தென்மேற்கு வங்கக் கடலில் கடந்த மாதம் நவம்பர் 23 ஆம் திகதி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவெடுத்த ‘ஃபெங்கல்’ புயல் 27 ஆம் திகதி திருகோணமலையில் இருந்து கிழக்கே 110 கி.மீ. தொலைவில் நிலை கொண்டது. இதன் தாக்கத்தால் இலங்கையின் பெய்த கடும் மழையால் பெருவாரியான பகுதிகள் வெள்ளக்காடாக மாறியிருந்தன. அம்பாறை மாவட்டத்தில் இதன் தாக்கம் உச்சம் தொட்டிருந்தது.
அன்று நவம்பர் 26 ஆம் திகதி செவ்வாயன்று, A31 அம்பாறை – காரைதீவு பிரதான வீதியின் ஒரு பகுதியான மாவடிப்பள்ளி பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் காரைதீவிலிருந்து சம்மாந்துறை, அம்பாறை, இறக்காமம் போன்ற பகுதிகளுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் அப்பிரதேசங்களுக்கு செல்லும் மக்கள் உழவு இயந்திரங்கள் மற்றும் கனரக வாகனங்கள் ஊடாகவுமே வீதியைக் கடக்கும் நிலை ஏற்பட்டது.
அன்று மாலையாகியும் மழை குறைந்தபாடில்லை. உழவு இயந்திரம் மூலம் குறித்த பாதை ஊடாக மத்ரஸா மாணவர்கள் உட்பட சுமார் 15 பேரளவில் குறித்த உழவு இயந்திரத்தில் பயணத்தை ஆரம்பித்தனர். காரைதீவு – அம்பாறை வீதி முதலாவது பஸ் தரிப்பிடத்திலிருந்து சுமார் 200 மீற்றர் தூரம் செல்லும் போது உழவு இயந்திரம் தடம்புரண்டது.
கடும் காற்றுடன் கொட்டும் பலத்த மழைக்கும் மத்தியில் அந்த விபத்தில் சிக்கிகொண்ட மாணவர்கள் ‘எம்மை காப்பாற்றுங்கள்’ என்று கதறியழுத அலறல் சத்தம் இன்னும் எனது காதுகளுக்குள் ஒலித்துக்கொண்டிருக்கின்றன, என்னால் தூங்கவே முடியவில்லை என்று நிந்தவூர் காஷிபுல் உலூம் மத்ரஸா மாணவர் ஹிமாஸ் அஹமத் தன் கண் முன்னால் நிகழ்ந்த அந்த திக் திக் நிமிடங்களைக் கூறி விம்மியழுதார் . தைரியத்துடன் ஓரிரு மாணவர்களை காப்பாற்றிய அந்த மாணவன், அங்கு நடந்த சோகக் கதையை விபரிக்கும் வீடியோ காட்சியானது எமது ஆன்மாக்களையும் அந்த வெள்ளத்திற்குள் மூழ்கடித்துவிட்டது.
பின்னர் மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பினர் மற்றும் காரைதீவு இளைஞர்கள் உட்பட கடற்படையினரின் உதவியுடன் பொது மக்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். குறித்த மீட்புப்பணியில் போது அப்பகுதியில் உள்ள மின்கம்பத்தை பிடித்திருந்த மாணவர்கள் சிலரை மீட்புக்குழுவினர் உயிருடன் மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். மேலும் இந்த விபத்தில் 6 மத்ரஸா மாணவர்கள் உழவு இயந்திரத்தை செலுத்திய நபர் மற்றும் இவர்களுடன் மற்றுமொருவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
26 ஆம் திகதி செவ்வாயன்று தொடர்ச்சியாக நிலவிய கன மழை மற்றும் வெள்ள நீரின் ஓட்ட வேகம் ஏனையோரை மீட்டெடுப்பதில் பெரும் இடையூறாக இருந்தது. இந்நிலையில், மறுநாள் புதன் கிழமை காலையில் இராணுவம் விசேட அதிரடிப்படை, பொலிஸார் பங்கேற்புடன் சாய்ந்தமருது ஜனாசா நலன்புரி மக்கள் பேரவை, மாளிகைக்காடு ஜனாசா நலன்புரி அமைப்பு, காரைதீவு இளைஞர்கள் உள்ளிட்டோர் தொடரச்சியாக தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அத்துடன், விமானப்படையின் ஹெலிகப்டரும் மீட்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டது. அன்றை தினம் மாலை 7 மணி வரை முன்னெடுக்கப்பட்ட மீட்பு நடவடிக்கைகளின் மூலம் நான்கு மத்ரஸா மாணவர்கள் ஜனாஸாக்களாக மீட்கப்பட்டனர்.
முஹம்மட் ஜெஸீல் முஹம்மட் சாதிர் (வயது 17), முஹம்மட் ஆஷிக் முஹம்மட் அப்னான் (வயது 15), பாறூக் முஹம்மட் நாஸிக் (வயது 15), பாறூக் முஹம்மட் சஹ்ரான் (வயது 15) ஆகியோரின் ஜனாஸாக்கள் மீட்கப்பட்டு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. பின்னர், சம்மாந்துறை நீதிமன்ற பதில் நீதிபதி எம்.ரி சபீர் அகமட் பார்வையிட்ட பிறகு பிரதேச மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் -ஜவாஹிர் மரண விசாரணை மேற்கொண்டதையடுத்து ஜனாஸாக்கள் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டன.
புதனன்று நள்ளிரவு தாண்டி ஏனையோரை தேடும் மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டு மறுநாள் வியாழனன்று மீண்டும் ஆரம்பமானது. மத்ரஸா மாணவனான அலியார் முகமது யாசீன் (வயது-12), உழவு இயந்திரத்தை செலுத்திய உதுமாலெவ்வை முஹம்மட் அகீப் (வயது 20), கல்முனை புகை பரிசோதனை நிலைய ஊழியர் அப்துல் ரஸீட் அஜ்மீர் (வயது 28) ஆகியோரது ஜனாஸாக்கள் மூன்றாவது நாளான வியாழனன்று மீட்கப்பட்டு மரண விசாரணைகளையடுத்து குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இருள் மற்றும் பலத்த காற்று காரணமாக வியாழக்கிழமை மாலை தேடுதல் பணிகள் இடைநிறுத்தப்பட்டு மீண்டும் வெள்ளியன்று காலை மீட்புப் பணிகள் ஆரம்பமாகியது. எனினும், காணாமல்போன இரமுளான் முஹம்மது தஸ்ரிப் என்ற 16 வயது மாணவரை அன்றைய தினம் மீட்க முடியவில்லை. மறுநாள் சனிக்கிழமை ஐந்தாவது நாள் தேடுதல் பணிகளின் போதே தஸ்ரிபின் ஜனாஸா மீட்கப்பட்டது.
இந்த விபத்துச் சம்பவத்தையடுத்து நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி அறிக்கையொன்றை வெளியிட்டது. அதில் ‘மூன்று தினங்களாக தொடர்ச்சியாக பெய்துவந்த அடை மழை காரணமாக மத்ரஸா கட்டிடத்தில் ஏற்பட்ட நீர் ஒழுக்கு காரணமாக மாணவர்களுக்கு அசௌகரியம் ஏற்பட்டது. பிற்பட்ட நாட்களின் காலநிலையை கருத்திற்கொண்டு மத்ரஸா நிர்வாகத்தினரின் முடிவின் பிரகாரம் தாங்கள் மாணவர்களின் பெற்றோர்களுடன் தொடர்புகொண்டு விடயங்களை தெரியப்படுத்தினோம். அதன்படி, அக்கரைப்பற்று, சம்மாந்துறை, கல்முனை பிரதேச மாணவர்களை அவரவர் பெற்றோர்களிடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, மத்ரஸா அதிபர் மற்றும் ஆசிரியர்கள் சிலரும் தனியார் பஸ் ஒன்றில் அனைத்து மாணவர்களையும் ஏற்றிக்கொண்டு அக்கரைப்பற்று பிரதேச மாணவர்களை அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைத்துவிட்டு இரண்டாவதாக சம்மாந்துறை மாணவர்களை ஒப்படைக்கச் சென்றபோது காரைதீவு பிரதேசத்துடன் பயணங்கள் அனைத்தும் தடைப்பட்டு காணப்பட்டன.
அந்த நேரம் சம்மாந்துறை மாணவர்களின் பெற்றோர்களிடம் தொலைபேசியூடாக பேசி அனுமதியெடுத்தபோது பெற்றார்கள் பாதைக்கு மறுபுறம் (அதாவது மாவடிப்பள்ளி எல்லை) நிற்பதாகவும், தாங்கள் இங்கே பிள்ளைகளை பாரம் எடுக்கிறோம் அனுப்பி வையுங்கள் என வாக்குறுதியளித்த பின்னரே இவ்வாறு உழவு இயந்திரத்தில் ஏற்றிவிட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் வியாழனன்று நிந்தவூர் காஷிபுல் உலூம் மத்ரஸாவின் அதிபர், ஆசிரியர் ஒருவர் உட்பட மேலும் இரு ஊழியர்கள் அடங்கலாக நால்வரை கைது செய்தனர்.
அவர்கள் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு வாக்குமூலம் பெற்ற பின்னர் சம்மாந்துறை நீதிமன்ற பதில் நீதிபதி எம்.ரி சபீர் அகமட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது மத்ரஸாவின் அதிபர் மற்றும் ஆசிரியர் ஆகியோரை டிசம்பர் 2 ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டதுடன், 2 உதவியாளர்களும் தலா 1 இலட்சம் ரூபா வீதம் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
வெள்ள நீரில் அகப்பட்டு மரணமடைந்த மாணவர்கள் உட்பட ஏனையோரது மறுவாழ்விற்காக வெள்ளைக் கொடிகள் கட்டப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமையன்று அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டது. மறுநாள் சனிக்கிழமையும் சம்மாந்துறையில் துக்கதினம் அனுஷ்டிக்கப்பட்டது. இறுதியாக மீட்கப்பட்ட மாணவன் தஸ்ரிபின் ஜனாஸா தொழுகை சம்மாந்துறை மத்திய கல்லூரி மைதானத்தில் பல்லாயிரக் கணக்கான மக்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.
உயிரிழந்த மாணவர்களின் வீடுகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் விஜயம் செய்து ஆறுதல் தெரிவித்தனர். மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் அ.இ.ம.கா. தலைவர் ரிஷாத் பதியுதீன் உட்பட அரசியல்வாதிகள் பலரும் விஜயம் மேற்கொண்டனர்.
இதனிடையே, அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எச்.எம்.என் ஜயபத்ம ஆலோசனைக்கமைய கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திகவின் வழிகாட்டலில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத் தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இது இவ்வாறிருக்க, நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியின் தற்போதைய நிர்வாக சபையினை கலைத்து விட்டு புதிய நிர்வாக சபையினை உடனடியாக நியமிக்குமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு நீதவான் டி. கருணாகரன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இவ்வழக்கு விசாரணைகள் முடிவடையும் வரை குறித்த அரபுக் கல்லூரியின் அதிபர் மற்றும் விரிவுரையாளர் ஆகியோர் அரபுக் கல்லூரிக்கு செல்லக்கூடாது எனவும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். குறித்த விசாரணையின் போது காரைதீவு பிரதேச செயலாளர் மாவட்ட அனர்த்தன நிவாரண சேவைகள் அதிகாரி ஆகியோரும் மன்றில் ஆஜராகியிருந்தனர். குறித்த வழக்கு எதிர்வரும் 16ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன் நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினரையும் அடுத்த தவணையின் போது மன்றில் ஆஜராகுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் இலங்கையில் சுமார் 20 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இவற்றில் மாவடிப்பள்ளி விபத்தே அதிகமான உயிரிழப்புகளுக்கு காரணமாக அமைந்துள்ளன. இந்த சம்பவம் முழு நாட்டையுமே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்துக்கு காரணமானவர்களை கண்டறிந்து தண்டனை வழங்குமாறு நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான தாஹிர் மற்றும் உதுமாலெப்பை ஆகியோரும் அ.இ.ம.கா. தலைவர் ரிஷாத் பதியுதீனும் மு.கா. தலைவர் ஹக்கீமும் இது தொடர்பில் சபையில் விசேட கோரிக்கைகளை முன்வைத்தனர். இச் சம்பவம் நடைபெற்ற போது அங்கு கடமையில் நின்றிருந்த பொலிசார் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றும் ஆபத்தான வெள்ளத்தின் ஊடாக இவ்வாறு மாணவர்கள் பயணிக்க அவர்கள் எவ்வாறு அனுமதி வழங்கினர் என்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முறையான நஷ்ட ஈட்டை வழங்குவது அரசாங்கத்தின் கடமையாகும். இனிவரும் காலங்களில் இவ்வாறான அனர்த்தங்கள் மூலம் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதும் அவசியமானதாகும்.- Vidivelli