லமையுள்ள அல்லாஹ்வுடன் முஸ்லிம்களின் ஆன்மீகத் தொடர்பை ஆழமாக்குகிறது. அத்துடன் அமைதி, வழிகாட்டுதல் மற்றும் இறை நெருக்கம் ஆகியவற்றை வழங்குவதாகவும் நான் கேள்விப்பட்டுள்ளேன்.
புனித அல்-குர்ஆனை மனனம் செய்வதன் மூலம் ஆன்மீக நிறைவு, இறை பக்தி தொடர்ச்சியான இறை வெகுமதிகள், அறிவுசார் வளர்ச்சி உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கும் என இஸ்லாமிய போதனைகள் கற்பிக்கின்றன.
இந்த அல்-குர்ஆனை மனனம் செய்யும் பணியினை மக்கள், நிறைவு செய்யும் போது எல்லாம் வல்ல இறைவன் தன் கருணையாலும், ஆசீர்வாதத்தாலும், வழிகாட்டுதலாலும் அவர்களை ஆசிர்வதிக்கின்றான். இதனால் ஒரு மனிதன் உலக வாழ்விலும் மறுமையிலும் சந்தோசமடைவதுடன் வெற்றியும் பெறுகிறான்.
எமது இரண்டு நாடுகளுக்கும் இடையிலுள்ள நெருக்கமான நட்புறவினையும் ஒத்துழைப்பினையும் மேலும் பலப்படுத்த இலங்கைக்கான சவூதித் தூதுவர் மேற்கொண்டு வரும் பணிகள் பாராட்டத்தக்கது.
அதேவேளை, ஹஜ் விவகாரம் தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்த மொன்றில் கைச்சாத்திடுவதற்காக கடந்த வாரம் எனது தலைமையிலான குழுவினர் சவூதி அரேபியா சென்றபோது அங்கு வழங்கப்பட்ட அனைத்து வசதிகளுக்கும் சிறந்த விருந்தோம்பலுக்கும் அந்நாட்டு உபசரணைப் பிரிவிற்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்” என்றார்.- Vidivelli