கடந்த ஜனவரி 09ஆம் திகதி வெளியான இப் பத்தியில் “அரபு மத்ரஸாக்கள் க்ளீன் செய்யப்படுவது எப்போது?” எனும் தலைப்பில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் சிலர் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர். இது நாம் கூற வந்த விடயத்தை இதயசுத்துடன் விளங்கிக் கொள்ள முற்படாததன் வெளிப்பாடேயாகும்.
அரபு மத்ரஸாக்களுக்கு எதிராக எமது பத்திரிகை செயற்படுவதாகவும் இதன்போது குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. விடிவெள்ளியை தொடர்ச்சியாக வாசிப்பவர்களுக்கு இது ஒரு முட்டாள்தனமான விமர்சனம் என்பது நன்கு புரியும்.
எமது நாட்டிலுள்ள அரபு மத்ரஸாக்கள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக முன்வைக்கப்பட்டு வருகின்றது. இது நியாயமான கோரிக்கையுமாகும். எனினும், குறிப்பிட்ட ஒரு சாரார் மாத்திரம் இந்த ஒழுங்குபடுத்தல் எனும் விடயத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.
இவர்கள் யார் என்பதையும் மக்கள் நன்கறிவார்கள். இவ்வாறு எதிர்ப்பு வெளியிடுபவர்களினாலேயே அண்மையில் வெளியான குறித்த பத்தியினை அடிப்படையாக வைத்து விடிவெள்ளிக்கு எதிராக போலிப் பிரசாரங்களை முன்வைத்து வருகின்றனர்.
எமது நாட்டில் தெருவிற்கு தெரு அரபுக் மத்ரஸாக்கள் தொடர்ச்சியாக ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன. அரபு மத்ரஸாக்கள் ஒழுங்குபடுத்தப்படாமையினாலேயே இவ்வாறு புதிது புதிதாக முளைக்கின்றன. இதனால் பாரிய குளறுபடிகள் சமூகத்தில் தோற்றம் பெற்றுள்ளன.
எதிர்காலத்தில் அரபு மத்ரஸாக்கள் ஒழுங்குபடுத்தப்பட்டால் தெருவிற்கு தெரு ஆரம்பிக்கப்பட்டுள்ள பதிவு செய்யப்படாத இந்த அரபு மத்ரஸாக்களில் பணியாற்றுபவர்கள் நிச்சயம் தொழில் இழக்க நேரிடும். இந்த அச்சம் காரணமாகவே இவர்கள் அரபு மத்ரஸாக்கள் ஒழுங்கபடுத்தலுக்கு எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.
கடந்த காலங்களில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழ்கின்ற முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக இடம்பெற்ற அநியாயங்களின் போது விடிவெள்ளி பத்திரிகை துணிச்சலாகச் செயற்பட்டதனை வாசகர்கள் நன்கறிவர்.
ஈஸ்டர் தற்கொலைத் தாக்குதலை அடுத்து எமது நாட்டிலுள்ள அரபு மத்ரஸாக்களிற்கு எதிராக போலிப் பிரச்சாரங்கள் முன்வைக்கப்பட்டன. அதே போன்று ஹிஜாபுக்கு எதிரான பிரசாரங்களும் மேலெழுந்தன. இச்சமயத்தில் விடிவெள்ளி பத்திரிகை சமூகத்தின் உரிமைகளுக்காக பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் துணிச்சலாக செயற்பட்டதனை ஞாபக மூட்ட விரும்புகிறோம்.
இக்காலப் பகுதியில் அரபு மத்ரஸாக்களை ஒழுங்குபடுத்துவோம் என்ற கோசத்துடன் தான் கோட்டபாய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமும் ஆட்சி பீடமேறியது. அக்காலப் பகுதியில் முஸ்லிம் சமூகமும் இதற்கு ஆதரவளித்தது.
இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி அரபு மத்ராஸாக்களை பலப்படுத்தலாம் என்ற அடிப்படையிலேயே இதற்கு ஆதரவளிக்கப்பட்டது. துரதிஷ்டவசமாக, இந்த விடயம் தேர்தல் பிரச்சார உத்தியாக காணப்பட்டதே தவிர ஆட்சிக்கு வந்த கோட்டபயவின் அரசாங்கத்தினால் எதுவும் செய்யப்படவில்லை.
இவ்வாறான நிலையில் தான் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நாட்டிலுள்ள அரபு மத்ரஸாக்களுக்கான பொதுவான பாடத்திட்டமொன்றினை தயாரிக்கும் பணி முன்னெடுக்கப்பட்டது.
நாட்டிலுள்ள தலைசிறந்த கல்விமான்களின் பங்களிப்புடன் தயாரிக்கப்பட்ட இந்த பாடத்திட்டத்திற்கு ஒரு தரப்பினர் மாத்திரம் தொடர்ச்சியாக எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர். இதன் காரணமாக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தயாரிக்கப்பட்ட இந்த பொதுவான பாடத்திட்டம் இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை.
இவ்வாறான நிலையில், அரபு மத்ரஸாக்கள் தொடர்பில் சிபாரிசுகளை மேற்கொள்ள கல்வி அமைச்சினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 1981ஆம் ஆண்டு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஸ்தாபிக்கப்படுவதற்கு முன்னர் கல்வி அமைச்சில் தான் அரபு மத்ரஸாக்கள் பதிவுசெய்யப்பட்டு வந்தன என்ற விடயத்தினை தற்போது வட்ஸ்அப் குழுமங்களில் குரல் பதிவினை பகிர்பவர்கள் மறந்துவிட்டனர்.
கல்வி அமைச்சின் கீழ் அரபு மத்ரஸாக்கள் பதிவுசெய்யப்பட்டால் அரபு மத்ரஸாக்களுக்கும் அங்கு கல்வி பயிலும் மாணவர்களுக்கும் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
நாட்டிலுள்ள பிரிவேனாக்கள் அனைத்தும் கல்வி அமைச்சின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதனால் குறித்த பிரிவேனாக்கள் தற்போது பல்வேறு நன்மைகளை அடைந்து வருகின்றன.
அரசாங்கத்தினால் தற்போது அமுல்படுத்தப்பட்டு வருகின்ற பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் கொள்வனவு செய்வதற்காக 3,000 ரூபா பெறுமதியான வவுச்சர் வழங்கும் திட்டத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் பிரிவேனாக்களிலுள்ள பௌத்த துறவிகளான மாணவர்களும் உள்வாங்கப்பட்டனர்.
மீண்டும் இந்த வருடம் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த செயற்திட்டத்தின் கீழ் பௌத்த துறவி மாணவர்களும் பாதணி கொள்வனவிற்கு வவுச்சர் வழங்கப்படவுள்ளது. இவர்களின் பிரிவேனாக்கள் கல்வி அமைச்சின் கீழ் பதிவுசெய்யப்பட்டமையே இதற்கான காரணமாகும்.
இது போன்று எமது அரபு மத்ரஸாக்களையும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களித்தின் பங்களிப்புடன் கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவந்தால் இது போன்று பல்வேறு நன்மைகள், நிதி்ஒதுக்கீடுகள் எமது மாணவர்களுக்கும் கிடைக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
அத்துடன் அரபு மத்ரஸாக்களினால் வழங்கப்படுகின்ற சான்றிதழ்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அங்கீகாரம் கிடைக்கும். இதனால்தான், எமது நாட்டிலுள்ள அரபு மத்ரஸாக்களை ஒழுங்குபடுத்தி கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்காக நாம் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.- Vidivelli