பொருளாதாரமும் கோமாளிக்கூட்டணிகளும்

0 340

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்­தி­ரே­லியா

கனவாகும் பொருளாதார மீட்சி
22 காரணம் என்­ன­வெனில் அந்த உதவி இலங்­கைக்குக் கடன் வழங்­கிய நாடு­க­ளு­ட­னான பேச்­சு­வார்த்­தையின் வெற்­றி­யுடன் இணைக்­கப்­பட்­டுள்­ளது. அந்தப் பேச்­சு­வார்த்­தையில் இரண்டு நாடுகள், முக்­கி­ய­மாக சீனமும் இந்­தி­யாவும், இன்னும் ஓர் இணக்­கப்­பாட்­டுக்கு வர­வில்லை. அவர்­க­ளது இணக்கம் இந்து சமுத்­திரப் புவி அர­சி­ய­லுடன் பின்­னிப்­பி­ணைந்து அவர்­களுள் யார் இலங்­கையைத் தம் வலைக்குள் சிக்­க­வைப்­பது என்ற பலப்­ப­ரீட்­சை­யினால் இழு­ப­றிப்­பட்டுக் கிடக்­கின்­றது. அந்தப் பரீட்­சையில் அமெ­ரிக்­கா­வும் திரை­ம­றைவில் இந்­தி­யாவின் சார்பில் ஈடு­பட்­டுள்­ளது.

சர்­வ­தேச நாணய நிதியின் பண உதவி கிட்­டும்­வரை சுமார் 5 பில்­லியன் டொலர் பெறு­ம­தி­யான இதர உத­வி­களும் கிடைக்­கப்­போ­வ­தில்லை. இதனால் 2022 இல் 7 சத­வீதம் குறு­கிய பொரு­ளா­தரம் 2023 இல் 8 சத­வீ­தத்தால் குறுகும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. இந்த உத­வி­களை எதிர்­பார்த்­துத்தான் ரணில் விக்­கி­ர­ம­சிங்­ஹவின் 2023 வர­வு­ செ­லவுத் திட்­டமும் தயா­ரிக்­கப்­பட்­டது. அந்தத் திட்­டத்தில் வரி­களை­யெல்லாம் உயர்த்­தி­ய­தனால் ஏற்­ப­டப்­போகும் விலை­வாசி உயர்­வையும் வரு­மானக் குறை­வையும் வெளி­நாட்டு உத­வி­களைக் கொண்டு ஓர­ளவு சமா­ளிக்­கலாம் என்ற எதிர்­பார்ப்­பி­லேதான் அந்தத்திட்டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. அந்த எதிர்­பார்ப்­பு­க­ளெல்லாம் 2023 இல் நிறை­வே­று­வது சந்­தேகம். இத்­த­னைக்கும் மத்­தியில் 2023 இல் உலக அளவில் மீண்டும் ஒரு பொரு­ளா­தார மந்தம் ஏற்­ப­ட­லா­மென சர்­வ­தேச நாணய நிதியும் உலக வங்­கியும் கட்­டியம் கூறு­கின்­றன. ஒட்டு மொத்­தத்தில் 2022 இல் ஏற்­பட்ட பொரு­ளா­தார நெருக்­கடி 2023 இலும் தீரப்­போ­வ­தில்லை. 2024 இலேதான் இலங்­கையின் பொரு­ளா­தாரம் சிறிது வளர்ச்­சி­காணும் என உலக வங்கி கரு­து­கி­றது. அதுவும் என்ன நிச்­ச­யம்? பொரு­ளா­தார மீட்சி என்­பது கன­வா­கிக்­கொண்டு வரு­கி­றதா?

உள்­ளு­ராட்சி மன்றத் தேர்­தல்கள்
இந்தப் பின்­ன­ணி­யி­லேதான் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தல் ­பற்­றிய சர்ச்சை அர­சி­யலில் சூடு­பி­டிக்கத் தொடங்­கி­யுள்­ளது. தேர்­தலை பங்­கு­னியில் நடத்­து­வதா பிற்­போ­டு­வதா என்­ப­துதான் இச்­சர்ச்­சையின் உள்­ள­டக்கம். ஜனா­தி­ப­தி­யையும் அவ­ருக்கு ஆத­ர­வாக நாடா­ளு­மன்­றத்தில் இயங்கும் மொட்டுக் கட்­சி­யி­ன­ரையும் பொறுத்­த­வரை தேர்­தலைப் பின்­போ­டு­­வதே சாலச் சிறந்­தது எனலாம். காரணம் இப்­போ­துள்ள பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு மொட்டுக் கட்­சி­யி­னரே காரணம் என்­ப­தையும் அவர்­களின் தயவில் இயங்கும் ஜனா­தி­பதி மேலும் வரி­களை உயர்த்தி அந்த நெருக்­க­டிக்கு உரம் ஊட்­டு­கி­றா­ரென்ற அபிப்­பி­ரா­யமும் பொது­மக்­க­ளி­டையே பர­வி­யுள்­ளதால் எந்த ஒரு தேர்­த­லிலும் ஜனா­தி­ப­தியும் அவ­ரது ஐக்­கிய தேசியக் கட்­சியும் மகிந்த தலை­மை­யி­லான மொட்­டுக்­கட்­சியும் மண் கவ்­வு­வது நிச்­சயம். ஜனா­தி­ப­தியைப் பொறுத்­த­வரை அவ­ரது வர­வு ­செ­லவுத் திட்­டமும் அவர்­காணும் 25 வருட பொரு­ளா­தா­ர ­மாற்றக் கனவும் நிறை­வே­று­வ­தற்கு அடிப்­ப­டை­யாக சர்­வ­தேச நாண­ய­நிதி ஆத­ர­வி­லான பொரு­ளா­தாரச் சீர்­தி­ருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­படல் வேண்டும். ஆனால் அவை மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தற்கு நிதிப்­பற்­றாக்­குறை தடை­யாக இருப்­ப­தாலும் அத்­த­டைகள் நீங்­கு­வ­தற்கு கால­மெ­டுக்கும் என்­ப­தாலும் தேர்­தலை ஒத்­தி­வைப்­பது நல்­லது.

அதே­ச­மயம் மகிந்­தவின் மொட்­டுக்­கட்­சியின் கார­ணமோ வேறு. சர்­வ­தேச நாணய நிதியின் உத­வியும் ஏனைய உத­வி­களும் கிடைப்­பது தாம­த­மாகும் சூழலில் ஜனா­தி­ப­தியின் வர­வு­செ­லவுத் திட்­டத்தின் புதிய வரி­களும் அவற்றால் ஏற்­படும் விலை­வாசி உயர்வும் வரு­மானக் குறைவும் மக்­களின் கஷ்­டங்­களை மோச­மாக்­கிக்­கொண்டே இருக்கும். அந்த நிலையில் மக்­களின் மனக்­கொ­திப்பும் வெறுப்பும் ஜனா­தி­ப­தி­யின்மேல் திசை­மாறும். அந்த மாற்­றத்தை தமக்குச் சாத­க­மாக மொட்­டுக்­கட்­சி­யினால் பயன்­ப­டுத்த முடியும். இலங்கை வாக்­கா­ளர்கள் பழை­யதை இல­குவில் மறந்து புதிய பிரச்­சி­னை­க­ளைப் ­பற்­றியே கவனம் செலுத்­து­வது வர­லாறு புகட்டும் ஒரு பாடம். அந்­தப்­பா­டத்தை நன்கு படித்­தவர் மகிந்த ராஜ­பக்ச. எனவே தேர்­தலை எவ்­வ­ளவு காலம் பின்­தள்ள முடி­யுமோ அவ்­வ­ளவு காலம் பின்­தள்­ளு­வது மொட்டுக் கட்­சிக்கு நன்­மை­ய­ளிக்கும்.

அதை­விட ஜனா­தி­ப­தியின் இன்­னு­மொரு நட­வ­டிக்­கையும் மொட்டுக் கட்­சிக்குச் சாத­க­மாக அமையும் வாய்ப்பை ஏற்­ப­டுத்­தலாம். அதுதான் தமிழர் பிரச்­சி­னைக்கு நிரந்­தரத் தீர்­வு­காண விக்­கி­ர­ம­சிங்ஹ எடுத்த முனைப்­புகள். சுதந்­திர தினத்­துக்கு முன்னர் அதனைத் தீர்ப்­ப­தற்கு அவர் எடுத்த முயற்­சிகள் இப்­போது முற்­றாகக் கைவி­டப்­பட்­டுள்ள போதிலும் தமிழ் கட்­சி­களின் மூன்று முக்­கிய கோரிக்­கை­க­ளுக்கு அவர் அளிக்­கப்­போகும் பதிலும் சுதந்­தி­ர­தின விழாவில் தமி­ழிலே தேசி­ய­கீதம் பாடவும் தமி­ழிலே உரை­யாற்­றவும் அவர் இணங்­கி­ய­மையும் சிங்­கள பௌத்த இன­வா­தி­களின் வெறுப்பைத் தூண்­டலாம். அந்த வெறுப்­பினை மகிந்­தவும் அவ­ரது கட்­சியும் தமக்­குச்­சா­த­க­மாக மாற்­று­வ­தற்குத் தயங்­க­மாட்­டார்கள். எனவே தேர்­தலை இப்­போ­தைக்கு ஒத்­திப்­போ­டு­வதே மகிந்­த­வுக்கு நல்­லது.

அதற்­காக விக்­கி­ர­ம­சிங்­ஹவும் மகிந்­தவும் கையாண்ட உத்­தி­களுள் ஒன்­றுதான் தேர்தல் நடத்­து­வ­தற்கு 10 பில்­லியன் ரூபாய் செல­வாகும் என்­பதும் அது இப்­போ­துள்ள நிதி நெருக்­க­டியின் மத்­தியில் கட்­டுப்­ப­டி­யா­காது என்ற பிரச்­சா­ரமும். இது ேவ­டிக்­கை­யான ஒரு வாதம். உருப்­படி இல்­லாத 225 மானிடப் பிண்­டங்­களை பிர­தி­நி­தி­க­ளாக நாடா­ளு­மன்­றத்தில் வைத்­துக்­கொண்டு அவர்­க­ளுக்குச் சம்­ப­ளமும் சன்­மா­னங்­களும் பாது­காப்புப் பந்­தோ­பஸ்­து­களும் வழங்கும் செல­வை­வி­டவா மக்­களின் அபிப்­பி­ரா­யத்தை வெளிப்­ப­டுத்தும் ஒரு தேர்­தலின் செலவு கட்­டுப்­ப­டி­யா­காது? தேர்தல் ஆணை­யாளர் 5 பில்­லியன் மட்­டுமே செல­வாகும் என்று தற்­போது கூறி­யமை ரணில்-­ ம­கிந்த பொய்ப்­பி­ர­சா­ரத்தை அம்­ப­லப்­ப­டுத்­தி­யுள்­ளது. அது மட்­டுமா? உள்­ளூ­ராட்சித் தேர்தல் தொகு­தி­களை எண்­ணா­யி­ரத்­தி­லி­ருந்து நாலா­யி­ர­மாகக் குறைக்க வேண்­டு­மென்றும் அதற்­கா­க தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயக் குழு ஒன்றை நிய­மித்­ததும் தேர்­தலைப் பின்­போடும் தந்தி­ரங்­களுள் ஒன்றே.

எல்­லா­வற்­றிற்கும் மேலாக, இன்­றைய அரசின் ஊழல்­க­ளுக்கும் மனித உரிமை மீறல்­க­ளுக்கும் பொரு­ளா­தாரச் சீர்­கே­டு­க­ளுக்கும் பர­வ­லான கண்­ட­னங்கள் சர்­வ­தேச மட்­டத்தில் எழுந்­துள்ள நிலையில் சர்­வ­தேச நாணய நிதி உட்­பட பல சர்­வ­தேச அமைப்­புகள் இந்த ஆட்­சி­யி­னரும் ஜனா­தி­ப­தியும் பொது மக்­களின் புதிய ஆத­ரவைப் பெற­வேண்டும் என்ற ஒரு நிலைப்­பாடு தோன்­றி­யுள்­ளதால் உள்­ளு­ராட்சித் தேர்­தலை தள்­ளிப்­போ­டாது விரைவில் நடத்­தியே தீர­வேண்டும் என்ற கட்­டாயம் எழுந்­துள்­ளது.

கோமாளிக் கூட்­ட­ணிகள்
தேர்தல் காய்ச்சல் சூடு­பி­டித்­துள்ள நிலையில் எந்த வழி­யி­லா­வது இந்தத் தேர்­தலில் வெற்­றி­காண வேண்டும் என்ற நிர்ப்­பந்தம் அனைத்துக் கட்­சி­க­னையும் ஆட்­கொண்­டுள்­ளது. எந்­தக்­ கட்­சி­யுமே தனித்­து­நின்று போட்­டி­யிட்டு வெல்ல முடி­யாத ஒரு நிலையில் பெரும்­பான்­மை­யான கட்­சிகள் கூட்­ட­ணி­சேர முன்­வந்­துள்­ளன. அவற்றுட் சில கோமாளிக் கூட்­டு­க­ளாகத் தோன்­றி­யுள்­ளன.

முத­லா­வ­தாக, ஜனா­தி­ப­தியின் ஐக்­கிய தேசியக் கட்­சியும் மகிந்­தவின் மொட்­டுக்­கட்­சியும் இணைந்த ஒரு கூட்­டணி. இரு காத­லர்கள் வாழ்ந்­தாலும் மடிந்­தாலும் ஒன்­றா­கவே வாழ்வோம் அல்­லது மடிவோம் என்ற நிலை­போன்று இவை இரண்டும் சேர்ந்­துள்­ளன. இத­னி­டையில் அவ்­வாறு நாங்கள் இணை­ய­வில்லை, மொட்­டுக்­கட்சி யானையின் சின்­னத்தில் எங்­குமே போட்­டி­யி­டாது என்ற ஒரு அறிக்­கையும் வெளி­யா­கி­யுள்­ளது. சின்னம் யானையா மொட்டா என்­ப­தல்ல பிரச்­சினை. வச­திக்­கேற்ப அல்­லது கட்­சி­களின் ஆத­ர­வுக்­கேற்ப அவை ஒவ்­வொன்றும் போட்­டி­யிடும் தொகு­தி­களில் தேவை­யான சின்­னத்தை உப­யோ­கிக்­கலாம். ஆனால் முக்­கியம் அக்­கட்­சிகள் படு­தோல்வி அடை­வதைத் தவிர்ப்­பதே. மொட்­டுக்­கட்சி படு­தோல்வி அடைந்தால் அது நாடா­ளு­மன்­றத்தில் தொடர்ந்தும் முன்­னிலை வகிக்க முடி­யாது. அதன் ஆத­ரவில் பத­வி­வ­கிக்கும் ஜனா­தி­ப­தியும் தொடர்ந்து பத­வியில் இருக்­கவும் முடி­யாது. எனவே பொதுத் தேர்­தலும் ஜனா­தி­பதித் தேர்­தலும் விரைவில் நடத்­தப்­படல் வேண்டும் என்ற கட்­டாயம் எழும். இவற்றைத் தவிர்ப்­ப­தற்­கா­கவே அவர்­களின் கூட்­டணி.

இந்தக் கூட்­ட­ணியை வீழ்த்­து­வ­தற்­க­ா­கவே ஸ்ரீ லங்கா சுதந்­தி­ரக்­கட்சி உட்­பட 12 குழுக்­களைக் கொண்ட மக்கள் சுதந்­திரக் கூட்­டணி என்ற ஒரு கோமா­ளிகள் கூட்டு உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. இதில் வேடிக்கை என்­ன­வென்றால் இவர்­களுள் பெரும்­பா­லா­ன­வர்கள் மொட்டுக் கட்­சியின் மாஜி அங்­கத்­த­வர்கள். அந்­தக்­கட்­சியின் அர­சாங்­கத்தில் அமைச்­சர்­க­ளா­கவும் பதவி வகித்து அப்­ப­த­வி­களின் சுக­போகங்­களை அனு­ப­வித்­த­வர்கள். இவர்கள் ஒரு மூழ்கும் கப்­பலி­ல் இருந்து தாவிக்­ குதித்து இப்­போது ஒரு தோணிக்குள் தஞ்சம் புகுந்­தி­ருப்­ப­வர்கள். தேர்­த­லுக்குப் பின்­னரும் இக்­கூட்­டணி நிலைத்­தி­ருக்­குமா என்­பது சந்­தேகம். இவர்­களின் ஒரே கோரிக்கை மக்­களைக் காப்­பாற்­று­வது. ஆனால் யாரி­டமி­ருந்து எப்­படிக் காப்­பாற்­று­வது என­்ப­து­பற்­றிய எந்த விப­ரமும் இது­வரை இல்லை. அதைப்­பற்றி மேலும் சில குறிப்புகளை பின்னர் குறிப்­பி­டுவோம்.

இன்­றுள்ள சூழலில் தனித்து நிற்­பவை சஜித் தலை­மை­யி­லான தேசிய ஐக்­கிய சக்­தியும் அனுர குமார திஸ­ாநா­யக்க தலை­மை­யி­லான மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யுமே. அர­சியல் என்­பது பல வினோ­தங்­களைக் கொண்­டது. இவை இரண்டும் தனித்தே போட்­டி­யி­டுமா அல்­லது ஒரு தேவைக்­காக தற்­கா­லி­க­மா­வது இணை­யுமா என்­பதை காலம்தான் உணர்த்தும்.

சிறு­பான்மைக்
கோமா­ளி­களின் கூட்டு
இன்­றுள்ள சிங்கள பௌத்த பேரி­ன­வாத அர­சியற் சூழலில் சிறு­பான்மை இனங்கள் இரண்­டுக்கும் ஒன்­று­பட்­டால்தான் உண்டு வாழ்வு என்ற உண்மை செவி­டனின் காதிலே ஊதிய சங்கு போலா­யிற்று. தமி­ழர்­க­ளுக்­குள்­ளேயே ஒற்­றுமை இல்­லாத பட்­சத்தில் முஸ்­லிம்­க­ளுடன் அவர்கள் இணை­வார்­க­ளென எதிர்­பார்ப்­பதும் மட­மைதான். அதுதான் போகட்டும், இவ்­வி­னங்கள் இரண்­டுமே தமக்­குள்­ளேயே பல கூறு­களை உரு­வாக்கி அவை பின்னர் கூட்­டணி அமைப்­பது என்­பது கோமா­ளித்­த­ன­மாகத் தெரி­ய­வில்­லையா?
சம்­பந்தர் தலை­மை­யி­லான தமிழர் கூட்­ட­ணியோ வழ­மை­போன்று பெரும்­பான்மை இனக் கூட்­ட­ணி­களின் இறுக்­க­மான போட்­டி­யினால் எந்தக் கூட்­ட­ணியும் அறுதிப் பெரும்­பான்மை ஆச­னங்­கைளை கைப்­பற்றத் தவறும் பட்­சத்தில், தமிழர் கூட்­டணி அவர்­க­ளி­டையே புகுந்து பேரம்­பேசி அதிக நன்­மை­களை தமது இனத்­துக்­காகப் பெற்றுக் கொள்­ளலாம் என்ற நம்­பி­க்­கை­யி­லேயே அதன் அர­சியல் பக­டை­களை நகர்த்­து­கி­றது. ஆனால் இந்த அர­சியல் ஒரு செல்லாக் காசாக மாறிக்­கொண்டு வரு­வதை தமிழ் இளை­ஞர்­களும் யுவ­தி­களும் உணர்­வதும் தெரி­கி­றது.

முஸ்லிம் அர­சியல் பிர­ப­லங்­களின் கூட்­டணி முயற்­சி­களோ அதிலும் வேடிக்­கை­யா­னவை. இவர்­களின் கூட்­டணி முயற்­சி­களின் ஒரே நோக்கம் எந்தப் பிசா­சுடன் சேர்ந்­தா­வது, எந்தச் சின்­னத்­தையோ கொடி­யையோ ஏந்தி, எந்தப் பொய்­யையோ புழு­கையோ பேசி முஸ்­லிம்­களைக் கவர்ந்து, அவர்­களை மந்­தை­க­ளாக்கி, தமது ஆச­னங்­களைக் கைப்­பற்றி, அமைச்­சர்­க­ளா­கவும் ஆளு­னர்­க­ளா­கவும் நிய­மிக்­கப்­பட்டு சொத்து சம்­பா­திப்­பதே. நாட்­டைப்­பற்­றியோ தமது இனத்­தைப்­பற்­றியோ எந்தக் கவ­லையும் இவர்­க­ளுக்­கில்லை. இருந்­தி­ருந்தால் ஒரு முறை­யா­வது ஒரு தலை­வ­னா­வது இந்த நாட்டின் அடிப்­படைப் பிரச்­சினை என்ன? அதனை எப்­படித் தீர்ப்­பது என்­ப­து ­பற்றி எங்­கே­யா­வது பேசியோ எழு­தியோ இருக்­கி­றாரா?

அதுதான் போகட்டும். தமது இனத்தின் பிரச்­சி­னைகள் என்ன என்ற ஒரு பட்­டி­ய­லை­யா­வது இவர்கள் இது­வரை தொகுத்­த­துண்டா? இப்­பி­ரச்­சி­னை­களில் எவற்றை தமது இனத்­துக்­குள்­ளேயே தீர்க்­கலாம், எவற்றை சகோ­தர இனங்­க­ளுடன் உரை­யாடித் தீர்க்­கலாம், எவற்றை அர­சாங்­கத்­துடன் வாதாடித் தீர்க்­கலாம், மேலும் எவற்றை உலக அரங்­குக்குக் கொண்­டு­சென்று தீர்க்­கலாம் என்ற விப­ரங்­க­ளா­வது இவர்­க­ளிடம் உண்டா? இவர்­க­ளுக்­குள்ளே இரண்டு மூன்று கட்­சி­களை உரு­வாக்­கிக்­கொண்டு (அவற்றை கட்­சிகள் என்­பதை விட குழுக்கள் என்­பதே பொருத்­த­மா­னது) வச­திக்­கேற்ப ஒன்­றி­லி­ருந்து மற்­றொன்­றுக்குத் தாவு­வதும் மீண்டும் ‘‘போன மச்சான் திரும்­பி­வந்­தா­னடி புது­ம­ணத்­தோ­டல்ல புதுப்­ப­ணத்­து­டனே’’ என்ற தோர­ணையில் சேர்­வதும் பின்னர் பிரி­வதும் அவர்­களின் அர­சியல் கலை­யா­கி­விட்­டது. இது­வரை இந்தப் பிரபலங்கள் முஸ்லிம் சமூகத்துக்காகச் சாதித்தவை என்ன? முஸ்லிம் வாக்காளர்களே! இப்போதாவது இதனை அவர்களிடம் நீங்கள் கேட்கக்கூடாதா?

அமைப்பை மாற்றாமல் கூட்டணிகளால் ஆவதென்ன?
இன்­றுள்ள நிலையில் சர்­வ­தேச நாணய நிதி சிபார்சு செய்த பொரு­ளா­தார சீர்­தி­ருத்­தங்­களைத் தவிர வேறு எந்­தவோர் உருப்­ப­டி­யான திட்­டமும் எந்த ஒரு கட்­சி­யி­டமும் இருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. மக்கள் சுதந்­திரக் கூட்­ட­ணி­யிடம் எந்த மாற்றுத் திட்­டமும் இல்லை. ஆனால் ஒன்று மட்டும் உண்மை. அந்த நிதியின் சிபாரிசுகள் 2024 இலேனும் பய­ன­ளிக்கத் தொடங்­கி­னாலும் அந்த மீட்பும் வளர்ச்­சியும் நீண்­ட­கா­லத்தில் உறு­தி­யா­ன­தாக இருக்­க­மாட்­டாது. காரணம் இலங்­கையின் அர­சியல் பொரு­ளா­தார சமூக அடிப்­படை அமைப்­பு­களும் அவற்றை இயக்கும் தத்­து­வங்­களும் ஜன­நா­யக விழு­மி­யங்­க­ளு­டனும் சமத்­துவம் மனு­நீதி ஆகி­ய­வற்றின் பண்­பு­க­ளு­டனும் அமை­ய­வில்லை. இநத உண்­மையை உணர்ந்­த­வர்­களே அன்று காலி­மு­கத்­தி­டலில் குழுமி­யி­ருந்து அமைப்­பையே மாற்று என்று குரல் எழுப்­பிய இளம் சந்­த­தி­யினர். அந்த அமைப்பு மாறாமல் எந்தக் கூட்­ட­ணியைச் சேர்த்து என்ன அர­சியல் நடத்தி என்ன திட்­டங்கள் வகுத்­தாலும் அவற்றால் நாட்டின் பிணிகள் தீரப்­போ­வ­தில்லை. அந்த மாற்றம் புதிய அர­சியல் யாப்­புடன் ஆரம்­ப­மாக வேண்டும்.

இந்த அமைப்பு மாற்றக் கோரிக்­கையை முன்­னி­லைப்­ப­டுத்தி அதனை அமுல்­ப­டுத்த முன்­வரும் எந்த அர­சியல் கட்­சி­யு­டனோ குழு­வு­டனோ சிறு­பான்மை இனங்கள் சேர்ந்தாலன்றி அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கப் போவதில்லை.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.