கிழக்கில் தொடர்ச்சியாக கனமழை மக்களின் இயல்பு வாழ்வு பாதிப்பு
டி.எஸ்.சேனநாயக்க சமுத்திரத்தின் வான் கதவுகள் திறப்பு தாழ் பிரதேசங்கள் வெள்ளத்தில்; நெற்பயிர் செய்கை பாதிப்பு
எம்.ஏ.றமீஸ்
கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக பெய்து வந்த கனமழை இம்மாகாணத்தில் சற்று குறைவடைந்திருந்த போதிலும் நேற்று அதிகாலை முதல் மீண்டும் மழையுடனான காலநிலை நிலவி வருகின்றது. சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அம்பாறை மாவட்டத்தின் பிரதான நீர்த்ததேக்கமான டி.எஸ்.சேனநாயக்க சமுத்திரம் 110 அடியினைக் கொள்ளவாக கொண்டுள்ள போதிலும் நேற்று மாலை 4 மணியளவில் அம்பாறை டி.எஸ்.சேனநாயக்க சமுத்திரத்தின் வான் கதவுகள் மூலமாக மூன்றரை அடி தண்ணீர் திறக்கப்பட்டு விநாடி ஒன்றுக்கு 3335 கன அடி நீர் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.றியாஸ் தெரிவித்தார்.
இதன்காரணமாக அம்பாறை மாவட்டத்தின் தாழ்நிலப் பிரதேசங்கள் நீரில் மூழ்கிக் காணப்படுவதுடன், இம்மாவட்டத்தின் தாழ்நிலப் பகுதிகளில் வசித்து வருபவர்கள் வெள்ள நீர் உட்புகுவதை மிகுந்த அவதானத்துடன் கண்காணித்து செயற்படுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் செய்கை பண்ணப்பட்ட சுமார் மூவாயிரம் ஏக்கர் நெற் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவற்றுள் ஒலுவில் வீரயடி விவசாயப் பிரிவில் செய்கை பண்ணப்பட்ட சுமார் நான்காயிரம் ஏக்கர் நெற் காணிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாயச் செய்கை முற்றாக நீரில் மூழ்கியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரித்தார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் மூலம் ஒலுவில் அஷ்ரஃப் நகர் பிரதான கொங்றீட் பாதை உடைப் பெடுத்தது. இவ்வாறு உடைப் பெடுத்த பாதைக்கு அருகில் தற்காலிகமாக கிறவல் பாதையொன்றும் அண்மையில் அமைக்கப்பட்டது. இவ்வாறு அமைக்கப்பட்ட தற்காலிக பாதையம் தற்போது உடைப் பெடுத்துள்ளதுடன் அப்பாதை முற்றாக நீரில் மூழ்கியுமுள்ளன. இதுதவிர, களியோடை ஆற்றின் அணைக்கட்டுப் பகுதி உடைப் பெடுத்துள்ளமையால் ஒலுவில் வீரயடிப் பிரிவு விவசாய நிலங்கள் தற்போது நீரில் மூழ்கியுள்ளன.
இதேவேளை, ஒலுவில் வீரயடிப் பகுதியில் அமையப் பெற்றுள்ள நீர் நிலையின் பிரதான 12 வான்கதவுகளும் திறக்கப்பட்டு களியோடை ஆற்றின் மூலம் அந்நீர் கடலுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் களியோடை ஆற்றினை அண்டிய விவசாயச் செய்கைகள் நீரில் மூழ்கியுள்ளதுடன், களியோடை பாலத்தின் கீழ்ப் பகுதியின் நீர்மட்டம் வெகுவாக உயர்வடைந்தும் காணப்படுகின்றது.
அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டும் சில குடும்பத்தவர்கள் நலன்புரி நிலையங்களிலும், சிலர் உறவினர்களின் இல்லங்களிலும் தங்க வைக்கப்பட்டிருந்த போதிலும், கடந்த ஒரு சில தினங்கள் காலநிலை சீரடைந்து காணப்பட்டமையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்பி இயல்பு வாழ்க்கையினை தொடர்கின்றனர்.
இருந்த போதிலும் அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை, மகாஓயா மற்றும் தமண ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 88 குடும்பங்களைச் சேர்ந்த 269 பேர் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இம்மாவட்டத்தில் ஆறு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட வெள்ள அனர்த்த வேளையில் அம்பாறை மாவட்டத்தின் மாவடிப்பள்ளி பிரதான வீதியில் நிகழ்ந்த உழவு இயந்திரம் குடைசாய்வில் மத்ரஷா மாணவர்கள் சிலரும் உழவு இயந்திர சாரதியும் உயிரிழந்தமையால், தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலையில் உயிரிழப்புகள் மற்றும் ஏனைய அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய உத்தியோகத்தர்களும், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட துறைசார்ந்தோரும் மிகுந்த அவதானிப்புடன் செயற்படுவதனை காண முடிகிறது.
கடந்த இரண்டு நாட்களாக கிட்டங்கி தாம்போதியில் வெள்ளம் பாய்வதுடன் கல்முனை சேனைக்குடியிருப்பு நாவிதன்வெளி சவளக்கடை பிரதேசங்களை தரை வழியாக இணைக்கின்ற கிட்டங்கி பாலாமானது அதிகரித்த ஆற்றின் நீர்மட்டம் காரணமாக இராணுவம் பொலிஸார் நாவிதன்வெளி பிரதேச செயலகம் பிரதேச சபை அனர்த்த முகாமைத்துவ குழுவினர் போன்றோர் மிகுந்த அவதானத்துடன் இப்பகுதி போக்குரவத்தினை கண்காணித்து வருகின்றனர்.
இதேவேளை, இம்மாவட்டத்தில் பல்வேறு பாதைகளைக் குறுக்கிட்டு வெள்ள நீர் பரவிச் சென்றமையால் அவற்றுள் சில வீதிகளின் போக்குவரத்துகளும் முற்றாக தடைப்பட்டிருந்தன. குறிப்பாக தடைப்பட்டிருந்த அம்பாறை -கண்டி பிரதான வீதியின் போக்குவரத்து தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாகவும், தமண பிரதேச செயலப் பிரிவில் போக்குவரத்துக்கென தடைப் பட்டிருந்த பாதகொட பிரதான வீதியும், இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள நெய்னாகாடு குடுவில் பிரதேச பிரதான பாதையும் தற்போது போக்குவரத்திற்காக திறக்கப்பட்டதாகவும் அட்டாளைச்சேனை அஷ்ரஃப் நகர் பிரதான பாதை மாத்திரமே போக்குவரத்துக்காக பயன்படுத்த முடியாமல் தற்போது மூடப்பட்டுள்ளதாகவும் மாவட்ட பிரதிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வந்த கன மழை காரணமாக தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், கனத்த மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த பல்லாயிரம் ஏக்கர் நெல் வயல்கள் நீரில் மூழ்கியுள்ளன.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 12 பிரதேச செயலகப் பிரிவுகளில் 3737 குடும்பங்களைச் சேர்ந்த 11971 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, ஏறாவூர்ப் பற்று மற்றும் கோறளைப் பற்று ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் அதிகமானோர் பாதிக்கப்பட்டதாகவும், இம்மாவட்டத்தில் 17 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உறவினர்கள் இல்லங்களில் 3037 குடும்பங்களைச் சேர்ந்த 10031 பேர் தங்க வைக்கப்பட்டதாகவும், பாதுகாப்பான இடங்களில் 334 குடும்பங்களைச் சேர்ந்த 921 பேர் தங்க வைக்கப்பட்டதாகவும் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மாவட்டத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற் செய்கை வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இம்மாவட்டத்திலுள்ள 16 விவசாய போதனாசிரியர் பிரிவுகளிலும் செய்கை பண்ணப்பட்ட பெரும் போக நெற் செய்கை வயல் நிலங்கள் நீரில் மூழ்கி காட்சி தருகின்றன. இம்முறை 1 லட்சத்து 90 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் இம்மாவட்டத்தில் பெரும்போகை நெற்செய்கை செய்கை பண்ணப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் எஸ். ஜெகநாதன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் கடந்த பத்து தினங்களுக்கு முன்னர் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்செய்கையினை அறுவடை செய்யாமல் விவசாய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட திகதியில் தான் அதனை அறுவடை செய்ய வேண்டும் என சிலர் விவசாய அமைப்பு என்ற பெயரில் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு சென்று தடுத்துள்ளனர்.
இதனால் தற்போது பெய்து வரும் மழை வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற் செய்கை நீரில் மூழ்கியுள்ளது. அறுவடையை தடை செய்தவர்களே இந்த நஷ்டத்தை தர வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர்
வெலிகந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துக்கல் எனும் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(19) இரவு வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை பகுதியில் வசித்த 37 வயதுடைய றிஸ்வான் எனும் நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தனது மனைவி மற்றும் உறவினருடன் குறித்த நபர் கரப்பொல–-முத்துக்கல் வழியாக சேனபுர பகுதிக்குச் செல்லும்போது மூவரும் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், அவரது மனைவி மற்றும் மற்றைய நபர் மரக்கிளையினைப் பிடித்து உயிர் தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பில் சீரற்ற கால நிலை காரணமாக மாவட்டதிலுள்ள குளங்கள் அனைத்தும் நீர் நிரம்பிய நிலையில் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன் இவற்றுள் குறிப்பாக உன்னிச்சை, நவகிரி உள்ளிட்ட குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டதையடுத்து அந்தப் பகுதியிலுள்ள பெரும்பாலான விவசாயச் செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
தொடர் மழையினால் மாவட்டத்திலுள்ள நவகிரிகுளம், புனாணை அனைக்கட்டு, வடமுனைக்குளம், வெலியாகண்டிய குளம், றூகம்குளம். வாகனேரிகுளம், கட்டுமுறிவுக்குளம், போன்ற குளங்களில் நீர் மட்டம் அதிகரித்ததையடுத்து அந்தந்தக் குளங்களின் தேவைக்கு ஏற்றவாறு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
திருகோணமலை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சேருவல மற்றும் வெருகல் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் 51 குடும்பங்களைச் சேர்ந்த 144 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் உறவினர்களின் இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் கே.சுகணதாஸ் தெரிவித்தார்.
இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக மகாவலி கங்கையின் திம்புலாகலை, ஈச்சிலம்பற்று. ஹிங்குராக்கொட, கந்தளாய், கிண்ணியா, கோரளைப்பற்று வடக்கு, லங்காபுர, மெதிரிகிரிய, மூதூர், சேருவில, தமங்கடுவ, தம்பலகாமம் மற்றும் வெலிகந்த ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட மகாவலி ஆற்றின் தாழ்வான பகுதிகளிலும் வசித்து வரும் மக்களுக்கு அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கந்தளாய் நீர்த் தேக்கத் திற்குள் சென்றடையும் கட்டுப் படுத்தும் வகையில் இக்குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டு விநாடிக்கு 1200 கனஅடி நீர் வெளியேற்றபட்டு வருவதாக கந்தளாய் பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் சிந்தக சுரவீர தெரிவித்தார்.- Vidivelli