இணையத்தின் இரகசியங்கள்
இணையத்தின் இரகசியங்களை இளம் தலைமுறையினர் மாத்திரமன்றி வயது வந்தவர்களும் தெரிந்து வைத்திருப்பது கட்டாயமானதாகும். பெரும்பாலானவர்கள் இணையவழி சிக்கல்களில் மாட்டிக் கொள்வதற்கு இதுவும் ஒரு காரணியாகும். எனவே, இப்பகுதியில் இணையம் தொடர்பான சில முக்கியமான இரகசியங்களை பற்றி அவதானிக்கலாம்.
இணைய வழி தகவல்களின்
நிலைபேறான தன்மை
நாம் சமூக வலைத்தளங்களில் பகிரும் செய்திகள், தகவல்கள், புகைப்படங்கள், மற்றும் வீடியோ காட்சிகள் யாவும் நிலையானவை. அவற்றுக்கு அழிவு கிடையாது. அவற்றை முற்றாக நீக்குவது என்பது சாத்தியமான ஒன்றல்ல. இதனைப் பலர் தெரிந்து வைத்திருப்பதில்லை. ஒருவர் பகிர்கின்ற எந்த ஒரு இணைய உள்ளடக்கமும் உரியவரின் கணக்கிலிருந்து அழிக்கப்பட்டாலும், கருவிகளிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டாலும் அவை உண்மையில் பரந்த இணையவெளியில் பல்வேறு இடங்களில் சேமிக்கப்படுகின்றன. ஒரு இடத்தில் அழிந்தாலும் அவற்றை பல வழிகளின் மூலம் பெற முடியும். அதேபோன்று, சமூக வலைத்தளங்களில் உள்ள கணக்குகளை அழித்தாலும் பல சந்தர்ப்பங்களில் அவற்றை மீண்டும் பெற்றுக் கொள்ள முடியும். ஓர் இணைய உள்ளடக்கம் வெளியிடப்பட்ட பின்னர் அது உலகம் முழுக்க பரவி விடுகின்றது. ஒருவர் பகிரும் தகவல்கள் பல சேவர்களில் பதிவாகின்றன. சேமிக்கப்படுகின்றன. அதேவேளை, ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் பகிரும் தகவல்களை ஏனையவர்கள் ஸ்கிரீன் சாட் எடுக்க முடியும். எடுத்துக்காட்டாக இலங்கையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான நடிகர்கள், நடிகைகள் மற்றும் விளையாட்டு வீரர்களின் அந்தரங்க வீடியோக்களை அவர்கள் தமது கணக்கிலிருந்து நீக்கினாலும் அவற்றை முழுமையாக அழிக்க முடியவில்லை. பல்வேறு இணையதளங்களில் அவர்களது அந்தரங்க வீடியோக்களும் புகைப்படங்களும் பதிவாகியுள்ளன. அவை தனித்தனி உள்ளடக்கங்களாக உள்ளன. எனவேதான் எந்த ஒரு விடயத்தையும் இணையத்தில் பகிர்வதற்கு முன்னர் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்தோடு, தனிப்பட்ட ஒருவர் தன்னிடத்தில் மாத்திரம் வைத்திருக்க வேண்டிய புகைப்படங்களை அல்லது வீடியோக்களை பொது வெளியில் வெளியிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டுமென எச்சரிக்கப்படுகின்றது.
இணைய இரகசியங்கள்
இணையவெளி என்பது அந்தரங்கமானதல்ல. அது ஒரு பொதுவெளி. திறந்தவெளி. சிலர் தமது சகல அசைவுகளையும் சமூக ஊடகங்களில் பதிவிடுவதுண்டு. சிலர் செல்லும் பயணங்கள், வீட்டு வைபவங்கள், உண்ணும் உணவு வகை, செல்லும் வாகனங்கள், செல்லப்பிராணிகள், பிள்ளைகளின் புகைப்படங்கள் மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் என்பவற்றை ஒரு நேரடி அஞ்சல் போல பதிவிடுவதுண்டு. இந்த சுதந்திரத்தை இணையம் சகலருக்கும் வழங்குகிறது. சிலர் எமது புகைப்படங்களை நாம் எப்போதும் வெளியிடலாம், எந்த தினத்திலும் வெளியிடலாம் என நினைப்பதுண்டு. சிலர் தமது குழந்தைகள் கட்டம் கட்டமாக வளரும் விதத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதுண்டு. அதற்கும் அவர்களுக்கு உரிமை உண்டு. சிலர் ஏனையவர்களை கோபமூட்டுவதற்காக தமது சந்தோசமான வாழ்க்கையின் கட்டங்களை மற்றவர்களுக்கு காட்டி அதில் ஆனந்தமடைவதுண்டு. இவற்றை விமர்சிக்கவோ தடுத்து நிறுத்தவோ யாருக்கும் உரிமை கிடையாது. ஆனால் இவ்வாறு தனிப்பட்ட விடயங்களை அளவு கடந்து பதிவிடும்போது அது பல விபரீதங்களை கொண்டு வர முடியும். முதலில் செயற்கை நுண்ணறிவு கட்டுப்பாடுகளைத் தாண்டி வளர்ச்சி அடைந்து வருகின்றது. இந்நிலையில் எமது தனிப்பட்ட விடயங்களை எதிரிகள் தவறாக பயன்படுத்த முடியும். சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் புகைப்படங்களையும் திரிவுபடுத்தி நிர்வாண தோற்றங்களை உருவாக்கி இழிவுபடுத்த முடியும். இவ்வாறு அந்தரங்கப் புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்ட பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
ஒருவர் தனது தனிப்பட்ட விடயங்களை பதிவிடும் போது அவர்களின் தரவுகளை சேகரித்து அதன் வாயிலாக அவர்களது கணக்குகளை முடக்க முடியும். எமது நாட்டிலும் வெளிநாடுகளிலும் கொலை, கொள்ளை, வழிப்பறி மற்றும் பாலியல் பலாத்காரம் போன்ற சம்பவங்கள் இடம்பெற காரணமாக அமைந்தது சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட தனிப்பட்ட விடயங்களாகும். ஒருவர் எங்கு சாப்பிடுகின்றார், எப்போது பயணம் செய்வார், எப்போது வீட்டுக்கு திரும்பி வருவார், வீட்டில் யார் இருக்கின்றார்கள், எந்த வாகனத்தில் பயணிக்கின்றார்கள் என்பதை பலரது சமூக வலைத்தளங்கள் எதிரிகளுக்கு காட்டிக் கொடுத்து விடுகின்றன. சமூக வலைத்தளங்களில் பிரவேசிப்பதற்கு முன்னர் மிகுந்த நன்மதிப்புடன் காணப்பட்ட எழுத்தாளர்கள், சமூகத் தலைவர்கள், செயற்பாட்டாளர்கள், ஆசிரியர்கள், மற்றும் அதிகாரிகள் போன்றோர் தம் சமூகவலைத் தளங்களில் வெளிக்காட்டும் பொது விழுமியங்களாலும் அவர்களது பதிவுகளாலும் செல்வாக்கிழந்து விடுகின்றனர். அவர்கள் எவ்வளவு குறுகியமனம் கொண்டவர்கள் என்பதை சமூக வலைத்தளங்கள் காட்டிக் கொடுத்து விடுகின்றன.
எண்ணிமப் பாதத்தடம்
எண்ணிமப் பாதத்தடம் (Digital Footprint) என்பது இணைய வெளியில் நாம் மேற்கொள்ளும் சகல காரியங்களும் பதியப்பட்டு, நமது ஒட்டு மொத்த இணைய நடத்தையை தீர்மானிக்கும் சான்றுகளாக அமைவதைக் குறிக்கும். குறிப்பாக இது இணைய வெளியில் எவ்வாறு நடந்து கொள்கின்றோம் என்பதைக் குறிக்கும். நாம் இணையத்தளத்தில் அல்லது சமூகவலைத் தளங்களில் பிரவேசித்து செய்கின்ற லைக், கமெண்ட் மற்றும் செயார் போன்ற ஒவ்வொரு செய்கையும் இணையதளத்தில் பதிவு செய்யப்படுகின்றன. எமது சகல தேடுதல் வரலாறும் பதிவு செய்யப்படுகின்றது. நாம் எந்த இணையதளத்தில் பிரவேசித்தோம், எப்போது பிரவேசித்தோம் என்பது முதல் எமது ஒட்டுமொத்த இணையவெளி நடவடிக்கைகளும் நமது வரலாறாகப் பதியப்படுகிறது. நாம் இணையவெளியில் எவ்வாறு நடந்து கொள்கின்றோம் என்பதைப் பொறுத்து, நாம் எவ்வாறானவர்கள் என்பதைப் பிறர் கணிக்க முடியும். எனவேதான், தனியார் நிறுவனங்களில் புதிதாக நேர்முகப் பரீட்சைக்கு வரும் நபர்களை பணிக்கு தெரிவு செய்வதற்கு முதல் அவர்கள் இணைய உலகில் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதை தேடிப் பார்க்கின்றனர். அதிக கல்வித் தகைமைகளைக் கொண்டவர்களின் எண்ணிமப் பாதத்தடம் ஆரோக்கியமானதாக அமையாவிட்டால் அவர்கள் தமக்கான வாய்ப்புகளை இழக்க நேரிடும். சமகால நேர்முகத்தேர்வுகளில் எண்ணிமப் பாதத்தடம் தொடர்பான தேடுகை முக்கியம் பெறுவதால் தொழில் நாடுபவர்கள் இந்த விடயத்தில் கவனமாக நடந்து கொள்ள வேண்டியுள்ளது. சிலரது இணையத்தளப் பாவனை அவர்களின் நண்பர்கள் யார், அவர்களின் சமூகப் பழக்கவழக்கம், எத்தகைய விடயங்களை பதிவேற்றம் செய்கின்றார்கள், எத்தகைய உள்ளடக்கங்களை பகிர்ந்துகொள்கின்றார்கள், நண்பர்களுடனான நடத்தை, கருத்து வெளிப்பாட்டு மனப்பாங்கு, மற்றவர்களின் கருத்துக்களுக்கு எதிர்வினையாற்றும் பண்பு என்பனவற்றை இலகுவில் காட்டிக் கொடுக்கின்றன.
சிலபோது, ஆரோக்கியமற்ற எண்ணிமப் பாதத்தடங்களை கொண்டிருப்பவர்கள் கல்லூரியில் அனுமதியை இழக்க நேரிடுகிறது. மாறாக நேர்த்தியான இணையத்தள ஈடுபாட்டை கொண்டவர்கள் புலமை பரிசில்களை இலகுவில் பெற்றுக் கொள்கின்றனர். பயிலுனர்களாக, பங்கேற்பாளர்களாக வாய்ப்புகளை பெற்றுக் கொள்கின்றனர். எண்ணிமப் பாதத்தடம் ஒருவரது இணையவழி நற்பெயரை அதிகம் பாதிக்கின்றது. நேர் நிலையான பிரதிபலிப்பை தடுக்கிறது. நண்பர்கள் வலைப்பின்னலில் உள்ளவர்கள் மத்தியில் அபகீர்த்தியை ஏற்படுத்துகிறது. மாறாக, நல்ல எண்ணிமப் பாதத்தடம் என்பது அதிக நட்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கிறது. வலுவான தகுதி வாய்ந்தவர்களை வலைப்பின்னலில் அறிமுகப்படுத்தித் தருகின்றது. நன்மதிப்பை ஏற்படுத்துகின்றது. மக்கள் ஆதரவை ஏற்படுத்துகின்றது. எனவே, ஒருவர் இணைய உலகில் எவ்வாறு நடந்து கொள்கின்றார் என்பது அவரது தனிப்பட்ட, குடும்ப, சமூக, மற்றும் தொழில் வாழ்க்கையில் அதிகத் தாக்கத்தை செலுத்துகிறது.
மெய்நிகர் நாசகாரர்கள் (Online Predators)
இணையவெளியில் பெரும்பாலும் போலியான பெயர்களில் இருந்துகொண்டு சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு தீங்கிழைப்பவர்களையே இது குறிக்கின்றது. இணையவெளியில் எவரும் சொந்த பெயரில் தம்மை அடையாளப்படுத்த வேண்டியதில்லை. எவரும் வேறு பெயர்களில் வாழலாம். தேவையானபோது மறைந்தும் இருக்கலாம். தேவையானபோது தோன்றி மறையலாம். பல பெயர்களில் பல கணக்குகளில் மறைந்திருக்கின்றவர்களும் உள்ளனர். இவ்வாறானவர்கள் சமூக வலைப்பின்னல்களில் உள்ள நண்பர்களுடன் தவறாக நடந்து கொள்வதை நாம் பல சந்தர்ப்பங்களில் கண்டிருக்கின்றோம். ஆண் பெண்ணாகவோ அல்லது பெண் ஆணாகவோ தன்னை மாற்றிக் கொண்டு போலிப் பெயர்களில் கணக்குகளை வைத்திருப்பவர்கள் மற்றவர்களை ஏமாற்றுவதுண்டு, நம்பிக்கை துரோகம் செய்வதுண்டு, திருட்டுக்களில் ஈடுபடுவதுண்டு. இத்தகையவர்களில் பெரும்பாலானவர்கள் மோசடிகளில் ஈடுபடுபவர்கள். சமூக வலைத்தளங்களை நடத்தும் சர்வதேச கோடிஸ்வரர்கள் இவற்றைப் பெரும்பாலும் தேடிப்பார்ப்பதில்லை. மற்றவர்கள் முறைப்பாடு செய்தாலேயொழிய இவற்றில் உள்ள மையத்தன்மையை தேடிப் பார்ப்பதில்லை. அவர்களுக்கு தேவையானதெல்லாம் மொத்த கணக்குகளும் அவற்றின் செயற்பாடுளின் வாயிலாக கிடைக்கும் விளம்பரப் பணமும்தான். இணையத்தளங்களில் போலியாக மறைந்திருப்பவர்கள் எமது சிறுவர்களுடன் நட்பை ஏற்படுத்தி அவர்களுக்கு நம்பிக்கையூட்டி, அவர்களுடன் உற்ற நண்பர்களாக நடந்து கொண்டு, அவர்களுக்கு பரிசுகளை வழங்கி, அவர்களுடன் அன்பான வார்த்தைகளால் பேசி, அவர்களை தவறான வழிகேட்டுச் செல்ல முடியும். இது பற்றி நாம் பின்னர் பிறிதொரு பகுதியில் நோக்கலாம். இதனால், எல்லா சமூக வலைத்தளங்களிலும் நட்புக் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் போது மிகுந்த அவதானத்துடன் நடந்து கொள்ள வேண்டியுள்ளது. முன்-பின் அறிமுகமற்ற போலியான தகவல்களை வழங்குகின்றவர்களை தவிர்க்கவும் நீக்கவும் வேண்டியுள்ளது.- Vidivelli