உடுநுவர நிருபர்
முஸ்லிம் மாணவியொருவர் வேனில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்படும் சீ.சீ.டி.வி காட்சி கடந்த சனிக்கிழமை காலை சமூக ஊடகங்களில் வைரலாகத் தொடங்கியது. அத்துடன், இக்கடத்தல் பற்றி தொலைக்காட்சி சேவைகளிலும் பிரேக்கிங் நியுஸ் வர ஆரம்பித்தது.
இது நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் தோற்றுவித்தது. இக்கடத்தல் சம்பவம் காலை வேளையில் பலருக்கு முன் நடைபெற்றமையானது பெரும் அதிர்ச்சியைத் தோற்றுவித்ததில் வியப்பில்லை. சீருடை அணிந்திருந்த மாணவி கடத்தப்படுவது கண்டு பலரும் ஆத்திரத்திற்குள்ளாகினர்.
இது நடைபெற்ற இடம் கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்கள் செறிவாக வாழும் உடுநுவர பகுதியில் ஆகும். இதனால் நாட்டின் நாலாபக்கங்களிலும் இருந்து மட்டுமல்ல வெளிநாடுகளில் வசிப்பவர்களும் உடுநுவரையில் இருக்கும் தமது உறவினர்கள், நண்பர்களுடன் தொடர்பு கொள்ள ஆரம்பித்தனர்.
12 ஆம் திகதி நடந்த சம்பவம்
இச்சம்பவம் இடம்பெற்ற தினம் கடந்த 12 ஆம் திகதி சனிக்கிழமை ஆகும். க.பொ.த உயர்தரத்தில் விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்றுவரும் 18 வயது மாணவியொருவர் அரவ்வாவல பகுதியில் தனது நண்பி சகிதம் தனியார் வகுப்புக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, எவரும் எதிர்பாராத வகையில் ஹப்புகஹட்டுதன்னை எனும் இடத்தில் நடந்து செல்லும் இரு மாணவிகளுக்கும் முன்னால் வந்து நின்ற, கறுப்பு நிற வேனில் இருந்து இறங்கிய பிரதான சந்தேக நபர் மாணவியை இழுத்து வேனில் ஏற்றுகின்றார். இதில் பீதியடைந்த நண்பி வந்த வழியே திரும்பி ஒடுகின்றார்.
இக்கடத்தல் காட்சி அருகிலிருந்த கட்டிடத்தின் சீ.சீ.டி.வி கமெராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
இக்கடத்தல் சம்பவம் இடம்பெற்ற ஹப்புகஹட்டுதன்னை என்ற இடம் அரவ்வாவல பகுதியில் பூவெலிகடை – தவுலகல பிரதான வீதியில் அமைந்துள்ளது. இங்கு பொதுவாக காலை வேளையில் மக்கள் நடமாட்டம் குறைவாகக் காணப்படுவது வழக்கமாகும். எனினும், மாலை வேளைகளில் மக்கள் நடமாட்டம் அதிகளவில் காணப்படும். ஆனால், இச்சம்பவம் சன நடமாட்டம் குறைவாகக் காணப்படும் காலை வேளையில் இடம்பெற்றமையானது இக்கடத்தல் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதற்கு சான்றாகும் என்று இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
உஷாராகிய பிரதேசவாசிகள்
இச்சம்பவத்தை தொடர்ந்து உஷாராகிய பிரதேசவாசிகள் வேன் சென்ற திசையில் வேனை மறிப்பதற்கு கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டனர். தொலைபேசி அழைப்புக்கள் நாலாபுறங்களுக்கும் பறந்தன. கெலிஓயா நகரில் வேனை மறிப்பதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. மேலும், இந்த வேனை ஆசிரியரொருவர் தனது மோட்டார் சைக்கிளில் கட்டுகஸ்தோட்டை வரை விரட்டிச் சென்றதாகவும் அதற்கப்பால் வேன் மறைந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால், இப்பிரயத்தனங்கள் யாவும் துரதிஷ்டவசமாக தோல்வியில் முடிந்தன.
கடத்தல்காரர் மாணவியின் உறவினராம்
இக்கடத்தில் ஈடுபட்டவர் மாணவியின் தந்தையின் சகோதரியின் மகன் ஆவார். இவர் கம்பளையை சேர்ந்தவர் எனவும் ஜப்பானில் சில வருடங்கள் தொழில் புரிந்து விட்டு நாடு திரும்பியவர் எனவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்தது. அத்துடன், அன்றைய தினம் இச்சந்தேக நபரின் புகைப்படம், சாரதி அடையாள அட்டை உட்பட பல விபரங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின.
பொலிஸ் முறைப்பாடு
இச்சம்பவத்தை தொடர்ந்து, இம்மாணவி வாடகைக்கு தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் பெற்றோரினால் தவுலகல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, தவுலகல பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி சம்பத் ரணசிங்க தலைமையிலான பொலிஸார் மாணவியை மீட்பதற்கும் கடத்தல்காரர்களை கைது செய்வதற்குமான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
வேனின் சாரதி கைது – வேனும் சிக்கியது
இக்கடத்தல் சம்பவத்திற்கு வாடகைக்கு அமர்த்தப்பட்ட வேன் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்த பொலிஸார் வேனுடன் தொடர்புடைய ஜீ.பி.எஸ் தொழிநுட்பத்தை பயன்படுத்தி வேன் பொலன்னறுவை கதுருவெல பகுதியில் காணப்படுவதை உறுதி செய்து கொண்டனர். இதனையடுத்து, சம்பவ தினம் மாலை கதுருவெல பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த வேனைப் பொலிஸார் கைப்பற்றினர். அத்துடன், கண்டி நோக்கி திரும்பிக் கொண்டிருந்த வேனின் சாரதியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
எனினும், இவ்வேனில் இருந்து இடையில் இறங்கிய சந்தேக நபர் முச்சக்கரவண்டிகளை வாடகைக்கு அமர்த்தி பயணித்துள்ளதாகவும் தெரிய வந்தது.
50 இலட்சம் ரூபா கப்பம் கோரல்
இதற்கிடையில், சம்பவ தினம் மாலை மாணவியின் தந்தையுடன் தொடர்பு கொண்ட சந்தேக நபர், மகளை விடுவிப்பதற்கு 50 இலட்சம் ரூபா கப்பம் தருமாறு கூறி மிரட்ட ஆரம்பித்துள்ளார். எனினும், அன்றைய தினம் விடுமுறை தினம் என்பதால் 50 இலட்சம் ரூபா பணத்தை வங்கிக் கணக்கில் இருந்து மீளப் பெற்றுக் கொள்வது மட்டுமன்றி வைப்பிலிடுவதும் முடியாத காரியமாக இருந்தது. எனவே, முதலில் 50 ஆயிரம் ரூபா ஒன்லைன் மூலம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
மேலும், மாணவியின் தந்தையுடன் பல தடவைகள் தொடர்பு கொண்ட சந்தேக நபர் கப்பப் பணத்தை செலுத்துமாறு மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.
இதற்கிடையில், சந்தேக நபரின் கையடக்கத் தொலைபேசியூடாக விசாரனைகளை மேற்கொண்டு அதிலிருந்து டவர் மூலம் தொழிநுட்ப முறைகளை பயன்படுத்தி சந்தேக நபரை கைது நெய்யும் நடவடிக்கையை கண்டி குற்றப் புலனாய்வுப் பிரிவின் குழுவொன்று ஆரம்பித்திருந்தது. இதன் அடிப்படையில், கிழக்கு மாகாணத்தில் அம்பாறை பகுதியில் சந்தேக நபரை மடக்கிப் பிடிப்பதற்காக பொலிஸார் வலை விரித்திருந்தனர்.
சந்தேக நபர் கைது
அம்பறை பேரூந்து நிலையத்திலிருந்து அம்பாறையில் இருந்து கண்டி நோக்கி புறப்படவிருந்த பேரூந்தில் இருந்து 13 ஆம் திகதி திங்கட்கிழமை காலை மாணவியை மீட்ட பொலிஸார் சந்தேக நபரையும் மடக்கிப் பிடித்துள்ளனர். இதனையடுத்து அம்பாறை பொலிஸ் தலைமையகத்தில் சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரனைகளை மேற்கொண்ட பொலிஸார் இக்கடத்தலுடன் தொடர்புடைய ஏனைய நபர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மேலும், இச்சந்தேக நபரும் மாணவியும் தவுலகல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
“இக்கடத்தல் கப்பம் பெறுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை முறியடித்த பொலிஸாருக்கும் மகளைக் கடத்திச் செல்லும் போது காப்பாற்ற முயற்சித்த அர்ஷாத் என்ற இளைஞருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இதில் ஈடுபட்டவர் எனது சகோதரியின் மகன். மற்ற இருவரையும் எனக்குத் தெரியாது. இதில் ஈடுபட்டவர்கள் பொய்களைப் பரப்பி தப்பித்துக் கொள்ள முயற்சிக்கின்றனர். இக்குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன்நிறுத்தி தண்டனை வழங்கப்பட வேண்டும்” என்று மாணவின் தந்தை எம்.எச்.எம். ஹில்மி ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
கடத்தல்காரர்களுடன் போரடிய அர்சாத் முஹம்மத்
இச்சம்பவம் நடைபெறும் போது பாதையில் சென்று கொண்டிருந்த இளைஞரொருவர் மாணவியொருவர் நபரொருவரால் வேனில் வந்தவர்களால் கடத்தப்படுவதை கண்டு வேகமாக வேனை நோக்கி ஒடி வந்துள்ளார். இவர் அரவ்வாவல பகுதியை சேர்ந்த எம்.ஐ. அர்சாத் முஹம்மத் என்ற இளைஞர் ஆவார்.
இவ்விளைஞன் தன்னுயிரையும் பொருட்படுத்தாது மாணவியைக் காப்பாற்ற கடத்தல்காரர்களுடன் துணிகரமாகப் போராடியுள்ளார். கடத்தல்காரர்கள் வேனை ஓட்டிச் சென்ற போதிலும் இவர் வேனில் தொத்தியவாறு போராட்டத்தை தொடர்ந்துள்ளார். எனினும், வேனில் இருந்த கடத்தல்காரர்களின் தாக்குதலில் கால், கை மற்றும் முகத்தில் காயமடைந்த இளைஞன் சுமார் 500 மீற்றர் தூரத்தில் பாதையில் வீசப்பட்டு வீழ்ந்துள்ளார். இக்காட்சியும் சீ.சீ.டி.வி கமெராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
இதில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ள எம். ஐ. அர்சாத் முஹம்மத் என்ற இளைஞரின் செயலை பொலிஸாரும் பாராட்டியுள்ளனர்.
மேலும், இவருக்கு சமூக ஊடகங்கள் ஊடாகவும் நேரடியாகவும் பெருந்தொகையானோர் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். அத்துடன் இவரின் வீட்டுக்கு பலரும் நேரடியாகச் சென்று பாராட்டியதைக் காண முடிந்தது.
இதேவேளை, அக்குறனைப் பகுதியில் இருந்து இவரின் வீட்டுக்கு வந்த குழுவினர் இவரைப் பாராட்டி பரிசும் வழங்கிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எமது சமூகத்தில் அவ்வப்போது இடம்பெறும் சில சம்பவங்கள் முஸ்லிம் சமூகத்தை நோக்கி ஏனைய சமூகங்கள் தலை உயர்த்தி பார்ப்பதற்கு வழி செய்கின்றன. இச்சம்பவங்கள் தொடர்பான, பிற சமூகங்களின் புரிதல்கள், விமர்சனங்கள், நிலைப்பாடுகள் பற்றிய புரிதல்களை முஸ்லிம் சமூகத் தலைமைகள், புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள் உள்வாங்கி செயற்பட வேண்டியுள்ளது என்பதை இங்கு வலியுறுத்தாமல் இருக்க முடியாது. இதன் மூலம் எமது சமூகத்தில் குடும்ப, சமூக வாழ்வியல் ஒழுங்குகள் தொடர்பாக மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டிய விடயங்களை சமூகத்தின் முன் கொண்டு செல்வது உலமாக்கள், சமூகத்தலைமைகள், புத்திஜீவிகள் சார்ந்த பொறுப்பாகும்.
இது போன்ற குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் எவராக இருப்பினும் தராதரம் பாராது தண்டிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.- Vidivelli