பாடசாலை மாணவி கடத்தல் விவகாரம்: தவுலகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பணி இடைநிறுத்தம்;இருவருக்கு இடமாற்றம்
(எப்.அய்னா)
தவுலகல பொலிஸ் நிலையத்தின் பதில் பொலிஸ் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் சம்பத் ரணசிங்க பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
கண்டி, தவுலகல பொலிஸ் பிரிவில், மேலதிக வகுப்புக்காக சென்றுகொண்டிருந்தபோது கடத்தப்பட்ட பாடசாலை மாணவி விவகாரத்தில், உடனடியாக செயற்பட்டு நடவடிக்கை எடுக்கத் தவறியமை தொடர்பில், பொலிஸ் கடமைகளை நிறைவேற்றாமை தொடர்பில் அவரை இவ்வாறு பணி இடை நிறுத்தம் செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.
மத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரும் பொலிஸ் நிர்வாக சேவைக்கு பொறுப்பாளருமான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்கவின் கீழ் இடம்பெறும் விசாரணைக்கு அமைய அவர் இவ்வாறு பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதனைவிட, தவுலகல பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் பொறுப்பாளராக செயற்பட்ட பிரதான பெண் பொலிஸ் பரிசோதகரும், அப்பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் விசாரணைப் பிரிவில் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் உடன் அமுலுக்கு வரும் வகையில் அப்பொலிஸ் நிலையத்தில் இருந்து இடமாற்றப்பட்டுள்ளனர்.
முதலில் அவ்விருவரும் கடுகண்ணாவ பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றப்பட்டதுடன் பின்னர் அவர்கள் அங்கிருந்து வெலம்பொட பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தின் உயரதிகாரி ஒருவர் கூறினார்.
கடத்தப்பட்ட பாடசாலை மாணவி ஆபத்தின்றி பொலிஸாரால் மீட்கப்பட்ட நிலையில், கடத்தலின் பிரதான சந்தேக நபரையும் அவரது நண்பர் மற்றும் வேன் சாரதியை எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கம்பளை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. வேன் சாரதி கடந்த 14 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டதுடன் தடுப்புக் காவலின் கீழ் விசாரிக்கப்பட்ட பிரதான சந்தேக நபர் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் கடந்த 15 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டனர். இதன்போதே கம்பளை நீதிவான் காஞ்சனா கொடித்துவக்கு இவர்களை 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டிருந்தார்.
கடத்தலின் போது வேனின் சாரதியாக செயற்பட்ட கம்பளை, கஹட்டபிட்டிய பகுதியைச் சேர்ந்த மொஹம்மட் அன்வர் சதாம், பிரதான சந்தேக நபரான மொஹம்மட் நாசிர், அவரது நண்பர் ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலை மாணவி ஒருவரை கறுப்பு நிற வேனில் வந்த சிலர் கடந்த 12 ஆம் திகதி பலாத்காரமாக கடத்திச் சென்ற விவகாரம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதன்படி, கடத்தலின் பிரதான சந்தேக நபர், மாணவியின் உறவினர் என அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர் கடத்தப்பட்ட தினம் மாலை முதல் மாணவியின் தந்தைக்கு தொலைபேசி அழைப்புக்களை எடுத்திருந்ததாக பொலிஸார் கூறினர். அத்துடன் மாணவியும் தனது தந்தையுடன் தொலைபேசியில் பேசி தன்னை காப்பாற்றுமாறு கோரியுள்ளதாக பொலிஸார் கூறினர்.
இந்த நிலையில் ஏற்கனவே, 12 ஆம் திகதி முதலில் கைது செய்யப்பட்ட வேனின் சாரதியிடம் தடுப்புக் காவல் விசாரணையின் போது பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்கள் மற்றும் தொலைபேசி கோபுரத் தகவல்கள், சந்தேக நபர் பயன்படுத்திய தொலைபேசியின் இமி இலக்கத்தை மையப்படுத்திய விசாரணைகளில், பிரதான சந்தேக நபர், அம்பாறை பகுதியில் தங்கியிருப்பதை பொலிஸார் கண்டறிந்தனர்.
இந் நிலையிலேயே அம்பாறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இது குறித்த தகவல்கள் பறிமாற்றப்பட்ட நிலையில், அந்த தகவல்களை மையப்படுத்தி, 13 ஆம் திகதி காலை, அம்பாறை பஸ் தரிப்பு நிலையத்தில் வைத்து மாணவியை மீட்டு, பிரதான சந்தேக நபரைக் கைது செய்ததாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் புத்திக மனதுங்க குறிப்பிட்டார்.
இந்த நிலையிலேயே இச்சம்பவம் தொடர்பில் உடனடியாக செயற்பட தவுலகல பொலிஸார் தவறியதாக கூறி பிரத்தியேக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli