‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் பரிந்துரைகள் கூறுவது என்ன?

0 313

ஏ.ஆர்.ஏ.பரீல்

முஸ்லிம் தனியார் சட்டம் முழு­மை­யாக நீக்­கப்­ப­ட­வேண்டும், அரச சேவை­யி­லுள்ள முஸ்லிம் பெண்­க­ளுக்கு ‘இத்தா’ கால விடு­முறை ரத்துச் செய்­யப்­பட வேண்டும், முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் கலா­சார ஆடைக்குத் தடை விதிக்க வேண்டும்…

பொது­பல சேனா அமைப்பின் பொதுச் செய­லா­ளரும் “ஒரே நாடு ஒரே சட்டம்” ஜனா­தி­பதி செய­ல­ணியின் தலை­வ­ரு­மான கலகொட அத்தே ஞான­சார தேரரின் சிபா­ரி­சுகளே இவை.

“ஒரே நாடு ஒரே சட்டம்” ஜனா­தி­பதி செய­ல­ணிக்கு தலை­வ­ராக தான் நிய­மிக்­கப்­பட்ட வாய்ப்பைப் பயன்­ப­டுத்தி ஞான­சார தேரர் தனது இலக்­கினை நிறை­வேற்­ற முயற்சித்துள்ளார் என்பதையே இந்தப் பரிந்துரைகள் காண்பிக்கின்றன.

கடந்த மாதம் 29 ஆம் திகதி ஞான­சார தேரர் “ஒரே நாடு ஒரே சட்டம்” செய­ல­ணியின் பரிந்­து­ரைகள் அடங்­கிய அறிக்­கை­யினை ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க்ஷ­விடம் கைய­ளித்தார். 43 பரிந்­து­ரை­களை உள்­ள­டக்­கிய குறிப்­பிட்ட அறிக்கை 8 அத்­தி­யா­யங்­க­ளையும், இரண்டு பாகங்­க­ளையும் கொண்­ட­தாக அமைந்­துள்­ளது. இவ்­வ­றிக்கை தொழில் வல்­லு­னர்கள், அரசு சாரா அமைப்­புகள், மதக் குழுக்கள் பல்­வேறு இனக்­கு­ழுக்கள், பல்­க­லை­க்க­ழக சமூகம் மற்றும் சட்­ட­வல்­லு­னர்­க­ளி­ட­மி­ருந்து நாட்டின் அனைத்துப் பகு­தி­க­ளையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி பெற்றுக் கொள்­ளப்­பட்ட வாக்கு மூலங்கள் மூலம் தயா­ரிக்­கப்­பட்­டது என அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. 1200 க்கும் மேற்­பட்­ட­வர்கள் சாட்­சியம் வழங்­கி­யுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அர­சி­ய­ல­மைப்பின் 23 ஆம் பிரி­வுக்­க­மைய ஜனா­தி­ப­திக்கு வழங்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரத்தின் கீழ் 2021ஆம் ஆண்டு அக்­டோபர் மாதம் 28 ஆம் திகதி “ஒரே நாடு ஒரே சட்டம்” செய­லணி நிறு­வப்­பட்­டது. இச்­செ­ய­லணி தொடர்­பான விளக்­கங்கள் 2251/30 ஆம் இலக்க வர்த்­த­மா­னியில் வெளி­யி­டப்­பட்­டது. இதன் பணிகள் 2022.02.28 ஆம் திகதி பூர­ணப்­ப­டுத்த வேண்டும் என வர்த்­த­மா­னியில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. பின்பு அதன் காலம் வர்த்­த­மானி மூலம் 2022.02.28ஆம் திக­தி­யி­லி­ருந்து 3 மாத­காலம் நீடிக்­கப்­பட்­டது. இத­னை­ய­டுத்து மேலும் ஒரு மாத காலம் நீடிக்­கப்­பட்­டது.

“ஒரே நாடு ஒரே சட்டம்” செய­ல­ணியில் தலைவர் உட்­பட 13 பேர் அங்கம் வகித்­தனர். இவர்­களில் நால்வர் முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்­த­வர்கள். என்­றாலும் செய­ல­ணியின் செயற்­பா­டுகள் ஆரம்­பிக்­கப்­பட்டு சில மாதங்­களில் முஸ்லிம் அங்­கத்­த­வர்­க­ளான விரி­வு­ரை­யாளர் மொஹமட் இன்­திகாப், கொழும்பு மாந­க­ர­சபை உறுப்­பினர் கலீலுர் ரஹ்மான், அஸீஸ் நிசார்தீன் ஆகிய மூவரும் பதவி விலகிக் கொண்­டனர். காலி உலமா சபையின் தலை­வ­ரான மெள­லவி மொஹமட் மாத்­தி­ரமே இறு­தி­வரை பத­வியில் இருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

தனியார் சட்­டத்தில் திருத்­தங்கள்
தொடர்ந்து தசாப்­த­கா­ல­மாக முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் நிலவி வந்த திருத்­தங்கள் தொடர்­பான சர்ச்­சைக்குத் தீர்வு “ஒரே நாடு ஒரே சட்டம்” செய­ல­ணியின் பரிந்­து­ரை­களின் பின்பே வழங்­கப்­படும் என ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ஷ தெரி­வித்­தி­ருந்­த­மையை இங்கு கட்­டாயம் நினை­வு­ப­டுத்­தியே ஆக வேண்டும்.

2022.02.21 ஆம் திகதி அப்­போ­தைய நீதி­ய­மைச்சர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அலி­சப்­ரி­யினால் சமர்ப்­பிக்­கப்­பட்ட முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் திருத்­தங்கள் தொடர்­பி­லான அமைச்­ச­ரவைப் பத்­திரம் அமைச்­சர்கள் சிலரின் பலத்த எதிர்ப்­பினால் நிரா­க­ரிக்­கப்­பட்­டது. அச்­சந்­தர்ப்­பத்தில் அமைச்­ச­ர­வைக்கு ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ஷ தலைமை வகித்­தி­ருந்தார்.

அன்று அப்­போ­தைய நீதி­ய­மைச்சர் அலி சப்ரி தனது அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்தில் இலங்­கையில் முஸ்­லிம்­களின் பல­தார மணம் கடு­மை­யான நிபந்­த­னை­க­ளுடன் அனு­ம­திக்­கப்­ப­ட­வேண்டும். பல­தார மணம் மலே­சியா போன்ற நாடு­களில் அமுலில் இருக்­கின்­றது. காதி­நீ­தி­மன்ற முறை­மையை இல்­லா­தொ­ழிக்­காது குடும்ப சம­ரசம் (Family Conciliate) என்ற பெயரில் இயங்கச் செய்ய வேண்டும். குடும்ப சம­ர­சத்­துக்கு ஆலோ­சனை சபை நிய­மிக்­கப்­ப­ட­வேண்டும். இங்கு தீர்க்­கப்­ப­டாத பிரச்­சி­னைகள் மாவட்ட நீதி­மன்­றுக்கு அனுப்­பப்­ப­ட­வேண்டும் என குறிப்­பிட்­டி­ருந்தார்.

அமைச்­சரின் குறிப்­பிட்ட அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்தை அப்­போ­தைய அமைச்­சர்­க­ளான சரத் வீர­சே­கர, விமல் வீர­வன்ச, உதய கம்­மன்­பில ஆகியோர் கடு­மை­யாக எதிர்த்­தனர். சரத்­ வீ­ர­சே­கர இலங்­கையில் ஒவ்வோர் இனத்­துக்கும் ஒரு சட்டம் இருக்க முடி­யாது என வாதிட்டார்.

இந்தக் கடு­மை­யான விவா­தங்­க­ளுக்கு மத்­தியில் அன்­றைய அமைச்­ச­ரவைக் கூட்­டத்­துக்கு தலைமை வகித்த ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ஷ “ஒரே நாடு ஒரே சட்டம்” செய­ல­ணியின் பரிந்­து­ரைகள் கிடைக்­கும்­வரை முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் எவ்­வித திருத்­தங்­க­ளையும் செய்­வ­தில்லை எனத் தெரி­வித்தார்.

தற்­போ­து செய­ல­ணியின் பரிந்­து­ரைகள் அடங்­கிய அறிக்கை ஜனா­தி­ப­தியின் கைக­ளுக்குக் கிடைத்­தி­ருக்­கி­றது. ஜனா­தி­பதி என்ன செய்­யப்­போ­கிறார்-? நாடு பொரு­ளா­தார அர­சியல் மற்றும் அந்­நிய செலா­வணி நெருக்­க­டிக்குள் சிக்­கி­யுள்ள நிலையில் ஜனா­தி­ப­தியின் தீர்­மானம் எவ்­வாறு அமை­யப்­போ­கி­றது? பொறுத்­தி­ருந்து பார்க்க வேண்டும்.
அர­சாங்கம் எரி­பொருள் நெருக்­க­டிக்குள் சிக்கியுள்ள நிலையில் அமைச்­சர்கள் மத்­திய கிழக்கு நாடு­க­ளிடம் எரி­பொ­ரு­ளுக்கு கையேந்­தி­யுள்ள நிலையில் செய­ல­ணியின் முஸ்­லிம்­களைப் பழி­வாங்கும் வகை­யி­லான பரிந்­து­ரைகள் அவ­ச­ர­மாக அமுல்­ப­டுத்­தப்­ப­டுமா என்­பது சந்­தே­கமே.

இத்தா விடு­முறை
1951 ஆம் ஆண்டு நாட்டில் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்டம் அமு­லுக்கு வந்த காலத்­தி­லி­ருந்து அரச துறையில் பணி­யாற்றும் முஸ்லிம் பெண்கள் இத்தா கால விடு­மு­றையை அனு­ப­வித்து வரு­கின்­றனர்.

தனது கணவர் உயி­ரி­ழக்கும் பட்­சத்தில் அரச சேவையில் இருக்கும் இஸ்­லா­மிய பெண்­க­ளுக்கு 4 மாதங்கள் 10 நாட்­க­ளுக்கு வழங்­கப்­படும் இத்தா விடு­முறை தொடர்­பான சட்டம் திருத்­தப்­பட்டு மத­வே­று­பா­டுகள், கணவர் அல்­லது மனைவி என்ற வேறு­பா­டுகள் இன்றி ஒரு­மாத கால விடு­முறை வழங்­கப்­ப­ட­வேண்டும் என “ஒரே நாடு ஒரே சட்டம்” செய­லணி பரிந்­துரை முன்­வைத்­துள்­ளது. வரு­ட­மொன்றில் வழங்­கப்­படும் விடு­மு­றை­களில் இந்த விடு­முறை உள்­வாங்­கப்­ப­ட­வேண்­டு­மெ­னவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

கணவர் மர­ணித்த பின்பு வித­வை­யாகும் மனைவி தனது வீட்டில் தனி­மையில் இத்தா இருக்க வேண்டும் என்றே இஸ்லாம் கூறு­கி­றது. இந்த விடு­முறை நீக்­கப்­பட்டால் முஸ்லிம் பெண்கள் அசெ­ள­க­ரி­யங்­களை எதிர்­நோக்க வேண்­டி­யேற்­படும். அத்­தோடு சம்­ப­ள­மற்ற விடு­முறை பெற்­றுக்­கொள்ள வேண்­டிய நிலை உரு­வாகும்.

முகத்தை மூடி ஆடை அணிய தடை
பொது இடங்­களில் முழு­மை­யாக முகத்தை மூடும் வகையில் ஆடை அணி­வ­தற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் செய­லணி பரிந்­து­ரைத்­துள்­ளது. இந்தப் பரிந்­துரை முஸ்லிம் பெண்­களை இலக்­காகக் கொண்ட தடை­யாகும். இவ்­வா­றான பரிந்­து­ரைகள் முஸ்லிம் சமூ­கத்தை பல்­வேறு சிர­மங்­க­ளுக்கு உட்­ப­டுத்தும் என்­பதில் சந்­தே­க­மில்லை.

காதி­நீ­தி­மன்றக் கட்­ட­மைப்பு நீக்­கப்­பட்டால் முஸ்லிம் சமூகம் பொது சட்­டத்தின் கீழேயே ஆளப்­படும். முஸ்­லிம்கள் இது­வரை காலம் அனு­ப­வித்து வந்த உரி­மை­களை இழந்து விடு­வார்கள். குடும்ப பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு பெற்­றுக்­கொள்­வ­தற்கு அவர்கள் மாவட்ட நீதி­மன்­றங்­க­ளையே நாட­வேண்­டி­யேற்­படும்.

ஏனைய முக்­கிய பரிந்­து­ரைகள்
• அர­சியல் கட்­சிகள், அர­சியல் வாதி­களின் தேர்­த­லுக்குப் பயன்­ப­டுத்தும் நிதி எங்­கி­ருந்து கிடைத்­தது என்­பது தொடர்பில் ஆராய்ந்து, கணக்­காய்வு செய்­வ­தற்குப் புதிய சட்­ட­மொன்று எதிர்­வரும் தேர்­த­லுக்கு முன்­ன­தாக உரு­வாக்­கப்­பட வேண்டும்.
• நீதி­மன்ற நட­வ­டிக்­கையின் ஊடாக குற்­ற­வியல் குற்­றச்­சாட்­டுகள் சுமத்­தப்­பட்­டுள்­ள­வர்­களின் வழக்கு விசா­ர­ணைகள் நிறைவு பெறும்­வரை ஜனா­தி­பதி, பிர­தமர் மற்றும் அமைச்சுப் பொறுப்­பு­களை வழங்­காத வகையில் புதிய சட்­ட­மொன்று உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும். குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­ட­வர்­களை மக்கள் பிர­தி­நி­தி­க­ளாக மக்­களே தெரிவு செய்யும் பட்­சத்தில் அவர்­களை உறுப்­பினர் பத­வியில் மாத்­திரம் இருக்க அனு­மதி வழங்க முடியும்.
• அர­சி­யல்­வா­தி­களின் சொத்து விப­ரங்கள் தொடர்­பான கணக்­காய்­வு­களை நடத்­து­வ­தற்கு கணக்­காய்வு ஆணை­யாளர் நாய­கத்­திற்கு அதி­கா­ரத்தை வழங்க வேண்டும். அர­சியல்வாதி­களின் சொத்­துக்கள் குறித்த தக­வல்­களை பொது­மக்­க­ளுக்கும் காட்­சிப்­ப­டுத்த அனு­மதி வழங்­கப்­ப­ட­வேண்டும்.
• மதங்­களின் சுதந்­தி­ரத்­திற்குப் பாதிப்பு ஏற்­ப­டாத வகையில் மத­மாற்று நட­வ­டிக்­கை­க­ளுக்குத் தடை­வி­திக்கும் புதிய சட்­டத்தைக் கொண்டு வர­வேண்டும்.
• மொழி, இனம் என்ற அடிப்­ப­டையில் அர­சியல் கட்­சி­களை பதிவு செய்ய அனு­மதி வழங்கக் கூடாது. அவ்­வாறு பதிவு செய்­யப்­பட்­டுள்ள கட்­சி­களின் பெயர்­களை மாற்­று­வ­தற்கு கால அவ­காசம் வழங்­கியும் கட்­சி­களின் பெயர்­களை மாற்­றாத பட்­சத்தில் கட்­சியை தடை செய்ய வேண்டும்.
• விற்­பனை நிலை­யங்­களில் ஹலால் பொருட்­க­ளுக்கு வேறு பிரி­வொன்று அமைக்­கப்­பட வேண்டும்.
• நீதி­மன்ற அவ­ம­திப்பு குறித்த தண்­ட­னைக்­கான காலம் உள்­ளிட்ட விட­யங்­களை நிர்­ணயம் செய்யும் வகை­யி­லான புதிய சட்­ட­மொன்று கொண்டு வரப்­பட வேண்டும்.
• கல்வி அமைச்சின் விட­ய­தா­னங்­க­ளுக்கு அமைய அனைத்து குழந்­தை­க­ளுக்கும் கல்வி கற்­பது கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்­ளது. (இலங்­கையில் சில குழந்­தைகள் மதம் சார்ந்த கல்­வியை மாத்­திரம் கற்­பதைத் தவிர்த்து 16 வயது வரை கல்வி அமைச்சின் விட­ய­தா­னங்­க­ளுக்கு அமைய பாட­சாலை கட்­டாய கல்வி அவ­சியம் என பரிந்­துரை செய்­யப்­பட்­டுள்­ளது. கட்­டாய கல்­விக்கு மேல­தி­க­மாக வேறு கல்­வி­களை கற்க முடியும்.)
• தேச வழமை சட்டம், முஸ்லிம் சட்டம், கண்­டியர் சட்டம் ஆகி­யன முழு­மை­யாக நீக்­கப்­பட்டு பொதுச்­சட்­டத்தின் கீழ் அச்­சட்­டங்கள் உள்­வாங்­கப்­பட வேண்டும்.
• சாதியை வெளிப்­ப­டுத்தி ஊட­கங்­களில் விளம்­பரம் பிர­சு­ரிப்­பது தடை செய்­யப்­பட வேண்டும்.
• கைதி­க­ளுக்­கான சுகா­தாரம், இட­வ­சதி, உணவு போன்ற விட­யங்­களை உறுதி செய்து ஐக்­கிய நாடுகள் சபையின் கைதிகள் தொடர்­பி­லான சட்­டத்தைப் பின்­பற்றி சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைக்­கப்­பட வேண்டும்.
• விஷேட தேவை­யு­டை­ய­வர்­களின் உரி­மை­க­ளுக்­கான ஐ.நா. சபையின் சட்­டத்­திற்கு அமை­வா­ன­தாக விஷேட தேவை­யு­டை­ய­வர்­களின் உரி­மை­களைப் பாது­காக்கும் வகையில் புதிய சட்­ட­மொன்று கொண்­டு­வ­ரப்­பட வேண்டும். விஷேட தேவை­யு­டை­ய­வர்­க­ளுக்­கான தற்­போது காணப்­ப­டு­கின்ற பிரத்­தி­யேக பாட­சா­லை­களை தவிர்த்து அவர்­களை ஏனைய மாண­வர்­க­ளுடன் கல்வி கற்க சந்­தர்ப்பம் வழங்­கப்­பட வேண்டும்.
• இந்­நாட்டில் வதியும் சம்­பி­ர­தாய முஸ்லிம் பிரி­வொன்று இஸ்­லாத்­தி­லி­ருந்தும் விலகிச் சென்­ற­தாக அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை அறி­விப்புச் செய்­துள்­ளது. 1979ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் திகதி உலமா சபை­யினால் விடுக்­கப்­பட்­டுள்ள இந்த சமய பத்­வாவை அகற்­று­மாறு உலமா சபைக்கு தகு­தி­வாய்ந்த அதி­கா­ரி­யொ­ருவர் மூலம் அறி­விக்க வேண்டும்.
• எந்­தவோர் இஸ்­லா­மிய அறிஞர் அல்­லது சமய அமைப்பு மூலம் பத்வா என்று கூறப்­படும் சமய தீர்ப்பு அடிப்­ப­டை­வா­தத்­துக்கு சார்­பாக மற்றும் ஒற்­று­மைக்கு குந்­த­க­மாக வழங்­கப்­ப­டு­வதைத் தடை செய்­வ­தற்கு உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும்.
• ஹலால் சான்­றிதழ் தொடர்பில் 2020 பெப்­ர­வரி மாதம் 19ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள தேசிய பாது­காப்பு தொடர்­பி­லான மேற்­பார்வை செயற்­கு­ழுவின் அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள பரிந்­து­ரைகள் அமுல்­ப­டுத்­தப்­பட வேண்டும்.
• சுய­வி­ருப்­பத்தின் கீழ் மதம் மாறிக் கொள்­வ­தற்கு பிர­ஜை­க­ளுக்­குள்ள உரி­மைக்கு குந்­தகம் ஏற்­ப­டாத வகையில் மதம் மாற்­றப்­ப­டு­வதை தடுக்கும் வகை­யி­லான சட்டம் கொண்­டு­வ­ரப்­பட வேண்டும்.
• சுகா­தார தேவைகள் போன்ற நிலை­மைகள் தவிர பொது இடங்­களில் அடை­யா­ளத்தை மறைக்கும் வகையில் முகத்தை முழு­மை­யாக மறைத்து ஆடை அணி­வது சட்­ட­ரீ­தி­யாக தடை செய்­யப்­பட வேண்டும்.
• முஸ்லிம் விவாக ஏற்­பா­டு­களில் நிக்­காஹ்வை நடாத்தி வைப்­ப­தற்­கான தேவை­யான அதி­கா­ரங்கள் முஸ்லிம் விவாக பதி­வா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்டும்.
எனும் பரிந்­து­ரைகள் உட்­பட 43 பரிந்­து­ரைகள் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செய­ல­ணி­யினால் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

நீதித்­துறை, சம­பா­லின சமூகம், பெளத்த விகா­ரை­க­ளுக்கு நம்­பிக்கைப் பொறுப்­பாளர் நிய­மனம், பாட­சாலைக் கல்வி முறை, தொல்­பொருள் பிர­தே­சங்­களின் பாது­காப்பு, யுத்­தத்தின் பின்பு சிறை வைக்­கப்­பட்­டுள்ள தமிழ், சிங்­கள மற்றும் ஏனைய கைதி­களின் விடு­தலை, தேர்தல் முறையில் திருத்­தங்கள், அர­சியல் கட்­சி­களின் பதிவு போன்ற பல்வேறு மட்டங்களிலும் சிபாரிசுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

முஸ்லிம் சமூ­கத்தை இலக்கு வைத்தே பல பரிந்­து­ரைகள் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இந்தப் பரிந்­து­ரைகள் விரைவில் அமைச்­ச­ர­வையில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளன. தற்­போ­தைய அமைச்­ச­ர­வையில் நசீர் அஹமட் மாத்­தி­ரமே முஸ்லிம் சமூ­கத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கிறார். அவர் 20ஆவது அர­சி­ய­ல­மைப்புத் திருத்­தத்­திற்கு கைதூக்­கி­யவர். 20ஆவது திருத்தம் முஸ்லிம் தரப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சிலரின் ஆதரவு காரணமாகவே நிறைவேறியது என்பதை முழு நாடும் அறியும்.

ஜனாதிபதியின் அதீத நிறைவேற்று அதிகாரத்தை ஆதரித்து ஒத்துழைப்பு வழங்கிய அமைச்சர் நசீர் அஹமட் முஸ்லிம்களின் உரிமைகளைப் பறிக்கும், காதி­நீ­தி­மன்றக் கட்­ட­மைப்­பினை இல்­லா­தொ­ழிக்கும் ஒரே நாடு ஒரே சட்டம் செய­ல­ணியின் பரிந்­து­ரை­க­ளுக்கு எதி­ராக அமைச்­ச­ர­வையில் குரல் கொடுப்­பாரா?

நாடு இன்று எதிர்­நோக்­கி­யுள்ள நெருக்­க­டி­யான சவால்­க­ளுக்கு மத்­தியில் ஒரே நாடு ஒரே சட்டம் அமு­லாக்­கப்­ப­டுமா என்­பதை பொறுத்­தி­ருந்து தான் பார்க்க வேண்­டி­யுள்­ளது.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.