யார் வெல்வார்?

0 64

ஸஃபார் அஹ்மத்
ahmedzafaar@gmail.com

ஒன்­ப­தா­வது ஜனா­தி­பதித் தேர்தல் களத்தின் வெப்பம் தறி­கெட்டுச் சென்று கொண்­டி­ருக்­கி­றது. அனுமார் வால் போன்று முப்­பத்­தெட்டு வேட்­பா­ளர்­க­ளுடன் வாக்குச் சீட்டு அச்­சி­டப்­பட்டுக் கொண்டு இருக்கும் இத்­த­ரு­ணத்தில் போட்டி என்ற ஒன்று இருப்­பதோ மூன்று பேருக்கும் இடையில் தான்.

ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க, அழிவில் இருந்த நாட்டை தான் மீட்­டெ­டுத்­ததாய்க் கூறிக் கொண்டு கள­மி­றங்கி இருக்­கிறார். எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தா­ஸ­வி­டமோ அள்ளி வீசு­வ­தற்குக் கட்டுக் கட்டாய் வாக்­கு­று­திகள் அவர் சட்­டைப்­பையில் பத்­தி­ரமாய் இருக்­கின்­றன. தேசிய மக்கள் சக்­தியின் தலைவர் அநு­ர­ கு­மார திஸா­நா­யக்க, சம்­பூரண­மான அர­சியல் ஒழுங்கு மாற்றம் என்று கூறிக் கொண்டு பம்­ப­ரமாய் சுழன்று கொண்­டி­ருக்­கிறார்.

தனிப்­பட்ட குரோ­தங்­களால் பகைத்துக் கொண்டும், முறைத்துக் கொண்­டு­மி­ருந்­தாலும் சஜித்தும், ரணிலும் ஐக்­கிய தேசியக் கட்சி என்ற ஒரே பாச­றையில் வளர்ந்­த­வர்கள். ஆரம்­ப­கா­லத்தில் ரணில் செய்­வது எல்லாம் நாம் முன்­வைக்கும் பொரு­ளா­தார சீர்­தி­ருத்­தங்கள் தான் என்று சஜித்தின் ஐக்­கிய மக்கள் சக்­தியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹர்­ஷடி சில்வா வீணை வாசித்துக் கொண்­டி­ருந்தார். இப்­போது என்ன ஆனதோ தெரி­ய­வில்லை.ஹர்ஷ எதையும் சொல்­வ­தில்லை. ஹர்ஷ உட்­பட பதி­னைந்து, இரு­பது பேர் ரணி­லிடம் சர­ணா­க­தி­ய­டை­வார்கள் என்று கடந்த இரண்டு வரு­டமாய் உலா­விய வதந்­தியும் அப்­ப­டியே செத்துப் போய்­விட்­டது. வேறு வழி­யின்றி ரணில், மக்­களின் பரி­கா­சத்­திற்கும், எள்­ள­லுக்­கு­முள்ளான பொது­ஜன முன்­ன­ணியின் கணி­ச­மான பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களைச் சேர்த்துக் கொண்டு பவனி வரு­கிறார். நூறுக்கும் மேற்­பட்ட பொது­ஜன முன்­னணி உறுப்­பி­னர்கள் இன்று ராஜ­பக்­சாக்­களைக் கைவிட்டு விட்டு ரணி­லோடு இருக்­கி­றார்கள். பேசாமல் ரணிலை பொது­ஜன முன்­ன­ணியின் தலை­வ­ராக நிய­மிக்­கலாம் போல இருக்­கி­றது.

தேர்தல் கோலங்­களை அவ­தா­னிக்கும் போது எல்­லோ­ருக்கும் பொது எதி­ரியாய் தேசிய மக்கள் சக்தி இருப்­ப­தாகத் தெரி­கி­றது. தொட்­ட­துக்­கெல்லாம் குறை­பி­டிக்கும் கொடு­மைக்­கார மாமி­யிடம் அகப்­பட்ட மரு­மகள் போலத்தான் அநு­ர­கு­மா­ர­வி­னதும் தேசிய மக்கள் சக்­தி­யி­னதும் நிலைமை இருக்­கி­றது. என்­னதான் தேசி­ய­ மக்கள் சக்தி என்று கூறிக் கொண்­டாலும் ஜே.வி.பி சித்­தாந்­தப்­பு­லத்தில் வளர்ந்­த­வர்கள் இவர்கள் என்­ற­வாறு 1988/1989ம் ஆண்டு கால ஜே.வி.பி கிளர்ச்சி மீண்டும் சமூ­க­வ­லைத்­ளங்­களில் தூசு தட்டி எடுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

ஆனால் இம்­முறை இந்த சேறு­பூ­சல்கள், வழக்­க­மான தேர்­தல்­கால வாக்­கி­யங்கள் எதுவும் பெரி­ய­ளவில் சிங்­கள மக்­க­ளிடம் எடு­ப­ட­வில்லை.1980ம் ஆண்டு சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்­கவின் குடி­யு­ரிமை பறிப்பு, 1981ல் எரிக்­கப்­பட்ட யாழ்­நூ­லகம், 1982ம் ஆண்டு பாரா­ளு­மன்றத் தேர்­தலை நடத்­தாமல் தன் சொல்­படி கேட்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் ஒப்­பு­த­லுடன் நடத்­திய சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு என்னும் மோசடித் தேர்தல், சிங்­கள மக்­களின் அரச எதிர்ப்பை மடை­மாற்ற அதனைத் தொடர்ந்து 1983ல் ஜே.ஆர் அரசு நடத்­திய ஜூலைக் கல­வரம் என்று இலங்கை நிரந்­தர இருட்­டுக்குள் விழு­வ­தற்குக் கார­ண­மான அத்­த­னையும் புள்­ளி­வி­ப­ரங்­க­ளுடன் அதே சமூ­க­வ­லை­த்த­ளங்­களில் முன்­வைக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன.

வழக்­கமாய் இலங்கைத் தேர்­தல்­களில் இன­வாதம் ஒன்­றுதான் பேசு பொரு­ளாகும். ‘தமிழன் நாடு கேட்­கிறான். தேசத்தைக் காப்­பாற்ற வாக்குப் போடுங்கள்’ என்ற கோஷம் புலிகள் உயிர்ப்­புடன் இருக்கும் வரை இருந்­தது. 2009ம் ஆண்டு புலிகள் முற்றாய்த் துடைத்­தெ­றி­யப்­பட்ட பின்னர் அர­சியல் செய்ய ‘இஸ்­லா­மோ­போ­பியா’ பேசு­பொ­ரு­ளா­னது. 2019ம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு கோட்­டா­ப­ய­விற்கு தேர்தல் விஞ்­ஞா­பனம் உண்­மையில் தேவைப்­பட்­டி­ருக்­கவே இல்லை. முஸ்லிம் வெறுப்பு அவரை வெல்­ல­வைக்கத் தாரா­ளமாய்ப் போது­மா­னதாய் இருந்­தது.

இந்த தேர்­தலில் இத்­தகு இன­வாதப் பரப்­பு­ரைகள் எல்லாம் காலி­யாகிப் போன­தற்கு 2022ம் ஆண்டு மக்கள் எழுச்­சிக்குப் பிற­கான இலங்­கையைப் புரிந்து கொள்­வது முக்­கியம். வயிற்றுப் பசியும், வரி­சை­களும், தட்­டுப்­பாடும் மக்­க­ளுக்கு குறிப்­பி­டத்­தக்க அளவில் அர­சியல் விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்தி இருக்­கி­றது. முன்னாள் இன­வா­திகள் எல்லாம் ‘நாங்கள் இன­வா­திகள் அல்லர்’ என்று மேடை தோறும் சத்­தியம் செய்­யு­ம­ள­வுக்கு நிலைமை மாறி இருக்­கி­றது.

இதனால் தானோ என்­னவோ இப்­போது இலங்கை அர­சி­யலில் பெரும் மாற்று சக்­தியாய் உரு­வெ­டுத்து இருக்கும் ஜே.வி.பிக்கு எப்­படி வசை­பா­டலாம் என்று புரி­யாமல் பாரம்­ப­ரியக் கட்­சி­களின் தலை­வர்­களும், அவர்­க­ளது பக்த கோடி­களும் 1988 –1989ம் ஆண்­டு­கால சர்­வ­நாச சரித்­தி­ரத்தில் தம் வகி­பா­கத்தை இடது கையால் மறைத்துக் கொண்டு திரும்பத் திரும்ப பேசிக் கொண்டு இருக்­கி­றார்கள்.

சரி, இப்­போ­தைய நிலை­மையில் இம்­மூன்று போட்­டி­யா­ளர்­க­ளி­னதும் நிலைமை என்ன?

ரணில் வரி­சையை ஒழித்­தார்தான், தட்­டுப்­பாட்டை நீக்­கினார் தான், அத்­தி­ய­வ­சி­யங்­களை பல்­பொருள் அங்­கா­டி­களில் ராக்­கையில் நிரப்­பினார் தான். ஆனால் அதற்­காக மக்கள் கொடுத்த விலை ரொம்­பவே அதிகம். இது எல்­லோ­ரையும் விட ரணி­லுக்குத் தெரியும். அவ­ருக்கு தேர்தல் என்­றாலே அலர்­ஜி­யா­கி­வி­டு­கி­றது. உள்­ளூ­ராட்சித் தேர்­தலை ஒத்­தி­வைத்­தது போல ஜனா­தி­பதித் தேர்­தலைத் தள்ளிப் போட அவரால் முடி­ய­வில்லை. ஜனா­தி­பதித் தேர்தல் என்­பது அர­சியல் சாச­னத்தில் தெளிவாய் வரை­ய­றுக்­கப்­பட்ட ஒன்று. அதற்­காக ஜனா­தி­பதித் தேர்தல் என்ற அறி­விப்பைப் பெற்றுக் கொள்­வது ஒன்றும் இலங்கைப் பிர­ஜை­க­ளுக்கு அத்­தனை இலகுவான காரி­யமாய் இருக்­க­வில்லை. ஏழு மலை, ஏழு கடல் தாண்டி வசிக்கும் ராஜ­கு­மா­ரியை அடையப் போகும் போது இள­வ­ர­சர்­க­ளுக்கு ஏற்­படும் சிர­மங்­களைப் போலத்தான் ரணில் ஜனா­தி­ப­தி­யாக இருக்கும் தேசத்தில் தேர்­தலைப் பெற்றுக் கொள்ள மெனக்­கி­டு­வதும் என்­ப­தற்கு கடந்த இரு மாதங்­களாய் நடந்து வந்த கண்­ணுக்குத் தெரி­யாத சூழ்ச்­சி­களே போது­மான சான்று.

சர்­வ­தேச நாணய நிதி­யத்­து­ட­னான உடன்­ப­டிக்­கைக்குப் பிறகு மின்­சாரம், நீர்க்­கட்­ட­ணங்கள் எல்லாம் மூன்று மடங்­கா­கின. அரச ஊழி­யர்­களின் சம்­பளப் பெறு­மதி முப்­பத்­தாறு சத­வீ­தத்தால் தேய்­மா­னத்­திற்­குள்­ளா­னது. கிட்­டத்­தட்ட இரு­பத்­தைந்து சத­வீ­த­ம­ன­வர்கள் வறு­மைக்­கோட்­டிற்குள் தட­ாலடியாய் உள்­வாங்­கப்­பட்­டார்கள். வேலை­யின்மை அதி­க­ரித்­தது. இறக்­கு­மதிக் கட்­டு­ப்பா­டு­களால் மூலப் பொருள்­க­ளுக்குத் தட்­டு­ப்பாடு ஏற்­பட நூற்றுக்கணக்­கான தொழிற்­சா­லைகள் மூடு­விழாக் கண்­டன. கடந்த இரண்டு வரு­டத்தில் மட்டும் ஆறு லட்சம் பேர் நாட்­டை­விட்டு வெளி­யே­றி­னார்கள். இந்த வலியும் வேத­னை­மிகு தியா­கங்­களும் சாமா­னி­யர்­க­ளுக்கு மட்­டுமாய் இருந்­தது தான் இங்கே சோகம். கடந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும் ஆயி­ரத்து இரு­நூறு பில்­லியன் ரூபாய்கள் வரி ஏய்ப்பு நடந்து இருப்­பதாய்க் கூறு­கி­றது திறை­சேறி. அதா­வது இலங்­கையின் பிர­தான வருவாய் மூலா­தா­ரங்­க­ளான சுங்கம், இறை­வரித் திணைக்­களம், மது­சாரத் திணைக்­களம் அற­விடத் தவ­றிய தொகை இது.

இந்­த ­வ­ரி­களை எல்லாம் முறை­யாக அற­விட எந்­த­வொரு திட்­ட­மு­மின்றி சர்­வ­தேச நாணய நிதியம் சொன்­ன­படி வரி வரு­மா­னத்தை அதி­க­ரிக்க நடந்த கபடி ஆட்­டத்தில் மொத்­தமாய்ப் பாதிக்­கப்­பட்­டது அப்­பா­விகள் தான். 2027 வரை கடன்­களை மீள் செலுத்த தேவை இல்லை என்று இலங்கை கடன் மறு­சீ­ர­மைப்பு ஒப்­பந்­தங்­களில் கைச்­சாத்­திட்­டுள்­ளது. மற்­ற­படி, எப்­போதும் போல அந்­நியச் செலா­வ­ணியை அள்ளித் தரும் சுற்­று­லாத்­து­றையும், வெளி­நாடு வாழ் இலங்­கை­யர்கள் அனுப்பும் பண­முமே டொலர் கையி­ருப்பைப் பேண உதவிக் கொண்டு இருக்­கின்­றன. உற்­பத்­திகள் என்று எது­வு­மில்லை. இஞ்சி, பால், மீன், முட்டை என உணவுப் பொருட்­களைக் கூட இறக்­கு­மதி செய்ய வேண்டி இருக்­கி­றது நிலைமை.

இப்­ப­டி­யாக சர்­வ­தேச நாணய நிதி­யத்தை பூச்­சாண்­டி­யாகக் காட்டிக் கொண்டு மக்­களின் மானி­யங்­க­ளுக்கும், நிவா­ர­ணங்­க­ளுக்கும் ஆப்புச் சொரு­கிய ரணில் இப்­போது திடீர் கிறிஸ்­மஸ் தாத்தா அவ­தாரம் எடுத்து இருக்­கிறார். 2025 ஜன­வரி முதல் அரச ஊழி­யர்­களின் சம்­ப­ளத்தை 25 முதல் 50 சத­வீ­தமாய் அதி­க­ரிக்கப் போவதாய் சர்­வ­தேச நாணய நிதி­யமே அரண்டு ஓடு­ம­ள­வுக்கு ஒரு வாக்­கு­று­தியை அறி­வித்து இருக்­கிறார். இதற்கு மட்டும் மாதம் மூவா­யி­ரத்து அறு­நூறு கோடி ரூபாய் மேல­தி­கமாய் செல­வாகும் என்று சொல்­லப்­படும் நிலையில் தப்பித் தவறி ரணில் வென்றால் இப்­ப­ணத்தை திரட்ட யார் மீது வரி விதிப்பார் என்று தெரி­ய­வில்லை. மூச்­சு­வி­டு­வ­தற்கும் வரி விதித்தால் தான் இதெல்லாம் சாத்­தியம்.

இதை எல்லாம் தாண்­டியும் ரணி­லுக்கு வர்த்­தக சமூ­கத்தில் இருக்கும் செல்­வாக்கை குறைத்து மதிப்­பிட முடி­யாது. ரணில் யாரோடு ஆட்சி செய்­தாலும் சரி, இப்­படி தெரிந்த பிசாசே இருந்­து­விட்டுப் போகட்டும் என்று கரு­து­ப­வர்­களும் இருக்­கி­றார்கள். அவர்­களின் அபி­லா­ஷைகள் ரணிலை வெல்ல வைக்க இன்­றைய திக­தியில் போது­மா­னதாய் இல்லை.

எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாஸ, தன் அப்பா முன்னாள் ஜனா­தி­பதி ரண­சிங்க பிரே­ம­தா­ஸவைப் போல அர­சி­யலில் ஒரு முதிர்ச்­சி­யான ஒரு­வ­ரல்ல. சில சம­யங்­களில் அவ­ரது நட­வ­டிக்­கை­களும், பேச்சும் மூடன் – மட்டி கதை­களில் வரு­வது போன்று இருக்கும். நான் ஜனா­தி­ப­தி­யானால் நீங்கள் மகிழ்ச்­சியாய் இருக்­கி­றீர்­களா என்று அறிந்து கொள்ள இரவு வேளை­களில் உங்கள் வீடு தேடி வருவேன் என்பார். யானை விரட்டும் மந்­திரம் சொல்வார். மூன்றாம் வகுப்பு படிக்கும் பிள்­ளை­க­ளிடம் ‘என் அருமைத் தோழர்­களே! இந்த ரணிலைப் பாருங்கள்’ என்று உரை­யாற்றி பேட்டை எங்கும் பயப் பிராந்­தியை ஏற்­ப­டுத்­தி­விட்டுப் போவார். திடீ­ரென்று ஆங்­கி­லத்தில் பேசுவார். வெள்­ளைக்­கா­ரனே தோற்­கு­ம­ள­வுக்கு அந்த ஆங்­கிலம் இருக்கும். IELTS மாண­வர்­க­ளுக்கு நல்ல பிர­யோ­ச­னமாய் இருக்கும்.

சஜித் பிரே­ம­தாஸ தனக்கு அடித்­தள சிங்­கள மக்­களின் ஆத­ரவு நிச்­சயம் இருக்­கி­றது என்று நினைக்­கிறார். 2020ம் ஆண்டு ஐ.தே.க யை உடைத்துக் கொண்டு சஜித் பிரே­ம­தாஸ வெளி­யே­றிய போது வழக்­கமாய் ரணி­லுக்கு ஸலாம் போடும் தமிழ்- முஸ்லிம் கூட்­ட­ணி­களும் சஜித்­தோடு சேர்ந்து கொண்­டன.

அதே கூட்­ட­ணிதான் இன்­னமும் தொடர்­கி­றது. இவர்­களின் தயவில் மலை­யகம் மற்றும் வடக்கு – கிழக்கில் பெரு­வா­ரி­யான வாக்­கு­களை அள்ள முடியும் என்­பது சஜித்தின் திட்டம். ரணி­லோடு ஒப்­பிடும் போது சஜித்­திற்கு சிங்­கள மாவட்­டங்­களில் வாக்கு வங்கி இருக்­கி­றது. வடக்கு–கிழக்குக்கு வெளியே தமிழ்–முஸ்­லிம்­களின் பர­வ­லான ஆத­ரவும் இருக்­கி­றது. இதெல்லாம் பலனைத் தருமா என்­ப­துதான் கேள்வி.

சந்­தே­கமே இல்லை. ஜே.வி.பி தலைவர் அநுர குமார திஸா­நா­யக்க தான் இம்­முறை பெரும்­பா­லன சிங்­கள மக்­களின் விருப்­பத்­திற்­கு­ரிய தேர்வு. முன்னர் ராஜ­பக்ச கம்­பெனி கோலோச்­சிய இலங்­கையின் தெற்கு மாவட்­டங்கள் உட்­பட வடக்கு – கிழக்கைத் தவிர ஏனைய மாவட்­டங்­களில் அநு­ரவின் கொடிதான் பறக்­கி­றது. கடந்த எழு­பத்­தாறு வருட காலமாய் மாறி மாறி ஆண்ட பாரம்­ப­ரியக் கட்­சிகள் மீது ஏற்­பட்டு இருக்கும் கார­மான விமர்­ச­னமும் 2022ம் ஆண்டு ஏற்­பட்ட மக்கள் புரட்­சி­யுமே பெரும்­பான்மை சமூ­கத்தின் அலை அநுர மீது திரும்பி இருக்கப் பிர­தான காரணம்.

சரி.என்­னதான் சிங்­களப் பிர­தே­சங்­களில் ஜே.வி.பி அதன் செல்­வாக்கை அதி­க­ரித்துக் கொண்­டாலும் வடக்கு – கிழக்கில் அதுவும் தமி­ழர்கள் மத்­தியில் இன்­னமும் தவழும் நிலை­யி­லேயே இருக்­கி­றது. மகிந்த ராஜ­பக்­சவுடன் தேனி­லவில் இருந்த காலப் போக்கில் ஜே.வி.பி, தேசிய இனப்­பி­ரச்சினை தொடர்­பாக பேணி வந்த கொள்­கைகள் இதற்குக் காரணமாய் இருக்கலாம். அல்லது ஜே.வி.பி இன் கொள்கைகள் பற்றிய போதிய தெளிவின்மையாக இருக்கலாம். இதேவேளை ஏனைய மாவட்டங்களைப் போலவே கிழக்கில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் முன்னர் இருந்ததைவிட ஜே.வி.பி யின் செல்வாக்கு கணிசமாய் அதிகரித்து இருக்கிறது.

ஜே.வி.பி இற்கு இத்தேர்தல் களத்தில் அமைந்திருக்கும் ஜாக்பாட் அதிர்ஷ்டம் என்னவென்றால் இது நாள்வரையான முக்கிய தேர்தல்களில் ஒன்றாய் இருந்த ரணிலும் சஜித்தும் பிரிந்திருப்பதுதான். அதுவும் வடக்கு மற்றும் கிழக்கில் வாக்குகள் ரணில் என்றும் சஜித் என்றும் சிதறும் போது ஜே.வி.பி மூன்றாம் இடத்திற்கு வந்தாலும் சேதாரம் ஒன்றுமில்லை. ஜே.வி.பி இன் வெற்றி என்பது வடக்கு–கிழக்கு மாகாணங்களிற்கு வெளியே சிங்கள வாக்குகளை எந்தளவுக்கு அள்ளும் என்பதிலேயே முழுமையாய் தங்கியிருக்கிறது.

சரி ஜே.வி.பி யின் பிரதான பலவீனம் என்ன? வடக்கு கிழக்கில் சிறுபான்மை வாக்குகளைக் கவரப் பெரிய திட்டம் எதுவும் இன்றி இப்போதே வென்றுவிட்டதாய் நினைத்துக் கொண்டு அடுத்த கெபினட் பற்றிப் பேசிக் கொண்டு இருப்பதுதான்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.