ஹிஜாஸுக்கு எதிராக அச்சுறுத்தி சாட்சியம் பெற முயன்ற விவகாரம்: 4 சிறுவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட உரிமை மீறல் மனுக்கள் விசாரணைக்கு ஏற்பு

0 143

(எம்.எப்.அய்னா)
சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்­வுக்கு எதி­ராக சாட்­சியம் வழங்­கு­மாறு அழுத்தம் கொடுத்து, பெற்­றோரின் பொறுப்பில் இருந்த சிறு­வர்­களை தாம் சி.ஐ.டி.யினர் எனக் கூறி அழைத்துச் சென்று அச்­சு­றுத்தி ஆவ­ணங்­களில் பலாத்­கா­ர­மாக கையெ­ழுத்து வாங்­கி­ய­தாக கூறி நான்கு சிறு­வர்கள் சார்பில் உயர் நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள அடிப்­படை உரிமை மீறல் மனுக்­களை விசா­ர­ணைக்கு ஏற்­ப­தாக அறி­விக்­கப்பட்­டுள்­ளது.

உயர் நீதி­மன்ற நீதி­யரசர் முர்து பெர்­ணான்டோ தலை­மை­யி­லான ஏ.எம்.டி. நவாஸ் மற்றும் பிரி­யந்த பெர்­ணான்டோ ஆகி­யோரை உள்­ள­டக்­கிய மூவர் கொண்ட நீதி­யர­சர்கள் குழாம் இதற்­கான உத்­தரவை அளித்­தது.

பாதிக்­கப்பட்­ட­தாக கூற­ப்படும் குறித்த 4 சிறு­வர்­க­ளையும் மனு­தா­ரர்­க­ளாக கொண்ட இந்த அடிப்­படை உரிமை மீறல் மனுக்கள், அவர்­க­ளது பெற்றோர் கையெ­ழுத்­திட்­டுள்ள நிலையில், சட்­டத்­த­ரணி பிர­புத்­திகா திசேரா உள்­ளிட்ட குழு­வி­னரால் கடந்த 2020 மே மாதம் தாக்கல் செய்­ய­ப்பட்­டுள்­ளது.

இம்­ம­னுவில் பிர­தி­வா­தி­க­ளாக, பொலிஸ் மா அதிபர் சந்­தன விக்­ர­ம­ரத்ன, சி.ஐ.டி.யின் அப்­போ­தைய பணிப்­பாளர் டப்­ளியூ. தில­க­ரத்ன மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர்.

புத்­தளம் கரை தீவு அல் சுஹை­ரியா அரபுக் கலூ­ரியில் அடிப்­ப­டை­வாதம் போதிக்­கப்­பட்­டதா, அங்கு ஆயுத பயிற்சி அளிக்­கப்­பட்­டதா என சி.ஐ.டி. எனக் கூறிக் கொண்ட குழு­வினர் தம்­மிடம் விசா­ரணை நடாத்­தி­ய­தா­கவும், தாம் கல்வி கற்ற காலப்­ப­கு­தியில் அப்­படி ஒன்றும் இடம்­பெ­ற­வில்லை என பதி­ல­ளித்த போது, தம்மை அச்­சு­றுத்தி பலாத்­கா­ர­மாக அவர்கள் சில தாள்­களில் கையெ­ழுத்து பெற்­றுக்­கொண்­ட­தா­கவும் குறித்த அடிப்­படை உரிமை மீறல் மனுக்­களில் மனு­தா­ரர்­களால் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளன.
கொழும்பு 15 ஐ சேர்ந்த சிறு­வர்கள் நால்வர் சார்பில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள இந்த அடிப்­படை உரிமை மீறல் மனுவில் கோரப்­பட்­டுள்­ளது.

மனு­தா­ரர்­க­ளான தாம் 2013 ஆம் ஆண்டு கல்வி நட­வ­டிக்­கை­களை ஆரம்­பி­த்து சில வரு­டங்­களில் பொரு­ளா­தார சிக்கல் கார­ண­மாக கல்­வியை தொடர முடி­யாமல் கைவிட்­ட­தா­கவும், இத­னை­ய­டுத்து 2018 ஆம் ஆண்டு மட்­டக்­குளி ஜும்ஆ பள்­ளி­வாசல் ஊடாக கிடைக்கப் பெற்ற தக­வ­லுக்கு அமைய, ஏழை பிள்­ளை­களின் கல்­விக்கு உதவும் நிறு­வனம் ஒன்றின் உத­வி­யுடன் சுஹை­ரியா அரபுக் கல்­லூ­ரியில் சேர்ந்­த­தா­கவும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர். அங்கு அரபு கற்­கை­க­ளுக்கு மேல­தி­க­மாக கணிதம், ஆங்­கிலம், கணினி ஆகி­ய­வற்­றையும் தாம் கற்­ற­தா­கவும் எனினும் ஒரு போதும் ஆயுத பயிற்­சி­க­ளையோ, அடிப்­ப­டை­வாத போத­னை­களோ தமக்கு வழங்­கப்­ப­ட­வில்லை எனவும் மனு­தா­ரர்கள் மனுவில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

எவ்­வா­றா­யினும் கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி அதனை அண்­மித்த நாளொன்றில் தமது வீட்­டுக்கு வந்த சி.ஐ.டி. என கூறிக்­கொண்ட குழு­வினர், சில புகைப்­ப­டங்­களைக் காட்டி, அவர்கள் தாம் கற்ற அரபுக் கல்­லூ­ரிக்கு வந்து அடிப்­படை வாதத்தை போதித்து ஆயுத பயிற்சி அளித்­த­தாக கூற வற்­பு­றுத்­தி­ய­தாக மனு­தா­ரர்கள் மனுவில் சுட்­டிக்­க­ட்­டி­யுள்­ளனர்.

சி.ஐ.டி.யினர் உயிர்த்த ஞாயிறு தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் குறித்த விசா­ர­ணையில், கரை தீவின் குறித்த அரபுக் கல்­லூரி தொடர்பில் தக­வல்­களை வெளிப்­ப­டுத்தி அங்கு கற்­ற­வர்­களை தேடி விசா­ரித்து வாக்கு மூலம் பெற்று வந்­தது. அதன்­படி அங்கு ஆயுதப் பயிற்சி மற்றும் அடிப்­ப­டை­வாதம் போதிக்­கப்­பட்­ட­தாக அங்கு கற்ற மாண­வர்கள் வாக்கு மூலம் அளித்­துள்­ள­தாக சி.ஐ.டி. தரப்பில் கூறப்­பட்டு வந்த பின்­ன­ணி­யி­லேயே இந்த அடிப்­படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

இந் நிலையில், நேற்று முன் தினம் இந்த மனு பரி­சீ­ல­னைக்கு வந்த போது, மனு­தா­ரர்­களில் ஒரு­வ­ருக்­காக ஆஜ­ரான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பர்மான் காசிம், சட்ட மா அதிபர் மனு­தா­ரர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் சம்­ப­வத்தின் சாட்­சி­யா­ளர்­க­ளாக மாறலாம் எனும் அடிப்­படை ஆட்­சே­ப­னத்தை மைய­ப்படுத்தி வாதங்­களை முன் வைத்தார்.
சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லா மீதான முழு விசா­ர­ணையும் கவ­னத்தை திசை திருப்பும் சூழ்ச்சி என நீதி­மன்றில் சுட்­டிக்­காட்­டிய பர்மான் காசிம், இன்­னுமா அந்த அறிக்­கைகள் மீது நம்­பிக்கை கொண்­டுள்­ளீர்கள் என சட்ட மா அதிபர் தரப்­பிடம் கேள்வி எழுப்பினார்.

இந் நிலையிலேயே, மனுக்களை விசாரணைக்கு ஏற்று எதிர்வரும் நவம்பர் மாதம் வரை அவற்றை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரத்தினம், ஜனாதிபதி சட்டத்தரணி பார்மான் காசிம், சட்டத்தரணி சாந்த ஜயவர்தன மற்றும் நுவான் போபகே ஆகியோர் ஆஜராகினர். குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்காக சிரேஷ்ட அரச சட்டத்தரணி சஜித் பண்டார ஆஜரானார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.