32 வருடங்களாகியும் மறுக்கப்படும் உரிமை!

0 378

வடக்­கி­லி­ருந்து முஸ்­லிம்கள் விடு­தலைப் புலி­களால் பல­வந்­த­மாக வெளி­யேற்­றப்­பட்டு சரி­யாக 32 வரு­டங்கள் பூர்த்­தி­யா­கின்­றன. எனினும் அன்­றி­லி­ருந்து இன்று வரை பாதிக்­கப்­பட்ட முஸ்­லிம்கள் அனு­ப­விக்கும் துய­ரங்கள் எழுத்தில் வடிக்க முடி­யா­தவை.
1990 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம், வட­புல முஸ்­லிம்கள் 75,000 பேர் இரண்டு வார காலப்­ப­கு­தி­யினுள் அவர்­களின் வாழ்­வி­டங்­களை விட்டு பல­வந்­த­மாக விரட்­டி­ய­டிக்­கப்­பட்ட துயரம் நடந்­தே­றிய ஒக்­டோபர் மாதத்­தினைக் கறுப்பு ஒக்­டோபர் என்றால் அது மிகை­யா­காது.

அதி­க­மான குடும்­பங்கள் 500 ரூபா பணத்­துடன் சில உடு­து­ணி­களை மாத்­தி­ரமே எடுத்துச் செல்ல அனு­ம­திக்­கப்­பட்­டன. சில குடும்­பங்கள் வெறுங்­கை­யுடன் வெளி­யே­றி­யி­ருந்­தன. தென் மாகா­ணத்தின் எல்­லை­யினை நெருங்கும் வரை போக்­கு­வ­ரத்­தினைப் பெற்­றுக்­கொள்ள முடி­யாத மக்கள் பல நாட்கள் நடந்தே ஊரைக் கடந்­தி­ருந்­தனர். இற்­றை­வரை எம் சமு­தாய மக்­களின் துன்­பங்­களும் துய­ரங்­களும் அடை­யாளம் காணப்­ப­ட­வு­மில்லை, ஆற்­றப்­ப­ட­வு­மில்லை. மூன்று தசாப்த கால­மாக உள்ளூர்க் குடி­யி­ருப்­பா­ளர்­களும் அர­சாங்க அதி­கா­ரி­களும் சர்­வ­தேசக் கொடை­யா­ளர்­களும் தெற்கு முஸ்­லிம்­களும் காட்­டிய புறக்­க­ணிப்பும் புரி­த­லின்­மையும் நம்­பு­வ­தற்கு யாரு­மில்­லையே எனும் உணர்­வினை இந்த வட­புல மக்­களின் உள்­ளங்­களில் விதைத்­து­விட்­டன.

வட­புல முஸ்­லிம்கள் வெளி­யேற்­றப்­பட்­டமை தொடர்பில் விசா­ரிக்க ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­வினை நிய­மிக்­கப்­போ­வ­தாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜக்‌ஷ 2005ஆம் ஆண்டின் பிற்­ப­கு­தியில் வாக்­கு­று­தி­ய­ளித்­தி­ருந்தார். 2009 இல் யுத்தம் முடி­வ­டைந்­த­மை­யினை நினை­வு­கூர்ந்து நடத்­தப்­பட்ட நிகழ்­வொன்றில் அவர் பின்­வ­ரு­மாறு குறிப்­பிட்­டி­ருந்தார் “வட­புல முஸ்­லிம்கள் துன்­பு­றுத்­தப்­பட்டு அவர்­களின் வாழி­டங்­களை விட்டுப் பல­வந்­த­மாகப் புலி­களால் விரட்­டி­ய­டிக்­கப்­பட்­ட­போது அவர்­களின் இடப்­பெ­யர்­வினைத் தடுத்து நிறுத்த யாரும் முன்­வ­ர­வில்லை. இப்­போது எனது அர­சாங்கம் பயங்­க­ர­வா­தத்­தினை முடி­வுக்குக் கொண்­டு­வந்­துள்ள கார­ணத்­தினால், 2010 மே மாத­ம­ளவில் முஸ்­லிம்­களை மீளக் குடி­ய­மர்த்த சகல முயற்­சி­களும் மேற்­கொள்­ளப்­படும்.” அவரின் எந்த வாக்­கு­று­தியும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. யுத்­தத்­திற்குப் பின்­ன­ரான தேசத்­தினைக் கட்­டி­யெ­ழுப்பும் துரித செயன்­மு­றையில் வட­புல முஸ்­லிம்­களின் உரி­மை­களை முன்­னு­ரி­மைப்­ப­டுத்த முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்‌ஷ தவ­றி­விட்டார். அதன் பின்னர் முஸ்­லிம்­களின் ஆத­ர­வுடன் பத­விக்கு வந்த மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் வட புல முஸ்­லிம்­களின் விட­யத்தில் எந்­த­வித கரி­ச­னை­யையும் காட்­ட­வில்லை.

2015 முதல் 2019 வரை­யான நிலை­மா­று­கால நீதிக் காலப்­ப­கு­தியின் போது சூழ்­நிலை தொடர்ந்தும் மாறா­ம­லேயே இருந்­தது. முன்­மொ­ழி­யப்­பட்ட பொறி­மு­றைகள் மூலம் வடக்கு முஸ்­லிம்­களின் துய­ரங்­களைத் தீர்ப்­ப­தற்­கான ஆரம்­ப­கால முயற்­சிகள் கைவி­டப்­பட்­டன. ஜ.நா. மனித உரி­மை­க­ளுக்­கான உயர்ஸ்­தா­னிகர் அலு­வ­ல­கத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ரணை, 2002 பெப்­ர­வரி யுத்­த­நி­றுத்தம் முதல் 2011 வரை­யான காலப்­ப­கு­தி­யினை மட்­டுமே ஆராய்ந்­தது. ஆனால், 1990 இல் நடத்­தப்­பட்ட முஸ்லிம் மக்­களின் வெளி­யேற்ற நிகழ்வு போன்ற முன்­னைய குற்றச் செயல்­களை ஆரா­யாமல் விட்­டு­விட்­டது.

மீள்­கு­டி­யேற்­றத்தைப் பொறுத்­த­வரை அது ஒரு சிக்­க­லான பொறி­மு­றை­யா­கவே மாறி­யுள்­ளது எனலாம். திரும்பிச் செல்­ப­வர்கள் புத்­த­ளத்தில் ஒரு பிடி­மா­னத்­தினை வைத்­துள்­ளனர் என்­பது உண்­மை­யாகும். ஆனால், இம்­மக்­களின் பூரண மீள்­தி­ரும்­பலைப் பாதிக்கும் தடை­களை இந்த யதார்த்தம் பிர­தி­ப­லிக்­கின்­றது என்றால் அது மிகை­யா­காது. இம்­மக்­களின் காணிகள் காடு­க­ளாக மாறி அவற்றில் குடி­யேறி வாழ்­வதே சாத்­தி­ய­மற்­ற­தாக இருக்கும் நிலையில் இம்­மக்­க­ளுக்கு மீள்­கு­டி­யேற்ற உத­விகள் வழங்­கப்­ப­டு­வ­தற்­கான எச்­சாத்­தி­யமும் தென்­ப­டாத சூழ்­நி­லையே நில­வு­கின்­றது. இவ்­வா­றான சூழ­மைவில் இந்த மக்கள் 32 வரு­டங்­க­ளாக வாழ்ந்த இடங்­களை விட்டுச் சடு­தி­யாகத் திரும்பிச் செல்ல முடி­யாத நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளனர். திரும்பிச் செல்லும் இடங்­களில் அடிப்­படை வச­திகள் இல்லை என்­பது ஒரு புற­மி­ருக்க இவ்­வாறு திரும்பிச் செல்லும் மக்­களை அர­சாங்க அதி­கா­ரி­களும் வர­வேற்கத் தயா­ராக இல்லை என்­ப­துடன் இம்­மக்­களின் முன்னாள் அய­ல­வர்கள் கூட இவர்­களை வர­வேற்கத் தயா­ராக இல்லை என்­பதே யதார்த்­த­மாக இருக்­கின்­றது.

நிலைமை இவ்­வா­றி­ருக்க, யாரி­ட­மி­ருந்தும் எதையும் பெரிதும் எதிர்­பார்க்­காது தமது வாழ்­வினை மீண்டும் பூச்­சி­யத்தில் இருந்து ஆரம்­பித்து தமிழ் உற­வு­க­ளுடன் சக­வாழ்வு வாழலாம் என்ற ஆர்­வத்­துடன் முஸ்­லிம்கள் வடக்­கிற்குத் திரும்­பிக்­கொண்­டி­ருக்­கின்­றனர். சம­மாக நடத்­தப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்பு, தமது காணி­களை அணு­கு­வ­தற்­கான சந்­தர்ப்பம், அடிப்­படை வாழ்­வா­தார உத­விகள், மேலும் காடு மண்டிக் கிடக்கும் தமது காணிகளைத் துப்பரவுசெய்தல் போன்ற சாதாரண கோரிக்கைகளுக்கு அப்பால் இம்மக்கள் விடுத்திருக்கும் முக்கியமான வேண்டுகோள்கள் சொற்பமானவைதான்.
வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் அவர்களின் சொந்த இடங்களில் தங்களின் சொத்துக்களை மீளக் கோருவதற்கும் வாழ்வாதார உதவிகளைப் பெறுவதற்கும் உரிமையினைக் கொண்டுள்ளனர் என்பதையும் தற்காலிகமாக இவர்களின் குடும்பங்கள் வேறு இடங்களில் வாழும் தெரிவினை மேற்கொண்டிருந்தாலும் இந்த உரிமை அவர்களுக்கு உண்டு என்பதையும் அரசாங்க அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் அங்கீகரிப்பது இன்றியமையாததாகும்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.