பிரித்தாளும் வலைக்குள் சிக்கிய இந்துக் கல்லூரியும் அபாயா விவகாரமும்

0 419

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா

அறி­முகம்
இக்­கட்­டு­ரையை தமி­ழிலே வார்த்துத் தமிழர்கள் விரும்­பி­வா­சிக்கும் ஒரு பத்­தி­ரி­கையில் வெளி­யி­டு­வதா அல்­லது ஆங்­கி­லத்தில் உரு­வாக்கிப் பல இனத்­தி­னரும் படிக்கும் கொழும்பு தெலி­கிராப் மின்­னி­தழில் வெளி­யி­டு­வதா என்று மன­துக்குள் போரிட்டு இறு­தி­யாக தமி­ழிலே படைத்து முஸ்­லிம்கள் விரும்பி வாசிக்கும் விடிவெள்ளியில் பிர­சு­ரிக்க முடி­வு­செய்தேன். ஆனால் கடந்த சில நாட்­க­ளாக இப்­பி­ரச்­சினை பூதா­க­ர­மாக வெடித்­துள்­ளதால் அதனை ஆங்­கி­லத்­திலும் வெளி­யிட வேண்டும் என்­றெண்ணி இக்­கட்­டு­ரையின் ஆங்­கில வடி­வத்தை ஏற்­க­னவே வெளி­யிட்­டுள்ளேன். முஸ்­லிம்­களின் சிந்­த­னையில் சில மாற்­றங்கள் ஏற்­ப­ட­வேண்டும் என்­பதே எனது முக்­கிய நோக்கம். எனது கருத்­துக்­களை எல்­லாரும் ஜீர­ணிக்­க­மாட்­டார்கள் என்­பது எனக்குத் தெரியும். இருந்தும் யதார்த்­த­வாதி வெகு­சன விரோதி என்­பதை உணர்ந்து இக்­கட்­டு­ரையை வாசகர்களுக்குச் சமர்ப்பிக்­கிறேன்.

அபா­யாவின் ஆரம்பம்
ஷண்­முகா கல்­லூ­ரியின் அபாயா பிரச்­சி­னையை அணு­குமுன் உல­க­ளா­விய ரீதியில் இப்­பி­ரச்­சினை எவ்­வாறு தோன்­றிற்று என்­ப­தையும் அது இலங்­கைக்கு எப்­போது வந்­தது என்­ப­தையும் அறிந்­து­கொள்­வது நல்­லது. உல­க­ளா­விய ரீதியில் அபா­யாவின் ஆரம்பம் 1970களின் இறுதி ஆண்­டு­க­ளுக்குச் செல்லும். இவ்­வாறு கூறு­வ­தனால் அபாயா உடையே அப்­போ­துதான் தோன்­றி­யது என்­பது அர்த்­த­மல்ல. அது பெண்­களின் உடை­யாக இஸ்லாம் தோன்­று­வ­தற்குப் பல்­லா­யிரம் ஆண்­டு­க­ளுக்கு முன்பே மெசப்­பொத்­தே­மி­யாவில் இருந்­த­தாக வர­லாறு கூறு­கி­றது. ஆனால் இஸ்லாம் தோன்­றி­யதன் பின்பு அது பெண்­க­ளின் ஒரு கௌர­வ­மான ஆடை­யாக பிர­பல்யம் அடைந்­தது. காமப் பிசா­சு­க­ளா­கவும் பாவனை முடிந்­தபின் தூக்கி எறி­யப்­ப­ட­வேண்­டிய ஒரு சாதா­ரண வீட்டுப் பொரு­ளா­கவும் பெண்­களைப் பாவித்த அரே­பி­ய­ரி­டையே இஸ்லாம் ஒரு பெண்­ணினப் புரட்­சி­யையே உண்­டு­பண்­ணி­ய­தென்றால் அது மிகை­யா­காது. ஆரம்­பத்தில் அந்த உடை பல நிறங்­களில் குறிப்­பாகப் பச்சை நிறத்தில் அணி­யப்­பட்­டி­ருந்­தாலும் அப்­பா­சி­ய­ராட்சிக் காலத்தில் அதா­வது ஒன்­பதாம் நூற்­றாண்டில் அது கறுப்பு நிற ஆடை­யாக மாறிற்று. இது ஒரு சுவை­யான வர­லாறு. அதை இங்கே விப­ரிப்பின் கட்­டுரை மிகவும் நீண்­டு­விடும்.

மத்­தி­ய­கி­ழக்கில் மாற்றம்
1970களின் இறு­தி­வரை அந்த ஆடை மத்­தி­ய­ கி­ழக்­கிலும் வட­ஆ­பி­ரிக்­கா­விலும் மட்­டுமே பெரும்­பாலும் காணப்­பட்ட வேளை­யி­லேதான் மத்­திய கிழக்கின் அரபு நாடுகள் எண்ணெய் வளத்தால் உலகப் புகழ் பெற்­றதும், ஈரா­னியப் புரட்சி ஏற்­பட்­டதும், இஸ்­லா­மிய விழிப்­புணர்வொன்று உலக முஸ்­லிம்­களை ஆட்­கொண்­டதும். அந்த உணர்வினால் உந்­தப்­பட்ட சில முஸ்லிம் இயக்­கங்கள் மேற்கு நாடு­களால் உரு­வாக்­கப்­பட்ட உலக ஒழுங்கை இஸ்­லா­மிய உலக ஒழுங்­காக மாற்­றி­ய­மைக்­கலாம் என எண்ணத் துணிந்­தன, அந்தத் துணிவின் ஒரு செயற்­பா­டாக அல்­கைதா இயக்கம் அமெ­ரிக்­காவை தாக்­கி­யதால் அமெ­ரிக்க தலை­மை­யி­லான மேற்கு நாடு­களின் படைகள் ஈராக்­கையும் ஆப்­கா­னிஸ்­தா­னையும் குண்­டு­வீசித் தகர்க்க அது பின்னர் பயங்­க­ர­வா­தத்­துக்கு வழி­வ­குத்து முஸ்லிம் மத்­திய கிழக்கே ஒரு போர்க்­க­ள­மாக மாறிற்று. அந்த அழி­வி­னாலும் அட்­டூ­ழி­யங்­க­ளாலும் பல இலட்­சக்­க­ணக்­கான முஸ்லிம் ஆண்­களும் பெண்­களும் சிறார்­களும் அக­தி­க­ளாக்­கப்­பட்டுப் புலம்­பெ­ய­ர­லா­யினர். இந்தப் புலம்­பெயர்வுடன் ஆடை­ய­லங்­கா­ரங்­களும் புலம்­பெ­யரத் தொடங்­கின. வேற்றுக் கலாசார நாடு­க­ளுக்குள் முஸ்­லிம்கள் படை­ப­டை­யாக நுழையத் தொடங்­கி­யதும் முஸ்­லிம்­களின் கலா­சார அம்­சங்கள் பிரச்­சி­னை­களைத் தோற்­று­வித்­தமை தவிர்க்­க­மு­டி­யாத ஒரு விளைவு. அவற்றுள் ஒன்­றுதான் அபாயா பிரச்­சினை. அந்தப் பிரச்­சி­னையின் சில விப­ரீத விளை­வு­களை நேரிலே கண்டு அனு­ப­வித்­துள்ளேன். ஆனால் காலம் செல்லச் செல்ல மக்­களின் புரிந்­துணர்வினாலும் சிவில் அமைப்­பு­களின் அறிவூட்டலாலும் சூழல் ஏற்­ப­டுத்­திய தாக்­கங்­க­ளாலும் அப்­பி­ரச்­சினை இப்­போது மேற்கு நாடு­களில் தணிந்­துள்­ளதை காண­மு­டி­கி­றது.

இலங்­கைக்குள் அபாயா
இலங்­கைக்குள் 1980களின் பின்னர் அபாயா நுழைந்­தமை புலம்­பெயர்வினா­லல்ல; ஜே. ஆர். ஜெயவர்த்தனவின் திறந்த பொரு­ளா­தாரக் கொள்­கை­களால். மத்­திய கிழக்­குக்குத் தொழில்­தே­டிச்­சென்ற முஸ்லிம் ஆண்­களும் பெண்­களும் அங்­குள்ள நடை­யுடை பாவ­னை­க­ளாலும் மத ஆசா­ரங்­க­ளாலும் கவ­ரப்­பட்டு தாயகம் திரும்­பும்­போது அவற்­றையும் தம்­முடன் கொண்­டு­வந்­தனர். ஆனால் 1980களுக்­குப்பின் இன­வெ­றியால் பீடிக்­கப்­பட்டு ஒரு போர்க்­க­ள­மாக மாறி­யி­ருந்த இலங்­கையில் வேற்­று­நாட்டு முஸ்லிம் கலாச்­சார அமி­சங்­களும் இன­வெ­றிக்குத் தூபம் போடு­வ­தா­கவே தோன்­ற­லா­யின. இதனால் அபா­யாவும் வேறு சில முஸ்லிம் கலா­சார அடை­யா­ளங்­களும் குறிப்­பாகப் பெரும்­பான்மைச் சமூ­கத்­துக்குள் முஸ்­லிம்­களும் தீவிர மத­வா­தி­க­ளாகி நாட்டைக் கூறு­போ­­டு­வ­தற்கு ஆயத்­த­மா­கின்­றனர் என்ற ஒரு தப்­ப­பிப்­பி­ரா­யத்­தையும் அசா­தா­ரண அச்­சத்­தையும் வளர்க்கலா­யிற்று. அவ்­வா­றான ஓர் ஆபத்­தான வளர்ச்சியை முஸ்லிம் தலை­மைத்­துவம் அப்­போதே உணர்ந்து அத­னைத்­த­விர்க்க வழி­களைத் தேடா­த­தை­யிட்டு ஏற்­க­னவே பல கட்­டு­ரை­களில் இக்­கட்­டு­ரை­யாளர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். அதனால் இன்­று­வரை அபாயா ஒரு பிரச்­சி­னைக்­கு­ரிய கலா­சாரச் சின்­ன­மா­கவே சிருஷ்­டிக்­கப்­பட்டு வரு­வது கண்­கூடு. இந்­நாட்டில் இன­வாதம் தலை­வி­ரித்­தா­டும்­வரை அபா­யாவும் பிரச்­சி­னை­களை தொடர்ந்து ஏற்­ப­டுத்­திக்­கொண்டே இருக்கும். இனி ஷண்­முகா கல்­லூரிப் பிரச்­சி­னைக்கு வருவோம்.

ஷண்­முகா கல்­லூ­ரிக்குள் அபாயா
ஷண்­முகா கல்­லூரி 1923ல் ஆரம்­பிக்­கப்­பட்ட இந்து மாண­வி­களின் கல்­விக்­கூடம். “எழுமின், விழிமின், இலக்கை அடை­யும்­வ­ரை”என்ற குறிக்­கோ­ளுடன் இந்துக் கலாச்­சாரச் சூழலில் இயங்கும் ஓர் அறி­வா­லயம். எனவே ஏறத்­தாழ ஒரு நூற்­றாண்டு வய­து­டைய இக்­கல்­லூ­ரிக்­கென சில தனிப்­பட்ட மர­பு­களும் நிய­தி­களும் வளர்ந்துள்­ளமை தவிர்க்­க­மு­டி­யாத ஒன்று. ஆகவே அங்கு பணி­யாற்றும் ஆசி­ரியர்களும் ஆசி­ரி­யை­களும் மற்றும் பணி­யாளர்களும் அந்த நெறி­களைக் கடைப்­பி­டிக்க வேண்­டு­மென கல்­லூரி நிர்­வாகம் எதிர்­பார்ப்­பது நியா­ய­மா­னதே. அந்த நெறி­களுள் ஒன்று ஆசி­ரி­யைகள் சேலை அணிந்து வர­வேண்டும் என்­ப­தாகும். ஆசி­ரி­யை­க­ளுக்­கான ஒரு சீருடை எனவும் அதைக் கரு­தலாம். அது அக்­கல்­லூ­ரியின் ஒரு மர­பே­யன்றி சட்­ட­மல்ல. அதற்­கொப்ப, சில முஸ்லிம் ஆசி­ரி­யை­களும் சேலை அணிந்து அங்கு பணி­யாற்­றி­யுள்­ளனர். அபாயா இலங்­கைக்குள் நுழை­யு­முன்னர் எத்­த­னையோ நூற்­றாண்­டு­க­ளாக சேலையே முஸ்லிம் பெண்­களின் ஆடை­யாக இருந்­த­தென்­ப­தையும் இன்னும் அது முற்­றாக மாற­வில்லை என்­ப­தையும் கவ­னத்திற் கொள்­ளல்­வேண்டும்.

இந்த நிலையில் 2017ல் ஒரு நாள் அங்கு பணி­யாற்­றிய முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அன்­று­வரை அவர்கள் அணிந்­து­சென்ற சேலை இஸ்­லா­மிய உடை­யல்ல என்­ப­தையும் அபா­யாவே தூய இஸ்­லா­மிய உடை என்­ப­தையும் இர­வோ­டி­ர­வாக உணர்ந்து மறு நாள் வரும்­போது அபா­யா­வுடன் வந்ததால் சர்ச்சை வெடித்தது.

உண்­மை­யான இஸ்­லா­மிய ஆடை எது என்ற சர்ச்சையை இக்­கட்­டுரை தவிர்த்­துக்­கொண்டு அபாயா இக்­கல்­லூ­ரியில் தோற்­று­வித்த பிரச்­சி­னையை மட்டும் ஆராய விளை­கி­றது.

இந்த ஆடை அந்தக் கல்­லூ­ரியின் நீண்­ட­கால மர­புக்கு ஒவ்­வா­தது என்­பதை அவ்­வா­சி­ரி­யைகள் நிச்­சயம் அறிந்­தி­ருப்பர். இவ்வாறிருக்கையில் சடுதியாக இவ்­வாறு நடந்து கொண்­டமை இஸ்­லா­மியப் பண்பா என்­பது இக்­கட்­டு­ரையின் முதற்­கேள்வி. இரண்­டா­வ­தாக, நிர்­வா­கத்­தினர் கல்­லூ­ரியின் நலன்­க­ருதி இவ்­வா­சி­ரி­யை­களின் முடி­வினை ஏற்­றுக்­கொள்­ளா­ததை அறிந்தும் ஏன் அபாயா அணிந்து செல்­லக்­கூ­டிய ஒரு பாட­சா­லைக்கு இவர்கள் மாறிச்­செல்ல விரும்­ப­வில்லை?

இஸ்­லா­மிய மார்க்­கத்தின் ஒரு முக்­கிய பண்பு எந்தப் பிரச்­சி­னை­யையும் நடு­நி­லையில் நின்று அணு­குதல். அத­னா­லேதான் திருக்­குர்ஆன் முஸ்­லிம்­களை உம்மத் அல் வஸத் அதா­வது நடு­நி­ல­மை­யாளர் என அழைக்­கி­றது. நபி­களார் வாழ்க்­கை­யிலும் சில உடன்­ப­டிக்­கைகள் முஸ்­லிம்­க­ளுக்குப் பாத­க­மாக அமை­யு­மெனத் தெரிந்தும் பெரு­மானார் விட்­டுக்­கொ­டுத்து வீண்­க­ல­வ­ரங்­களை தவிர்த்­ததை வர­லாறு கூறும். பெரு­மா­னாரின் ஹுதை­பியா உடன்­ப­டிக்கை இதற்­கொரு தலை­சி­றந்த உதா­ரணம். அதே­போன்று பலஸ்­தீனக் கிறிஸ்தவ ஆல­யத்­தின்முன் இரண்­டா­வது கலீபா உமர் அவர்கள் எவ்­வாறு நடந்­து­கொண்டார் என்­பதும் எப்­படி அந்த ஆல­யத்­துக்கு மதிப்­ப­ளித்தார் என்­பதும் இஸ்­லாத்தின் விட்­டுக்­கொ­டுத்தல் பண்­புக்கு ஒப்­பற்ற உதா­ர­ணங்கள்.

இஸ்­லா­மிய ஆடை அலங்­கா­ரங்­களைத் தூக்­கிப்­பி­டித்­துக்­கொண்டு போராடும் வீராங்­க­னை­களின் சிந்­த­னையில் சமூக ஒழுங்கு பற்­றிய இஸ்­லா­மிய விழு­மி­யங்கள் எங்கே போனதோ?

மாறாக, அவ்­வா­சி­ரி­யைகள் அபாயா அணி­வது அவர்களின் அடிப்­படை மனித உரி­மை­களுள் ஒன்று என்று கணித்து தமது முறைப்­பாட்டை நீதி­மன்­றத்­துக்குக் கொண்­டு­சென்­றனர். அங்கே அவர்கள் வெற்­றி­யீட்­டி­யதில் ஆச்­ச­ரி­ய­மில்லை. ஒருவர் எதனை உடுக்­க­வேண்டும் என்­பது அவரின் சுய­வி­ருப்பம். அது அவரின் அடிப்­படை உரிமை. அதை சட்டம் அங்­கீ­க­ரிக்­கி­றது, நீதி­மன்­றமும் நீரூ­பித்­து­விட்­டது. ஆனால் ஒரு நிறு­வனம் தனது மர­பு­க­ளையும் விழு­மி­யங்­க­ளையும் காப்­பது அதன் அடிப்­படை உரிமை என்ற உண்மை இந்தச் சர்ச்சையில் காற்­றிலே பறக்­க­வி­டப்­பட்­டமை புதுமை.

இத­னா­லேதான் அவர்கள் சென்ற நீதி­மன்றம் பொருத்­த­மற்­றது என்­ப­தையும் தமது குறையை சமூகம் என்ற மன்­றத்தில் விசா­ரித்­தி­ருக்க வேண்டும் என்­ப­தையும் நான் அப்­போதே ஓர் ஆங்­கிலக் கட்­டு­ரையில் வெளி­யிட்டு அதனை ஒரு தமி­ழேடும் மொழி­பெயர்த்துப் பிர­சுரம் செய்­தது ஞாப­கத்­துக்கு வரு­கி­றது.

சரி, வழக்கில் வென்­றா­கி­விட்­டது. மனித உரி­மையும் பாது­காக்­கப்­பட்டு வழக்­கா­ளியின் கௌர­வமும் காப்­பாற்­றுப்­பட்­டு­விட்­டது. இப்­போ­தா­வது இஸ்­லா­மிய விட்­டுக்­கொ­டுக்கும் தார்­மீகப் பண்­பு­டனும் நபி­பெ­ரு­மா­னரின் உதா­ர­ணத்­து­டனும் தனக்குச் சிறிது வச­திக்­கு­றைவு ஏற்­பட்­டாலும் சமூ­கத்தின் நல­னுக்­காக வேறு பாட­சா­லை­யொன்­றிற்கு இவ்­ ஆசிரியைகள் மாற்­றம்­கேட்டுச் சென்­றி­ருக்­கலாம் அல்­லவா? அதை விடுத்து மீண்டும் அதே கல்­லூ­ரிக்கே செல்ல நினைத்­ததன் இர­க­சியம் என்­னவோ? நீதி­மன்­றமும் அதைத்தான் விரும்­பிற்­றென்­பது உண்மை. ஆனால் ஏற்­க­னவே மாசு­ப­டுத்­தப்­பட்ட ஒரு சூழ­லுக்குள் எவ்­வாறு மீண்டும் இவ்­வா­சி­ரி­யைகள் சென்று மன அமை­தி­யு­டனும் சினேக உற­வு­டனும் பணி­பு­ரி­யலாம் என்­பதை விளங்க முடி­யா­தி­ருக்­கி­றது.
சட்டம் இப்­பெண்­ம­ணி­களின் பக்கம் என்­பதை மறுக்­க­வில்லை. ஆனால் சமூ­க­நலன் இவர்களின் பக்­கமா என்­பது சந்­தே­கமே.

பிரித்­தாளும் அர­சியல் வலை
கல்வி இலாகா பிறப்­பித்த உத்­த­ரவின் பிர­கா­ர­மா­கவே அவ்­வா­சி­ரியைகள் மீண்டும் அதே கல்­லூ­ரிக்குச் சென்­றனர் என்­பது இப்­போது தெரி­ய­வ­ரு­கி­றது. ஆனால் அந்­தக்­கல்வி இலா­கா­வுக்கு இவ்­வா­சி­ரி­யை­களின் பிரச்­சினை அக்­கல்­லூ­ரியின் அமை­தி­யான சூழலை குலைத்­து­விட்­டதால் அவர்களை மீண்டும் அங்கே பணி­யாற்ற அனுப்­பு­வது ஆபத்­தா­னது என்­பதை உணரும் சக்தி ஏன் இல்­லாமல் போனது? இங்­கேதான் ஆட்­சி­யாளர்களின் அர­சியல் தந்­தி­ர­மொன்று வெளிப்­ப­டு­கி­றது.

ராஜ­பக்ச ஆட்சி சிங்­கள பௌத்த இன­வா­தத்தை முன்­னி­லைப்­ப­டுத்திப் பத­விக்கு வந்த ஓர் அரசு. ஜனா­தி­பதி கோத்­தா­பய பௌத்­த­ இ­ன­வா­தத்தின் தூணாக நின்று செயற்­ப­டு­கிறார். ராஜ­பக்ச ஆட்­சியின் கொள்­கை­களால் நாடே இன்று வறு­மையின் பிடிக்குள் சிக்கி ஒரு பிச்­சைக்­கார நாடாக மாறி­யுள்­ளது. நாட்டின் கடன்­பளு, பாவனைப் பொருள்­களின் பற்­றாக்­குறை, விலை­வாசி ஏற்றம், தொழி­லின்மை, வரு­மானக் குறைவு, உற்­பத்தி வீழ்ச்சி என்­ற­வாறு பிரச்­சி­னை­கள் பெருகி பொது மக்­களின் வெறுப்­புக்கு ஆளா­கி­யுள்­ளது இந்த அரசு. எனவே தேர்தல் என்ற ஒன்று நடந்தால் இந்த ஆட்சி நிச்­சயம் மண் கௌவும் என்­ப­திலே சந்­தேகம் இல்லை. ஆனால் அதை நடத்த அரசு தயா­ரில்லை.

மாறாக, ஆட்­சியை எவ்­வாறு 2025க்கு அப்­பாலும் தொட­ரலாம் என்­ப­தற்­கு­ரிய வழி­வ­கை­களை ஆராய்ந்து வரு­கின்­றது. அந்த வழி­களுள் ஒன்று எதி­ர­ணிக்குள் பிள­வு­களை உண்­டு­பண்ணி அதன் ஐக்­கி­யத்தைக் குலைப்­பது. இரண்­டா­வது அர­சாங்­கத்­தின்மேல் மக்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள அதி­ருப்­தியை வேறு திசை­க­ளுக்குத் திருப்­பி­வி­டு­வது. அந்த வகையில் இனக்­க­ல­ரங்­களைத் தோற்­று­வித்தல் ஒரு சிறந்த தந்­திரம். அதற்கு வழி­வ­குத்­துள்­ளது ஷண்­முகா கல்­லூ­ரியின் அபாயாப் பிரச்­சினை. அந்தப் பிரச்­சி­னையை சுமு­க­மாகத் தீர்க்­காமல் எரி­கின்ற தீயிலே எண்­ணெய்யை ஊற்­றி­யுள்­ளது கல்வி அலு­வ­ல­கத்தின் உத்­த­ரவு. அரசின் பிரித்­தாளும் வலைக்குள் இரண்டு சிறு­பான்மை இனங்­களும் சிக்­கி­யுள்­ளன.

முஸ்லிம் தலை­மைத்­துவம்
இன்று முஸ்லிம் சமூ­கத்தை எதிர்­நோக்கும் பிரச்­சி­னை­களுள் அபாயா அணியும் சுதந்­தி­ரம்தான் முக்­கி­ய­மா­னதா? முஸ்­லிம்­க­ளுக்கு வசிப்­ப­தற்கே போதிய இட­மில்லை. அவர்­க­ளு­டைய ஊர்கள் சேரி­க­ளாக மாறிக்­கொண்­டி­ருக்­கின்­றன. படித்­த­வர்­க­ளுக்குத் தொழில் வாய்ப்­பில்லை. வியா­பாரம் செய்­வ­தற்கும் பல தடைகள். இவ்­வாறு சிங்­கள பௌத்த பேரி­ன­வாதம் முஸ்­லிம்­களை இரண்­டாந்­தரப் பிர­ஜை­க­ளாக்கி குற்­றேவல் புரியும் ஓர் இன­மாக மாற்றும் முயற்­சி­களை முஸ்­லிம்­களால் தனித்­து­நின்று போராடித் தவிர்க்க முடி­யுமா? அப்­ப­டி­யான ஒரு சூழலில் சிறு­பான்மை இனங்­க­ளி­ரண்டும் தமக்­கி­டையே இன­வாதம் பேசு­வதும் அதனை வளர்க்கும் வகையில் செயற்­ப­டு­வதம் புத்­தி­சா­து­ரி­ய­மா­னதா? மார்க்க ஞானமும் கல்வித் தேர்ச்­சியும் சாணக்­கி­யமும் நிறைந்த தலை­வர்கள் சுமு­க­மாகத் தீர்த்­தி­ருக்க வேண்­டிய கல்­லூரிப் பிரச்­சி­னையை நீதி­மன்­றம்­வரை சென்று பூதா­க­ர­மாக்கிச் சாதிக்­கப்­போ­வ­தென்ன? இப்­பி­ரச்சி­னையும் முஸ்லிம் சமூ­கத்­துக்குள் தூர­நோக்­குடன் சிந்­தித்து வழி­காட்­டக்­கூ­டிய தலை­மைத்­துவம் இல்லை என்­ப­தையே மீண்டும் உறு­திப்­ப­டுத்­து­கி­றது.

எந்த மனித உரி­மை­க­ளுக்­காக இறு­தி­வரை போரா­ட­வேண்டும் எதனை சமூக நன்­மைக்­காக விட்­டுக்­கொ­டுக்க வேண்டும் என்­ப­தை­யா­வது முஸ்லிம் தலை­மைகள் தமது மக்­க­ளுக்கு விளக்­கக்­கூ­டாதா?

இதற்­கி­டையில் புலம்­பெ­யர்ந்து வாழும் முஸ்­லிம்கள் சிலரும் பொறுப்­பற்ற முறையில் அறிக்­கை­களை விட்டு இக்­கல்­லூரிப் பிரச்­சி­னைக்கு இன­வாத மெழுகு பூசி விளை­யாட்டுப் பார்க்­கின்­றனர். இலங்கை முஸ்லிம் சமூகம் இப்போது எதிர்கொண்டிருக்கும் பாரிய நெருக்கடிகளை கருத்திற்கொண்டு உணர்சியூட்டும் முறையில் அறிக்கைகள் விடுவதை தவிர்த்தல் நல்லது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.