சட்டத்தரணி
ஏ.எல்.எம். அன்வர் குருணாகல்.
இலங்கை முஸ்லிம்கள் தமது நீண்ட கால வரலாற்றில் அவர்களுடைய நடை, உடை, மதம் சம்பந்தமாக பல விதமான விமர்சனங்களுக்கு ஆளாக வேண்டிய ஒரு காலகட்டத்தில் இருந்து கொண்டிருக்கிறார்கள்.
போர்த்துக்கேயர் கி.பி.1505 இல் இலங்கைக்கு வந்த காலகட்டத்தில் கூட, கொழும்பில் அச்சமயம் வாழ்ந்த முஸ்லிம்கள் அவர்களுடைய விவகாரங்களில் அவர்களுடைய தனிப்பட்ட சட்டமே அமுல்படுத்தப்பட்டதாக சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன. அதேபோல் அவர்களின் பின்வந்த டச்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயரும் முஸ்லிம்களின் தனிப்பட்ட சட்டங்களை அங்கீகரித்து அவை தழுவிய சட்டங்களை இயற்றி முஸ்லிம்களின் தனித்துவத்தை கௌரவித்தனர்.
இக்காலத்துக்குப் பின் வந்த, சமூக நலனை கருத்திற் கொண்டு கருமமாற்றிய எமது மதிப்பிற்குரிய கற்றறிந்த மூதாதையோர், அக்காலத்தில் நிலவிய அரசியல், நல்லிணக்கத்தையும், சமூக புரிந்துணர்வினையும் பயன்படுத்தி எமக்கு அவசியமான பல சட்டங்களை இயற்றினர்.
இலங்கை சட்டசபையில் 1926 மற்றும் 1939 வருடங்களில் தெரிவுக் கமிட்டிகள் அமைக்கப்பட்டு அவற்றின் சிபாரிசுகளின் அடிப்படையில் 1951 ஆம் வருட 13 ஆம் இலக்க முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டம் இயற்றப்பட்டது. எனினும் மனிதன் இயற்றும் சட்டங்களில் குறைபாடுகள் ஏற்படுவது இயல்பு என்பதற்கமைய 1951 ஆம் வருடம் இயற்றப்பட்ட மேற்கண்ட விவாக, விவாகரத்து சட்டத்தை திருத்தி அமைக்கப்பட வேண்டும் என பல கோணங்களில் இருந்தும் வேண்டுகோள் வந்ததன் பெயரில் 1956, 1972 மற்றும் 1990 ஆம் வருடங்களில் பல கமிட்டிகள் அமைக்கப்பட்டு ஆராயப்பட்டன. எனினும் இவற்றின் சிபாரிசுகள் எதையும் இது கால வரை உள்வாங்கப்பட்டு சட்ட திருத்தங்கள் செய்யப்படவில்லை என்பது ஈண்டு கவனிக்கத்தக்கது.
நாம் வாழுகின்ற இந்த நாடு பல்லின, பல மத சமூகத்தவர்களுடன் நாம் சிறுபான்மையோராக வாழ்கின்றவர்கள் என்ற அடிப்படையில் எமது மார்க்கம், நடை, உடை, பண்பாடுகள் சம்பந்தமாகவும் அவை தொடர்பாகவும் மற்ற சமூகத்தவர்களிடையே பல சந்தேகங்கள் ஏற்படுவது இயல்பு. இப்படிப்பட்ட சந்தேகங்களையும் சில பாரதூரமான தப்பபிப்பிராயங்களையும் நாம் கவனத்தில் கொண்டு அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்காமல் விட்டதன் விபரீத விளைவுகளை நாம் எதிர்கொள்ள வேண்டி வந்தது கவலைக்குரியதாகும்.
அவர்களுடைய மொழியிலேயே நாம் அவர்களுக்கு எழுத்து, ஒலிபரப்பு மற்றும் தொலைக்காட்சிகள் மூலம் எமது மார்க்கத்தின் சரியான நிலைப்பாட்டையும், அதன் சிறப்பையும் தெளிவுபடுத்த வேண்டும். இப்படிப்பட்ட முயற்சிகளில் நாம் பல தசாப்தங்களாக பின்னடைந்து தோல்வியடைந்துள்ளதைக் கருத்திற் கொண்டு இதனை நிவர்த்தி செய்யும் முகமாக இதற்குரிய அடித்தளங்களை அமைத்து அதற்கான தகுதி உள்ளவர்களை உருவாக்க வேண்டியது எமது அவசரத் தேவையாகும்.
பல தசாப்தங்களாக நிலுவையில் உள்ள 1951 ஆம் வருட முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்ட திருத்தத்துக்காக 2009 ஆம் வருடத்தில் ஒரு கமிட்டி நியமிக்கப்பட்டு பல வருட தாமதத்தின் பின்னர் 2017 ஆம் வருடத்தில் இந்த கமிட்டியின் தகவுரைகள் அரசாங்கத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டது.
சிறந்த புத்தி ஜீவிகளும், கற்றறிந்த உலமாக்களும் உள்ளடங்கிய இந்தக் கமிட்டி சில அடிப்படைக் காரணங்களில் ஒன்றுபடாமல் இரு வேறு அறிக்கைகளை அரசாங்கத்திற்கு சமர்ப்பித்ததனால் அந்த சந்தர்ப்பத்தில் உரிய சட்ட திருத்தங்களை மேற்கொள்ள முடியாமல் போனது பெரும் கவலைக்குரியதாகும்.
எத்தகைய வேறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் எல்லா சந்தர்ப்பங்களிலும் எமக்கு ஒற்றுமையாக ஒரு பொது முடிவுக்கு வருவதற்கு குர்ஆன், ஹதீஸ் மற்றும் இமாம்களின் வழிகாட்டல்கள் இருப்பது எமக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.
எமது சமூகத்தை மிகவும் பாரதூரமான முறையில் பாதிக்கும் இத்தகைய ஒரு காரியத்தில் மிக மிக அவதானமாக நாம் நடந்து கொள்வது அவசியமாகும்.
“சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசிப்பீராக நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வையே முற்றிலும் சார்ந்து இருப்பீராக” (3:159)
“நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வின் (வேதமாகிய) கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். உங்களுக்குள் கருத்து வேறுபட்டு நீங்கள் பிரிந்து விடாதீர்கள்.” (3:103)
“மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவது அனைத்திலும் சிறந்தது. ஏனெனில், ஒற்றுமையின்றி இருப்பது தீனை (மார்க்கத்தை) சிரைத்து விடக் கூடியது. (திர்மிதி)
ஆகவே, புரையோடிப் போயுள்ள இந்தப் பிரச்சினைக்கு சம்பந்தப்பட்டோர் சமூகத்தின் பொது நலனைக் கருத்திற் கொண்டு வெகு அவசரமாக”ஷரியாவுக்கு” எந்தவிதமான குந்தகமும் இல்லாத முறையில் ஒரு முடிவு காண வேண்டும் என்பதே எல்லோரதும் எதிர்பார்ப்பாகும்.
எமது மூதாதையோர் எமக்கு இயற்றித் தந்த இன்னும் ஒரு சட்டமாகிய 1956 ஆம் ஆண்டின் 51 ஆம் இலக்க “முஸ்லிம் பள்ளிவாசல்கள் தரும நம்பிக்கை பொறுப்புகள் அல்லது வக்ஃபு சட்டம்” இப்போது சர்ச்சைக்குரிய இன்னும் ஒரு பேசு பொருளாக மாறியுள்ளது.
இந்த சட்டமானது இலங்கையில் உள்ள அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் மதஸ்தாபனங்களின் நிர்வாகம் மற்றும் வக்ஃபு சொத்துக்கள் சம்பந்தமான சட்ட திட்டங்கள் உட்பட இன்னோரன்ன சட்டங்களை உள்ளடக்கியுள்ளது.
வக்ஃபு சொத்துக்கள் என்பது அல்லாஹ்வுடைய திருப்பொருத்தத்தை நாடி, உயரிய நோக்கத்துடன், சமூக நலன் கருதி, தன்னலம் பாராது ஏற்படுத்தப்பட்டவையாகும். இந்த சொத்துக்கள் அநேகமானவை மஸ்ஜிதுகளுக்கு வக்ஃபு செய்யப்பட்டவையாகும்.
மேற்கண்ட வக்ஃபு சட்டத்தின் கீழ் மஸ்ஜிதுகளை நிர்வாகிக்கும் நிர்வாகிகளின் அறியாத்தன்மை, பொடுபோக்கு, பாரபட்சம் போன்ற இன்னோரன்ன காரணங்களால் இப்போது அநேகமான மஸ்ஜிதுகளில் சண்டை சச்சரவுகள் மற்றும் நிர்வாக சீர்கேடுகள் ஏற்பட்டு நீதிமன்றங்களில் வழக்காடி வக்ஃபு சத்துக்கள் சீரழிந்து கொண்டிருப்பதை நாம் இப்போது கண்கூடாகக் கண்டு கொண்டிருக்கின்றோம்.
மஸ்ஜித் நிர்வாகம் என்பது தக்வா உள்ள அடியார்கள் பயபக்தியுடன் அல்லாஹ்வுடைய திருப்பொருத்தத்தை நாடி மேற்கொள்ளும் ஒரு சிறப்புமிக்க கைங்கரியமாகும். உண்மையில் இது அல்லாஹ்வுடைய சொத்துக்களை நிர்வகிக்க அவனுடன் ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு புனிதமிக்க உடன்படிக்கையாகும்.
“அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வாகம் செய்பவர்கள் யாரெனில், அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொண்டு, தொழுகையைக் கடைபிடித்து, ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறு எதையும் எவரையும் பயப்படாமல் இருக்கிறார்களோ அவர்கள்தாம் அத்தகையோர் நேர்வழி பெற்றவர்களில் நின்றும் இருக்கப் போதுமானவர்கள்” (அத்தன்பா: 18)
மஸ்ஜித்களின் புனிதத்தன்மை குறித்து எமக்கு பலவாறாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவற்றுக்குரிய கண்ணியம் பாதுகாக்கப்பட வேண்டும்.
பிற மதத்தவருடன் அன்னியோன்யமாகவும், இணக்கமாகவும், சகோதரத் தன்மையுடன் வாழ வேண்டியது மிகமிக முக்கியமாகும். அவர்களில் பலர் இஸ்லாத்தைப் பற்றி அறிவதற்கு மிகவும் ஆவலாக இருக்கின்றனர். அவர்களை எமது மஸ்ஜிதுகளுக்கு வரவழைத்து எமதுமார்க்கத்தை அவர்களுக்கு அறிவுறுத்துவது, இப்தார் போன்ற நிகழ்வுகள் மற்றும் எமது விசேட வைபவ நாட்களில் கலந்து கொள்ளச் செய்வது மிக வரவேற்கத்தக்கதாகும். இதன்மூலம் எமக்கிடையே உள்ள விரிசலை நீக்கி புரிந்துணர்வை ஏற்படுத்தலாம்.
இத்தகைய நிகழ்ச்சிகளை மஸ்ஜித்களில் நடத்தும் போது அவற்றை எந்த விதத்தில் நடத்த வேண்டும் என்பதற்குரிய சரியான வழிகாட்டல்களையும், அறிவுறுத்தல்களையும் நிர்வாகிகளுக்கு சம்பந்தப்பட்ட கற்றறிந்த எமது மதிப்பிற்குரிய உலமாக்கள் வழங்க வேண்டியது மிக மிக அவசியமாகும்.
1962 மற்றும் 1982 ஆம் ஆண்டுகளில் திருத்தியமைக்கப்பட்ட 1956 ஆம் வருட 51 ஆம் இலக்க வக்ஃப் சட்டத்தின் 14ஆம் 15 ஆம் பிரிவுகளின் படி மஸ்ஜித் நிர்வாகிகளின் நியமனம் சம்பந்தமாக அறிவுறுத்தல்கள் இடம்பெற்றுள்ளன. -வக்பு சபை, நியமனங்களில் நேரடியாக தலையீடுவதில்லை.
இன்று மஸ்ஜிதுகளில் ஏற்பட்டிருக்கும் பல பிரச்சினைகளுக்கு மூல காரணம் தகுதியற்றவர்கள் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டிருப்பதாகும்.
இந்த நிலை மாற வேண்டும். அரசியல் தலையீடு மற்றும் செல்வாக்குடையோருடைய சிபாரிசு முற்று முழுதாக இல்லாமலாக்கப்படுதல் வேண்டும். ஒவ்வொரு விண்ணப்பதாரியையும் தனித்தனியாக தீர விசாரணை (Interview) செய்து அவர்களுக்கு நாட்டின் மும்மொழிகளில் ஒரு மொழியிலேனும் நன்கு எழுத வாசிக்க, விளங்க முடியுமாக இருத்தல், மார்க்க சட்டபழக்கவழக்கங்கள் மற்றும் நாட்டின் பொது சட்ட திட்டங்களில் சிறிதளவான அடிப்படை அறிவு ஆகியவற்றை பரீட்சித்துப் பார்த்து தகுதி கண்டு நியமிக்கப்படுதல் வேண்டும்.
மஸ்ஜிதினுடைய சட்ட திட்டங்கள், குர்ஆனிய சட்டதிட்டங்களுக்கு மாறாக செயல்பட்டால் பதவி இழந்ததாகும் என்பதற்கான ஒரு சத்தியக்கடதாசி (AFFIDAVIT) விண்ணப்பதாரியிடமிருந்துபெற வேண்டும்.
நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் வக்பு சட்டத்தில் கீழ்காணும் திருத்தங்களையும் மாற்றங்களையும் ஏற்படுத்துவது தற்போதுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க உதவலாம்.
1. நாட்டில் உள்ள எல்லா மஸ்ஜிதுகளுக்குமான ஒரே சீரான சட்டயாப்பு. (CONSTITUTION)
a. இதில் அந்தந்த ஊருக்கான தகுதியுள்ள நாட்டின் சட்ட திட்டங்களுக்கு முரணில்லாத மரபுகள், பழக்க வழக்கங்கள், வழக்காறுகள் உள்வாங்கப்படலாம்.
b. இந்த சட்டயாப்பு வக்பு சபையில் கட்டாயமாக பதிவு செய்யப்படுதல் வேண்டும்.
2. மஸ்ஜிதுகளின் ஆவணங்கள் (INVENTORY) உரிய முறையில் பாதுகாக்கப்படுதல் வேண்டும் இவற்றை கணினி மயப்படுத்துவதற்கு ஆவணங்கள் கணினி மயப்படுத்தும் அரசு நிறுவனத்தின் உதவியைப் பெற்று அட்டவணைப்படுத்தலாம்.
3. நாட்டிலுள்ள மஸ்ஜிதுகள், தக்கியாக்கள் கட்டாயமாக பதியப்படுதல் வேண்டும்.
4. ஜமாஅத்தார் பட்டியல் வருடா வருடம் புதுப்பிக்கப்பட்டு வக்பு சபையில் பதியப்படுதல் வேண்டும். ஜமாஅத்தார் பார்வைக்கு வைக்க வேண்டும்.
5. பிரிவு 27 இல் சொல்லப்பட்டுள்ள கணக்கு வழக்குகளை உரிய நேரத்தில் சமர்ப்பிக்காத நிர்வாகிகளுக்கு தண்டனை வழங்குவது அவசியம்.
6. மஸ்ஜித்களில் ஏற்படும் வீண் விரயங்கள் (தேவையற்ற கட்டடங்கள்) மேற்கொள்ளாமல் தடுத்தல் வக்ஃப் சொத்துக்களை விற்பதற்கோ அல்லது வாங்குவதற்கு முன் வக்ஃப் சபையின் அனுமதி பெறுதல் கட்டாயமாக்கப்படுதல்.
a. இவற்றை மேற்கொள்ளும் முன்னர் வக்ஃப் சபைக்கு விண்ணப்பித்து அனுமதி பெறுதல் வேண்டும்.
b. வக்பு சபையில் நியமிக்கப்படும் அதிகாரிகளின் (ENGINEER VALUER) தரவுரையின் அடிப்படையில் இவற்றுக்கு அனுமதி அளிக்கலாம்.
7. நிர்வாகிகளின் தவறினால் அல்லது உதாசீனத்தினால் வக்ஃப் சொத்துக்களுக்கு ஏதும் இழப்போ அல்லது பாதிப்போ ஏற்பட்டால் அந்த இழப்பீடுகளை நிர்வாகிகளிடமிருந்து தனிப்பட்ட ரீதியில் அறவிடுவதற்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் அறவிட சட்டம் இயற்றப்படுதல் வேண்டும்.
8. வக்பு சொத்துக்களுக்கு எவரும் ஏகபோக உரிமை கோர முடியாதவாறு சட்ட ஏற்பாடுகள் செய்தல் வேண்டும் (Adverse prescriptive right).
9. பலமுறை திருந்தி அமைக்கப்பட்டுள்ள 1972 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க வாடகைச்சட்டத்தின் (RENT ACT) ஏற்பாடுகளில் இருந்து வக்பு சொத்துக்களை விடுவிக்கப்பட்ட (EXCEPTED PREMISES) சொத்துகளாக பிரகடனப்படுத்த சிபாரிசு செய்தல்.
10. அனுமதி இல்லாமல் வக்பு சொத்துக்களை குத்தகைக்குக் கொடுப்பதைத் தடை செய்தல்.
a. ஐந்து வருடங்களுக்கு மேல் குத்தகை கொடுப்பதைத் தடை செய்தல் (குத்தகையை நீடிக்க ஒப்பந்தப்படலாம்)
b. சட்டபூர்வமான குத்தகை உடன்படிக்கை (REGISTERED LEASE AGREEMENT) மூலம் குத்தகை கொடுத்தல்.
C.கீழ் குத்தகை மூலம் வக்ஃபு சொத்துக்களுக்குப் பெரும் கேடு விளைவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதனை தடை செய்ய உரிய நடவடிக்கை எடுத்தல்.
11. வக்பு சபையினதும் மஸ்ஜிதுகளின் சட்டத் தேவைகளை நிறைவேற்ற பிராந்திய அடிப்படையில் சட்டத்தரணிகளை (ZONAL PANEL LAWYERS) நியமிக்கலாம்.
12. வக்ஃபு சபையின் கடமைகளில் உதவுவதற்காக நிபுணர்களான (ENGINEERS, VALUERS ACCOUNTANTS AND SURVEYORS) போன்றோரை ஒப்பந்த அடிப்படையில் சேவைக்கு அமர்த்தலாம்.
13. பிரிவின் 43 இரண்டில் விவரிக்கப்பட்டுள்ள நிதியம் வினைத்திறனாக வெளிப்படையாக செயல்படுதல் வேண்டும். அதன் நடவடிக்கைகளைப் பொதுமக்கள் அறிதல் அவசியம்.
14.நாட்டிலுள்ள ஆயிரக்கணக்கான மஸ்ஜிதுகளின் விவகாரங்களை திறம்பட நிர்வகிப்பது பெரும் சிரம சாத்தியமான காரியமாகும். வக்ஃபு சபை இதற்கு தேவையான தகுதி உள்ள ஆளணிகளை தமது சேவைக்கு அமர்த்தி வினைத்திறனாக செயல்படுதல் அவசியம்.
15. கதீப்மார், முஅத்தின்மாரின் சேவைகளை ஸ்திரப்படுத்தி அவர்களுக்கு அங்கீகாரமும் அந்தஸ்த்தும் உரிய சம்பளங்களும் வழங்குவதுடன் ஓய்வூதியம் வழங்குவதற்காக சேம லாபநிதி (EPF) போன்றதொரு திட்டம் அமைத்தல்.
16.வக்ஃபு சபையில் தற்போது நிலுவையில் உள்ள வழக்குககள், பிச்சினைகளைத் தீர்ப்பதற்காக பிராந்திய ரீதியில் (OMBUDSMAN) போன்ற அதிகாரிகளை நியமிக்கலாம். அவர்களுக்குத் தேவையான காரியாலய வசதிகள் செய்து கொடுக்கப்படல் வேண்டும்.
17. பிரிவு 58 இல் சொல்லப்பட்டுள்ள வரைவிலக்கணத்தில் “வக்ஃபு சொத்து” என்றால் என்ன என்று கூறப்பட்டில்லை. இதே போல் இன்னும் பல சொற்களுக்கு விளக்கம் தேவை. வக்ஃபு சொத்துக்களுக்குத் தற்போது நீதிமன்றங்களில் பல வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதனால் நாம் இவற்றைக் கவனத்திற்கொள்வது அவசியம்.
(இக்கட்டுரையாசிரியர் “முஸ்லிம் சட்டத் திருத்தம்” சம்பந்தமாக 20.04.2018 வெள்ளிக்கிழமை விடிவெள்ளி இதழில் எழுதிய கட்டுரையின் ஒரு தொடர்ச்சி இதுவாகும்.)- Vidivelli