வரலாறு புகட்டிய பாடம்

0 269

பௌத்த சிங்­கள மக்­களின் காவ­ல­னாகத் தன்னைப் பிர­க­ட­னப்­ப­டுத்திக் கொண்டு பத­விக்கு வந்த முன்னாள் இரா­ணுவ வீரரும் முன்னாள் பாது­காப்புச் செய­லா­ள­ரு­மான ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ச, மக்­களின் போராட்­டத்­திற்கு முகங்­கொ­டுக்க முடி­யாது கோழை போல நாட்­டை­விட்டுத் தப்­பி­யோ­டி­யி­ருக்­கின்ற செய்தி அனை­வ­ருக்கும் ஒரு வர­லாற்றுப் பாட­மாகும்.

கடந்த 90 நாட்­க­ளுக்கும் மேலாக காலி முகத்­தி­டலில் இரவு பகல் பாராது மக்கள் போராடி வந்­த­போ­திலும் அதற்கு செவி­சாய்க்­காது, தொடர்ந்தும் அதி­காரக் கதி­ரையில் அமர்ந்­தி­ருந்த கோத்­த­பா­ய­வுக்கு பாடம் புகட்டும் வகையில் மக்கள் கடந்த ஜுலை 9 ஆம் திகதி கொழும்­புக்குப் படை­யெ­டுத்து ஜனா­தி­பதி மாளிகை, ஜனா­தி­பதி செய­லகம் மற்றும் அலரி மாளிகை ஆகி­ய­வற்றை முற்­று­கை­யிட்டுக் கைப்­பற்­றினர். இத­னை­ய­டுத்து ஜனா­தி­பதி மாளி­கை­யி­லி­ருந்து வெளி­யே­றிய கோத்­த­பாய, கடற்­ப­டை­யி­னரின் உத­வி­யுடன் கடலில் தரித்­தி­ருந்­த­தா­கவும் பின்னர் விமான நிலை­ய­ம­ரு­கே­யுள்ள விமானப் படை முகாமில் பாது­காப்­பாக மறைந்­தி­ருந்­த­தா­கவும் தக­வல்கள் கிடைக்­கின்­றன. இந் நிலை­யில்தான் அவர் நேற்று அதி­காலை மாலை­தீ­வுக்கு விமானப் படை விமானம் மூல­மாக தப்பிச் சென்­றி­ருக்­கிறார். அங்­கி­ருந்து டுபாய் அல்­லது சிங்­கப்­பூ­ருக்குச் சென்று தஞ்­ச­ம­டைவார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. அமெ­ரிக்­கா­வுக்குச் செல்­வ­தற்கு அவர் எடுத்த முயற்­சிகள் கைகூ­ட­வில்லை.

அவர் இவ்­வாறு நாட்டை விட்டு வெளி­யே­றி­யுள்ள போதிலும் இப் பத்தி எழு­தப்­படும் வரை ( புதன் இரவு 9 மணி வரை) அவர் தனது பத­வியை இரா­ஜி­னாமாச் செய்­ய­வில்லை. மாறாக பதில் ஜனா­தி­ப­தி­யாக பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவை நிய­மித்­துள்­ள­தா­கவே சபா­நா­யகர் ஊடாக அறி­வித்­தி­ருக்­கிறார். இவ்­வ­ளவு நடந்தும் அவர் தனது ஜனா­தி­பதி பத­வியை விட்டுக் கொடுக்கத் தயா­ரில்லை என்­ப­தையும் தனது அதி­கா­ரத்தைப் பயன்­ப­டுத்தி மக்கள் போராட்­டத்தை நசுக்­கி­வி­டலாம் என அவர் திட்­ட­மி­டு­கிறார் என்­ப­தை­யுமே நேற்று கொழும்பில் நடந்த நிகழ்­வுகள் எச்­ச­ரிக்­கின்­றன.

பதில் ஜனா­தி­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்­டுள்ள ரணில் விக்­ர­ம­சிங்­கவும் படைப்­பலம் கொண்டு மக்கள் போராட்­டத்தை நசுக்­கு­வ­தற்­கான முயற்­சி­களை நேற்­றைய தினம் எடுத்­தி­ருந்தார். போராட்டக் களத்­துக்கு மேலாக ஹெலி­கொப்­டர்­களைப் பறக்­க­விட்டும் கண்­ணீர்ப்­பு­கைக்­குண்­டு­களை வீசியும் மக்­களை அச்­சு­றுத்தி அடி­ப­ணிய வைக்க முயன்றார். எனினும் அதுவும் பல­ன­ளிக்­க­வில்லை. ஈற்றில் மக்கள் பிர­தமர் அலு­வ­ல­கத்­தையும் கைப்­பற்­றினர். இத் தரு­ணத்தில் படை­யி­னரும் மக்கள் மீது பலத்தைப் பிர­யோ­கிக்கத் துணி­ய­வில்லை. மக்கள் மீது துப்­பாக்கிச் சூடு நடத்­தவோ பலத்தைப் பிர­யோ­கிக்­கவோ முடி­யாது என முப்­ப­டை­யி­னரும் பொலி­சாரும் இணைந்து நேற்று கூட்­டாக அறி­வித்­தி­ருப்­பது சற்று ஆறுதல் தரு­வ­தாக உள்­ளது.

கோத்­த­பாய பதவி வில­கி­னாலும் ரணில் விக்­ர­ம­சிங்க எதிர்­வரும் 20 ஆம் திகதி பாரா­ளு­மன்றம் கூடி, வாக்­கெ­டுப்பு மூல­மாக புதிய ஜனா­தி­பதி ஒரு­வரைத் தெரிவு செய்யும் வரை பதில் ஜனா­தி­ப­தி­யாகப் பதவி வகிக்கப் போகிறார். இக் காலப்­ப­கு­தியில் அவர் என்ன காய்­ந­கர்த்­தல்­களைச் செய்யப் போகிறார் என்­ப­தையும் எதிர்வு கூற முடி­யா­துள்­ளது. மறு­புறம் பாரா­ளு­மன்றம் கூடி யாரை புதிய ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்யப் போகி­றது என்­ப­தில்தான் நாட்டின் எதிர்­காலம் தங்­கி­யுள்­ளது. இப்­போ­துள்ள நெருக்­க­டிகள் தீர வேண்­டு­மானால் போராட்­டக்­கா­ரர்­களின் அபி­லா­ஷை­க­ளுக்கு இணங்கிச் செல்லக் கூடிய ஒரு­வரே அப் பத­விக்கு தெரிவு செய்­யப்­பட வேண்டும். இதனை உறு­திப்­ப­டுத்த வேண்­டி­யது பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் கடப்­பா­டாகும்.

இத­னி­டையே, கோத்தா நாட்டை விட்டு வெளி­யே­றி­விட்­டதால் போராட்டம் வென்­று­விட்­ட­தாக நாம் கரு­தி­விட முடி­யாது. மாறாக நாட்டில் முழு­மை­யா­ன­தொரு மாற்­றத்தைக் கொண்டு வரும் வரை இப் போராட்டம் ஏதே­னு­மொரு வழியில் தொடர வேண்டும். அது­வரை உயிர்ப்­புடன் இருக்க வேண்டும். நாட்டை இந்­த­ளவு சீர­ழிவு நிலை­மைக்கு இட்டுச் சென்ற ராஜ­பக்ச குடும்­பத்­திற்கு எதி­ராக கடும் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும், அவர்­க­ளது சொத்­துக்கள் பறி­முதல் செய்­யப்­பட வேண்டும். ராஜ­பக்­சாக்கள் நாட்­டை­விட்டுத் தப்பிச் செல்ல அனு­ம­திக்கக் கூடாது.

கோத்தா முகங்­கொ­டுத்­துள்ள இந்த நிலைமை அவ­ரது பாணியில் அர­சியல் செய்ய முயலும் அனை­வ­ருக்கும் தகுந்த பாட­மாகும். அவரும் அவ­ரது சகாக்­களும் கடந்த காலங்­களில் மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­க­ளுக்கு இறைவன் வழங்­கி­யுள்ள தண்­ட­னை­யா­கவும் இதனைக் கரு­தலாம். குறிப்­பாக அவர் சிறு­பான்மை சமூ­கங்கள் மீது மேற்­கொண்ட நட­வ­டிக்­கைகள் கசப்­பான வர­லாற்றைக் கொண்­டவை. பாது­காப்புச் செய­லா­ள­ராக பதவி வகித்த காலத்தில் அவர் செய்த அரா­ஜ­கங்­களும் ஜனா­தி­ப­தி­யாகப் பதவி வகித்த காலத்தில் முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்­களை எரிப்­ப­தற்கு அவர் எடுத்த நட­வ­டிக்­கை­களும் மறக்­கவோ மன்­னிக்­கவோ முடி­யா­தவை. இன்று அவற்­றுக்­கான பலனை அவர் அனு­ப­விக்­கிறார். இது இந்த நாட்டில் எந்­த­வொரு அப்­பாவி சமூ­கத்­தையும் அடக்கி ஒடுக்கிக் கொண்டு அரசியல் செய்ய முடியாது என்ற பாடத்தை அனைத்து அரசியல்வாதிகளுக்கும் இனவாத சக்திகளுக்கும் கற்றுக் கொடுத்துள்ளது. இவ்வளவும் நடந்துள்ள போதிலும் நாட்டு மக்கள் தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் விரைவில் முடிவுக்கு வருவதற்கான சாத்தியக் கூறுகள் தென்படுவதாக இல்லை. நாம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. வன்முறைகள், பழிவாங்கல்கள் மூலம் ஒருபோதும் தீர்வைக் காண முடியாது. நாட்டின் எதிர்கால சுபீட்சத்தைக் கருத்திற் கொண்டு மக்கள் விட்டுக் கொடுப்புடன் ஒன்றுபட வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.