பல்லின சமூகங்களின் ஒற்றுமையை சீர்குலைத்த சிலர் இன்று முஸ்லிம் சமூக ஐக்கியத்தைக் கூறுபோட முயற்சிக்கின்றனர்

ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம்.ஸுஹைர்

0 402

(ராபி சிஹாப்தீன்)
சமூ­கங்­களைக் குழப்­பு­வ­தற்கும் பிரித்து விடு­வ­தற்கும் அன்று பல முயற்­சி­களை முன்­னெ­டுத்த சில சக்­திகள் இன்று முஸ்லிம் சமூ­கத்­தினுள் பிர­வே­சித்து பிரி­வி­னையை தூண்டி ஊக்­கு­வித்து வளர்ப்­ப­தற்­கான முயற்­சி­களில் இறங்­கி­யுள்­ளனர். இது குறித்து முஸ்­லிம்கள் விழிப்­பு­டனும் முன்­னெச்­ச­ரிக்­கை­யு­டனும் செயற்­பட வேண்டும் என்று முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம். ஸுஹைர் தெரி­வித்­தார்.

தேசிய சூறா சபையின் நான்­கா­வது பொதுச்­சபை கூட்டத்தில் விஷேட பேச்­சா­ள­ராகக் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு வலி­யு­றுத்­தி­னார்.
அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், சுதந்­தி­ரத்­திற்கு பின்னர் இந்­நாட்டில் சாந்­தி­யையும் சமா­தா­னத்­தையும் நாம் தேடிக் கொண்­டி­ருக்­கிறோம். அதனை இற்­றை­வ­ரையும் காண முடி­ய­வில்லை.

பராக்கிரமபாகு மன்­னரின் ஆட்­சிக்­கா­லத்தில் பராக்கிரம சமுத்திரத்தைக் கட்­டு­வ­தற்கு அன்­றைய முஸ்­லிம்கள் பொரு­ளா­தார ரீதியில் உத­வி­யுள்­ள­தாக சிங்­கள சமூக வர­லாற்று பேரா­சி­ரி­யர்கள் எழு­தி­யுள்­ளனர். அன்­றி­லி­ருந்தே இந்தத் தேசத்­திற்கு முஸ்­லிம்கள் தேசப்­பற்­றுடன் உத­வி­யுள்­ளனர். முஸ்­லிம்கள் இந்­நாட்­டுக்கும் அதன் இறை­மைக்கும் எதி­ராக ஒரு­போதும் செயற்­பட்­ட­வர்கள் அல்லர்.

ஆனால் 1962 இல் முன்­னெ­டுக்­கப்­பட்ட ஆட்­சிக்­க­விழ்ப்பு சதி தோல்­வி­யுற்­றது. இது கத்­தோ­லிக்க சதி முயற்சி என்றும் கூறப்­ப­டு­கி­றது. அதே­போன்று 1971, 1989 இல் பெரும்­பான்மை சமூ­கத்தைச் சேர்ந்த முன்­ன­ணி­யினர் ஆயுத ரீதியில் இம்­மு­யற்­சியை முன்­னெ­டுத்­தனர். இந்­துக்­க­ளையும், கத்­தோ­லிக்­கர்­க­ளையும் கொண்­டி­ருந்த புலிகள் இயக்­கத்­தி­னரும் ஆயுத ரீதியில் நாட்டை பிரிக்க முற்­பட்­டனர்.

இருந்த போதிலும் இந்­நாட்டு முஸ்­லிம்கள் ஒரு போதும் நாட்டின் இறை­மைக்கு குறி வைக்­க­வில்லை. இந்­நாட்டு முஸ்­லிம்­களின் தேசப்­பற்று ஏனைய சமூ­கங்­களை விடவும் முன்­னி­லையில் உள்­ளது என்­பதை இந்­நாட்டு மக்கள் மறக்­க­லா­காது. இருந்தும் கூட இந்­நாட்டில் சுதந்­தி­ரத்­திற்கு முன்­னரும் பின்­னரும் அதிகம் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் முஸ்­லிம்­க­ளாவர். குறிப்­பாக 1990 இல் காத்­தான்­குடி பள்­ளி­வா­சலில் தொழு­கையில் ஈடு­பட்­டி­ருந்த 103 பேர் ஒரே இரவில் படு­கொலை செய்­யப்­பட்­டனர்.

ஆனாலும் சுதந்­தி­ரத்தின் பின்னர் இந்­நாடு கண்ட முத­லா­வது இன மோதல், 1956 இல் சிங்­கள – தமிழ் சமூ­கங்­க­ளுக்­கி­டையில் இடம்­பெற்­றது. அதன்­பின்னர் 1958 இலும் மற்­று­மொரு தமிழ் – சிங்­கள மோதல் நாடெங்­கிலும் பர­வி­யது. அச்­ச­மயம் மாளி­கா­வத்­தையில் நாம் வசித்துக் கொண்­டி­ருந்தோம். அன்று எங்­க­ளது வீட்­டிலும் இரண்டு தமிழ் குடும்­பங்­க­ளுக்கு ஒரு மாதத்­திற்கும் மேலாக நாம் பாது­காப்பு அளித்தோம். சில சிங்­கள குடும்­பங்­களும் கூட இவ்­வாறு தமிழ் மக்­க­ளுக்கு பாது­காப்பு அளித்­ததை நாம் அன்று கண்டோம்.
5000 வரு­டங்­க­ளுக்கும் மேற்­பட்ட வர­லாற்றைக் கொண்ட இந்து மற்றும் பௌத்த கலா­சா­ரங்­களும் 2000 வரு­டங்­க­ளுக்கு மேற்­பட்ட வர­லாற்றைக் கொண்ட கத்­தோ­லிக்க கலா­சா­ரங்­களும் ஆயிரம் வரு­டங்­க­ளுக்கு மேற்­பட்ட வர­லாற்றைக் கொண்ட முஸ்லிம் கலா­சா­ரமும் இந்­நாட்டில் காணப்­ப­டு­கி­றது. இருந்த போதிலும் இந்­நாட்டில் மக்கள் சமா­தா­ன­மாக வாழ்­வ­தற்கு அவை எவ்­வா­றான பங்­க­ளிப்­புக்­களை நல்­கி­யுள்­ளன என்ற கேள்­வியும் எழவே செய்­கி­றது.

1979 ஜூலை 24 ஆம் திகதி பயங்­க­ர­வாதத் தடைச் சட்டம் (பி.ரி.ஏ) பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­டது. இது வடக்கைக் கட்­டுப்­ப­டுத்தும் நோக்கில் கொண்டு வரப்­பட்ட சட்­ட­மான போதிலும், அது பயங்­க­ர­வா­தத்தை ஒழிக்க உத­வ­வில்லை. வடக்கில் பயங்­க­ர­வாதம் வளர்ச்சி பெற உத­விய இச்­சட்­டத்­திற்கு பதி­லாக தமிழ் மக்­களின் தலை­வர்­க­ளுடன் அன்­றைய ஆட்­சி­யா­ளர்கள் கலந்­து­ரை­யாடி பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­கண்­டி­ருந்தால், 1983 ஜூலை 24 ஆம் திகதி பாரிய ஜூலைக் கல­வரம் ஏற்­பட்­டி­ருக்­காது.

இக்­க­ல­வரம் தான் முப்­பது வருட கால யுத்­தத்தின் ஆரம்­ப­மாக அமைந்­தது. அன்று ஆரம்­பித்த யுத்­தத்தின் விளை­வாக இந்­நாட்டின் பொரு­ளா­தா­ரமும் டொலர்­களும் ஆயுதக் கொள்­வ­ன­வுக்­காக செல­வி­டப்­பட்­டன. அமெ­ரிக்கா, ரஷ்யா, ஜேர்­மனி, பிரான்ஸ், இஸ்ரேல், சீனா போன்ற நாடு­களின் வளர்ச்­சிக்கே, இந்­நாடு யுத்­தத்­திற்கு செல­விட்ட நிதியும் சொத்­துக்­களும் உத­வின.

யுத்தம் ஆரம்­ப­மா­வ­தற்கு முன்னர் அதற்கு வழி­வகை செய்யும் வகையில் அமைந்­தி­ருந்த விட­யங்­க­ளுக்கு பேச்­சு­வார்த்­தையின் மூலம் அன்றே தீர்வு காணப்­பட்­டி­ருந்தால் இந்­நாடு இன்று பிச்­சைத்­தட்­டுடன் அலைய வேண்­டிய நிலை ஏற்­பட்­டி­ருக்­காது. அத்­தோடு கடந்த மூன்று வருட காலப்­ப­கு­தியில் நாட்டை ஆட்சி செய்­த­வர்­களின் தவ­றா­னதும் பிழை­யா­ன­து­மான நட­வ­டிக்­கை­களால் தோற்றம் பெற்ற வங்­கு­ரோத்து நிலையும் தான் இந்­நாட்டு மக்கள் என்­றுமே எண்ணிப் பார்த்­தி­ராத உணவுப் பற்­றாக்­குறை உள்­ளிட்ட பல்­வேறு பிரச்­சினை­க­ளுக்கும் முகம் கொடுக்க வழி­வ­குத்­தி­ருக்­கி­றது.

ஜூலைக் கல­வ­ரத்தின் பின்னர் 1984 இல் சர்­வ­கட்சி மாநாடும் 1985 இல் அர­சியல் கட்­சிகள் மாநாடும் நடாத்­தப்­பட்­டன. இருந்தும் அவை காலம் கடந்த ஞான­மா­கவே அமைந்­தி­ருந்­தன.

தற்­போது இந்­நாட்டில் 60 அல்­லது 70 இலட்­சத்­துக்­குட்­பட்ட மக்கள் இரு வேளை உண்­ணாமல் வாழ்க்கையை ஓட்டிக் கொண்­டி­ருக்­கின்­றனர்.

அண்­மையில் நாட்­டை­விட்டுத் தப்­பி­யோ­டிய நிலையில் வியட்நாம் கடலில் தந்­த­ளித்த 303 இலங்­கை­யரை ஜப்­பா­னிய கப்­ப­லொன்று பாது­காப்­பாக மீட்­டெ­டுத்து வியட்­நாமில் தங்க வைத்­துள்­ளதைக் கேள்­வியுற்­றிருப்­பீர்கள். அங்கு தங்­கி­யுள்ள இந்த இலங்­கையர்கள், ‘தங்­களை எங்­கா­வது அனுப்­புங்கள். இலங்­கைக்கு மட்டும் அனுப்ப வேண்டாம்’ என்று குறிப்­பிட்­டுள்­ளார்கள். இது நமது நாட்­டுக்கு வந்­தி­ருக்கும் கேடு. எங்­களை அறிந்­தி­ராத ஒரு நாட்டில் எங்­க­ளது மானம் கப்­ப­லே­று­கி­றது. ஒரு கால­கட்­டத்தில் லெபனான், லிபியா, சிரியா போன்ற நாடு­க­ளது பிர­ஜைகள் தான் இவ்­வாறு குறிப்­பிட்­டதை நாம் அறிந்­தி­ருந்தோம். ஆனால் இப்­போது எமது பிர­ஜை­களே இவ்­வாறு கூற ஆரம்­பித்­தி­ருப்­பது பெரும் கவ­லைக்­கு­ரிய நிலை­மை­யாகும்.

கடந்த சில வரு­டங்­க­ளாக எந்­த­வித நீதி நியா­யங்­களோ, ஆதா­ரங்­களோ இன்றி முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராகப் பல போலிக் குற்­றச்­சாட்­டுக்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. அவற்றில் அபாயா விவ­காரம், ஹலால் பிரச்­சினை, மத்­ரஸா விவ­காரம் உள்­ளிட்ட பல பிரச்­சி­னைகள் குறிப்­பி­டத்­தக்­கன. இப்­போதும் பல பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்­றன. இந்­நி­லையில் நமது கடமை என்ன? என நாம் சிந்­திக்க வேண்டும்.

கடந்த காலங்­களில் பல காத்­தி­ர­மான முயற்­சி­களை தேசிய சூறா சபை முன்­னெ­டுத்­துள்­ளது. அதனால் தற்­போ­துள்ள பிரச்­சி­னை­களை சரி­யாக அடை­யா­ளப்­ப­டுத்தி செயற்­பட வேண்­டிய தேவை காணப்­ப­டு­கி­றது. தேசிய சூறா சபை சமூ­கங்­களை ஒன்று சேர்ப்­ப­தற்கு ஏற்­க­னவே பல முயற்­சி­களை முன்­னெ­டுத்­துள்­ளது.

ஆனாலும் சமூ­கங்­களைக் குழப்­பு­வ­தற்கும் பிரித்து விடு­வ­தற்கும் அன்று பல முயற்­சி­களை முன்­னெ­டுத்த சில சக்­திகள் இன்று முஸ்லிம் சமூ­கத்­தினுள் பிர­வே­சித்து பிரி­வி­னையைத் தூண்டி ஊக்­கு­வித்து வளர்ப்­ப­தற்­கான முயற்­சி­களில் இறங்­கி­யுள்­ளன. இது குறித்து முஸ்­லிம்கள் விழிப்­பு­டனும் முன்­னெச்­ச­ரிக்­கை­யு­டனும் செயற்­ப­டு­வது அவ­சியம். எவ­ருக்கும் பட்டப் பெயர் சூட்ட இஸ்லாம் அனு­ம­திக்­க­வில்லை. ஆனால் சூபி, தவ்ஹீத்வாதி என்­றெல்லாம் பட்டப் பெயர்கள் கூறி நாம் அழைக்­கின்றோம்.

அல் குர்ஆன் எங்­களை ‘முஸ்­லிம்கள்’, ‘ நம்­பிக்­கை­யா­ளர்கள்’ என்று மாத்­தி­ரமே அழைக்­கின்­றது. முஸ்லிம் சமூகம் சூபி­க்கள் முதல் தௌஹீத்வாதிகள் வரை­யா­னோரை உள்­ள­டக்­கிய ஐக்­கிய சமூ­க­மாகும். அதனால் முஸ்­லிம்­களை ஒவ்­வொரு பெயர்­க­ளிலும் அடை­யா­ளங்­க­ளிலும் பிரித்­தாள எவ­ருக்கும் இட­ம­ளிக்க முடி­யாது. முஸ்­லிம்கள் கருத்து வேறு­பா­டு­களைப் பெரி­து­ப­டுத்­தாமல் தம் ஐக்­கி­யத்தைப் பேணிப் பாது­காப்­பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதற்­காக உழைக்க வேண்டும். இவ்­வே­லைத்­திட்­டத்தை ஏனைய அமைப்­புக்­க­ளுடன் இணைந்து தேசிய சூறா சபை முன்­னெ­டுக்க வேண்டும். இதன் நிமித்தம் நீண்­ட­கால வேலைத்­திட்­டங்­களை வகுத்து, அமு­லாக்­கவும் வேண்டும்.
2019 ஏப்ரல் தாக்­கு­தலை சாட்­டாக வைத்து அநி­யா­ய­மாக சிறை வைக்­கப்­பட்­டி­ருக்கும் பல சிறைக்­கை­திகள் மற்றும் பள்­ளி­வா­சல்கள், மத்­ர­ஸாக்கள், முஸ்லிம் விவாக விகா­ரத்து சட்டம், வடக்கு கிழக்கு இணைப்பு எனப் பல பிரச்­சி­னைகள் இப்­போதும் முக்­கிய பேசு­பொ­ரு­ளா­கவே உள்­ளன. ஆட்­சி­யா­ளர்கள் இவற்றைத் தவ­றான முறையில் கையா­ளக்­கூ­டாது.

கடந்த திங்­க­ளன்று நடை­பெற்ற அமைச்­ச­ர­வைக்­கூட்­டத்­திற்கு முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்ட திருத்த யோசனை கொண்டு வரப்­பட்­டுள்­ளது. காதி நீதி­மன்ற முறையை ஒழித்து ‘கொன்­சி­லி­யேட்டர்’ என்­ற­ழைக்கும் சட்டத் திருத்­தத்­திற்­கான முயற்சி நடை­பெற்­றது. இதன்­படி கொன்­சி­லி­யேட்டர் முறையில் இருந்து மாவட்ட நீதி­மன்­றத்­திற்கு விவாக விவ­கா­ரத்­துக்­காக முஸ்­லிம்கள் செல்ல வேண்­டி­வரும். இத்­தி­ருத்தப் பிரே­ர­ணையைத் தற்­போ­தைய நீதி­ய­மைச்சர் கொண்டு வந்­துள்ளார். அதற்கு சுற்­றாடல் அமைச்சர் கடும் எதிர்ப்பு தெரி­வித்­துள்ளார். அதனால் இவ்­வி­ட­யத்தில் தலை­யிட்ட ஜனா­தி­பதி இத்­தி­ருத்த யோச­னையைப் பிற்­போட்­டுள்ளார்.

இது விட­யத்தில் முஸ்லிம் சமூகம் மிகவும் விழிப்­புடன் இருக்க வேண்டும். இந்­நாட்டில் காதி நீதி­மன்ற முறைமை சுமார் 900 வரு­டங்­க­ளுக்கும் மேற்­பட்ட வர­லாற்றைக் கொண்­டுள்­ளது. அதனால் இந்த காதி நீதி­மன்ற முறைமை அழிக்­கப்­ப­ட­லா­காது. அது பேணிப் பாது­காக்­கப்­ப­டு­வ­தோடு வலுப்­ப­டுத்­தப்படவும் வேண்டும். அதுவே நாட்டின் பாரம்­ப­ரிய மர­பு­ரி­மை­களை மதித்து கௌர­விக்கும் செயற்­பா­டாக அமையும்.

நீதி­ய­மைச்சு பத­வியை ஏற்­க­னவே வகித்த தற்­போ­தைய வெளி­வி­வ­கார அமைச்சர் அலி சப்ரி, மாவட்ட நீதி­மன்­றங்­களில் 20, 25 வரு­டங்கள் வழக்­குகள் இழு­ப­டு­வ­தாகக் குறிப்­பிட்­டி­ருக்­கின்றார். அப்­ப­டி­யி­ருக்­கையில் முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்­டத்தை மாவட்ட நீதி­மன்­றத்­திற்கு ஏன் கொண்டு செல்ல முயற்­சிக்­கின்­றனர். காதி நீதி­மன்­றத்­திற்கு செல்­ப­வர்­க­ளுக்கு செல­வுகள் ஏற்­ப­டு­வ­தில்லை. சட்­டத்­த­ர­ணிகள் தேவைப்­ப­டாது. ஆனால் மாவட்ட நீதி­மன்­றத்தில் எடுக்­கப்­படும் ஒவ்­வொரு நட­வ­டிக்­கைக்கும் சட்­டத்­த­ர­ணி­க­ளுக்­காக பெருமளவில் செலவிட வேண்டும். அத்தோடு தீர்வைப் பெற்றுக்கொள்ளவும் பல வருடங்கள் காத்திருக்க வேண்டும். இது முஸ்லிம்களைப் புதிய நெருக்கடிகளுக்குள் தள்ளிவிடவே வழிவகுக்கும்.

தற்போதைய காதி நீதிமன்ற முறைமையில் பிரச்சினைகள் இருக்கலாம். அவற்றை உரிய அணுகுமுறையினைக் கையாண்டு சீரமைக்க முடியும். ஆனால் இன்று காதியாருக்கு வழங்கப்படும் மாத சம்பளம் 15000 ரூபா என அறிய முடிகிறது. அவர்களது சம்பளமும் அந்தஸ்தும் அதிகரிக்கப்பட வேண்டும். தற்போதைய முறைமையின் கீழ் ஒரு விவாகரத்திற்கு காதியிடம் தீர்வு கிடைக்கப்பெறாவிட்டால் காதிகள் சபையிடம் தீர்வு பெறலாம். அங்கும் தீர்வு கிடைக்காது போனால் மேன்முறையீடு செய்யவும் அதற்கு மேல் உச்ச நீதிமன்றத்திற்கும் செல்ல முடியும். அரசாங்கத்திற்கு தவறான யோசனைகள் வழங்கப்ப டுகின்றன. இவ் விடயங்களில் நல்ல தீர்வுகளைப் பெற நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியம்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.