பின்கதவால் அன்றி மக்களாணையுடனேயே ஆட்சியமைப்போம்

நாட்டை வழிநடத்துவதற்கான சிறந்த அணி சஜித்துடனேயே உள்ளது என்கிறார் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்

0 220

மக்­க­­ளி­டத்தில் பிரி­வி­னை­வாதம் இல்லை. முரண்­பா­டுகள் இல்லை.ஆனால் தேர்தல் அண்­மிக்கும் போது மக்­க­ளுக்கு அச்­சு­றுத்தல் விடுக்­கப்­ப­டு­கி­றது. நம்­பிக்­கை­யின்மை கட்­டி­யெ­ழுப்­பப்­ப­டு­கி­றது. பிரி­வி­னை­வாத அணு­கு­முறை, சிந்­தனை, எண்­ணங்கள் கார­ண­மாக கடந்த காலங்­களில் நாம் பல துன்­பங்­களை அனு­ப­வித்­துள்ளோம். அதுவே நாட்டின் வீழ்ச்­சிக்கு காரணம் என்று ஐக்­கிய மக்கள் சக்­தியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்­தியாஸ் பாக்கிர் மார்கார் தெரி­வித்தார்.

எனவே நாடு மிக மோச­மான படுகுழிக்குள் தள்­ளப்­பட்­டுள்­ளது. குழிக்குள் விழுந்­த­மைக்­கான கார­ணத்தை தேடிக்­கொண்டும் பிறர் மீது குற்றம் சுமத்தி கொண்­டி­ருக்கும் நேரமும் இது­வல்ல. பொறுப்­பு­ணர்­வு­டனும் புரிந்­து­ணர்­வு­டனும் ஒவ்­வொ­ரு­வ­ரையும் சம­மாக மதித்து நாட்டின் வளர்ச்­சிக்கும் அபி­வி­ருத்­திக்கும் ஒற்­று­மை­யாக செயல்­படக் கூடிய அணி­யுடன் எதிர்­கா­லத்தில் மக்கள் அணி திரள வேண்டும் என்று அவர் மேலும் குறிப்­பிட்டார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் விடி­வெள்­ளிக்கு வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவ­ரது நேர்­காணல் வ­ரு­மாறு…

நேர்­காணல்: எம்.வை.எம்.சியாம்

Q: கேள்வி -ஐக்­கிய மக்கள் சக்­தியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­சவின் வெற்றி வாய்ப்பு எந்­த­ள­வுக்­குள்­ளது? அவர் 50 வீதத்­துக்கு மேல் பெறு­வாரா?
ஆம். அவர் உறு­தி­யாக 50 வீதத்­துக்கும் அதி­கப்­ப­டி­யான வாக்­கு­களை பெற்று வெற்றி பெறுவார்.

Q: தற்­போதைய பிர­தான நான்கு வேட்­பா­ளர்­களுள் தேசிய மக்கள் சக்­தியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் அநு­ர­கு­மார திசா­நா­யக்க சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு சவா­லாக விளங்­கு­கி­றாரா?
ஆம். நிச்­ச­ய­மாக. உண்­மையில் அவர்கள் எழுச்சி அடை­ய­வில்லை என என்னால் கூற முடி­யாது. தேசிய மக்கள் சக்­தியின் வர­லாற்றைப் பார்க்கும் போது அவர்கள் வன்­முறை அர­சியல் இருந்து விடு­பட்டு தற்­போது ஜன­நா­யக அர­சியல் கோட்­பாட்­டுக்குள் பிர­வே­சித்­துள்­ளனர். இவர்­க­ளது இந்த மாற்றம் வர­வேற்­கத்­தக்­கது. நான் அவர்­க­ளுக்கு வாழ்த்­துக்­களை தெரி­வித்­துக்­கொள்­கிறேன். ஜன­நா­யக கொள்­கை­களை பின்­பற்றி மக்கள் முன்னால் சென்று அவர்­களின் கொள்­கை­களை முன்­வைத்து மக்­க­ளா­ணையை பெற்­றுக்­கொள்ள முயற்­சிப்­பது சிறந்த விட­ய­மாகும்.

இருப்­பினும் கடந்த காலங்­களில் ஆட்­சி­யா­ளர்கள் மீது மக்­கள் கொண்ட அதி­ருப்தி கார­ண­மா­கவே நாட்டில் மக்கள் எழுச்சிப் போராட்டம் வெடித்­தது. இம்­முறை ராஜ­ப­க்ஷக்­க­ளு­டைய பெரும்­பா­லான வாக்­குகள் மக்கள் விடு­தலை முன்­ன­ணிக்கு செல்­வ­தற்கு வாய்ப்­புள்­ளது.

இருப்­பினும் நாட்டு மக்கள் புத்­தி­சா­லிகள். நாட்டின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணும் கொள்­கையை கொண்ட தரப்­பி­ன­ருக்கே வாக்­க­ளிப்­பார்கள். திறமை, அனு­பவம் கொண்ட சவால்­க­ளுக்கு முகம் கொடுக்­கக்­கூ­டிய அணிக்கே மக்கள் ஆத­ரவு வழங்­குவர். எனவே மக்கள் தவ­றான தீர்­மா­னங்­களை எடுக்கமாட்­டார்கள்.

Q: இம்­முறை தேர்தல் பொரு­ளா­தா­ர நெருக்கடியிலிருந்த நாட்டை மீட்பதை அடிப்­ப­டை­யாகக் கொண்­டுள்­ளது. இதற்காக ஐக்­கிய மக்கள் சக்தி அர­சாங்கம் எதிர்­கா­லத்தில் எவ்­வா­றான வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்கும்?
உலக பொரு­ளா­தார கொள்­கை­களை எம்மால் மாற்ற முடி­யாது. எமது நாட்டை சர்­வ­தேச நாடுகள் ஏள­ன­மாக பார்த்­தன. இலங்கை சுதந்­திரம் அடையும் போது ஜப்­பா­னுக்கு ஒத்த வளர்ச்­சியைக் கொண்ட நாடாக இலங்கை காணப்­பட்­டது.
ஆனால் இன்று எமக்கு என்ன நடந்­துள்­ளது? இனங்­க­ளுக்கும் மதங்­க­ளுக்கும் இடையில் குரோதத்தை ஏற்­ப­டுத்தி பிரித்­தாளும் கொள்கை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டதன் பிர­தி­ப­லனை நாம் தற்­போது அனு­ப­வித்து வரு­கிறோம்.
எனவே தற்­போது நாட்­டுக்கு பொருத்­த­மான பொரு­ளா­தார கொள்கை கொண்ட அணியே தேவைப்­ப­டு­கி­றது. அத்­துடன் நாட்டு மக்கள் அனை­வரும் இலங்­கையர் எனக் கருதும் மக்­களின் அபி­லா­ஷை­களை வென்­றெ­டுக்க கூடிய தலைவர் ஒரு­வரே நாட்­டுக்கு தேவைப்­ப­டு­கிறார்.

Q: நாட்டை பொரு­ளா­தார நெருக்­க­டி­யி­லி­ருந்து மீட்­ப­தற்கு தன்னால் மாத்­திரம் தான் முடியும் என ஜனா­தி­பதி ரணில் கூறி வரு­கி­றாரோ? நெருக்­க­டி­யான நேரத்தில் சஜித் பிரே­ம­தாச நாட்டை பொறுப்­பேற்க வர­வில்­லையே?
நாட்டு மக்­களை சிறு பிள்­ளைகள் என ரணில் விக்­கி­ர­ம­சிங்க நினைத்துக் கொண்­டி­ருக்­கிறார். சஜித் பிரே­ம­தாச பிர­தமர் பத­வியை ஏற்கத் தயா­ராக இருக்­கிறார். ஆனால் அப்­போ­தைய ஜனா­தி­பதி பதவி விலக வேண்டும் எனக் ­கோ­ரிக்கை விடுத்தோம். தற்­போ­தைய பாரா­ளு­மன்­றத்தின் பெரும்­பான்­மை­யுடன் அன்­றைய தினம் சஜித் பிரே­ம­தாச ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்­டி­ருந்தால் எதிர்­கா­லத்தில் எமது பய­ணத்தை முன்­னெ­டுக்க முடி­யாமல் போயி­ருக்கும்.

நிபந்­த­னைகள் எது­வு­மின்றி எம்மால் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை போன்று திரு­டர்­களை பாது­காக்க வேண்டி ஏற்­படும். ஐக்­கிய மக்கள் சக்­தியின் உறுப்­பி­னர்கள் சஜித் பிரே­ம­தா­சவை மக்­க­ளா­ணை­யு­ட­னேயே அர­சாங்­கத்தை அமைக்­கு­மாறு வலி­யு­றுத்­தி­னார்கள். மக்­க­ளா­ணை­யு­ட­னயே எமது பய­ணத்தை ஆரம்­பிப்போம். அதனை விடுத்து கோட்­டா­பய அர­சாங்­கத்தில் பத­வி­களை ஏற்க வேண்­டிய தேவை எமக்­கில்லை.

Q: சிலிண்­ட­ருக்கு வாக்­க­ளிக்­கா­விட்டால் சிலிண்­டரும் வெடிக்கும் அதன் பின்னர் நாடும் பங்­க­ளா­தேஷைப் போன்று வெடிக்கும் என ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க கூறு­கிறார். இது நாட்டு மக்­களை அச்­சு­றுத்தி வாக்கு கேட்­பது போன்­றுள்­ள­தல்­லவா?
இதுவே அவ­ரது குணம். மக்­க­ளையும் அச்­சு­றுத்­து­கிறார். பாரா­ளு­மன்­றத்­துக்கும் அச்­சு­றுத்தல் விடுக்­கிறார். நீதி­மன்­றத்­துக்கு அச்­சு­றுத்தல் விடுக்­கிறார். அவர் தனக்கு நெருங்­கிய ஒரு­வரை பொலிஸ் மா அதி­ப­ர­தாக நிய­மித்தார். உயர்­நீ­தி­மன்றம் அதற்கு எதி­ராக தீர்ப்பு வழங்­கி­யது. புதிய ஒரு­வரை நிய­மிக்­கு­மாறு உத்­த­ரவு பிறப்­பித்தும் இது­வரை அவர் அதனை செய்­யாமல் சபா­நா­ய­கரும் பிர­தம நீதி­ய­ர­சரும் இணைந்து ஒரு தீர்­மா­னத்­துக்கு வரு­மாறு கூறு­கிறார்.

ஜனா­தி­பதி ஒரு­வ­ரு­டைய அதி­கா­ரத்தை குறைப்­ப­தற்­கா­கவே சுயா­தீன ஆணைக்­குழு ஸ்தாபிக்­கப்­பட்­டது. உயர்­நீ­தி­மன்­றத்­துக்கும் பாரா­ளு­மன்­றத்­துக்கும் அதி­கா­ரங்கள் பிரித்து கொடுக்­கப்­பட்­டது. ஆனால் அவற்­றுக்கு மரி­யாதை அளிப்­பது இல்லை.கட்­டுப்­பட்டு நடப்­பதும் இல்லை. மக்­களை அச்­சு­றுத்தி அதி­கா­ரத்தை தக்க வைக்­கலாம் என நினைக்­கிறார்.

Q: நாடு வங்­கு­ரோத்து அடைய ஊழல், மோசடி பிர­தான கார­ண­மாக அமைந்­தன. ஊழல் மோச­டி­களில் ஈடு­பட்ட அர­சி­யல்­வா­திகள் அதி­கா­ரி­களை சஜித் ஆட்­சிக்கு வந்தால் தண்­டிப்­பாரா?
நாடு வங்­கு­ரோத்து அடைய ஊழல், மோசடி மாத்­திரம் கார­ண­மல்ல.கோட்­டா­பய அர­சாங்கம் செலந்­த­வர்­க­ளுக்கு கோடிக்­க­ணக்கில் வரிச் சலுகை அளித்­தது. நாட்டின் தேசிய வரு­மானம் பாரி­ய­ளவில் இழக்­கப்­பட்­டது. நாடு வங்­கு­ரோத்து அடைய இதுவே பிர­தான கார­ண­மாகும். ஏற்­று­மதி உற்­பத்­திகள் பாரி­ய­ளவில் குறை­வ­டைந்­தன. தவ­றான பொரு­ளா­தார கொள்­கைகள் மற்றும் முத­லா­ளித்­துவ கொள்கை என்­ப­னவும் பிர­தான கார­ண­மாகும்.

எவ­ரையும் பழி­வாங்­கு­வ­தற்­காக நாம் அர­சியல் செய்­ய­வில்லை. தெளி­வான திட்­டங்­களை முன்­வைத்­துள்ளோம். கடந்த இரண்டு வரு­டங்­க­ளாக பல கலந்­து­ரை­யா­டல்களில் ஐக்­கிய மக்கள் சக்தி ஈடு­பட்­டது. தொழில் வல்­லு­நர்கள், பல்­க­லைக்­க­ழக பேரா­சி­ரி­யர்கள், தொழிற்­சங்கள், சிவில் உறுப்­பி­னர்கள் உள்­ளிட்ட பல­ருடன் கலந்­து­ரை­யா­டினோம். இரவு பகல் பாராமல் திட்­டங்­களை வகுத்­துள்ளோம். அதன்­படி 27 துறைசார் குழுக்­களை நிய­மித்­துள்ளோம். செப்­டம்பர் 21 க்கு பின்னர் எமது துறைசார் குழுக்கள் முன்­வைத்த அந்த கொள்­கை­க­ளுக்கு அமைய எமது எதிர்­கால நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்போம்.

Q: கொவிட் காலப்­ப­கு­தியில் உயி­ரி­ழந்த முஸ்லிம்களின் ஜனா­ஸாக்கள் பல­வந்­த­மாக எரிக்­கப்­பட்­டன. இதற்காக அண்மையில் அமைச்­ச­ரவை முஸ்லிம் மக்­க­ளி­டத்தில் பகி­ரங்­க­மாக மன்­னிப்பு கோரி­யி­ருந்­தது. உண்­மையில் இந்த மன்­னிப்பு தேர்­தலில் முஸ்லிம் மக்­களின் வாக்­கு­களை பெற்றுக் கொள்­வ­தற்­கான உத்­தியா? பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு உங்­க­ளு­டைய அர­சாங்­கத்தில் நீதி பெற்­றுக்­கொ­டுக்­கப்­படுமா?
முஸ்லிம் மக்கள் அர­சாங்­கத்­திடம் மன்­னிப்­பையோ அல்­லது நட்­ட­யீட்­டையோ எதிர்­பார்க்­க­வில்லை. இது சபிக்­கப்­படும் குற்­ற­மாகும். உடல்­களை அடக்கம் செய்­யக்­கூ­டாது என விஞ்­ஞான ரீதி­யான ஆதா­ரங்கள் முன்­வைக்­கப்­ப­டாத நிலையில் ஒரு குறிப்­பிட்ட இனத்தை அடிப்­ப­டை­யாக்­கொண்டு பழி­வாங்கும் நோக்கில் மேற்­கொள்­ளப்­பட்ட அர­சியல் பழி­வாங்கல் நிகழ்ச்சி நிர­லாகும்.
இந்த தீர்­மா­னத்தை எடுத்­த­வர்கள் யார்? உண்­மையில் இதற்கு பொறுப்­புக்­கூற வேண்­டி­ய­வர்கள் யார்? என்­பதை ஆரா­ய்ந்து நிச்­சயம் சட்­டத்தின் முன்­ நிறுத்­துவோம். முஸ்லிம் மக்­களின் எதிர்­பார்ப்பும் அதுவே. காரணம் இது­போன்ற சம்­பவம் பிறி­தொரு சமூ­கத்­துக்கு ஏற்­பட்டு விடக்­கூ­டாது.

Q: க­டந்த காலங்­களில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இன­வாத கருத்­துக்­க­ளைப்­பே­சிய புத்­தகம் வெளி­யிட்ட சம்­பிக்க ரண­வக்க தற்­போது உங்­க­ளோடு இருப்­பதை சிலர் விமர்ச்­சிக்­கின்­றார்­களே?
நாம் தேர்­தலில் வெற்றி பெற அதிக வாக்­கு­களை பெற்றுக் கொள்ள வேண்டும்.அந்த வாக்­கு­களில் கறுப்பு வெள்ளை என பாகு­பாடு கிடை­யாது. அனைத்து வாக்­கு­களும் சம­மா­ன­வையே. எமது கொள்­கை­க­ளுக்கு முழு­மை­யாக கட்­டுப்­பட்டு நடக்க முடி­யு­மானால் எவர் வேண்­டு­மா­னாலும் எம்­முடன் இணைந்து கொள்­ளலாம்.

நான் சஜித் பிரே­ம­தா­சவை டட்லி சேனா­நா­யக்க போன்று உணர்­கிறேன். இன, மத வேறு­பா­டின்றி வடக்கு, கிழக்கு, தெற்கு என்ற பேத­மின்றி அனைத்து மக்­க­ளையும் ஒரு குடையின் கீழ் வழி­ந­டத்­தக்­கூ­டிய அனைத்து மக்­க­ளி­னதும் அபி­மா­னத்தை வெல்லக் கூடி­யவர் என நான் அவரை காண்­கிறேன். எனது இந்த நம்­பிக்­கையை அவர் கட்­டி­யெ­ழுப்பி நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த பாடு­ப­டுவார் என உறு­தி­யாக நம்­பு­கிறேன்.

Q: முஸ்லிம் கட்­சி­களின் தலை­வர்­க­ளான ஹக்கீம் மற்றும் ரிசாட் போன்­ற­வர்கள் எவ்­வா­றான நிபந்­த­னை­களின் அடிப்­ப­டையில் ஐக்­கிய மக்கள் சக்­தியை ஆத­ரிக்­கி­றார்கள்? அனைத்து நிபந்­த­னை­க­ளையும் கட்சி ஏற்­றுக்­கொண்­டுள்­ளதா?
-நான் அறிய அவர்கள் அவ்­வா­றான எந்த உடன்­ப­டிக்­கை­யிலும் கைச்­சாத்­தி­ட­வில்லை. நாட்டின் அனைத்து மக்­களின் எதிர்­பார்ப்­பு­க­ளையும் நிறை­வேற்­றக்­கூ­டிய கொள்கை கொண்ட ஒரே கட்சி ஐக்­கிய மக்கள் சக்தி என அவர்கள் கரு­து­கி­றார்கள். நாம் அனை­வரும் ஒரே கோட்டில் பய­ணிக்­க­கூ­டிய அர­சியல் கொள்­கை­களை கொண்­ட­வர்கள். எம்­முடன் எந்த இர­க­சிய ஒப்­பந்­தங்­க­ளையும் அவர்கள் செய்­து­கொள்­ள­வில்லை.

Q: முஸ்லிம் கட்­சி­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் தலை­வர்கள் ஒரு பக்­கமும் அதன் உறுப்­பி­னர்கள் வேறு பக்­கமும் நிற்­கி­றார்கள். முஸ்லிம் மக்கள் தம்­மு­ட­னேயே இருக்­கி­றார்கள் என பகி­ரங்­க­மாக கூறி­வ­ரு­கி­றார்களே?
-­அங்­கி­ருந்து இங்கும், இங்­கி­ருந்து அங்கும் கட்சி தாவும் அர­சி­யலே நாட்டில் உள்­ளது. இது தொடர்பில் நான் கவ­லை­ய­டை­கிறேன். இது வெட்­கப்­பட வேண்­டிய விட­ய­மாகும். இது­போன்ற அர­சியல் நாம் செய்­யக்­கூ­டாது. அவர்கள் தாம் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் மக்­களை கௌர­வப்­ப­டுத்தும் அர­சி­ய­லையே செய்ய வேண்டும்.

Q: இந்த காலப்­ப­கு­தியில் மக்­களை நேர­டி­யாக சந்­திக்கும் போது உங்­க­ளிடம் அவர்கள் கூறுவது என்ன? அவர்களது மனோநிலை எவ்வாறுள்ளது?
-நான் சிங்­கள, முஸ்லிம், தமிழ் மக்கள் வாழும் அனைத்து பகு­தி­க­ளுக்கும் செல்­கிறேன். மக்­க­ளுக்கு இடையில் பிரி­வி­னை­வாதம் இல்லை. முரண்­பா­டுகள் இல்லை. ஆனால் தேர்தல் அண்­மிக்கும் போது மக்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது. நம்பிக்கையின்மை கட்டியெழுப்பப்படுகிறது.

கடந்த 50 வருடங்களாக ஒருவருக்கு ஒருவர் அடித்துக்கொண்டோம். உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. பிரிவினைவாத கொள்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தி மூன்று அடிப்படை தூண்களை கொண்டு கட்டியெழுப்பப்பட்டுள்ளது.ஒன்று நாட்டுக்குள்ளும் கட்சிக்குள்ளும் ஜனநாயகத்தை பேணுவது, இரண்டாவது சமூகங்களுக்கு நீதியை பேணுதல், மூன்றாவது வேற்றுமையில் ஒற்றுமை காண்பது என்பனவாகும். இதன்காரணமாகவே சிங்கள, முஸ்லிம், தமிழ் தலைவர்கள் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குகிறார்கள்.

Q: சிறுபான்மையினரும் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தினரும் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்கு நீங்கள் முன்வைக்கும் நியாயங்கள் என்ன?
-நாம் அனைவரும் இலங்கை மக்கள். தலையை நிமிர்த்தி அனைவரும் சமமாக கேள்வி எழுப்பக் கூடிய உரிமைகளை அனுபவிக்க கூடிய நாட்டை கட்டியெழுப்ப வேண்டும்.அதற்கு தலைமைத்துவம் வழங்கக்கூடிய அணி எங்கு இருக்கிறது என்பதை சிந்திக்க வேண்டும். வெறும் வாக்குறுதிகளால் மாத்திரம் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதனை நடைமுறையில் செய்து காட்டக்கூடியவர் யார் என்பதை மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.