(எஸ்.என்.எம்.சுஹைல்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தனித்து போட்டியிடவுள்ளதாக அக் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். மேல் மற்றும் மத்திய மாகாண கட்சியின் மத்திய குழுவும் தனித்து போட்டியிடவே விரும்பம் தெரிவித்துள்ளன. எனினும், எந்த சின்னத்தில் போட்டியிடுவது குறித்து தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் கட்சியின் நிலைப்பாடு குறித்து விடிவெள்ளிக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தெரிவிக்கையில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலின்போது வடக்கு கிழக்கு மாகாணங்களில் தனித்து போட்டியிடவுள்ளது. அத்தோடு, மத்திய மாகாணத்திலும் மேல் மாகாணத்திலும் அண்மையில் இடம்பெற்ற மத்திய குழு கூட்டத்தின்போது தனித்து போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவிக்கப்பட்டது. ஏனைய பகுதிகளிலும் மத்திய குழு கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானத்திற்கு அமைவாக முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி தேர்தலுக்கு முகம் கொடுக்கும்.
எது எவ்வாறாயினும் உள்ளூராட்சி தேர்தலில் தனித்து மரச் சின்னத்தில் போட்டியிடுவதா அல்லது வேறு சின்னங்களில் போட்டியிடுவதா என்பது குறித்த தீர்மானம் எடுக்கப்படவில்லை. இது இறுதி நேரத்தில் உயர்பீடத்தின் தீர்மானத்திற்கு அமைவாக எடுக்கப்படும்.
அத்துடன், கூட்டணிக் கட்சிகள் ஆட்சியை கைப்பற்றுவதற்கு வியூகமமைத்து சரியான ஆசன பங்கீடுகள் குறித்த இணக்கப்பாடுகள் ஏற்படுமிடத்து நாம் சில நெகிழ்வுப் போக்குடன் செயற்படவும் தயாராக இருக்கிறோம் என்றார்.- Vidivelli