மக்கள் வழங்கிய ஆணை சரிவர பயன்படுத்தப்பட வேண்டும்

0 68

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெற்றுக் கொண்ட ஆசனங்கள் இலங்கையின் அரசியல் வரலாற்றில் பிரமிக்கத்தக்க சாதனையாகவே கருதப்படுகின்றது. 159 ஆசனங்களை வெற்றி கொண்டதன் மூலம் மூன்றிலரண்டை விடவும் அதிகமான பெரும்பான்மையை தேசிய மக்கள் சக்தி பெற்றுக் கொண்டுள்ளது. ஜனநாயக நாடொன்றில் இவ்வாறான அபரிமிதமான அதிகாரம் தனிக் கட்சி ஒன்றின் கைகளுக்குச் செல்வது ஆரோக்கியமானதல்ல என்ற போதிலும் எதிர்க்கட்சிகளின் பலவீனமே இந்த நிலைமைக்கு காரணம் எனலாம்.

தேசிய மக்கள் சக்தி தேர்தல் பிரசார காலத்தின் போது மூன்றிலிரண்டு பெரும்பான்மையை நாம் கோரவில்லை என்று தெளிவாகவே குறிப்பிட்டிருந்தது. இருப்பினும் தெற்கு மாத்திரமன்றி வடக்கும் இன்று இக் கட்சியின் கைகளுக்கே சென்றிருக்கிறது. ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார திசாநாயக்க அடைந்த வெற்றியே பாராளுமன்றத் தேர்தலிலும் அக் கட்சிக்கு இந்தளவு சாதகமான நிலைமையை உருவாக்கியுள்ளது.

சர்வதேசத்தையே திரும்பிப் பார்க்கச் செய்யுமளவுக்கு வடக்கு மக்கள் தமது பாரம்பரிய தமிழ் தேசியக் கட்சிகளைப் புறந்தள்ளி தேசிய மக்கள் சக்திக்கே இம்முறை வாக்களித்திருக்கிறார்கள். இது தமிழ் மக்களும் இன ரீதியாக பிரிந்து சிந்திப்பதை விட அனைவரும் இலங்கையர் என்ற குடையின் கீழ் ஒன்றுபட விரும்புகின்றனர் என்ற செய்தியை உலகுக்குச் சொல்கிறது.

அதேபோன்றுதான் முஸ்லிம் மக்களும் இம்முறை காலாகாலமாக தாம் ஆதரித்து வந்த பாரம்பரிய அரசியல் கட்சிகளைப் புறந்தள்ளி திசைகாட்டியையே தமது பிரதான தெரிவாக அடையாளப்படுத்தியுள்ளனர். குறிப்பாக வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் முஸ்லிம்கள் இம்முறை கணிசமான வாக்குகளை அளித்து தமது பிரதிநிதித்துவங்களை உறுதிப்படுத்தியுள்ளனர். இதுவரை முஸ்லிம் பிரதிநிதிகளைப் பெற்றுக் கொள்வது கனவிலும் சாத்தியமில்லை எனக் கருதப்பட்ட பகுதிகளில் கூட முஸ்லிம்கள் வெற்றி பெற்றுள்ளனர். சிங்களவர்கள் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்கள் முஸ்லிம்களுக்குமே வாக்களிப்பர் என்ற வரலாறு இம்முறை மாற்றி எழுதப்பட்டிருக்கிறது. கொழும்பு, மாத்தறை, கம்பஹா, குருநாகல், புத்தளம், கண்டி போன்ற மாவட்டங்களில் சிங்கள மக்களின் வாக்குகளால் முஸ்லிம்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களின் கணிசமான வாக்குப் பங்களிப்புடன் தேசிய மக்கள் சக்திக்கு நான்கு ஆசனங்கள் கிடைத்துள்ளன. இதில் முஸ்லிம் ஒருவர் தெரிவாகவில்லை என்ற குறையைப் போக்கும் வகையில் தேசியப் பட்டியல் ஊடாக ஓர் ஆசனம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு இம்முறை நடைபெற்ற தேர்தல் கடந்த காலங்களில் இந்த நாட்டில் புரையோடிப் போயிருந்த இனவாதத்தை அடித்து விரட்டி மக்கள் ஒருவரையொருவர் நம்பிக்கையோடு வாக்களித்துப் பாராளுமன்றம் அனுப்புகின்ற ஆரோக்கியமான கலாசாரத்தைத் தோற்றுவித்துள்ளது. இந்த நிலைமை தொடர வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.

இதனிடையே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதி ஒருவரேனும் உள்வாங்கப்படாமை தொடர்பில் பல்வேறு தரப்புகளிலிருந்தும் கவலைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இம்முறை அமைச்சரவையானது இன ரீதியாகவன்றி திறமை மற்றும் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டே அமைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் எந்தவொரு சமூகத்திற்கும் அநீதியிழைக்கப்படமாட்டாது என்ற உத்தரவாதமும் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் இனவாதம் இல்லை என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர். எனினும் முஸ்லிம் சமூகத்தையும் உள்வாங்கியதாக அமைச்சரவை அமைந்திருக்குமாயின் அது தேசிய மக்கள் சக்தியின் நல்லெண்ணத்திற்கு மேலும் வலுச் சேர்ப்பதாக அமைந்திருக்கும் என்பதே அனைவரதும் ஏகோபித்த கருத்தாகவுள்ளது. இது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி சாதகமாக கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கிறோம்.

Leave A Reply

Your email address will not be published.