முஸ்லிம் வாக்காளர்கள்: ஒரு கண்ணோட்டம்

0 479

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்­தி­ரே­லியா

எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்தல் ஏற்­க­னவே அறி­விக்­கப்­பட்­ட­து­போன்று செப்­டம்பர் மாதம் இரு­பத்­தொன்றில் நடை­பெ­று­மானால் அந்தத் தேர்­தலின் முடிவு இந்த நாட்டின் சுதந்­தி­ரத்­துக்குப் பிற்­பட்ட அர­சியல் வர­லாற்றில் ஒரு புதிய சகாப்­தத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய வாய்ப்பு உண்டு. அந்த வாய்ப்பைத் தவ­ற­விட்டால் இலங்கை தொடர்ந்தும் இன்று அனு­ப­விக்கும் நெருக்­க­டி­க­ளை­வி­டவும் மோச­மான பிரச்­சி­னை­களை எதிர்­கொள்ளும் நிர்ப்­பந்தம் ஏற்­ப­டலாம்.

இந்தச் சிந்­த­னையை மைய­மா­கக்­கொண்டு குறிப்­பாக முஸ்லிம் வாக்­கா­ளர்­களைப் பற்­றியும் அவர்­க­ளுக்­கி­டையே ஏற்­பட்­டுள்ள ஒரு முக்­கி­ய­மான மாற்­றத்­தைப்­பற்­றியும் எதிர்­வரும் தேர்­தலில் அவர்­களின் பங்­க­ளிப்­பைப்­பற்­றியும் சில கருத்­துக்­களை இக்­கட்­டுரை முன்­வைக்­கின்­றது. இது ஒரு தூரத்­துப்­பார்­வை­யா­யினும் இலங்கை முஸ்லிம் சமூ­கத்­தைப்­பற்­றியும் அதன் வர­லா­று­பற்­றியும் நீண்­ட­கா­ல­மாக அவ­தா­னித்த ஓர் ஆய்­வா­ளனின் ஆழ­மான பார்வை என்­ப­தையும் சுட்­டிக்­காட்ட வேண்­டி­யுள்­ளது.

கடந்த ஏழரை தசாப்­தங்­க­ளாக நீடித்­து­வரும் இலங்­கையின் ஜன­நா­யக அர­சி­யலில் முஸ்லிம் சமூகம் பெரும்­பாலும் ஒரு பார்­வை­யா­ளி­யாக இருந்­தி­ருக்­கின்­ற­தே­யன்றி பங்­கா­ளி­யாக இருக்­க­வில்லை என்று கூறு­வது பொருந்தும். இக்­கூற்று பல­ருக்கு அதிர்ச்­சியைத் தரலாம். ஒவ்­வொரு தேர்­த­லிலும் முஸ்­லிம்கள் பங்­கு­பற்றி பல தொகு­தி­களில் வென்று மந்­திரி சபை­க­ளிலும் அங்­கத்­து­வம்­பெற்ற நாங்கள் பங்­கா­ளி­க­ளல்­லாமல் வெறும் பார்­வை­யா­ளர்­களா? இது ஒரு நியா­ய­மான கேள்வி என்­பதை மறுக்­க­வில்லை. ஆனால் பங்­க­ளிப்பு என்­பது வெறு­மனே தேர்­தலில் வாக்­க­ளிப்­ப­தோடும் அமைச்­சர்­க­ளா­வ­தோடும் பூர்த்­தி­யாகும் ஒரு களி­யாட்­ட­விழா அல்ல. அதற்கும் அப்­பாலே சென்று நாட­ளா­விய ரீதியில் இலங்­கையின் அர­சியல், பொரு­ளா­தார, கலாச்­சார, ராஜ­தந்­திரத் துறை­களில் எழுந்த பிரச்­சி­னை­க­ளைப்­பற்­றியும் அவற்­றிற்­கான தீர்­வு­க­ளைப்­பற்­றியும் ஆக்­க­பூர்­வ­மான பங்­க­ளிப்­பு­களை எந்த அள­வுக்கு முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களோ நிபு­ணர்­களோ செய்­துள்­ளனர் என்று நோக்கின் அது மிக­மிகக் குறைவு என்­பது புல­னாகும். ஆனால் முஸ்லிம் சமூ­கத்­துக்­காகச் சில தலை­வர்கள் அளப்­ப­ரிய சேவை செய்­துள்­ளனர் என்­பதை மறுக்­க­வில்லை. இதி­லி­ருந்து புலப்­ப­டு­வது என்­ன­வெனில் முஸ்­லிம்­களின் அர­சியல் ஒரு வியா­பார அர­சியல் என்­பதே. யார் ஆண்­டாலும் எந்தப் பிரச்­சி­னைகள் எப்­படி நாட்டைப் பாதித்­தாலும் எங்­க­ளுக்குக் கவலை இல்லை, எங்­களின் காரியம் நிறை­வே­றினால் போதும் என்ற மனப்­பாங்கே முஸ்லிம் அர­சி­யலின் தாரக மந்­தி­ர­மாக இது­வரை இருந்து வந்­துள்­ளது. அந்த மனப்­பாங்­கிற்குச் சில தவ­றான இஸ்­லா­மிய மத­போ­த­னை­களும் உறு­து­ணை­யாக இருந்­துள்­ளன.

அதே சமயம் இலங்­கையின் திரி­பு­ப­டுத்­தப்­பட்ட ஜன­நா­யக ஆட்­சி­மு­றையும் கட்சி அர­சி­யலும் அந்த மனப்­பாங்கை தனது பிரி­வினை அர­சி­ய­லுக்குச் சாத­க­மாகப் பயன்­ப­டுத்­தி­ய­தையும் வலி­யு­றுத்த வேண்­டி­யுள்­ளது. அந்த வர­லாற்றை விரி­வாக விளக்க இக்­கட்­டு­ரையின் நீளம் இட­ம­ளிக்­காது. சுருக்­க­மாகச் சொன்னால், ஜன­நா­யகம் என்ற போர்­வைக்குள் நடை­மு­றை­யி­லி­ருந்­ததோ சிங்­கள பௌத்த பேரி­ன­வாதம். அந்தப் பேரி­ன­வாத அர­சியல் அமைப்பு பிரித்­தாளும் தந்­தி­ரத்தை கையாண்டு இன அமை­தியைக் குலைத்­த­தையும் அதனால் ஒரு போரே உரு­வா­கி­ய­தையும் யாவரும் அறிவர். ஆனால் அந்த அமைப்பின் உள்­நாட்டுத் தோற்­றமும் வெளி­யு­லகத் தோற்­றமும் முர­ணா­னவை. முஸ்­லிம்­க­ளுக்குச் சலு­கை­களை வழங்கி அர­வ­ணைத்­த­தன்­மூலம் இன ஒற்­று­மையைப் பேணு­வ­தான ஒரு போலி முகத்தை அந்த ஆட்சி வெளி­யு­ல­குக்குக் காட்­டி­யது. இந்தப் போலி அர­வ­ணைப்பின் நிழ­லிலே வளர்ந்­ததே முஸ்­லிம்­களின் வியா­பார அர­சியல். ஆனால் கால­வோட்­டத்தில் அந்த அர­வ­ணைப்பைக் கைவிட்டு முஸ்­லிம்­க­ளையும் ஓர் எதி­ரி­யென பேரி­ன­வாதம் கணிக்கத் தொடங்­கவே வியா­பார அர­சி­யலும் அத்­தோடு காலா­வ­தி­யாகி விட்­டது. 1990வரை தனிப்­பட்ட முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களால் மேற்­கொள்­ளப்­பட்ட இந்த அர­சியல் அதன் பின்னர் முஸ்லிம் கட்­சி­கள்­மூலம் தொட­ரப்­பட்டு இன்­றைக்கு இரண்­டுமே வலு­வி­ழந்த நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளன. பாமர முஸ்­லிம்­களும் இந்தத் தலை­வர்­களின் பின்­னா­லேயே மந்­தை­கள்­போன்று வாக்குச் சாவ­டி­க­ளுக்குச் சென்று எந்த விப­ரமும் தெரி­யாது தலை­வர்கள் சொன்­ன­து­போன்று வாக்­க­ளிக்­க­லா­யினர். அந்த நிலை இன்று மாறி­விட்­டது.

அதை விளக்­கு­வ­தற்கு முன்னர் இன்­னு­மொரு விட­யத்தை நோக்­குவோம்.

அதா­வது, அர­சியல் பௌத்­தத்தின் நிழ­லிலே நாட்டின் நிர்­வா­கமும் பொரு­ளா­தா­ரமும் சீர்­கு­லையத் தொடங்­கின. சுருக்­க­மாகச் சொன்னால் இன்­றையப் பொரு­ளா­தார நெருக்­க­டியின் ஆரம்பம் கடந்த இரண்டு வரு­டங்­க­ளுக்கும் முற்­பட்­டது. எவ்­வ­ளவோ இயற்கை வளங்­க­ளு­டனும் பொது­நல அபி­வி­ருத்­தி­யு­டனும் சுதந்­திரம் அடைந்த இந்த நாடு, ஆசி­யா­வி­லேயே ஜப்­பா­னுக்கு அடுத்­த­ப­டி­யாக வளர்­சி­பெற்ற நாடெனப் புகழ்­பெற்­றி­ருந்த இலங்கை, இன்று வங்­கு­ரோத்து நிலைக்குத் தள்­ளப்­பட்­டதும் இறுக்­க­மு­டி­யாத கட­னுக்குள் சிக்­கி­யதும் அர­சாங்­கங்­களின் ஊழல்­ம­லிந்த நிர்­வாகக் கேட்­டி­னாலும் சுய­நல வேட்­கை­யி­னாலும் இனங்­களைப் பிரித்­தாளும் சூழ்ச்­சி­யி­னா­லு­மே­யன்றி வேறு கார­ணங்­களால் அல்ல. இந்தச் சரி­வினை நேர­டி­யாக உணர்ந்து அனு­ப­வித்துக் கசந்த ஓர் இளம் சிங்­கள பௌத்த சந்­த­திதான் 2022ல் அர­க­லய என்ற வர­லாற்று முக்­கி­யத்­து­வம்­பெற்ற கிளர்ச்­சியில் இறங்­கி­யது. நாட்டின் ஆட்சி அமைப்­பையே மாற்று! நாடா­ளு­மன்றப் பிர­தி­நி­தி­களே வெளி­யேறு! என்ற கோஷங்­க­ளுடன் இன, மத, மொழி வேறு­பா­டு­களைக் களைந்­தெ­றிந்து காலி­முகத் திட­லிலே ஆரம்­ப­மா­கிய அர­க­லய ஒரு பிர­த­ம­ரையும் ஜனா­தி­ப­தி­யையும் பதவி துறக்­கச்­செய்­தபின் தற்­கா­லி­க­மாக நாடா­ளு­மன்­றத்­தி­னரால் தெரி­வு­செய்­யப்­பட்ட ஒரு ஜனா­தி­ப­தியால் படை­கொண்டு ஒழிக்­கப்­பட்­டது. ஆனாலும் அர­க­லய ஆரம்­பித்த ‘அமைப்­பையே மாற்று’ என்ற கோரிக்­கைதான் எதிர்­வரும் தேர்­தலின் முடி­வினைத் தீர்­மா­னிக்கப் போகின்­றது என்­பதை முஸ்லிம் வாக்­கா­ளர்கள் உணர வேண்டும்.

இனி முஸ்லிம் வாக்­க­ா­ளர்­க­ளி­டையே ஏற்­பட்­டி­ருக்கும் ஒரு முக்­கி­ய­மான மாற்­றத்தை நோக்­குவோம். மந்­தை­க­ளைப்­போன்று தலை­வர்­களின் விருப்­பப்­படி வாக்­க­ளித்து ஏமாந்த பாமர முஸ்­லிம்­க­ளல்ல இன்று வளர்ந்­துள்ள வாக்­கா­ளர்கள். கடந்த சில தசாப்­தங்­க­ளாக முஸ்லிம் சமூ­கத்தில் ஏற்­பட்ட கல்வி விழிப்­பு­ணர்வு ஒரு புத்­தி­ஜீ­விகள் சமு­தா­யத்தை உரு­வாக்­கி­யுள்­ளது. அதில் ஆண்­களும் பெண்­களும் அடங்­குவர். கல்­வி­யா­ளர்­களும், துறைசார் பத­வி­யா­ளர்­களும் எழுத்­தா­ளர்­களும் கவி­ஞர்­களும் மலிந்­துள்ள இவ்­விளஞ் சமு­தா­யத்தில் எதையும் அலசி ஆராயும் தகைமை வளர்ந்­துள்­ளதால் அர­சியல் மற்றும் மதத் தலை­வர்­களின் விருப்­பத்­துக்கு இணங்க வாக்­க­ளிப்பர் என எதிர்பார்ப்­பது மடமை. இன்று வாழும் முஸ்லிம் பெற்­றோரின் அர­சியல் பகுத்­து­ணர்­வுக்கும் அவர்­களின் பெற்­றோர்­களின் அர­சியல் பகுத்­து­ணர்­வுக்­கு­மி­டையே ஆக்­க­பூர்­வ­மான மாற்றம் ஏற்­பட்­டுள்­ளது. இந்த மாற்­றத்­தையும் அர­க­லய ஏற்­ப­டுத்­திய தாக்­கத்­தையும் பின்­ன­ணி­யாகக் கொண்டு எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலை நோக்­குவோம்.

ஜனா­தி­பதித் தேர்தல் களத்­திலே பல வேட்­பா­ளர்கள் குதித்­துள்­ள­போ­திலும் மூவர் முன்­ன­ணியில் நிற்­கின்­றனர் என்று கருத்துக் கணிப்­புகள் கூறு­கின்­றன. தற்­போ­தைய ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்ஹ, சஜித் பிரே­ம­தாஸ, அனுர குமார திசா­நா­யக ஆகி­யோரே அம்­மூ­வ­ரு­மாவர். இந்த மூவருள் தேசிய மக்கள் சக்திக் கூட்­ட­ணியின் தலைவர் திசா­நா­யக மட்­டுமே நாட்டின் அர­சியல் கலாச்­சா­ரத்­தையே சமூகப் புரட்­சி­மூலம் ஒழித்து ஊழ­லற்ற ஆட்­சி­யொன்றை நிறுவி சகல இனங்­களும் சம உரி­மை­யோடும் கௌர­வத்­து­டனும் வாழும் ஒரு ஜன­நா­யக அமைப்பைக் கொண்­டு­வ­ருவேன் எனவும், பொரு­ளா­தா­ரத்­து­றை­யிலே சர்­வ­தேச நாணய நிதி­யுடன் பேச்­சு­வார்த்தை மூலம் சில சிபார்­சு­களை முன்­வைத்து உள்­நாட்டு உற்­பத்திச் சக்­தி­க­ளுக்குப் போதிய ஊக்­க­ம­ளித்து, வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்­களின் மூல­த­னங்­களை நாட்டின் தேவைக்­கேற்ப வழிப்­ப­டுத்தி, இன்­றைய வங்­கு­ரோத்து நிலைக்குக் கார­ணமாய் இருந்­தோ­ரையும் சட்­டத்­தின்முன் நிறுத்தி நியாயம் வழங்­குவேன் எனத் தனது தேர்தல் பிரச்­சா­ரத்தின் ஆரம்­பத்­தி­லி­ருந்தே கூறி­வ­ரு­கிறார். அவ­ரது கூற்று அர­க­ல­யவின் எதி­ரொலி. அது விழிப்­புற்ற ஓர் இளம் சமு­தா­யத்தின் உரிமைக் குரல். அவ­ருக்கும் அவ­ரது கூட்­ட­ணிக்கும் பெரும்­பான்மை இனத்­தி­ன­ரி­டையே அடி­மட்ட ஆத­ரவு பெரும்­பான்­மை­யாக உண்­டெனக் கருத்­துக்­க­ணிப்­புகள் கூறி­னாலும் அவர் தனது வெற்றி சகல இனங்­க­ளி­னதும் கூட்­டு­மு­யற்­சி­யாக அமைய வேண்­டு­மென விரும்­பு­கிறார். இங்­கேதான் முஸ்­லிம்­களின் விழிப்­புற்ற இளம் சமு­தா­யத்தின் பங்­க­ளிப்பு இன்­றி­ய­மை­யா­த­தாக விளங்­கு­கி­றது.

நாடு நலம்­பெ­றாமல் நாட்டு மக்கள் நலம்­பெற முடி­யாது. எனவே நாட்டின் ஆட்­சி­மு­றையும் ஆட்­சி­யி­னரும் சீரற்றுக் கிடக்­கை­யிலே எவ்­வாறு முஸ்­லிம்கள் நலம்­பெற முடியும்? நாங்கள் எங்கள் உரி­மை­க­ளுக்­காகப் போரா­டுவோம் என்று முஸ்லிம் கட்­சி­களும் அவற்றின் தலை­வர்­களும் தம்­பட்டம் அடிப்­பது ஓர் ஏமாற்று வித்தை என்­பதை இனி­யா­வது உண­ர­வேண்டும். என­வேதான் நாட்டின் மீட்­சிக்­காகப் ேபாராடும் போராட்­டத்தில் முஸ்­லிம்கள் பார்­வை­யா­ளர்­க­ளாக நின்று வேடிக்கை பார்க்­காமல் பங்­கா­ளி­க­ளாக மாற­வேண்டும். அந்தப் பங்­கா­ளி­களே இன்று முஸ்­லிம்­க­ளி­டையே உரு­வா­கி­யுள்ள புத்­தி­ஜீ­வி­களின் சமு­தாயம்.

ஜனா­தி­பதி விக்­கி­ர­ம­சிங்ஹ ஒரு பழைய உத்­தி­யையே முஸ்­லிம்­களின் வாக்­கு­களைக் கவர்­வ­தற்­காகக் கையா­ளு­கின்றார். அதா­வது முஸ்லிம் தலை­வர்­க­ளுக்குப் பத­வி­களும் சன்­மா­னங்­களும் வழங்கி அவர்­களின் ஆத­ரவை விலை­கொ­டுத்­தேனும் வாங்­கி­விட்டால் அவர்­களிள் தொகுதி மக்கள் மந்­தை­கள்­போன்று தலை­வர்­களின் சொற்­கேட்டு வாக்­க­ளிப்பர் என்­பது சென்­ற­கால உத்தி. கிழக்­கிலே பிரச்­சார மேடை­களில் முழங்கும் பச்­சோந்தி முஸ்லிம் தலை­வர்கள் ஜனா­தி­ப­தியின் கைக்­கூ­லி­களோ என்று சந்­தே­கிக்கும் அள­வுக்கு ஜனா­தி­ப­திக்குப் புக­ழ­ாரம் சூட்­டு­வது இந்த உத்­தியின் பிர­தி­ப­லிப்பே. அது இனி­மேலும் செல்­லு­ப­டி­யா­காது. ஏனெனில் வாக்­கா­ளர்­களின் தகை­மையில் மாற்றம் ஏற்­பட்­டு­விட்­டது. தகை­மை­வா­ரி­யான அந்த மாற்றம் வாக்கு எண்­ணிக்­கையில் தொகை­வா­ரி­யான மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வது நிச்­சயம்.

இக்கட்டுரையின் ஆரம்பத்தில் எதிர்வரும் தேர்தல் இலங்கையின் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தைத் தோற்றுவிக்கும் வாய்ப்பினைக் கொண்டுவரும் எனக் கூறப்பட்டது. ஏனெனில் பெரும்பான்மை இனத்தினரிடையே அதுவும் அதன் இளம் சமுதாயத்தினரிடையே தற்போது நடைமுறையிலிருக்கும் ஆட்சிமுறையின் பம்மாத்து நாடகம் அம்பலமாகி விட்டது. அதன் தீய விளைவுகளை அந்தச் சமுதாயம் நேரிலே கண்டு அனுபவித்துள்ளது.

ஆகையால் அமைப்பு மாற்றம் வேண்டும் என்ற ஒரு புதிய அலை தென்னிலங்கையில் வீசத் தொடங்கிவிட்டது. அந்த அலையில் எதிர்நீச்சல் போடுவது ஆபத்தானது.

முடிவாக, முஸ்லிம் வாக்காளர்களுக்கோர் உருக்கமான வேண்டுகோள். ஏற்கனவே சுட்டிக்காட்டியதுபோல் தேசிய மக்கள் சக்திக் கூட்டணியைத்தவிர மற்ற எந்தக் கட்சியோ கூட்டணியோ அல்லது தலைவனோ அமைப்பு மாற்றத்தை ஏற்படுத்தத் தயாரில்லை. அந்த மாற்றம் ஏற்படாமல் முஸ்லிம் இனத்துக்கு மட்டுமல்ல எந்தச் சிறுபான்மை இனத்துக்கும் விடிவுகாலம் இல்லை. எனவே எதிர்வரும் தேர்தலைப் பகிஷ்கரிப்பதும், சிறுபான்மையோர் ஒரு பொதுவேட்பாளரை நிறுத்துவதும் அமைப்பு மாற்றமே வேண்டாம் என்பது போல் இல்லையா? இது ஒரு திட்டமிட்ட சதியா அல்லது விஷமிகளின் திருவிளையாடலா? முஸ்லிம்களே! புதிய அமைப்பின் பங்காளியாகுங்கள்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.