இனவாதமற்ற அரசியல் சூழல் தேர்தலின் பின்னரும் தொடருமா?

0 122

ஜனாதிபதித் தேர்தலுக்கான நாட்கள் அண்மித்து வரும் நிலையில் யாருக்கு வாக்களிப்பது என்ற தீர்மானத்தை எடுப்பது பற்றி மக்கள் தீவிரமாக யோசிக்கத் தொடங்கியுள்ளனர். ஒரு சாரார் ஏலவே தீர்மானங்களை எடுத்துள்ள போதிலும் கணிசமானோர் வேட்பாளர்களின் நகர்வுகளையும் தேர்தல் கள மாற்றங்களையும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர்.

நேற்று முதல் தபால் மூல வாக்களிப்பும் ஆரம்பமாகியுள்ளது. கடந்த சில தினங்களாக அரச ஊழியர்களை இலக்கு வைத்த பல்வேறு வரப்பிரசாதங்கள் பற்றிய வாக்குறுதிகளையே வேட்பாளர்களின் தரப்பிலிருந்து கேட்கக் கூடியதாகவுள்ளது. நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் இவ்வாறான உச்சபட்ச வாக்குறுதிகள் என்ன நியாயங்களின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன என்ற கேள்வியை இன்று ஒவ்வொரு வாக்காளரும் எழுப்புவதைக் காண முடிகிறது.

அதுமாத்திரமன்றி வாக்காளர்களைத் திசை திருப்பும் வகையில் பல்வேறு போலியான தகவல்களும் சமூக வலைத்தளங்கள் மூலமாக திட்டமிட்டுப் பகிரப்படுகின்றன. வேட்பாளர்கள் கூறாத விடயங்களைக் கூட அவர்களது புகைப்படங்களையும் நம்பகமான ஊடகங்களின் செய்தி வடிவங்களையும் பயன்படுத்தி போலியான தகவல்களைப் பரப்புவதைக் காண முடிகின்றது.

அதேபோன்று செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியும் பல்வேறு பொய்யான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான போலியான தகவல்கள் தொடர்பில் வாக்காளர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.

இம்முறை தேர்தலில் இனவாதம் பின்தள்ளப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதொரு மாற்றமாகும். சிறுபான்மையினரின் வாக்குகள் அவசியமில்லை என்ற காலம் மலையேறி அனைவரையும் அரவணைத்துச் செல்கின்ற ஓர் அரசியல் கலாசாரம் தோற்றம் பெற்றிருப்பதும் கவனிக்கத்தக்கதாகும். இம்முறை தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் அனைவரும் சகல இன மத மக்களையும் உள்ளடக்கியதாக தமது வேலைத்திட்டங்களை வடிவமைத்துள்ளதை அவதானிக்க முடிகிறது. குறிப்பாக தமது தேர்தல் விஞ்ஞாபனங்களிலும் அனைவரையும் உள்ளடக்கிய திட்டங்களை முன்வைத்திருப்பதைக் காண முடிகிறது.

2022 இல் நாட்டில் இடம்பெற்ற அரகலய எழுச்சியின் பின்னால் இந்த மாற்றம் ஏற்பட்டிருப்பதாக கருத முடியும். இனியும் இனவாத அரசியலைக் கையாள்வது மக்கள் மத்தியில் எடுபடாது என்ற உண்மையை அரசியல் தலைவர்களும் கட்சிகளும் நன்கு விளங்கியிருப்பதாக தெரிகிறது. எனினும் இந்த வரவேற்கத்தக்க மாற்றம் நிலையானதாக அமைய வேண்டும் என்பதே அனைவரதும் பிரார்த்தனையாகும்.

இந்த நாடு இவ்வளவு தூரம் பின்தள்ளப்பட்டமைக்கு இனவாத சிந்தனையும் அதனை அடிப்படையாகக் கொண்ட அரசியலுமே பிரதான காரணமாகும். அந்த வகையில் புதிதாக தெரிவு செய்யப்படும் தலைவர் நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு தனது பதவிக் காலத்திலேனும் தீர்வு காண வேண்டும். ஆகக் குறைந்தது மக்கள் வேறுபாடுகளை மறந்து அனைத்து இனத்தினரும் சமமானவர்களே என்று உணரத் தலைப்படுகின்ற ஒரு கலாசாரத்தை தனது பதவிக் காலத்தில் கட்டியெழுப்ப வேண்டும். மாறாக இனப் பிரச்சினையை ஆறாத புண்ணாக வைத்துக் கொண்டு அரசியல் செய்ய முற்படக் கூடாது.

அதேபோன்றுதான் மதவாதத்துக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டிய காலமும் கனிந்துவிட்டது. மதங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிப்பவர்களை இனங்கண்டு களையெடுக்க வேண்டியதும் அடுத்து பதவியேற்கவுள்ள ஜனாதிபதி முன்னுள்ள பொறுப்பாகும். எவ்வாறு ஊழலுக்கு எதிராக போராடுவது முக்கியமோ அதே போன்றுதான் இன மத அடிப்படையிலான முரண்பாடுகளைத் தோற்றுவிப்பவர்களுக்கு எதிராக போராட வேண்டியதும் காலத்தின் தேவையாகும். மேற்சொன்ன விடயங்களுக்கு சாதகமான பதிலைத் தருகின்ற வேட்பாளர்ளையே மக்கள் தமது தெரிவாகக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை வீண்போகாது என நம்புவோம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.