இஸட். ஏ. ஸன்ஹிர்
(முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர்)
இலங்கையின் ஆரம்பகால மத்ரஸாக்களுள் ஒன்றான புத்தளம் காஸிமிய்யா அறபுக் கல்லூரியில் மூன்று தசாப்த காலங்களுக்கும் மேலாக அதிபராகப் பணியாற்றிய அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்கள் 13.01.2025 அன்று கொழும்பு தனியார் வைத்தியசாலையில் காலமானார். அடுத்தநாள் புத்தளம் பகா மஸ்ஜித் மையவாடியில் இடம்பெற்ற ஜனாஸா நல்லடக்கத்தில் நாடெங்கிலுமிருந்து பெருந்தொகையானோர் கலந்துகொண்டனர்.
அப்துல் ஹமீத் மஹ்மூத், சாரா உம்மா தம்பதியினரின் நான்காவது மகவான அப்துல்லாஹ் அவர்கள் தனது ஆரம்பக் கல்வியை புத்தளம் ஸாஹிறாவில் பயின்றார். அத்துடன் ஷரீஆக் கல்வியை மத்ரஸத்துல் காஸிமிய்யாவில் கற்றார். பின்னர் தனது பட்டப் படிப்பை மதீனா இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தில் நிறைவுசெய்தார். மதீனாவில் இருந்து நாடு திரும்பி, காசிமிய்யா அறபுக் கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரிந்து, அதனைத் தொடர்ந்து கல்லூரி அதிபர் பதவியைப் பொறுப்பேற்றார்.
“குத்தாப்” எனப்படும் திண்ணைப் பள்ளிக்கூடமாக 1884 இல் ஆரம்பிக்கப்பட்ட காஸிமிய்யா மத்ரஸாவில் 1944 முதல் 1985 வரை அதிபராக இருந்து அரும்பணியாற்றியவர் மஹ்மூத் அப்துல் மஜீத் (பெரிய ஹஸரத்) ஆவார். அப்துல்லாஹ் ஹசரத்தின் தந்தையான அன்னார், சுமார் நாற்பது வருடங்களும் அதனைத் தொடர்ந்து, சிறிய தந்தையான ஷேய்க் மதார் ஆலிம் (சின்ன ஹஸரத்) அவர்கள் 1985 -–1989 வரை ஐந்து ஆண்டுகளும் கல்லூரியை வழிநடத்தினர். பின்னர் இதனைப் பொறுப்பேற்ற அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்கள் 2024 டிசம்பர் வரை காஸிமிய்யா அதிபராக இருந்தார். இந்தவகையில் ஹஸரத் குடும்பத்தினர் மொத்தம் எண்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் காஸிமிய்யா அறபுக் கல்லூரியைத் தொடர்ச்சியாக நிருவகித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அப்துல்லாஹ் ஹஸரத் அவர்கள் காஸிமிய்யா அறபுக் கல்லூரியின் அதிபராக இருந்த சமகாலத்தில் புத்தளம் நகர ஜம்மிய்யதுல் உலமா, புத்தளம் மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா ஆகிய இரண்டினதும் தலைமைத்துவத்தை ஏற்று அவற்றை வழிநடாத்தியுள்ளார். குறிப்பாகப் புத்தளத்தில் 1989 இல் ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட ஜம்இய்யதுல் உலமா உருவாகக் காரண கர்த்தாவாக இருந்துள்ளதுடன் சுமார் முப்பத்தி ஐந்து வருடங்கள் அதன் தலைவராக இருந்து அரும்பணியாற்றியுள்ளார். அன்னார் தனது இறுதிவரை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா நிறைவேற்றுக் குழு உறுப்பினராகவும் பணியாற்றினார்.
அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்கள் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின், மத்திய மஜ்லிஸுஷ் ஷூரா சபை உறுப்பினர் என்பதுடன் அதன் ஆரம்பகால அங்கத்தவர்களுள் ஒருவருமாவார். அவர் ஒரு தசாப்ததுக்கும் மேலாக பெண்களுக்கான அல்குர்ஆன் மஜ்லிஸை மத்ரஸதுல் காசிமிய்யாவில் நடத்திவந்துள்ளார்.
மறைந்த அப்துல்லாஹ் ஆலிம் அவர்கள், பல்வேறு சமூக சேவை நிறுவனங்களின் தலைவராகவும் செயற்குழு உறுப்பினராகவும் தொடர்ந்தும் செயலாற்றிவந்தமை குறிப்பிடத்தக்கது. புத்தளம் பிரதேசத்தில் சமூகப் பணியாற்றிய சங்கங்களுள் ஒன்று ‘புத்தளம் மக்கள் மன்றம்’ ஆகும். இது 1999 இல் உருவானது. அதன் தாபகத் தலைவர் அப்துல்லாஹ் ஹஸரத் ஆவார். இப்பிரதேசத்தின் சமூக விவகாரங்கள் பல, காஸிமிய்யா அறபுக் கல்லூரியை மையப்படுத்தி நீண்ட நெடுங்காலமாகக் கலந்துரையாடப்பட்டு, வழிகாட்டல்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கான காரணகர்த்தா அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்களே.
புத்தளம் மாவட்ட சர்வ மதக் குழுவின் இணைத் தலைவரான அப்துல்லாஹ் ஹஸரத் அவர்கள் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் முன்னின்று உழைத்தார். இந்த அமைப்பின் பிரதிநிதியாக ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகளுக்கும் பயணங்களை மேற்கொண்டுள்ளார். புத்தளம் மாவட்ட ஜம்மிய்யதுல் உலமாத் தலைவராக இருந்தபோது புத்தளம் பெரிய பள்ளிவாசல் தலைமைத்துவத்துடன் மிக அந்நியோன்ய நட்புறவைப் பேணிவந்தார். சமூக விவகாரங்களைக் கலந்துரையாடவும் பிரச்சினைகளுக்கு இலகுவாகத் தீர்வுகாணவும் இது ஏதுவாயிற்று. பெரிய பள்ளிவாசலின் நிருவாகக் குழு உறுப்பினராகவும் அவர் அங்கத்துவம் வகித்துள்ளார்.
எம்மைவிட்டும் மறைந்த அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்கள் ஆலிம் என்ற நிலையில் இருந்துகொண்டு சமூக விவகாரங்களில் அதீத சிரத்தையெடுத்துச் செயலாற்றி ஏனையோருக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர். நவீன சிந்தனைகள் கொண்ட அவர், நல்ல புதிய முன்னெடுப்புக்களுக்கு என்றும் எதிர்ப்புத்தெரிவித்ததில்லை. தலைமைத்துவப் பண்புகள் நிறையப் பெற்றவர். சிறந்த செவிமடுப்பாளர். நிதானமிக்கவர். பொறுமையின் சிகரம். சமூக மேம்பாடுபற்றி என்றென்றும் சிந்திப்பவர். அனைத்து இனத்தினருடனும் நல்லுறவைப் பேணிவந்தவர். அவர் ஓர் உதைப்பந்தாட்ட வீரரும் கூட.
அன்னாரின் ஜனாஸாவில் தேசிய ரீதியாக பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர். தேசிய சமாதானப் பேரவை நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா, அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவின் உப தலைவர்களுள் ஒருவரான அஷ் ஷேய்க் புர்ஹான் (பஹ்ஜி), ஜமாஅதுஸ் ஸலாமா தலைவர் ஆஸாத் முஈஸ், பறகஹதெனிய அன்சார் சுன்னத்துல் முகம்மதிய்யா தலைவர் அஷ் ஷேய்க் அபூபக்கர் சித்தீக் (மதனி) போன்றோர் இவர்களுள் குறிப்பிடத்தக்கோராவர். அத்துடன் புத்தளம் மாவட்ட சர்வ மத அமைப்பின் இணைத் தலைவர் புத்தியாகாம இரத்தின தேரர், புத்தளம் பங்குத் தந்தை, அருட்பணி டிலங்க பெரேரா ஆகியோர் உட்பட பலரும் ஆண், பெண் இன மத பேதமின்றி கலந்துகொண்டனர்.
அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாத் தலைவர் அஷ் ஷேய்க் ரிஸ்வி முப்தி, புத்தளம் பிள்ளையார் கோவில் பிரதம குருக்கள், சுந்தர ராம குருக்கள் ஆகியோர் தற்போது நாட்டில் இல்லாதபோதும் தமது அனுதாபச் செய்திகளை அனுப்பிவைத்திருந்தனர்.
புத்தளம் ஓர் சிறந்த தலைமையை இழந்து தவிக்கின்றது. அவரின் குடும்பத்தினர் ஆறாத் துயரத்தில் வாடுகின்றனர். அன்னாரின் சிறந்த மறுமை வாழ்வுக்குப் பிரார்த்திப்பதுடன் குடும்பத்தாரின் மன நிம்மதிக்கும் இறைவனை இறைஞ்சி நிற்கின்றோம்.- Vidivelli