இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் அமலுக்கு வந்திருப்பதால் காஸாவில் 470 நாட்களுக்குப் பிறகு மீண்டும் அமைதி திரும்பியுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தப்படி, இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பலஸ்தீன கைதிகள் விடுதலைக்கு ஈடாக, ஒவ்வொரு கட்டமாக ஹமாஸ் தன் வசமுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்கும். விடுவிக்கப்படும் ஒவ்வொரு இஸ்ரேலிய பணயக்கைதிக்கும் 30 பலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் சிறைகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பது நிபந்தனை.
போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்த நிலையில் முதல் நாளில் 3 பணயக் கைதிகளை ஹமாஸ{ம், பதிலுக்கு 90 பலஸ்தீன கைதிகளை இஸ்ரேலும் விடுவித்தன. முதல் நாளாக இரவுப் பொழுது குண்டு மழை, துப்பாக்கி தாக்குதல்கள் இல்லாமல் காஸா மக்கள் கழித்தனர். குறிப்பாக மனிதாபிமான உதவிப் பொருட்களுடன் 630 டிரக்குகள் காஸாவுக்குள் சென்றன. இவற்றில் 300 டிரக்குகள் போரால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட வடக்கு காஸாவுக்குள் சென்றன.
முன்னதாக, இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வந்த போரில் பலஸ்தீனர்கள் 47,000 பேர் கொல்லப்பட்டனர். இரு தரப்பு இடையே போர் நிறுத்தம் ஏற்படுத்த கத்தார், அமெரிக்கா சார்பில் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பணயக் கைதிகளை விடுவித்தால் போரை நிறுத்துவதாக இஸ்ரேல் நிபந்தனை விதித்தது.
இந்நிலையில், பணயக் கைதிகள் பட்டியலை அனுப்ப ஹமாஸ் தாமதப்படுத்தியதால் 3 மணி நேரம் தாமதித்தே போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்தது. போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வருவது தாமதமான இந்த மூன்று மணி நேரத்தினுள் மாத்திரம் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 13 பலஸ்தீனர்கள் பேர் கொல்லப்பட்டனர்.
போர் நிறுத்தத்தின் மூலம் 15 மாதங்களாக நடந்துவந்த போர் முடிவுக்கு வந்துள்ளது. நிபந்தனைகள் இருந்தாலும் கூட இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் பல தரப்பிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி, ஹமாஸால் கடத்தப்பட்ட 250 பணயக் கைதிகளில் தற்போது உள்ள 98 பேரில் 33 பேர் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இஸ்ரேலின் பல்வேறு சிறைகளில் இருக்கும் 2000 பலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுவிக்கும்.
காஸா பகுதி முழுவதும் உள்கட்டமைப்பு எவ்வளவு சீரழிந்துள்ளது என்பதை நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாது. தெருக்களில் கழிவுநீர் நிரம்பியுள்ளது.
சில இடங்களில், தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் வேலை செய்யவில்லை. உள்கட்டமைப்பு முற்றிலும் சரிந்துவிட்டது.
இஸ்ரேல் கனரக இயந்திரங்களை அனுமதித்த முதல் நாள் மக்கள் தமது அழிந்துபோன வாழிடங்களைப் பார்வையிட்டனர். சிவில் பாதுகாப்பு குழுக்கள், பொறியியலாளர்கள் மற்றும் மீட்பு முயற்சிகளில் பணிபுரிவோருக்கு எங்கிருந்து தொடங்குவது என்று தெரியவில்லை.
ஒவ்வொரு தெருவிலும், சுற்றுப்புறத்திலும், நகரத்திலும் – உள்கட்டமைப்பு அழிக்கப்பட்டுள்ளது. பலஸ்தீனியர்கள் தங்கள் வாழ்க்கையை புதிதாகத் தொடங்க வேண்டும். ஆனால் எப்படி எங்கிருந்து ஆரம்பிப்பது என்பதற்குத் தான் வழி தெரியவில்லை.
போர் நிறுத்தம் ஆரம்பித்த மறுநாள் 68 பலஸ்தீனியர்களின் உடல்களை மீட்டெடுக்க முடிந்ததாக அவர்கள் கூறினர். ஆனால் குறைந்தது 11,000 பேர் காணாமல் போயுள்ளனர் அல்லது இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இஸ்ரேலிய குண்டுவீச்சினால் ஏற்பட்ட பெரும் அழிவில் மீட்பு முயற்சிகளுக்குத் தேவையான போதுமான கனரக உபகரணங்கள் மீட்புக் குழுக்களிடம் இல்லை.
பெரும்பாலான இடங்களில், எலும்புகள் அல்லது அடையாளம் காண முடியாத உடல்களை மட்டுமே கண்டுபிடிக்க முடிந்தது. மக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகிலுள்ள பகுதிகளில் அவற்றைப் புதைக்கிறார்கள். பல பலஸ்தீனியர்களிள் சடலங்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டுள்ளன.
ஒக்டோபர் 7, 2023 முதல் இஸ்ரேலிய தாக்குதல்களில் காசா பகுதியில் உள்ள அனைத்து பொலிஸ் அலுவலகங்கள் மற்றும் நிலையங்கள் அழிக்கப்பட்டுள்ளன, நூற்றுக்கணக்கான வாகனங்கள் மற்றும் பிற சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன என்று காசா பகுதியில் உள்ள பலஸ்தீன பொலிஸ் பொது பணியகம் தெரிவித்துள்ளது.
இயக்குநர் ஜெனரல் மேஜர் ஜெனரல் மஹ்மூத் சலா உட்பட துறையின் 1,400 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களும் கொல்லப்பட்டுள்ளனர் என்று பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இஸ்ரேலின் தாக்குதல்களில் 1,950 க்கும் மேற்பட்ட காஸா பொலிசார் காயமடைந்துள்ளனர், 211 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் சிறைகளிலிருந்து முதற்கட்டமாக விடுவிக்கப்பட்ட பலஸ்தீனர்கள், மேற்கு கரை மற்றும் ஜெரூசலம் பகுதிகளைச் சேர்ந்த 69 பெண்கள் மற்றும் 21 பதின்பருவ ஆண்கள் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.
விடுவிக்கப்பட்ட பலஸ்தீனர்களை வரவேற்பதற்காக மேற்கு கரையில் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் மக்கள் காத்துக் கொண்டிருந்தனர். அதிகாலை 2 மணிக்கு, பலஸ்தீனர்களை கூட்டி வந்த பேருந்து பெய்டியூனியா என்ற நகருக்குள் நுழைந்த போது, அங்கிருந்த மக்கள் சந்தோசத்தில் கூச்சலிட்டனர், தங்கள் கார்களின் ஹார்ன்களை சத்தமாக ஒலித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தற்போது விடுவிக்கப்பட்ட பலத்தீனர்கள் அண்மைக் காலங்களில் கைது செய்யப்பட்டவர்கள் என்றும், வழக்கு நடத்தி குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் அல்லர் என்றும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.
இதனிடையே, போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த மறுநாளே காஸாவுக்கு வெளியே ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஜெனின் பகுதியில் நடாத்திய தாக்குதல்களில் 10 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் காஸாவில் போர் நிறுத்தத்திற்கு இணங்கினாலும் தற்போது அதற்கு வெளியே தனது கொலைக்களத்தை ஆரம்பித்துள்ள சர்வதேச விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.- Vidivelli