வணாத்தவில்லு விவகார வழக்கு : ‘உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஒரு சதி’

முன்னாள் சட்ட மா அதிபரின் கூற்று தொடர்பில் நீதிமன்றில் எழுப்பப்பட்ட கேள்வி -

0 408
1. பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா சஹ்ரான் தொடர்பில் செய்த விசாரணைகளை சி.ஐ.டி.யின் நடவடிக்கைகள் பாதித்ததா?
2. வத்தளை வீட்டில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் திட்டமிடப்பட்டதாம்

 

எம்.எப்.எம்.பஸீர்

புத்­தளம் – வணாத்­த­வில்லு பகு­தியில் வெடி­பொ­ருட்­களை சேக­ரித்து களஞ்­சி­யப்­ப­டுத்தும் மற்றும் உற்­பத்தி செய்யும் இட­மொன்­றினை முன்­னெ­டுத்துச் சென்­றமை தொடர்பில் சட்ட மா அதிபர் தொடர்ந்­துள்ள வழக்கின் விசா­ர­ணைகள் கடந்த ஆகஸ்ட் 24, 25, 26 ஆம் திக­தி­களில் இவ்­வ­ழக்கை விசா­ரணை செய்­ய­வென விஷே­ட­மாக அமைக்­கப்­பட்­டுள்ள மூன்று நீதி­ப­தி­களை உள்­ள­டக்­கிய ட்ரயல் அட் பார் சிறப்பு நீதி­மன்ற அமர்வு முன்­னி­லையில், புத்­தளம் மேல் நீதி­மன்றில் நடந்­தது. நீதி­ப­தி­க­ளான ஹசித்த பொன்­னம்­பெ­ரும, நிசாந்த ஹப்பு ஆரச்சி மற்றும் நயோமி விக்­ர­ம­சிங்க ஆகியோர் அடங்­கிய சிறப்பு ட்ரயல் அட் பார் நீதி­மன்ற அமர்வு முன்­னி­லை­யி­லேயே இவ்­வி­சா­ர­ணைகள் நடந்­தன.

அதன்­படி 4 சாட்­சி­யா­ளர்­களின் சாட்­சி­யங்கள் இது­வ­ரையில் இவ்­வ­ழக்கில் நெறிப்­ப­டுத்­தப்­பட்டு, குறுக்கு விசா­ர­ணை­க­ளுக்கும் உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.
இந்த வழக்­கா­னது 14 குற்­றச்­சாட்­டுக்­களின் கீழ் கடந்த 2021 ஏப்ரல் 28 ஆம் திகதி சட்ட மா அதி­ப­ரினால் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது.

மர­ண­ம­டைந்­துள்ள மொஹம்மட் சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அச்சு மொஹம்­மது அஹ­மது ஹஸ்தூன் ஆகி­யோ­ருடன் இணைந்து, வணாத்­த­வில்லு பகு­தியில் வெடி­பொ­ருட்­களை சேக­ரிக்கும் மற்றும் தயா­ரிக்கும் இட­மொன்­றினை முன்­னெ­டுத்து சென்­ற­தாக பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் 6 பேருக்கு எதி­ராக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.
அபூ தஹ்தா எனும் மொஹம்மட் முபீஸ், அபூ சாபியா எனும் அமீன் ஹம்சா மொஹம்மட் ஹமாஸ், கபூர் மாமா அல்­லது கபூர் நாநா எனும் மொஹம்மட் சரீப் ஆதம் லெப்பை, அபூ உமர் எனப்­படும் மொஹம்மட் இப்­ராஹீம் சாதிக் அப்­துல்லாஹ், அபூ செய்த் எனும் நெளபர் மெள­லவி அல்­லது மொஹம்மட் இப்­ராஹீம் நெளபர், அபூ நஜா எனப்­படும் மொஹம்மட் ரமீஸ் மொஹம்மட் சாஜித் அல்­லது சாஜித் மெள­லவி ஆகிய 6 பேருக்கு எதி­ரா­கவே இவ்­வாறு வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

கடந்­த­ இரு வாரங்­க­ளாக விடி­வெள்ளி பிர­சு­ரித்த வழக்கு விசா­ர­ணை­களின் தொடர்ச்­சியே இது.

முதல் சாட்­சி­யா­ள­ராக சாட்­சியம் அளித்த பிர­தான விசா­ரணை அதி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் மார­சிங்­க­விடம், 1,2,4 ஆம் பிர­தி­வா­தி­க­ளுக்­காக சட்­டத்­த­ர­ணி­க­ளான வஸீமுல் அக்ரம், சஜாத், நதீஹா அப்பாஸ் ஆகி­யோ­ருடன் ஆஜ­ரான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் குறுக்கு விசா­ர­ணை­களை தொடர்ந்தார்.

Q: வணாத்­து­வில்­லுவில், வெடி­பொ­ருட்­களை தயா­ரிக்க அரைக்கும் இயந்­திரம் உள்­ளிட்­டவை பய­ன்ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக கூறு­கின்­றீர்கள். உண்­மையில் அங்கு அவ்­வா­றான இயந்­திரம் அல்­லது இலத்­தி­ர­னியல் பொருட்­களை பயன்­ப­டுத்தும் அள­வுக்கு மின்சாரம் போது­மா­ன­தாக இருந்­ததா?
A: போது­மான அளவில் மின்­சாரம் இருந்­ததா என தெரி­யாது… ஆனால் அங்கு மின் கட்­ட­மைப்­பொன்று இருந்­தது.
Q: நீர் புகைப்­படம் ஊடாக அடை­யாளம் கண்ட அரைக்கும் இயந்­தி­ரத்தை இயக்க 240 வோல்ட் மின்­சாரம் தேவை என்றால் அதனை ஏற்­கி­றீரா?
A: அது தொடர்பில் எனக்கு தெரி­யாது
Q: நீங்கள் வனாத்­தவில்­லுவில் வழக்குப் பொரு­ளாக கைப்­பற்­றிய சூரிய ஒளி மின்­சார உற்­பத்தி சாதனம் ஊடாக எவ்­வ­ளவு மின்­சாரம் பெற முடியும் ?
A: தெரி­யாது
Q: அந்த சூரிய ஒளி மின்­சார உற்­பத்தி சாதனம் ஊடாக 12 வோல்ட் மின்­சா­ரத்தை மட்­டுமே உற்­பத்தி செய்ய முடியும் என நான் கூறு­கின்றேன்… அதனை ஏற்­கின்­றீரா?
A: தெரி­யாது.
Q: நீங்கள் சொல்­வதைப் போல அங்கு இலத்­தி­ர­னியல் உப­க­ர­ணங்­களை பய­ன்ப­டுத்த மின்­சாரம் இருக்­க­வில்லை. மின் விளக்­கு­களைக் கூட ஒளிரச் செய்ய அங்கு போதிய மின்­சாரம் இருக்­க­வில்லை. அதனால் தான், நீங்கள் குறித்த இடத்­துக்கு சென்ற போது, இரவு மின் பிறப்­பாக்கி ஒன்­றினை பெற்­றுக்­கொண்­டுள்­ளீர்கள் ?
A: இல்லை மறுக்­கின்றேன்… அப்­ப­கு­தியின் பாது­காப்பை உறுதி செய்­யவே மின் பிறப்­பாக்கி பெறப்­பட்டு மின்­சாரம் பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டது.
Q: சஹ்­ரானை கைது செய்ய கெக்­கு­னு­கொல்­லைக்கு சென்­றீர்­களா?
A: டயஸ் தலை­மையில் விசா­ரணைக் குழு சென்­றது.
Q: எத்­தனை முறை சென்­றது?
A: பல­த­ட­வைகள் சென்­றனர்.
Q: எப்­போது சென்­றனர்?
A: 2019 ஜன­வரி 23 ஆம் திக­தியே எமக்கு சஹ்ரான் தொடர்பில் தெரி­ய­வந்­தது. அது முதல் நாம் அவரைக் கைது செய்ய முயன்றோம்.
Q: சஹ்­ரானை தேடி கெக்­கு­னு­கொல்­ல­வுக்கு சென்ற திக­தி­களை கூற முடி­யுமா?
A: பல தட­வைகள் சென்றனர். உப பொலிஸ் பரி­சோ­தகர் டயஸ் தலை­மை­யி­லான குழு­வி­னரே சென்­றி­ருந்­தனர்.
Q: சஹ்­ரா­னுக்கு பிடி­யாணை ஒன்­றி­ருந்­ததா?
A: ஆம்
Q: பிடி­யாணை தொடர்பில் எப்­போது அறிந்து கொண்டீர்?
A: உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் குறித்த விசா­ர­ணையின் போது
Q: சஹ்ரான், ஹஸ்தூன் வனாத்­தவில்­லு­வுக்கு வந்து சென்­றது எப்­போது உங்­க­ளுக்கு தெரி­ய­வந்­தது?
A: எப்­போது என சரி­யாக கூற முடி­யாது…எனினும் அவர்­களைக் கைது செய்ய எம்மால் முடி­ய­வில்லை.
Q: கெக்­கு­னு­கொல்­ல­வுக்கு சென்றது உமது குழு­வி­னரா?
A: ஆம்… உப பொலிஸ் பரி­சோ­தகர் டயஸ் தலை­மையில் சென்­றனர்
Q: பயங்­க­ர­வாத புல­னாய்வு பிரி­வினர், அரச உளவுச் சேவை, முப்­படை புல­னாய்­வா­ளர்கள் வனாத்­து­வில்லு வந்த சந்­தேக நபர்­களை விசா­ரித்­த­னரா?
A: ஆம்
Q: அக்­கா­லப்­ப­கு­தியில் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் பிர­தானி யார் என அவரின் பெயரைக் கூற முடி­யுமா?
A: சரி­யாக தெரி­ய­வில்லை
Q: நாலக சில்வா எனும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் என்றால் ஏற்­கின்­றீரா?
A: ஆம்..
Q: அக்­கால கட்­டத்தில் சி.ஐ.டி. , பயங்­க­ர­வாத புல­னாய்வு பிரி­வு­க­ளி­டையே முரண்­பா­டுகள் இருந்­த­னவா?
A: இல்லை
Q: நாலக சில்வா சி.ஐ.டி.யால் கைது செய்­யப்­பட்­டாரா?
A: ஆம்… கைதானார்… எமது குழு அந்த விசா­ர­ணை­களை செய்­ய­வில்லை
Q: அப்­போது சில தொலை­பேசி குரல்­ப­தி­வுகள் வெளி­யா­கின….அவற்றை மைய­ப்ப­டுத்தி விசா­ரணை நடந்­தது தெரி­யுமா?
A: ஆம்
Q: அந்த தொலை­பேசி குரல் பதி­வு­களில், வெடி­பொ­ருட்கள் தொடர்பில் உரை­யா­டல்கள் உள்­ளது என்­பது தெரி­யுமா?
A: தெரி­யாது

Q: உங்கள் சி.ஐ.டி. சஹ்ரான், ஹஸ்தூன் தொடர்பில் அறிந்­தி­ருக்­கவே இல்லை. பயங்­க­ர­வாத புல­ன­ாய்வுப் பிரி­வினர் கெக்­கு­னு­கொல்­ல­வுக்கு சென்ற பின்­ன­ரேயே சி.ஐ.டி.யும் அங்கு சென்­றுள்­ளது?
A: மறுக்­கின்றேன்
Q: பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் விசா­ர­ணை­க­ளுக்கு டயஸ் குழு இடை­யூறு செய்­துள்­ளது?
A: மறுக்­கின்றேன்
Q: பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா செய்த விசா­ர­ணை­க­ளுக்கு உமது பிரிவு இடை­யூறு ஏற்­ப­டுத்­தி­யுள்­ளனர்?
A: மறுக்­கின்றேன்
Q: உப பொலிஸ் பரி­சோ­தகர் டய­ஸுக்கு எதி­ராக பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினர் முறைப்­பாடு செய்­த­னரா?
A: எனக்கு தெரிந்­த­வ­ரையில் இல்லை
Q: உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் சதி என அது குறித்து விசா­ரணை செய்த ஆணைக் குழுவில் சாட்­சி­யங்கள் முன் வைக்­கப்­பட்­டுள்­ளன. முன்னாள் சட்ட மா அதி­பரும் அது குறித்து கூறி­யுள்ளார். அது குறித்து பொலிஸார் விசா­ரணை செய்­துள்­ள­னரா?
A: நான் அது குறித்த விசா­ர­ணை­களில் தொடர்­பு­ப­ட­வில்லை. வேறு பிரி­வுகள் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­த­னரா என தெரி­யாது.

Q: 1,2 ஆம் பிர­தி­வா­திகள் சஹ்ரான், ஹஸ்­தூ­னுடன் தொடர்­பு­களை கொண்­டி­ருக்­க­வில்லை என என நான் பரிந்­து­ரைக்­கின்றேன்.?
A: இல்லை… அதனை நான் மறுக்­கின்றேன்… தொடர்­புகள் இருந்­தன….. பெயரில் அறிந்­தி­ருக்­கா­விட்­டாலும் மெள­லவி, மொஹம்மட் எனும் பெயர்­களில் அவர்­களை அவ்­வி­ரு­வரும் அறிந்­தி­ருந்­தனர்.

இந் நிலையில் பிர­தான விசா­ரணை அதி­கா­ரி­யிடம் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் முன்­னெ­டுத்த குறுக்கு விசா­ரணை நிறை­வுக்கு வந்­தது.
இத­னை­ய­டுத்து 3 ஆம் பிர­தி­வாதி கபூர் மாமா அல்­லது கபூர் நாநா எனும் மொஹம்மட் சரீப் ஆதம் லெப்பை சார்பில் ஆஜ­ராகும் சட்­டத்­த­ரணி அல்தாப் குறுக்கு விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்தார்.

பிர­தான விசா­ரணை அதி­காரி மார­சிங்­கவின் சாட்­சி­யத்தின் போது கபூர் மாமா அல்­லது கபூர் நாநா எனும் மொஹம்மட் சரீப் ஆதம் லெப்பை கைது செய்­யப்­பட்ட விதம் தொடர்பில் விப­ரித்த விட­யங்கள் உண்மை அல்ல எனவும் அவரை சி.ஐ.டி.யினர் கைது செய்­ய­வில்லை எனவும், காத்­தான்­குடி பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்­ப­தி­காரி கஸ்­தூரி ஆரச்­சியே கைது செய்து சி.ஐ.டி.க்கு கைய­ளித்­த­தாக அவர் குறுக்கு விசா­ரணை ஊடாக தெளி­வு­ப­டுத்­தினார்.

இத­னை­ய­டுத்து அபூ செய்த் எனும் நெளபர் மெள­லவி அல்­லது மொஹம்மட் இப்­ராஹீம் நெளபர் சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ரணி குறுக்கு விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்தார்.
இதன்­போது உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­களின் பின்­ன­ரேயே 5,6 ஆம் பிர­தி­வா­தி­களைக் கைதுசெய்­த­தா­கவும், அவர்கள் வனாத்­த­வில்­லு­வுக்கு சென்­றுள்­ள­தா­கவும் பிர­தான விசா­ரணை அதி­காரி கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளித்து தெரி­வித்தார்.

தாக்­கு­தல்­களின் பின்னர் சாய்ந்தமருது நோக்கி 5,6 ஆம் பிர­தி­வா­திகள் செல்லும் போது தம்­புள்­ளையில் வைத்து அவர்கள் கைது செய்­யப்­பட்­ட­தாக மார­சிங்க குறிப்­பிட்டார்.
இதன்­போது அபூ செய்த் எனும் நெளபர் மெள­லவி அல்­லது மொஹம்மட் இப்­ராஹீம் நெள­பரின் சட்­டத்­த­ரணி குறித்த பிர­தி­வா­தியின் தொடர்பு குறித்து உங்­க­ளுக்கு எதுவும் தெரி­யாது என யோசனை முன் வைத்தார்.

இதனை மறுத்த பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் மார­சிங்க, இது குறித்த மேல­திக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த போது, வத்­தளை பகு­தியில் உள்ள வீட்டில் உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் தொடர்பில் திட்­ட­மிட்ட பின்னர் அங்­கி­ருந்து அனை­வரும் கைலந்து சென்­றி­ருந்­த­தாக குறிப்­பிட்டார்.

இதனை தொடர்ந்து அரசின் சட்­ட­வாதி உதார கரு­ணா­திலக மார­சிங்­க­விடம் மீள கேள்­வி­களை தொடுத்து சாட்­சி­யங்­களை நெறிப்­ப­டுத்தி அவ­ரது சாட்­சி­யங்­களை நிறை­வுக்கு கொண்டு வந்தார்.

இதனைத் தொடர்ந்து, வனாத்­த­வில்­லுவின் லக்டோ தோட்டம் எனப்­படும் குறித்த தோட்­டத்­துக்கு முன்­பாக உள்ள தோட்­டத்தில் வேலைபார்க்கும் 40 வய­தான சுஜித் பிர­சன்ன என்­ப­வரின் சாட்­சி­யங்கள் நெறி­ப்ப­டுத்­தப்­பட்­டன.

லக்டோ தோட்­டத்தின் நிலைமை, அங்கு இருந்­த­வர்கள் யார் என்­பது தொடர்பில் அவ­ரிடம் சாட்­சியம் பெறப்­பட்­டது. இதன்­போது லக்டோ தோட்­டத்தின் ஒரு பகு­தியை முதல் பிர­தி­வாதி வேலி­ய­டைத்து வேறுபடுத்­தி­ய­தாக அவர் சாட்­சி­ய­ம­ளித்தார்.
அவ­ரிடம் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் மட்டும் குறுக்கு விசா­ரணை முன்­னெ­டுத்தார்.

இதன்­போது, சி.ஐ.டி.யினர் லக்டோ தோட்­டத்­துக்கு சென்ற தினம், தான் குறித்த தோட்­டத்­துக்கு முன்­பாக உள்ள கஜு தோட்­டத்­துக்கு வேலைக்கு செல்­ல­வில்லை என சுஜித் பிர­சன்ன குறுக்கு கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளித்து குறிப்­பிட்டார்.

அத்­துடன் லக்டோ தோட்­டத்தின் ஒரு எல்லை, களப்­புடன் இணை­வ­தா­கவும், களப்பில் மீன் பிடி நட­வ­டிக்­கைகள் இடம்­பெ­று­வ­தா­கவும், களப்­பூ­டாக லக்டோ தோட்­டத்­துக்கு எவரும் நுழைய முடியும் எனவும் அப்­ப­கு­தியில் வேலி உடைந்­தி­ருந்­த­தா­கவும் சுஜித் பிர­சன்ன குறுக்கு கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளித்து குறிப்­பிட்டார்.

லக்டோ தோட்­டத்தில் ‘ வெத மாமா’ எனும் காவ­லாளியை தவிர வேறு யாரும் வந்து செல்­வதை தான் கண்­ட­தில்லை எனவும் அவர் குறிப்­பிட்டார்.

லக்டோ தோட்­டத்தின் குற்­றச்­சாட்­டுடன் தொடர்­பு­பட்ட பகு­திக்கு அப்பால் உள்ள கோழிப் பண்­ணையை, முதல் பிர­தி­வாதி முபீஸும் அவர் மனை­வியும் பார்த்­துக்­கொண்­ட­தா­கவும் அவர் குறுக்கு விசா­ர­ணையின் போது தெரி­வித்தார்.

இத­னை­ய­டுத்து, லக்டோ தோட்­டத்தின் காவ­லா­ளி­யாக செயற்­பட்ட ஜோசப் அப்­பு­ஹாமி எனும் வெத மாமாவின் (77 வயது) சாட்­சியம் பெறப்­பட்­டது.
தான் ஆயுர்­வேத திணைக்­க­ளத்தில் வேலை செய்த பின்னர் ஓய்வு பெற்­றதால், தன்னை அனை­வரும் வெத மாமா என பர­வ­லாக அறி­வ­தாக சாட்­சி­யாளர் அரச சட்­ட­வாதி உதார கரு­ணா­தி­ல­கவின் நெறி­ப்ப­டுத்­தலில் சாட்­சி­ய­ம­ளித்து தெரி­வித்தார்.

தனக்கு வய­தா­னதால், வேலைகள் செய்­வதில் சிரமம் இருந்­த­தாக அவர் குறிப்­பிட்டார்.
வழக்­குடன் தொடர்­பு­டைய சம்­ப­வத்­துக்கு நான்கு மாதங்­க­ளுக்கு முன்னர் தான் காவல் கட­மை­களில் இருந்து வில­கி­ய­தாக குறிப்­பிட்ட அவர் அதற்­கான கார­ணங்­க­ளையும் குறிப்­பிட்டார்.

லக்டோ தோட்ட முத­லாளி அபூ ஹனீபா ஹாஜியின் மர­ணத்தின் பின்னர் அவர் மகன் முபீஸ், அவ­ரது மச்சான் ஆகியோர் தோட்­டத்தை கவ­னித்­துக்­கொண்­ட­தாக கூறிய அவர், முதல் பிர­தி­வாதி முபீஸை பிர­தி­வாதிக் கூண்டு அருகே சென்று ‘ஹலோ… எப்­படி இருக்­கின்­றீர்கள்?’ என கூறி­ய­வாறு அடை­யா­ளமும் கண்டார்.

லக்டோ தோட்­டத்தில் தென்னை மரங்­களில் இருந்து கிடைக்கும் வரு­மானம் குறைந்த நிலையில், தான் தங்­கி­யி­ருந்த சிறிய வீட்டுப் பகு­தி­யுடன் கூடிய காணியைச் சுற்றி வேலி அமைத்து மரவள்­ளிக் கிழங்கு பயிர் செய்­கைக்­காக ஒரு­வ­ருக்கு வழங்­க­வுள்­ள­தாக முபீஸ் தன்­னிடம் தெரி­வித்­த­தாக வெத மாமா குறிப்­பிட்டார்.

தனக்கு வேறு வீடு இருப்­ப­தாக குறிப்­பிட்ட அவர், முபீஸ் உள்­ளிட்­ட­வர்கள் தன்னை நன்­றா­கவே நடத்­தி­ய­தா­கவும், தனது வயது மற்றும் உடல் நிலையை கருத்திற் கொண்டு ஊழியர் சேம இலாப நிதி, நம்­பிக்கை நிதி ஆகி­ய­வற்­றையும் பெற்­றுக்­கொள்ள முடி­யு­மாக இருக்கும் என்­பதால் தான் வில­கி­ய­தாக குறிப்­பிட்டார்.

இத­னை­ய­டுத்து சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீபின் குறுக்கு கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளித்து சாட்­சி­ய­ம­ளித்த வெத மாமா, லக்டோ தோட்­டத்தின் தென்னை மரங்கள் ஊடாக கிடைக்கும் வரு­மா­னத்தை உயர்த்த முபீ­சுக்கு தேவை இருந்­த­தா­கவும் அதனால் தென்னை மரங்­க­ளுக்கு உர­மாக யூரியா உரம் கொண்­டு­வந்­தி­ருந்­த­தா­கவும் சாட்­சி­ய­ம­ளித்தார்.

இதனையடுத்து லக்டோ தோட்டம் தொடர்பில், அத்தோட்டம் அமையப் பெற்றுள்ள கிராம சேவகர் பிரிவான கரடிப் பூவல் கிராம சேவகர் பிரிவின் கிராமசேவகராக கடமையாற்றும் சுப்ரமணியம் சந்திரகுமாரின் சாட்சியம் பெறப்பட்டது.

அந்த சாட்சியத்தின் பின்னர், சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீபினால் நான்காம் பிரதிவாதி அபூ உமர் எனப்படும் மொஹம்மட் இப்­ராஹீம் சாதிக் அப்­துல்லாஹ் சார்பிலும், சட்டத்தரணி அல்தாபினால் மூன்றாம் பிரதிவாதி கபூர் மாமா அல்­லது கபூர் நாநா எனும் மொஹம்மட் சரீப் ஆதம் லெப்பை சார்பிலும் பிணை கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. (அது குறித்த உத்தரவு அடுத்த தவணையில் அளிக்கப்படும் )
இந் நிலையில் சி.ஐ.டி.யின் உப பொலிஸ் பரிசோதகர் டயஸ் மற்றும் கொழும்பு நீதிமன்றினால் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுடன் தொடர்புபட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள (வழக்கிலக்கம் 25065/8/19) சந்தேக நபர் ஒருவரை (கைதி இலக்கம் 5366) சாட்சியமளிக்க அறிவித்தல் அனுப்பிய நீதிமன்றம் வழக்கு தொடர்பிலான மேலதிக சாட்சி விசாரணைகளை எதிர்வரும் நவம்பர் 15,16,17 ஆம் திகதிகளில் இடம்பெறும் என அறிவித்தது.
(முற்றும்)

– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.