முகாம்களை மாற்றியமைத்தாலும் முகங்களில் மாற்றமில்லை!

0 77

எஸ்.என்.எம்.சுஹைல்

பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்­கான வேட்பு மனு தாக்கல் நாளை வெள்­ளிக்­கி­ழ­மை­யுடன் நிறை­வ­டை­கின்­றது. நேற்­று­முன்­தினம் இரவு தேர்தல் திணைக்­களம் வெளி­யிட்ட அறிக்­கையின் படி 43 சுயேட்சைக் குழுக்­கள் அடங்­க­லாக 243 தரப்­புகள் கட்­டுப்­பணம் செலுத்­தி­யி­ருந்­தன. அத்­தோடு, 33 வேட்பு மனுக்­களும் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தன.

குறிப்­பாக, வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளிலும் புத்­தளம், கொழும்பு, கம்­பஹா மற்றும் நுவ­ரெ­லியா மாட்­டத்­தி­லுமே அதி­க­மான கட்­சி­களும் சுயா­தீன குழுக்­களும் கட்­டுப்­பணம் செலுத்­தி­யி­ருந்­தன. அதா­வது, சிறு­பான்மை வாக்­கா­ளர்கள் செறி­வாக வாழும் பிர­தே­சங்­க­ளி­லேயே இவ்­வாறு பல பிரி­வு­க­ளாக நின்று தேர்­தலில் போட்­டி­யிட முன்­வந்­துள்­ளமை தெரி­ய­வ­ரு­கி­றது.

இது இப்­ப­டி­யி­ருக்க கட்­சிகள் பலவும் புதுப் புதுக் கூட்­ட­ணி­களை உரு­வாக்கி வரு­கின்­றன. குறிப்­பாக தேசிய மக்கள் சக்­தி­யா­னது சகல மாவட்­டங்­க­ளிலும் வேட்­பாளர் பட்­டி­யலை தயா­ரித்­துள்­ளது. மக்கள் விடு­தலை முன்­னணி இந்த கூட்­ட­ணிக்குள் இருக்கும் பிர­தான அர­சியல் கட்சி அல்­லது அதில் உள்ள அர­சியல் கட்சி எனலாம். அங்கு வேறு அர­சியல் குழுக்­க­ளுக்கு இட­ம­ளிக்­கப்­ப­டு­வ­தாக தெரி­ய­வில்லை. ஆனாலும், சிவில் அமைப்­பு­களின் பரிந்­து­ரை­களில் பல வேட்­பா­ளர்கள் கள­மி­றக்­கப்­ப­டு­வதை காண முடி­கி­றது. குறித்த வேட்­பா­ளர்கள் கடந்த காலங்­களில் பிர­தி­நி­தித்­துவ அர­சி­யலில் பெரி­தாக சோபிக்­கா­விட்­டாலும் அர­சியல் செயற்­பா­டு­களில் ஈடு­பட்­ட­வர்­க­ளா­கவே இருக்­கின்­றனர். எனினும் தேசிய மக்கள் சக்தி ஊடாக போட்­டி­யி­ட­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­படும் முஸ்லிம் வேட்­பா­ளர்கள் பலரும் அர­சியல் களத்­திற்கு புதி­ய­வர்­க­ளா­கவே தோன்­று­கின்­றனர். அவர்­களின் பிர­சார நட­வ­டிக்கை மற்றும் அக்­கட்சி மீதான மக்­களின் நம்­பிக்­கை­யுமே அவர்­களை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்லக் கூடி­ய­தாக அமையும் எனலாம்.

பிர­தான எதிர் தரப்பு முகா­மாக ஐக்­கிய மக்கள் கூட்­ட­ணியே காணப்­ப­டு­கின்­றது. இரண்டு பிர­தான முஸ்லிம் கட்­சிகள் அந்த கூட்­ட­ணி­யு­ட­னேயே உள்­ளன. அவர்கள், சதாக பாத­கங்­களின் அடிப்­ப­டையில் பல்­வேறு மாவட்­டங்­க­ளிலும் வெவ்­வே­றான நிலைப்­பா­டு­க­ளுடன் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

குறிப்­பாக முன்னாள் ஐக்­கிய தேசியக் கட்சி பிர­ப­லங்கள் ஐக்­கிய மக்கள் சக்­தி­யாக 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்­தலில் கள­மி­றங்­கி­யது. முஸ்லிம் அர­சியல் தலை­மை­களும் இதில் உள்­ள­டங்­­கினர். அவர்கள் இந்த தேர்­தலில் ஐக்­கிய மக்கள் சக்தி தலை­மை­யி­லான கூட்­ட­ணி­யி­லேயே போட்­டி­யி­டு­கின்­றனர். குறிப்­பாக ஐக்­கிய மக்கள் கூட்­ட­ணியின் செய­லா­ள­ராக முன்னாள் அமைச்சர் கபீர் ஹாஸிம் செயற்­ப­டு­கின்றார். அக் கூட்­ட­ணியில் இம்­தியாஸ் பாக்கீர் மாக்கார், எம்.எச்.ஏ.ஹலீம், முஜிபுர் ரஹ்மான், இம்ரான் மகரூப் மற்றும் எஸ்.எம்.மரிக்கார் ஆகி­யோரும் மீண்டும் களமிறங்கு­கின்­றனர்.

கேகாலை மாவட்டத் தலை­வ­ராக செயற்­படும் கபீர் ஹாஸிம் இம்­மு­றையும் அம்­ம­மாட்­டத்தில் ஒரே­யோரு முஸ்லிம் வேட்­பா­ள­ராக தொலை­பேசி சின்­னத்தில் போட்­டி­யி­டு­கிறார். ஐக்­கிய மக்கள் சக்தி வேட்­பா­ள­ராக எம்.எச்.ஏ.ஹலீமும் கூட்­டணிக் கட்­சி­யான முஸ்லிம் காங்­கிரஸ் வேட்­பா­ள­ராக அதன் தலைவர் ரவூப் ஹக்­கீமும் மீண்டும் கண்­டியில் கள­மி­றங்­கு­கின்­றனர். திரு­கோ­ண­மலை மாவட்ட தலைமை வேட்­பா­ள­ராக இம்­முறை இம்ரான் மகரூப் மீண்டும் போட்­டி­யி­டு­கிறார். கூட்­ட­ணியின் தலை­வரும் பிர­தமர் வேட்­பா­ள­ரு­மான சஜித் பிரே­ம­தா­ஸ­வுடன் கொழும்பில் இம்­முறை இரண்டு முஸ்லிம் வேட்­பா­ளர்­க­ளுக்கே சந்­தர்ப்­ப­ம­ளிக்­கப்­பட்­டுள்­ளது. முஜிபுர் ரஹ்­மானும் எஸ்.எம்.மரிக்­காரும் மாத்­திரம் கொழும்பில் அக்­கூட்­டணி சார்பில் தொலை­பேசி சின்­னத்தில் போட்­டி­யி­டு­கின்­றனர். இது இவ்­வா­றி­ருக்க களுத்­துறை மாவட்­டத்தில் முன்னாள் மாகாண சபை உறுப்­பினர் இப்­திகார் ஜெமீல் போட்­டி­யிடும் சாத்­தியம் இருக்­கின்­றது. இம்­தியாஸ் பாக்கீர் மாக்கார் தேசியப் பட்­டி­யலில் உள்­வாங்­கப்­ப­டலாம் என எதிர்­பார்க்­கலாம்.

மேலும், ஐக்­கிய மக்கள் சக்­தியின் நேரடி வேட்­பா­ளர்கள் பதுளை, பொலன்­ன­றுவை, மாத்­தளை, காலி, மாத்­தறை, ஹம்­பந்­தோட்டை, கம்­பஹா ஆகிய மாவட்­டங்­களில் கள­மி­றக்­கப்­படும் சாத்­தி­யங்கள் உள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கி­றது. எனினும், வடக்கு கிழக்கு, வடமேல் மாகா­ணங்­களில் கூட்­டணிக் கட்­சி­களின் முஸ்லிம் வேட்­பா­ளர்­களே பிர­தா­ன­மாக போட்­டி­யிடும் நிலைமை இருக்­கி­றது.
இது இவ்­வா­றி­ருக்க மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் முஸ்லிம் காங்­கிரஸ் தனித்து மரச்­சின்­னத்­திலும் அம்­பாறை மாவட்­டத்தில் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் மயில் சின்­னத்தில் தனித்தும் கள­மி­றங்­க­வுள்­ளது. திரு­கோ­ண­மலை மாவட்­டத்­திலும் வன்­னி­யிலும் ஐக்­கிய மக்கள் சக்தி வேட்­பா­ளர்­க­ளுடன் மேற்­படி இரு கட்­சி­களின் வேட்­பா­ளர்­களும் கள­மி­றங்­க­வுள்­ளனர்.

இந்த பிர­தான முகாம்­க­ளுக்கு மேல­தி­க­மாக மூன்றாம் தரப்­பாக ஐக்­கிய தேசியக் கட்சி தலை­மை­யி­லான கேஸ் சிலிண்டர் கூட்­ட­ணியை குறிப்­பி­டலாம். இந்த கூட்­டணி இரண்டு மாவட்­டத்தில் யானை சின்­னத்தில் போட்­டி­யி­டு­கி­றது. தேசிய காங்­கிரஸ், தேசிய ஐக்­கிய முன்­னணி (நுஆ) உட்­பட முன்னாள் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பலரும் இந்தக் கூட்­ட­ணி­யி­லேயே போட்­டி­யி­ட­வுள்­ளனர். முன்னாள் அமைச்­சர்­க­ளான நஸீர் அஹமட், அலி ஸாஹிர் மௌலானா ஆகியோர் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் சிலிண்டர் சின்­னத்தில் போட்­டி­யி­ட­வுள்­ளனர். அத்­தோடு, தேசிய காங்­கிரஸ் தலைவர் ஏ.எல்.எம்.அதா­வுல்லாஹ், எஸ்.எம்.எம்.முஸர்ரப் ஆகி­யோரும் திகா­ம­டுல்ல மாவட்­டத்­திலும் முன்னாள் பிர­தி­ய­மைச்சர் அப்­துல்லாஹ் மகரூப் திரு­கோ­ண­மலை மாவட்­டத்­திலும் போட்­டி­யி­ட­வுள்­ளனர். இஷாக் ரகுமான் அனு­ரா­த­பு­ரத்தில் சிலிண்டர் சின்­னத்­திலும் போட்­டி­யி­ட­வுள்ளார். இத­னி­டையே, முன்னாள் இரா­ஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் வன்னி மாவட்­டத்தில் யானை சின்­னத்தில் போட்­டி­யி­ட­வுள்ளார். கண்டி மாவட்­டத்தில் முன்னாள் மாகாண சபை உறுப்­பினர் ஜெய்­னு­லாப்தீன் (லாபிர் ஹாஜியார்), அக்­கு­றணை பிர­தேச சபை முன்னாள் தவி­சாளர் இஸ்­திஹார் இமா­துதீன் ஆகியோர் போட்­டி­யி­ட­வுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கி­றது.

இதற்கு மேல­தி­க­மாக இன்னும் பல அர­சியல் கட்­சிகள் பல மாவட்­டங்­க­ளிலும் முகா­மிட்­டுள்­ளன. குறிப்­பாக நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி பல மாவட்­டங்­க­ளிலும் போட்­டி­யி­ட­வுள்­ள­தாக அறி­வித்­துள்­ளது. இத­னி­டையே, சமூக நீதிக்­கட்சி ஐக்­கிய கூட்­ட­ணியில் இணைந்து உதய சூரியன் சின்­னத்தில் போட்­டி­யி­டு­கி­றது.

நாமல் ராஜ­பக்ச தலை­மை­யி­லான ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­னணி, திலித் ஜய­வீர தலை­மை­யி­லான கட்சி, ரஞ்சன் ராம­நா­யக்க தலை­மை­யி­லான கட்சி, விஜ­ய­தாஸ ராஜ­பக்ச தலை­மை­யி­லான கட்சி என்று பல்­வேறு கட்­சி­களும் இந்த தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்­றன.

குறிப்­பாக வடக்கு, கிழக்கு மற்றும் மலை­நாட்டில் சிறு­பான்மை மக்கள் வாழும் பகு­தி­களில் வாக்­கு­களை சித­ற­டிப்­ப­தற்­கா­கவே பல கட்­சிகள் கள­மிக்­கப்­பட்­டுள்­ளதை காண்­கிறோம். அத்­தோடு, அர­சி­யல்­வா­திகள் பலரும் தேர்தல் கால சேவை­களை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக பல சுயா­தீன குழுக்­க­ளையும் கள­மி­றக்­கி­யுள்­ளனர். இதற்கு அப்பால் பெரும் தொழி­ல­தி­பர்­களும் அர­சியல் கட்­சிகள் பல­வற்றை வாங்கி தேர்தல் களத்தில் குதித்­தி­ருக்­கின்­றனர்.

இன்­றைய சூழலில் இவ்­வா­றா­ன­தொரு போக்கை பார்க்­கும்­போது நாடு அர­சியல் ரீதியில் வேறு திசையில் பய­ணிப்­ப­தா­கவே தோன்­று­கி­றது. நாட்டின் நலன்­களை மறந்து வெறும் சுய இலாப அரசியல் நாடகங்களே இங்கு அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதனை ஆரோக்கியமானதொரு போக்காக கருத முடியாது.

அடுத்து வரும் சந்­த­தி­யி­ன­ருக்கு நல்­ல­தொரு நாட்டை விட்­டுச்­செல்லும் எண்ணம் எந்த தரப்­பி­டமும் இல்லை என்­பதை இவர்­களின் போக்­குகள் ஊடாக காண­மு­டியும். வெறு­மனே அதி­கா­ரத்தை பெற்­றுக்­கொள்ளும் மோகமே இருப்­பதை காண்­கிறோம்.

இவ்­வாறு பல்­வேறு புதுப்­புது பெயர்­களில் அமைக்­கப்­பட்­டுள்ள முகாம்­களில் அதே பழைய கட்­சி­களும் பழைய அர­சியல் தலை­மை­க­ளுமே போட்­டி­யி­டு­கின்­றனர். மாற்றம் என்ற பெயரில் கட்­சி­களின் பெயர்­களும் சின்­னங்­களும் மாற்­ற­ம­டைந்­தி­ருக்­கின்­றன. ஆனால், அர­சியல் நடத்­தை­களில் மாற்றம் காண முடி­ய­வில்லை. அனைத்து தரப்பும் புதிய பாதைக்கு திரும்பும் என நினைத்­தாலும் அவர்கள் புதுப் பெயர்­களில் பழைய அரசியல் கலாசாரங்களையே அரங்கேற்றிக்கொண்டிருக்கின்றனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.