தலைமைத்துவம்

ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்

0 432

அஷ்ஷெய்க் எம்.ஐ.எம் அன்வர் (ஸலபி⁄மதனி)

மனிதன் இயல்­பி­லேயே கூட்டு வாழ்­வுக்­கு­ரி­யவன். இதனால் அவனை சமூ­கப்­பி­ராணி என அழைப்பர். காரணம், அவனால் தனித்து வாழ முடி­யாது. சமூக வாழ்வில் ஒவ்­வொ­ரு­வரும் ஏதோ ஒரு வகையில் தலைமை ஏற்­ப­வ­ரா­கவே உள்ளோம். இஸ்லாம் இயல்­பி­லேயே ஒரு சமூக மார்க்கம். அதன் வழி­பா­டு­க­ளி­லி­ருந்து வாழ்க்­கை­மு­றை­வரை கூட்டு வாழ்க்­கைக்­கான வழி­காட்­டு­தல்­களைக் கொண்­டது. உங்­களில் மூவர் பய­ணித்­தாலும் உங்­க­ளுக்கு தலைமை அவ­சியம் என ஒரு நபி­மொழி உணர்த்­து­கி­றது. தலை­மைக்­கான முக்­கி­யத்­து­வத்தை மட்­டு­மல்­லாமல் அதற்­கான வழி­காட்­டு­தல்­க­ளையும் இம்­மார்க்கம் தன்­னுள்ளே கொண்­டுள்­ளது. மனி­த­குல வர­லாற்­றி­லேயே வெறும் 23 வரு­டங்­களில் ஒரு மிகப்­பெரும் வர­லாற்றுப் புரட்­சியை, சமூக மாற்­றத்தை ஏற்­ப­டுத்­திய இறைத்­தூ­தரின் தலை­மைத்­துவ வர­லாறு நமக்கு முன்னே அதற்கு வழி­காட்­டிக்­கொண்­டி­ருக்­கி­றது.

இறுதி இறைத்­தூதர் என்ற வகையில் முஹம்­மது (ஸல்­லல்­லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தங்­களின் பொறுப்­பு­களை முழு­மை­யாக நிறை­வேற்­று­வ­தற்கு அவ­சி­ய­மான அனைத்து ஆளுமைப் பண்­பு­க­ளையும் அல்­லா­ஹுதாலா அவர்­க­ளிடம் வள­ரச்­செய்­தி­ருந்தான். எனவே, அவர்கள் தனது தூதுத்­து­வத்தை எவ்­விதக் குறை­யு­மின்றி நிறை­வேற்­றி­னார்கள். இத­னா­லேயே தனி­ம­னிதர் என்ற வகையில் வாழ்க்­கையில் வெற்­றி­கண்­ட­வர்­களின் வரி­சையில் முஹம்­மது (ஸல்­லல்­லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் முன்­ன­ணியில் திகழ்­கி­றார்கள். இறைத்­தூதர் அவர்­க­ளுக்குப் பிறகு இஸ்­லாத்­தையும், இஸ்­லா­மிய கலா­சாரம், நாக­ரிகம், சமூக அமைப்பு என்­ப­வற்­றையும் பேணிப்­பா­து­காத்­து­வரும் பொறுப்பு முஸ்­லிம்­க­ளு­டை­ய­தாகும். எனவே, தனிப்­பட்­ட­ மு­றையில் ஒவ்­வொரு முஸ்­லிமும் தனது வாழ்வில் வெற்­றி­பெ­று­வ­தற்கும் இஸ்­லா­மிய சமூ­கத்­தவர் என்­ற­வ­கையில் அனைத்து முஸ்­லிம்­களும் தம்­மீது சார்ந்­துள்ள இப்­பொ­றுப்­பு­களை நிறை­வேற்றி அல்­லா­ஹுதஆலாவின் அன்பைப் பெறு­வ­தற்கு அவ­சி­ய­மான தலை­மைத்­துவ கோட்­பா­டுகள் திருக்­குர்­ஆ­னிலும் இறைத்­தூதர் அவர்­களின் நடை­மு­றை­யான ஸுன்­னா­விலும் நிறை­வாகக் காணக் கிடைக்­கின்­றன.

இறைத்­தூ­தர்­களின் தலை­மைத்­து­வத்தில், வஹீயின் இரண்டு பாகங்­க­ளான ஜிப்ரீல் (அலை­ஹிஸ்­ஸலாம்) மூல­மாக இறக்­கி­ய­ரு­ளப்­பட்ட வேதமும் தூதர்­க­ளது வழி­மு­றை­களும் துணை நிற்கும். அவர்­க­ளுக்குப் பின்னால் கலீ­பாக்­களும் அதி­கா­ரி­களும் தலைமை தாங்­கு­ப­வர்கள் என்ற போதிலும் இறை­வ­னு­டைய, இறைத்­தூ­த­ரு­டைய சட்­டத்­துக்கு இசை­வா­கவே அவர்கள் நிர்­வ­கிக்க வேண்டும்.

முஸ்லிம் சமூ­கத்­துக்கு தலை­மைத்­துவம் இருக்க வேண்­டி­யது ஒரு கட்­டாயக் கடமை என்­பது இஸ்­லா­மிய அறி­ஞர்­களின் ஒரு­மித்த கருத்­தாகும். இதற்­காக அவர்கள் பல­மான சான்­று­களை திருக்­குர்ஆன், ஸுன்னா ஆகி­ய­வற்­றி­லி­ருந்து முன்­வைத்து வாதா­டு­கின்­றனர். அந்த வாதத்­திற்­கான ஒரு ஆதா­ரமே கீழ்­வரும் ஹதீ­ஸாகும். முஹம்­மது (ஸல்­லல்­லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒரு நீண்ட ஹதீஸில் ஹுதைபா இப்னு யமான் (ரழி­யல்­லாஹு அன்ஹு) அவர்­களைப் பார்த்து கூறி­னார்கள்:

“முஸ்­லிம்­களின் கூட்­ட­மைப்­பையும் அவர்­க­ளது தலை­வ­ரையும் நீங்கள் பற்றிப் பிடித்துக் கொள்­ளுங்கள்.” (புகாரி)
இஸ்­லா­மிய சமூ­கத்தின் அடித்­தளம் அதன் தலை­மைத்­து­வத்தின் மீதே கட்­டி­யெ­ழுப்­பப்­பட்­டுள்­ளது. இத­னைத்தான் உமர் (ரழி­யல்­லாஹு அன்ஹு) அவர்கள் பின்­வ­ரு­மாறு கூறி­னார்கள்:
“நிச்­ச­ய­மாக கூட்­ட­மைப்பு இன்றி இஸ்லாம் இல்லை தலை­மைத்­துவம் இன்றி கூட்­ட­மைப்பு இல்லை. அடி­ப­ணிதல் இன்றி தலை­மைத்­துவம் இல்லை.” (அத்­தா­ரமீ)

இஸ்­லா­மிய சமூ­கத்தின் யதார்த்த நிலை­யையே உமர் (ரழி­யல்­லாஹு அன்ஹு) அவர்கள் எடுத்துக் கூறி­யுள்­ளார்கள். இந்த யதார்த்­தத்தை புரிந்­து­கொள்ளத் தவ­றி­ய­தால்தான் நாம் உலக அரங்­கி­லி­ருந்து பல கோணங்­க­ளிலும் பின்­தள்­ளப்­பட்­டு­விட்டோம். முஹம்­மது (ஸல்­லல்­லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறி­னார்கள்:

“இஸ்­லாத்தின் வளங்கள் ஒவ்­வொன்­றாக அழிந்­து­போய்­விடும். அவற்றில் ஒன்று அழியும் போது அடுத்­துள்­ளதை மக்கள் பற்றிப் பிடித்­துக்­கொள்­வார்கள். அவ்­விதம் தலை­மைத்­து­வமே முதலில் அழிந்து போகும். இறு­தி­யாக அழிந்­து­போ­வது தொழு­கை­யாகும்.” (அஹ்­மது)

இவ்­வா­றெல்லாம் தலை­மைத்­து­வத்தின் அவ­சி­யத்தை இஸ்லாம் வலி­யு­றுத்­து­வ­தற்­கான காரணம் இது இஸ்­லா­மிய சமூ­கத்­துக்கு இன்­றி­ய­மை­யாத ஒன்று என்­ப­த­னா­லேயே ஆகும்.

இஸ்­லா­மிய தலை­மைத்­து­வத்­துக்கு தெரிவு செய்­யப்­படும் ஒரு தலைவர் பின்­வரும் ஆளுமைப் பண்­பு­களை கொண்­டி­ருத்தல் வேண்டும் என ஷரீஆ எதிர்­பார்க்­கி­றது:

குவ்வத் எனும் உடல், உள ஆற்றல்
அமானத் எனும் பொறுப்­பு­ணர்வு
ஹிஃப்ழ் எனும் பேணுதல்
இல்ம் எனும் அறிவு ஆற்றல்
இஸ்லாம் எல்லா மனி­தர்­களின் ஆற்­றல்­க­ளுக்கும், திற­மை­க­ளுக்கும் மதிப்பும், சந்­தர்ப்­பமும் வழங்­கு­கி­றது. ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் அவ­ரவர் தகு­திக்­கேற்ற பொறுப்­பு­களை வழங்­கு­கி­றது. தலை­மைத்­து­வத்­துக்கும் அப்­ப­டித்தான். இஸ்லாம் தலை­மைத்­து­வத்தை பல படி­நி­லை­க­ளாக பிரித்­துள்­ள­தோடு அதைப் பொறுப்­பேற்கத் தேவை­யான குறைந்­த­பட்ச தகை­மை­யையும் வரை­ய­றுத்­துள்­ளது.

எடுத்­துக்­காட்­டாக, தொழுகை நடத்தும் இமா­மிற்கு (தலைவர்) தேவை­யான குறைந்­த­பட்சத் தகைமை திருக்­குர்­ஆனில் இடம்­பெற்­றுள்ள பாத்­திஹா அத்­தி­யா­யத்தைச் சரி­யான உச்­ச­ரிப்­புடன் ஓதும் ஆற்றல் பெற்­றி­ருத்­த­லாகும். பதி­னைந்து நிமி­டங்கள் வரை நீடிக்கும் இத்­தொ­ழு­கையில் இமா­முக்குப் பின்னால் ஏரா­ள­மான மக்கள் வரி­சை­யாக நிற்­பார்கள். ஆனால் இங்கு பாத்­திஹா அத்­தி­யா­யமே அவ­ரது தலை­மைத்­து­வத்தை ஏற்­ப­தற்­கான ஆக குறைந்­த­பட்ச தகை­மை­யாகும். அதே­வேளை ஆட்சிப் பொறுப்பை ஏற்கத் தேவை­யான தலை­வரின் தகுதி வித்­தி­யா­ச­மா­னது.

அல்­குர்ஆன் ஒரு­வரை பத­விக்கு நிய­மிப்­ப­தற்­கான தகை­மை­யாக அவர் உடல் ஆரோக்­கியம் கொண்­ட­வ­ராக இருத்தல் வேண்டும் என்ற நிபந்­த­னையை முன்­வைக்­கி­றது. இதனை நபி மூஸா (அலைஹிஸ் ஸலாம்) அவர்­களின் சம்­பவம் ஒன்­றுடன் தொடர்­பு­ப­டுத்தி பேசு­கி­றது. நபி ஷுஐப் (அலைஹிஸ் ஸலாம்) அவர்­க­ளிடம் அவ­ரது மகள் அவரை பணிக்கு அமர்த்­து­மாறு கூறும் போது அவ­ரிடம் இருக்கும் இரண்டு தகைமைப் பண்­பு­களை கூறியே அவர் பத­விக்­கான பரிந்­து­ரையை முன்­வைக்­கிறார். இதனை அல்­குர்ஆன் பின்­வ­ரு­மாறு பிரஸ்­தா­பிக்­கி­றது.

அவ்­வி­ரு­வரில் ஒருவர் கூறினார்: “என் அருமைத் தந்­தையே! நீங்கள் இவரை பணிக்கு அமர்த்­திக்­கொள்­ளுங்கள். நீங்கள் பணிக்கு அமர்த்­து­ப­வர்­களில் நிச்­ச­மாக இவர் சிறந்வர். பல­முள்­ளவர் நம்­பிக்­கை­யா­னவர்.” (அல்-­கஸஸ்:26;)
ஒரு­முறை அபூதர் அல­கி­பாரி (ரழி­யல்­லாஹு அன்ஹு) அவர்கள் தன்னை ஒரு பிராந்­தி­யத்­துக்கு ஆளு­ந­ராக நிய­மிக்­கு­மாறு வேண்­டிக்­கொண்ட போது முஹம்­மது (ஸல்­லல்­லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பின்­வ­ரு­மாறு கூறி­னார்கள்:

நான் முஹம்­மது (ஸல்­லல்­லாஹு அலைஹி வஸல்லம்) அவர்­க­ளிடம் எனக்குத் தாங்கள் பொறுப்­புகள் தரக்­கூ­டாதா? எனக் கேட்டேன். அதற்­க­வர்கள் எனது தோளில் ஒரு தட்டு தட்­டி­விட்டுக் கூறி­னார்கள். “அபூ தர்ரே! நீர் பல­வீ­ன­மா­னவர். அப்­பொ­றுப்போ மிகப் பெரும் அமா­னி­த­மாகும். அதனை உரிய முறையில் சரி­யாக நிறை­வேற்­றா­விட்டால் மறுமை நாளில் அது ஒரு சாப­மா­கவும் இழி­வா­கவும் மாறி­விடும்.” (முஸ்லிம்)

தலை­மைத்­து­வத்தை இஸ்லாம் ஒரு அமா­னிதம் என்று கரு­து­கி­றது. அதனை ஏற்­றுக்­கொள்­பவர் ஒரு மாபெரும் பொறுப்பை தன் தலை­மீது சுமந்­து­கொள்­ப­வ­ராக மாறி­வி­டு­கின்றார். அதனைச் செவ்­வனே பூர்த்தி செய்­வ­தற்­காக இர­வு-­ப­க­லாக உழைப்­பது அவர்­மீது கட­மை­யாக்­கப்­பட்­டுள்­ளது. தனக்குக் கீழுள்­ள­வர்­களின் நலன்­களைக் கருத்­தில்­கொண்டு இயங்­க­வேண்டும். துலை­மைத்­துவப் பொறுப்­புக்­கு­றித்து அவர் ஒரு­போதும் பரா­மு­க­மாக வாழ முடி­யாது. அவர் தலை­மைத்­துவ இருக்­கையில் அமர்ந்­து­கொண்டு மக்­களின் விவ­கா­ரங்­களை ஏனையோர் பக்கம் பொறுப்புச் சாட்­டி­விட்டு ஒதுங்­கி­விட முடி­யாது. முஹம்­மது (ஸல்­லல்­லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறி­னார்கள்: “அமா­னி­தங்கள் (பொறுப்­புகள்) பாழ்­ப­டுத்­தப்­பட்டால் மறு­மையை எதிர்­பா­ருங்கள்.” (புகாரி)

பிறி­தொரு முறை முஹம்­மது (ஸல்­லல்­லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறி­னார்கள்: “ஒரு பொறுப்பு தகுதி இல்­லா­த­வ­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்டால் மறு­மையை எதிர்­பா­ருங்கள்.” (புகாரி)

நிச்­ச­ய­மாக தலை­மைத்­துவம் என்­பது ஒரு அமா­னிதம். அதா­வது பொறுப்­பு­ணர்­வுடன் நிறை­வேற்­றப்­ப­ட­வேண்­டிய கட­மை­க­ளாகும். அதனை ஒருவர் தகைமை இல்­லாத நிலையில் ஏற்றுக் கொண்டு, அதன் பொறுப்­பு­களை சரி­வர நிறை­வேற்றத் தவ­றினால் அது மறுமை நாளின் அடை­யா­ளங்­களில் ஒன்­றாக மாறி­வி­டு­வ­தோடு அது மறுமை நாளில் அவ­ருக்கு கேடா­கவும் சாப­மா­கவும் மாறி­விடும் என்­பதை மேற்­போந்த ஹதீஸ்கள் வாயி­லாக அறி­ய­மு­டி­கி­றது.

தலை­வ­ராக தெரி­வு­செய்­யப்­படும் ஒருவர் தனது வாழ்வில் பேணு­த­லா­கவும், பின்­பற்­றத்­தக்க முன்­மா­தி­ரி­யா­கவும் இருத்தல் வேண்டும். சமூக வாழ்வில் முன்­மா­திரி எனும் பிறரால் பின்­பற்­றத்­தக்க ஆளுமைப் பண்பை தொலைத்­த­வ­ராக இருப்­பா­ரானால் அவர் பிற­ருக்கு கட்­ட­ளை­யிடும் விவ­கா­ரங்­களில் தனது சொந்த வாழ்வில் எந்த பெறு­மா­னமும் இல்­லாது இருக்­கு­மாக இருந்தால் அவ­ரது தலை­மைத்­து­வத்தில் மக்கள் சலிப்­ப­டை­வ­தோடு, அவ­ருக்­கெ­தி­ராக கிளர்ந்­தெ­ழவும் செய்­வார்கள். ஏனெனில் ஒரு தலை­மையைப் பின்­பற்றி நடப்­பதில் இஸ்லாம் முன்­வைக்கும் எல்லைக் கோடு அவர் பாவ­கா­ரி­யங்­களை வெளிப்­ப­டை­யாக செய்­வ­தோடு ஆரம்­பிக்­கி­றது. இது அவ­ரது தனிப்­பட்ட வாழ்வில் பேணுதல் அற்ற நிலையை பிர­தி­ப­லிக்­கி­றது.

நபி யூஸுப் (அலை­ஹிஸ்­ஸலாம்) தான் வாழ்ந்த தேசத்தின் ஆட்சிப் பொறுப்பை தனக்கு வழங்­கு­மாறு கோரிய போது தன்­னிடம் உள்ள இரண்­டு­வி­த­மான தகைமைப் பண்­பு­கைள அந்தப் பொறுப்­புக்கு தகு­தி­யாக கூறுகிறார்கள். அதனை அல்-குர்ஆன் பின்வருமாற பிரஸ்தாபிக்கிறது.
(யூஸுபாகிய) அவர் கூறினார்: “இந்த பூமியின் களஞ்சியங்களுக்கு என்னை (அதிகாரியாய்) நியமியுங்கள். நிச்சயமாக நான் பேணுதலுள்ளவனாகவும், அறிவுள்ளவனாகவும் உள்ளேன்,” (யூஸுப்:55)

இங்கு ஒரு தேசத்தின் முக்கிய தலைமைப்பொறுப்பை ஏற்பதற்கு தகுதியாக இரு முக்கிய தகைமைப் பண்புகளை நபி யூஸுப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் கூறுகிறார்கள். அவற்றுள் ஒன்று தான் பொறுப்பெடுக்கப்போகின்ற பதவியை இதய சுத்தியோடு கையாளும் பேணுதல் தனக்கிருப்பதாக கூறுகிறார்கள். அந்த நாடு எதிர்கொள்ளவிருக்கின்ற ஒரு பொருளாதார பேரிடர் காலத்தில் நிதி பரிபாலன பதவியை பொறுப்பெடுப்பவரும் ஆளுமைரீதியாக பேணுதல் அற்றவராகவும், அந்த பொறுப்பு குறித்த அறிவற்றவராகவும் அமையும் போது அதனால் அந்த நாடும் அதன் மக்களும் அதலபாதாளத்தில் போய் விழுந்தும் விடும் நிலையே தோன்றும். இது நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும். இந்நிலையில் அந்தப் பொறுப்பை நிர்வகிக்கக்கூடிய தேவையான தகைமைப் பண்புகள் தனக்கிருப்பதாக கூறி அந்நாட்டு அரசிடம் அவர் முன்வைக்கும் பாங்கு எமக்கு போதிய சான்றுகளாகும். எனவேதான் ஒரு தலைமைப் பொறுப்பை வகிப்பதற்காக நியமிக்கப்பட இருப்பவரிடம் இத்தகைய பண்புகள் அவசியம் காணப்படல் வேண்டும் என்பது இஸ்லாமிய அறிஞர்களின் ஏகோபித்த நிலைப்பாடாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.