வக்பு சபை இடைநிறுத்தத்தின் பின்னணி என்ன?

0 164

ஏ.ஆர்.ஏ.பரீல்

“புதிய வக்பு சபை­யொன்­றினை நிய­மிப்­ப­தற்குத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. 1982ஆம் ஆண்டு 33ஆம் இலக்க திருத்­தப்­பட்ட வக்பு சட்­டத்தின் முத­லா­வது அத்­தி­யா­யத்தின் 05ஆம் பிரி­வின்­படி அமைச்­ச­ருக்கு வழங்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரத்தின் கீழ் இத்­தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. அதனால் தற்­போது பத­வி­யி­லுள்ள வக்பு சபையின் செயற்­பா­டுகள் உட­ன­டி­யாக அமு­லுக்கு வரும்­வ­கையில் நிறுத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது. எனவே கூட்­டங்கள் கூட வேண்டாம். தீர்­மா­னங்கள் மேற்­கொள்ள வேண்டாம். தீர்­மா­னங்­களை அறி­விக்க வேண்டாம்”. இவ்­வா­றான ஒரு கடிதம் புத்­த­சா­சன, மத மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சின் செய­லா­ள­ரினால் வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்­தீ­னுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டி­ருந்­தது.

MBRCA/07/MUSLIM/15 ஆம் இலக்க 2022.06.28ஆம் திக­தி­யிட்ட குறிப்­பிட்ட கடிதம் அமைச்சின் செய­லாளர் சோம­ரத்ன விதான பதி­ர­ன­வினால் கையொப்­ப­மி­டப்­பட்­டி­ருந்­தது.

வக்பு சபையின் செயற்­பா­டுகள் உட­ன­டி­யாக அமு­லுக்கு வரும் வகையில் இடை நிறுத்­தப்­பட்­ட­தை­ய­டுத்து முஸ்லிம் சமூகம் அமைச்சர் விது­ர­விக்­ரம நாயக்­கவின் உத்­த­ர­வினை ஏற்­க­ம­றுத்­தது. எந்­த­வித கார­ணங்­க­ளையும் தெரி­விக்­காது வக்பு சபையின் பணி­களை இடை­நி­றுத்த முடி­யாது. இது முஸ்லிம் விவ­கா­ரங்­களில் இடம்­பெறும் அநா­வ­சிய தலை­யீ­டுகள் என முஸ்லிம் சமூக புத்­தி­ஜீ­வி­களும் , சிவில் சமூக அமைப்­பு­களும் அமைச்­ச­ருக்கு தெளி­வு­ப­டுத்­தின.

இவ்­வா­றான நெருக்­கு­வா­ரங்­களும் சவால்­களும் தலை­யெ­டுப்­ப­தற்கு முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்த குறிப்­பிட்ட சிலரே காரணம் என்­பதை இவ்­வி­டத்தில் சுட்­டிக்­காட்­டியே ஆக­வேண்டும். ‘உங்கள் சமூ­கத்தைச் சேர்ந்த சிலரே வக்பு சபையை விமர்­சித்­த­துடன், அதனைக் கலைக்­கு­மாறும் புதி­ய­வர்­களை வக்பு சபைக்கு நிய­மிக்­கு­மாறும் என்­னிடம் கோரிக்கை விடுத்­தார்கள்’ என்று அமைச்சர் விது­ர­விக்­ர­ம­நா­யக்க தன்னைச் சந்­தித்த முஸ்லிம் சிவில் சமூக பிர­தி­நி­தி­க­ளி­டமும், வக்பு சபையின் தலைவர் உட்­பட உறுப்­பி­னர்­க­ளி­டமும் தெரி­வித்­துள்ளார்.

எம்­ம­வர்­களே எங்கள் சமூ­கத்தைப் பற்றி தங்­க­ளது சுய­ந­லம்­க­ருதி அர­சி­யல்­வா­தி­க­ளி­டமும், பொறுப்பு வாய்ந்த அதி­கா­ரி­க­ளி­டமும் பொய்­களைக் கூறி விமர்­சிக்­கும்­போது குறிப்­பிட்ட அதி­கா­ரத்­தி­லுள்­ள­வர்­களால் இவ்­வா­றான இடை நிறுத்­தல்­க­ளையும், தடை­க­ளை­யுமே விதிக்க முடியும். முஸ்லிம் தனியார் சட்­டத்தை இல்­லாமற் செய்­வ­தற்­கான முயற்­சிகள் மற்றும் இஸ்­லா­மிய நூல்கள், குர்ஆன் பிர­தி­களை வெளி­நாட்­டி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­வதில் விதிக்­கப்­பட்­டுள்ள கட்­டுப்­பா­டுகள், நிபந்­த­னைகள் என்­பன எம்­ம­வர்கள் சிலரின் முறை­ப்பா­டு­க­ளை­ய­டுத்தே அர­சாங்­கத்­தினால் மேற்கொள்­ளப்­பட்­டன. இஸ்லாம் சமய பாட நூல்­களில் சில வச­னங்கள் மற்றும் கருத்­துக்கள் அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்­ட­மைக்கும் எம்­ம­வர்­கனே கார­ண­மாக இருந்­துள்­ளார்கள் என்று கூறினால் அதிலும் தவ­றில்லை.

வக்பு சபையின் இடை­நி­றுத்தம் வாபஸ்
அமைச்சர் விது­ர­விக்­ரம நாயக்க அண்­மையில் உட­ன­டி­யாக அமு­லுக்கு வரும் வகையில் இடை­நி­றுத்­தி­யி­ருந்த வக்­பு­ச­பையின் செயற்­பா­டு­களை ரத்துச் செய்து மீண்டும் தற்­போ­தைய வக்பு சபை தனது பணி­களைத் தொடர்­வ­தற்கு அனு­மதி வழங்­கி­யுள்ளார் . அதற்­கான உத்­த­ர­வினை அமைச்சின் செய­லாளர் சோம­ரத்ன விதா­ன­ப­தி­ர­ன­வுக்கு வழங்­கி­யுள்ளார். அதற்­கி­ணங்க அவர் ஏற்­க­னவே வக்பு சபைக்கு அனுப்­பி­யி­ருந்த கடி­தத்தை ரத்துச் செய்து வக்பு சபை கட­மை­களைத் தொடர்­வ­தற்­கான உத்­தி­யோ­க­பூர்­வ­மான அறி­விப்பை நேற்று முன்தினம் கடிதம் முலம் வழங்கியுள்ளார்.

முஸ்லிம் சிவில் சமூக அமைப்­பு­களின் கடிதம்
12 முஸ்லிம் சிவில் சமூக அமைப்­புகள் கடந்த 7ஆம் திகதி புத்­த­சா­சனம், மத மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்­ச­ருக்கு கடி­த­மொன்­றினை அனுப்பி வைத்­தி­ருந்­தன. கடி­தத்தில் 25ஆவது வக்­பு­ச­பையின் செயற்­பா­டு­களை இடை­நி­றுத்­திய அமைச்­சரின் தீர்­மா­னத்தை மீள்­ப­ரி­சீ­லனை செய்­யு­மாறு சிவில் சமூக அமைப்­புகள் கோரி­யி­ருந்­தன.

கடி­தத்தில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­த­தா­வது, ‘தற்­போ­தைய வக்பு சபை முஸ்லிம் சமூ­கத்­துக்கு பாரிய சேவை­களைச் செய்­துள்­ளது. பள்­ளி­வாசல் நிர்­வா­கங்­களில் முன்­னேற்­ற­க­ர­மான திருத்­தங்­களைச் செய்­துள்­ளது. கொவிட் 19 காலத்தில் கடு­மை­யான நிபந்­த­னை­களை பள்­ளி­வா­சல்­களில் அமுல்­ப­டுத்தி சவால்­களை எதிர்­கொண்­டுள்­ளது. வர­லாற்றில் முதல்­த­ட­வை­யாக வக்பு சபை சட்ட அதி­காரி ஒரு­வரை நிய­மித்­துள்­ளது. பள்­ளி­வாசல் நிர்­மாணம் மற்றும் திருத்த வேலை­களின் போது சம்­பந்­தப்­பட்ட அரச நிறு­வ­னங்­களின் அனு­மதி பெற்­றுக்­கொள்­ளப்­பட வேண்­டு­மென பள்­ளி­வாசல் நிர்­வா­கங்­களை அறி­வு­றுத்­தி­யுள்ளது.மாவட்ட பள்­ளி­வாசல் குழுக்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளன.

மெள­ல­வி­களின் திற­மையை அதி­க­ரிப்­ப­தற்­காக பயிற்­சித்­திட்டம் ஆரம்­பிக்­கப்­பட்­டது. என்­றாலும் கொவிட் 19 கார­ண­மாக இதில் தாமதம் ஏற்­பட்­டது என்பன உட்­பட மேலும்­பல வக்பு சபையின் செயற்­பா­டுகள் கடி­தத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்ளன.

இக்­க­டிதம் இலங்கை முஸ்லிம் தலை­வர்கள் போரத்தின் (Sri Lanka Muslim Leaders Forum) அழைப்­பாளர் சட்­டத்­த­ரணி சிராஸ் நுர்­தீ­னினால் கையொப்­ப­மிட்டு அனுப்பி வைக்­கப்­பட்­டி­ருந்­தது.

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில், தேசிய சூரா சபை, வை.எம்.எம்.ஏ, இஸ்­லா­மிய சோனகர் கலா­சார நிலையம், முஸ்லிம் மீடியா போரம், ஸ்ரீ லங்கா இஸ்­லா­மிய கற்கை நிலையம், முஸ்லிம் சிவில் சமூகம், ஸ்ரீ லங்கா ஜமா­அத்தே இஸ்­லாமி, ஜம்­இய்­யத்துல் ஷபாப் (AMYS) அகில இலங்கை முஸ்லிம் இளைஞர் அமைப்பு (RPSL CONSORTIUM) ஆகிய அமைப்­பு­களின் சார்­பாக இக்­க­டிதம் அனுப்பி வைக்­கப்­பட்­டி­ருந்­தது.

இதே­வேளை கடந்த திங்­கட்­கி­ழமை புத்­த­சா­சனம், மத மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சில் அமைச்சர் விது­ர­விக்­ர­ம­நா­யக்­க­வுடன் சிவில் சமூக அமைப்­பு­களின் பிர­தி­நி­திகள் கலந்­து­ரை­யா­ட­லொன்­றிலும் ஈடு­பட்­டனர். இக்­க­லந்­து­ரை­யா­டலில் என்.எம்.அமீன், சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன், நத்வி பஹா­வுதீன், ஜெ­பாரி ஆகியோர் கலந்­து­கொண்­டனர்.

வக்பு சபை – அமைச்சர் சந்­திப்பு
முஸ்லிம் சிவில் சமூக அமைப்பின் பிர­தி­நி­தி­களைச் சந்­தித்த அமைச்சர் உட­ன­டி­யாக வக்பு சபையின் உறுப்­பி­னர்­க­ளையும் அமைச்சில் சந்­தித்து கலந்­து­ரை­யா­டினார். வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் வக்பு சபையின் செயற்­பா­டு­களை விளக்­கினார். வக்பு சபையின் செயற்­பா­டுகள் தொடர்பில் முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்த சில­ரினால் முறைப்­பா­டுகள் தெரி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. வக்பு சபையைக் கலைத்­து­விட்டு புதி­ய­வர்­களை சபைக்கு நிய­மி­யுங்கள் என்று அவர்கள் என்னைக் கோரி­னார்கள் என அமைச்சர் வக்பு சபை அங்­கத்­த­வர்­க­ளிடம் தெரி­வித்தார்.

வக்பு சபை வக்பு சட்­டத்தை முழு­மை­யாக அமுல்­ந­டத்­து­கி­றது. அத­றகுப் புறம்­பாக ஒவ்­வொ­ரு­வரும் எதிர்­பார்க்கும் வகையில் வக்பு சட்­டத்தை அமுல்­ப­டுத்த முடி­யாது. ஒரு சிலர் அவர்­க­ளுக்கு சார்­பாக வக்பு சபை செயற்­பட வேண்டும். அவர்­க­ளுக்கு சார்­பாக தீர்­மா­னங்கள் நிறை­வேற்ற வேண்டும். விசா­ர­ணையில் அவர்­க­ளுக்கு சார்­பாக வக்பு சபை செயற்­பட வேண்­டு­மென எதிர்­பார்க்­கி­றார்கள்.

இவ்­வா­றா­ன­வர்­களே தவ­றான தக­வல்­களை வழங்கி உங்­களை (அமைச்­சரை) பிழை­யாக வழி நடத்­தி­யி­ருக்­கி­றார்கள் என்றார்.

மேலும் அமைச்சர் ஸியா­ரங்கள் மூடப்­பட்­டுள்­ளமை தொடர்­பாக முறைப்­பா­டுகள் கிடைக்­கப்­பெற்­றுள்­ள­தாக தெரி­வித்தார். இதற்குப் பதி­ல­ளித்த வக்பு சபையின் தலைவர் வக்பு சபைக்கு இவ்­வா­றான முறைப்­பா­டுகள் கிடைக்­கப்­பெற்றால் மாத்­தி­ரமே அது தொடர்பில் விசா­ரணை மேற்­கொள்ள முடியும் என்றார்.

இச்­சந்­திப்பில் வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்­தீ­னுடன் உறுப்­பினர் ஸக்கி அஹமட், அஷ்ஷெய்க் அர்கம் நூராமித், ரபீக் இஸ்­மாயில், எம்.சிராஜ் ஆகியோர் கலந்து கொண்­டி­ருந்­தனர். போக்­கு­வ­ரத்து பிரச்­சினை கார­ண­மாக உறுப்­பினர் மெள­லவி பஸ்ருல் ரஹ்மான் மற்றும் ஏ.உதுமான் லெப்பை ஆகியோர் கலந்து கொள்­ள­வில்லை.

அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் (வக்பு சபை உறுப்­பினர்)
புத்­த­சா­சனம், மத மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்­ச­ரிடம் வக்பு சபை பற்­றியும் என்னைப் பற்­றியும் தவ­றான தக­வல்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. நான் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் பொதுச் செய­லா­ள­ராகப் பதவி வகிக்கும் அதே நேரம் வக்பு சபையின் உறுப்­பி­ன­ரா­கவும் பத­வி­வ­கிப்­பது தவ­றென்றும், அவ்­வாறு பதவி வகிப்­பதால் உலமா சபையின் கருத்­துக்­க­ளுக்கு வாய்ப்­ப­ளிக்கும் சந்­தர்ப்பம் உள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

நான் பதவி வகிப்­பது தவ­றென்றால் வக்பு சபையின் அங்­கத்­த­வர் பத­வியை இரா­ஜி­னாமா செய்து விடு­வ­தற்குத் தயா­ராக இருப்­ப­தாக அமைச்­ச­ரிடம் தெரி­வித்தேன். மேலும் நான் காலி முகத்­திடல் ‘அர­க­லய’ (போராட்­டத்தை) ஆத­ரிப்­ப­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. ­­மத தலை­வர் என்ற வகையில் நானும் சர்வமத தலைவர்கள்அ­­மைப்பில் இருக்­கிறேன். இந்த அமைப்பு ‘அர­க­லய’ போராட்­டத்தை எதிர்க்­க­வில்லை. ஆத­ரவு வழங்­கு­கி­றது. அந்த வகை­யிலே ‘அர­க­ல­ய’­வுக்கு நாம் ஆத­ரவு வழங்­கு­கிறோம். இது ஒரு அர­சியல் செயற்­பா­டல்ல, நாட்­டி­னதும் நாட்டு மக்­க­ளி­னதும் எதிர்­கால நன்மை கரு­தியே இப்­போ­ராட்டம் நடை­பெ­று­கி­றது என்­பதை அமைச்­ச­ருக்கு தெளி­வு­ப­டுத்­தினேன் என்று அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் தெரி­வித்தார்.

வக்பு சபை சுயா­தீ­ன­மாக செயற்­படும் ஒரு நிறு­வ­ன­மாகும். அதன் சுயா­தீ­னத்தை உறு­தி­செய்­வ­தற்­கா­கவே சுயா­தீ­ன­மாக இயங்கும் சிவில் சமூக அமைப்­புகள் அமைச்­சரைச் சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யுள்­ளன. பள்­ளி­வா­சல்­களில் ஸியா­ரங்­களை திறப்­ப­தற்கு அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தில்லை. ஸியா­ரங்கள் மூடி­வைக்­கப்­பட்­டுள்­ளன எனவும் வக்பு சபைக்­கெ­தி­ராக அமைச்­ச­ரிடம் முறை­யி­டப்­பட்­டி­ருந்­தது.

ஸியா­ரங்கள் மூடப்­பட்­டுள்­ள­மைக்கு எதி­ராக வக்பு சபைக்கு முறைப்­பாடு செய்­யப்­பட்­டாலே அது தொடர்பில் விசா­ரணை நடாத்த முடியும். கொள்­ளுப்­பிட்டி பள்­ளி­வா­சலில் ஸியாரம் மூடப்­பட்­டுள்­ளமை தொடர்பில் மாத்­தி­ரமே முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது என்­பதை அமைச்­ச­ரிடம் தெளி­வு­ப­டுத்­தினேன் என்றார்.

சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன்
முஸ்லிம் சிவில் சமூக அமைப்­பு­களின் பிர­தி­நி­தி­க­ளு­ட­னான அமைச்சர் விதுர விக்­கி­ர­ம­நா­யக்­கவின் கலந்­து­ரை­யா­டலில் கலந்து கொண்ட சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன் கருத்துத் தெரி­விக்­கையில், வக்பு சட்­டத்தின் 5(4) பிரி­வின்­படி வக்பு சபை உறுப்­பினர் ஒருவர் தனது கட­மையை திருப்­தி­யாக செய்­யா­விட்டால் விசா­ர­ணையின் பின்பு அவரை பதவி நீக்­கு­வ­தற்-கு அமைச்­ச­ருக்கு அதி­கா­ர­மி­ருக்­கி­றது. ஆனால் எவ்­வித கார­ண­மு­மின்றி முழு சபை­யையும் பதவி நீக்கம் செய்ய முடி­யாது என்றார்.

சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன் அமைச்­ச­ரு­ட­னான கலந்­து­ரை­யா­டலின் போது நாங்கள் இங்கு ஒரு தனி­ந­ப­ருக்­காக பேசு­வ­தற்கு வர­வில்லை. முழு முஸ்லிம் சமூ­கத்­துக்­கா­கவும் பேசு­வ­தற்கே வந்­துள்ளோம். வக்பு சபை முஸ்­லிம்­களின் பொக்­கிஷம். அதனைக் கலைக்க வேண்டாம்.

வக்பு சபையில் உள்­ள­வர்கள் அர­சியல் செய்­வ­தில்லை. அவ்­வாறு எவரும் இருந்தால் விலகச் சொல்­கிறோம். அர­க­லய வேறு. அர­சியல் வேறு. அர­க­ல­ய­வுக்கு ஆத­ரவு வழங்­கு­வது அர­சியல் ஆகாது. வக்பு சபை இடை நிறுத்­தப்­பட்­டுள்­ளதை நீக்­கிக்­கொள்ள சம­ர­ச­மாக பேசு­வ­தற்கே நாம் இங்கு வந்­துள்ளோம்.

தற்­போ­தைய வக்பு சபை சமூ­கத்­துக்கு பாரிய சேவை­களை செய்­துள்­ளது. கொவிட் 19 கால கட்­டத்தில் கூட மும்­மு­ர­மாக செயற்­பட்­டுள்­ளது என விளக்­கினார்.

அமைச்சர் உறு­தி­ய­ளித்த­படி வக்பு சபையின் நிறுத்­தப்­பட்­டுள்ள செயற்­பா­டு­களை மீள ஆரம்­பிக்க நட­வ­டிக்கை எடுக்­கா­விட்டால் நீதி­மன்றில் அமைச்­சரின் உத்­த­ர­வுக்கு எதி­ராக ரிட்­மனு தாக்கல் செய்­ய­வுள்­ள­தாக சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்திருந்தார்.

ஏ.பி.எம். அஷ்ரப் (திணைக்­க­ளத்தின் முன்னாள் பணிப்­பாளர்)
புத்­த­சா­சன, மத மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சர் எவ்­வித கார­ணமும் தெரி­விக்­காமல் வக்பு சபையின் செயற்­பா­டு­களை நிறுத்­தி­ய­மையை ஏற்றுக் கொள்­ள­மு­டி­யாது என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் முன்னாள் பணிப்­பாளர் ஏ.பி.எம். அஷ்ரப் ஏற்­க­னவே கருத்து வெளி­யிட்­டி­ருந்தார்.

வக்பு சட்­டத்தின் பிர­காரம் சபையின் உறுப்­பினர் ஒரு­வரின் தவ­றான செயல் கார­ண­மாக மாத்­தி­ரமே அவரை பத­வி­யி­லி­ருந்து நீக்­கலாம். ஆனால் முழு வக்பு சபை­யையும் கலைத்து விடு­வ­தற்கு அமைச்­ச­ருக்கு அதி­காரம் வழங்­கப்­ப­ட­வில்லை. உறுப்­பினர் ஒருவர் இரா­ஜி­னாமா செய்­யலாம் அல்­லது தவ­றான நடத்தை கார­ண­மாக அவர் பதவியிலிருந்து நீக்­கப்­ப­டலாம் என்றும் அவர் தெரி­வித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

என்.எம்.அமீன் (தலைவர் – ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில்)
முஸ்­லிம்­க­ளது நீண்­ட­கால உரி­மை­களில் ஒன்றே வக்பு சபை­யாகும். இந்­நி­று­வ­னத்தின் செயற்­பா­டு­களை திடீ­ரென சட்­டத்­துக்கு முர­ணாக இடை­நி­றுத்­து­வது ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யா­த­தாகும்.

நாட்­டி­லுள்ள பள்­ளி­வா­சல்­களை நிர்­வ­கிக்கும் நிறு­வனம் இது. இந்­நி­று­வனம் அர­சியல் தலை­யீ­டு­க­ளின்றி புறம்­பாக இயங்கி வரு­கி­றது. இந்­நி­று­வ­னத்தின் தீர்­மா­னங்­களை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் தாம­த­மின்றி அமுல்­ப­டுத்த வேண்டும்.

அமைச்­ச­ரு­ட­னான கலந்­து­ரை­யாடல் வெற்­றி­ய­ளித்­துள்­ளது. அமைச்சர் வக்பு சபையின் இடை­நி­றுத்­தத்தை நீக்­கு­வ­தாக உறு­தி­ய­ளித்­துள்ளார். இது தொடர்­பான உத்­த­ர­வு­களை அமைச்சின் செய­லா­ள­ருக்கு வழங்கியுள்ளார் என என்.எம்.அமீன் தெரிவித்தார்.

சமூகம் ஒற்றுமைப்பட வேண்டும்
முஸ்லிம் சமூகத்தில் கொள்கை முரண்பாடுகள் நிலவுகின்றமையே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணமாய் அமைந்துள்ளது.

காதிநீதிமன்ற முறைமையை இல்லாமற் செய்ய வேண்டும் என்று எம்மவர்களில் ஒரு சாராரே வேண்டி நின்றார்கள். அதற்கான முன்னெடுப்புகள் இடம்பெற்று வருகின்றன. இதேபோன்று வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இஸ்லாமிய நூல்கள் மற்றும் குர்ஆன் பிரதிகள் கண்காணிப்புக்குட்படுத்தப்பட வேண்டும். அவற்றில் அடிப்படைவாத கொள்கைகள் புகுத்தப்பட்டுள்ளன என்று அதிகாரத்தில் உள்ளவர்களிடம் எம்மவர்களில் சிலரே முறையிட்டார்கள். ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிலும் சாட்சியமளித்தார்கள். அதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் இஸ்லாமிய நூல்கள், குர்ஆன் பிரதிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பின்பே பாதுகாப்பு அமைச்சு மற்றும் கலாசார அமைச்சினால் அனுமதி வழங்கப்படுகிறது.

இந்த வரி­சையில் தற்­போது வக்­பு­சபை பற்­றியும் அதி­கா­ரத்தில் உள்­ள­வர்­க­ளிடம் முறைப்­பா­டுகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. இம்­மு­றைப்­பா­டு­களை முன்­வைப்­ப­வர்கள் முஸ்லிம் சமூ­கத்தை மேலும் சவால்­க­ளுக்­குட்­ப­டுத்­து­கின்­றனர்.
எனவே முஸ்லிம் சமூகம் அரசியல் மற்றும் கொள்கை முரண்பாடுகளைக் களைந்து சமூகத்தின் மீட்சிக்காக செயலில் இறங்க வேண்டும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.