பொது நிர்வாக அமைச்சின் அனுமதியின்றி ஹஜ் யாத்திரை சென்ற உத்தியோகத்தர்களுக்கு விசாரணை
முறைப்பாடு கிடைத்ததையடுத்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நடவடிக்கை
றிப்தி அலி
புனித ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்காக பேசா விசாவில் மக்கா சென்ற முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் இருவருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சிடமிருந்து வெளிநாடு செல்வதற்கு தேவையான அனுமதியினைப் பெறாமல் சென்றமை தொடர்பிலேயே குறித்த உத்தியோகத்தர்களுக்கு எதிராக இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவர்களுக்கு எதிராக ஆணைக்குழுவிடம் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளை அடுத்தே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவர்களின் ஹஜ் விஜயம் தொடர்பில் விளக்கம் கோரி ஆணைக்குழுவினால் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு கடந்த வாரம் கடிதமொன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மேற்படி இரண்டு உத்தியோகத்தர்களில் ஒருவருக்கு இதுவரை வெளிநாடு செல்வதற்கான அனுமதி பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சிடமிருந்து கிடைக்கவில்லை என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
குறித்த இரண்டு உத்தியோகத்தர்களும் பேசா விசாவில் கடந்த வருடமும் இந்த வருடமும் புனித ஹஜ் கடமையினை நிறைவேற்ற தொடர்ச்சியாக சென்றுள்ளனர்.
கடந்த முறை இவர்கள் ஹஜ் கடமையினை நிறைவேற்றச் சென்ற போது ஒருவருக்கு ஹஜ் நிதியத்திலிருந்து தலா 3000 டொலர் பணம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும் இம்முறை இவர்களுக்கு அரச நிதி செலவிடப்படவில்லை என திணைக்கள தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இதேவேளை, இலங்கையிலிருந்து செல்லும் ஹஜ் யாத்திரிகர்களின் நலன்புரி நடவடிக்கைகளை கவனிப்பதற்காக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் மூன்று பேர் இம்முறை நேர்முகப் பரீட்சையின் ஊடாக தெரிவுசெய்யப்பட்டனர். அத்துடன் நிறைவேற்றுத் தரத்திலுள்ள உதவிப் பணிப்பாளர் ஒருவரும் சென்றார். இதற்கு மேலதிகமாகவே ஹஜ் குழுவின் தலைவரினால் இவர்கள் இவரும் அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திலுள்ள ஏனைய உத்தியோகத்தர்களின் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியிலேயே இவர்கள் அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் தகவலறியும் கோரிக்கையின் ஊடாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திடம் தகவல் கோரப்பட்ட போது, அதன் தகவல் அதிகாரியான உதவிப் பணிப்பாளர் எம்.எஸ். அலா அஹமட் தெரிவிக்கையில்,
“இலங்கையில் இருந்து சென்ற 3,500 யாத்திரிகர்களுக்கு முழுமையான, திருப்திகரமான சேவையினை வழங்க வேண்டும் என்ற நோக்கிலேயே மேற்படி உத்தியோகத்தர்கள் இருவரும் அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த ஏற்பாட்டினை ஹஜ் குழுவும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இணைந்து மேற்கொண்டிருந்தன.
இந்த இரண்டு உத்தியோகத்தர்களும் திணைக்களத்தின் ஹஜ் பிரிவில் இருந்துகொண்டு ஹஜ் குழுவினதும் திணைக்கள பணிப்பாளரினதும் வழிகாட்டுதலில் ஹஜ் முகவர் நிலையங்களுடனும் சவூதி அரேபியாவின் ஹஜ் அமைச்சுடனும் ஹஜ் தொடர்பான அனைத்து விடயங்களையும் செய்து வந்தனர்.
மினா, அரபா, முஸ்தலிபா போன்ற இடங்களில் கடந்த காலங்களில் இவர்கள் சிறப்பாக சேவையாற்றிதுடன் மக்கா, மதீனா, மினா மற்றும் அரபா போன்ற இடங்கள் தொடர்பாக நன்கு பரிச்சயமானவர்களாவர். திணைக்களத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட மற்றைய மூன்று உத்தியோகத்தர்களும் முதன் முறையாக இந்த வருடம் ஹஜ் கடமைக்குச் செல்வதுடன் ஹஜ் பிரிவில் சேவை செய்த முன்னனுபவம் அவர்களுக்கு இல்லை.
இதனால், அவர்களை வழிநடத்தவும் ஹாஜிகளுக்குத் தேவையான சேவையினை சிறப்பாக வழங்கவும், இவர்கள் தொண்டர்களாக அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு எவ்வித அரச நிதியோ, ஹஜ் நிதியோ செலவிடப்படவில்லை.
அவர்களது தொண்டு அடிப்படையிலான கடமைக்கு புத்தசாசன, மத விவகார மற்றும் கலாசார அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோரது முறையான அனுமதி பெறப்பட்டு சொந்த விடுமுறையிலேயே அவர்கள் சென்றனர்” என்றார்.
இதேவேளை, ஹஜ் குழுவின் மூன்று உறுப்பினர்களும் திணைக்களத்தின் நான்கு உத்தியோகத்தர்களும் இந்த வருடம் புனித ஹஜ் கடமையினை நிறைவேற்றச் சென்றுள்ளனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் Economic Class தரத்திலான இருவழி விமான பயணச் சீட்டு மற்றும் நிதி அமைச்சின் 01/2015/01ஆம் இலக்க சுற்றறிக்கை மற்றும் திருத்தப்பட்ட பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் MF/06/23/50/2023ஆம் இலக்க சுற்றறிக்கை மற்றும் 2023.03.20 ஆம் திகதிய கடிதத்திற்கு ஏற்ப ஏனைய அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படுவது போன்ற கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டுள்ளன. இதற்கமைய ஒவ்வொருவருக்கும் சுமார் 3000 டொலர் நிதி ஹஜ் நிதியத்தின் ஊடாக செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli