கொரோனா பிணவறைகளின் துயரக் கதைகள்

0 313

நதீஷா அத்துகோரல
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

இக் கட்டுரை கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கையில் கொவிட் 19 மரணங்கள் உச்சத்திலிருந்த சமயம் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிணவறையில் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது

கொரோனா எமது வாழ்க்­கைக்குக் கற்றுத் தந்­துள்ள பாடங்கள் அநேகம். மருத்­து­வ­மனைக் கட்­டில்­களில் ஒக்­ஸிஜன் குழாய்கள் மூலம் உயிரைப் பற்றிப் பிடித்துக் கொண்­டி­ருக்கும் மனி­தர்­களைப் போலவே நாளுக்கு நாள் மூச்சு நின்று போன மனி­தர்­களால் பிண­வ­றை­களும் நிரம்பி வழிந்த காட்சிகளை நாம் கண்டோம். இந்­தி­யாவில் கண்ட அள­வுக்கு பெரு­ம­ள­வான கொரோனா சடலக் குவி­யல்கள் இலங்­கையில் இல்­லா­விட்­டாலும், இங்கும் ஒரு நாளைக்கு மயா­னத்­துக்குக் கொண்டு செல்­லப்­படும் சட­லங்­களின் எண்­ணிக்கை முந்­நூறைக் கடந்­தன. இர­வு­களில் அனைத்து வைத்­தி­ய­சா­லை­க­ளி­லி­ருந்தும் சவப்­பெட்டி ஊர்­வ­லங்கள் எவ்­வித இறுதிச் சடங்குச் சோட­னை­களோ, நில விரிப்­பு­களோ, தோர­ணங்­களோ, மலர் வடங்­களோ எது­வு­மில்­லா­மல்தான் மயா­னங்­களை நோக்கிச் சென்றன. அது மாத்­தி­ர­மல்­லாமல் அநே­க­மான சட­லங்கள் உற­வினர் நண்­பர்­களோ, தமது அன்­புக்­கு­ரி­ய­வர்­களோ இறு­தி­யாக முகத்தைக் கூடப் பார்க்­காத நிலை­யில்தான் மயா­னத்­துக்கு எடுத்துச் செல்­லப்­ப­ட்டன.

எவ்­வித இறுதி மரி­யா­தை­களோ, இறுதி முத்­தங்­களோ இல்­லாமல் படுக்­கை­யி­லேயே பொலிதீன் உறைக்குள் உங்கள் இறுதி யாத்­திரை நிகழக் கூடும் என்­பதை கொரோனா ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் இந்தக் கணத்தில் கற்றுத் தந்­தி­ருக்­கி­றது. ஒரு வறிய ஏழை­யையும், அரண்­மனைச் செல்­வந்­த­னையும் ஒரே நேரத்தில் பார­பட்­சமே பாராமல் கொரோனா அரக்கன் எப்­போது வேண்­டு­மா­னாலும் மரணம் நோக்கி அழைத்துச் செல்­லலாம்.
பொலிதீன் உறையில் நிகழும் இறுதி யாத்­தி­ரை­களைக் கண்டு ஒரு பிண­வ­றையின் முன்னால் எத்­தனை ஆயிரம் பேர் தினந்­தோறும் அழுது புலம்­பு­கி­றார்கள்.

சில மாதங்களுக்கு முன்னர் காலி, கராப்­பி­டிய நக­ரத்தின் பிண­வ­றையின் முன்னால் நான் கண்­ணுற்ற சட­லங்­களின் ஊர்­வலம் ஒரு கணம் மனதைத் துணுக்­குறச் செய்­தது. அப்­போது மாலை நேரம், சரி­யாக ஐந்து மணி முப்­பது நிமி­டங்கள்.

“இன்று மாத்­திரம் கொரோனா சட­லங்கள் இரு­பத்­தைந்து. செய்­தி­ய­றிக்­கை­களில் கொரோனா மர­ணங்­களின் அளவு குறைந்­தி­ருப்­ப­தாகச் சொன்­னாலும், உண்­மையில் மர­ணங்­களில் பெரி­தாக எவ்­விதக் குறைவும் இல்லை. அனைத்தும் அர­சாங்­கத்தின் நடிப்பு. உண்­மையில் எவ்­வ­ளவு பெரிய ராஜா­வாக இருந்­தாலும் அவர்­க­ளது இறுதி யாத்­திரை இங்­கி­ருந்­துதான்” என்று பிண­வறை ஊழியர் ஒருவர் சொல்லிக் கொண்டே போனார்.

ஏழை, பணக்­காரன் என்ற பேத­மே­து­மற்று, அந்தப் பிண­வ­றையின் முன்னால் மக்கள் அழுது புலம்பும் விதம், தரையில் அமர்ந்­தி­ருந்து நிலத்தில் புரண்­டழும் விதம் ஆகி­யவை மனித வாழ்க்கை எவ்­வ­ளவு கையறு நிலைக்­குள்­ளா­கி­யி­ருக்­கி­றது என்­பதை உணர்த்­து­கி­றது. இலங்­கையின் எந்­த­வொரு பிண­வ­றைக்கு முன்னால் நீங்கள் போனாலும் அந்த வேத­னையை, அந்தக் கையறு நிலையை உங்­க­ளுக்கும் உணர்த்தும். பணம் படைத்­த­வர்கள், இல்­லா­த­வர்கள், பிர­ப­ல­மா­ன­வர்கள், உயர் குலத்­த­வர்கள், தாழ் குலத்­த­வர்கள் என்ற பேத­மே­து­மற்று அனைத்து சட­லங்­க­ளையும் ஒன்று போலவே பொலிதீன் உறையில் பொதிந்து சீல் செய்து பிண­வ­றையின் குளிர்ந்த அறை­யி­லி­ருந்து வெளியே கொண்டு வரும் போது உயி­ரோ­டி­ருப்­ப­வர்கள் எவ்­வ­ள­வுதான் அழுது புலம்­பி­னாலும் கடை­சியில் இவ்­வ­ள­வு­தானா என்று உங்­க­ளுக்குத் தோன்றும். அவ்­வா­றா­னதோர் சூழலை நெருங்­கும்­போது மனதில் தோன்றும் உணர்­வு­களைக் குறித்து புதி­தாக விவ­ரிக்கத் தேவை­யில்லை. அந்தச் சூழலில் கேட்கக் கூடிய ஒரே ஓசை அழு­கையும், ஒப்­பா­ரி­களும் மாத்­தி­ரம்தான்.

அங்கு புன்­னகை பூத்த முகங்­களைக் காணவே முடி­யாது. பிண­வ­றையின் விறாந்­தை­களில் தள்­ளு­வண்­டி­களின் மீது அமை­தி­யாகக் கைகளைக் கோர்த்­த­வாறு படுத்­தி­ருப்­ப­வர்­களின் வாழ்­நாளில் எவ்­வ­ளவு பந்­தங்கள் இருந்­தி­ருக்கும்? அவர்கள் எவ்­வ­ளவு நண்­பர்கள், சொந்­தங்­க­ளுடன் பழ­கி­யி­ருப்­பார்கள்? எவ்­வ­ளவு கன­வுகள், எதிர்­பார்ப்­புகள், இலக்­குகள் அவர்­க­ளுக்கு இருந்­தி­ருக்கும்? தமது துணையின், அம்­மாவின், அப்­பாவின், பிள்­ளையின், உற­வினர், நண்­பர்­களின் முகங்­களைக் கூட இறு­தி­யாகப் பார்க்க முடி­யாமல் இறுதிப் பய­ணத்தைப் போக நேர்ந்த எத்­தனை பேர் அந்தப் பொலிதீன் உறை­க­ளுக்குள் இருக்கக் கூடும்?

“எனது கண­வ­ருக்கு மர­ணிக்கும் அள­விற்கு எவ்­வித வியா­தியும் இருக்­க­வில்லை. இப்­போ­துதான் அவ­ருக்கு முப்­பத்­தொன்­பது வய­தா­கி­றது. அவர் பணி புரிந்து வந்த இடத்­தி­லி­ருந்து அவ­ருக்குக் கொரோனா தொற்­றி­யதைக் கேள்­விப்­பட்­டதும் எனக்கும், குழந்­தைக்கும், அம்­மா­வுக்கும் தொற்றி விடுமோ என்று பயந்து மிகவும் அழுதார். நாங்கள் பாது­காப்­பாக இருந்த போதிலும் எம்­மையும் கொரோனா தொற்­றி­யது. இன்­றோடு எமக்குக் குண­ம­டைந்து ஒரு மாதத்­துக்கும் மேலா­கி­றது. அம்மா மிகவும் வய­தா­னவர். அவ­ருக்கு சுவா­சிக்கச் சிர­ம­மா­னதும் கராப்­பிட்­டிய மருத்­து­வ­ம­னையில் அனு­ம­தித்தோம். அவ­சர சிகிச்சைப் பிரிவில் கட்டில் இருக்­கா­ததால் அம்­மாவின் உயிர் தள்­ளு­வண்­டி­யி­லேயே பிரிந்­தது. அம்­மாவின் மரணம் குறித்து அப்­போது கண­வ­ரிடம் நாங்கள் தெரி­விக்­க­வில்லை. அப்­போது அவர் தீவிர சிகிச்­சையில் இருந்தார். ஒன்­பது நாட்கள் அவ்­வாறு இருந்த பிற­குதான் கண­வ­ருக்­குக்குக் குண­மா­னது.

அம்­மாவின் மரணம் குறித்து கணவர் வீடு திரும்­பிய பிற­குதான் அவ­ரிடம் கூறினோம். ‘அம்­மாவின் பேரில் மூன்றாம் மாத அன்­ன­தான நிகழ்வைச் சிறப்­பாகச் செய்ய வேண்டும்’ என்று அவர் கூறினார். வீடு திரும்பி பதி­னைந்து நாட்­களின் பின்னர் கண­வ­ருக்கு இருமல் ஏற்­பட்­டது. இரு­ம­லுடன் மீண்டும் சுவா­சிக்கச் சிர­மப்­பட்டார். கராப்­பிட்­டிய மருத்­து­வ­ம­னைக்குக் கூட்டி வந்த போது ‘ஆஸ்­து­மா­வினால் வந்­தி­ருக்கும்’ என்­றார்கள்.

நேற்று மாலை நேரமும் என்­னோடு நன்­றாகக் கதைத்துக் கொண்­டி­ருந்தார். ‘இன்னும் இரண்டு நாட்­களில் வீட்­டுக்குத் திரும்பி விடலாம்’ என்றும் கூறினார். இரவு வேளையில் மருத்­து­வ­ம­னை­யி­லி­ருந்து என்னை அழைத்து கொவிட் நியூ­மோ­னி­யாவின் கார­ண­மாக கணவர் இறந்து விட்­ட­தாகக் கூறி­னார்கள். என்னால் நம்­பவே முடி­ய­வில்லை. கொரோனா குண­மாகி வீட்­டுக்கு வந்­த­வ­ருக்கு என்ன நேர்ந்­தது? ஒரே ஒரு தடவை எனக்கு கண­வரின் முகத்தைப் பார்க்க அனு­ம­தித்­தார்கள். குழந்­தைக்கு இப்­போ­துதான் இரண்டு வயது. அதனால் மருத்­து­வ­ம­னைக்குக் கூட்டிக் கொண்டு வர வேண்டாம் என்­றார்கள்.

அம்மா கால­மாகி இரு­பது நாட்­களில் எனது கண­வரும் இறந்து விட்டார். அழு­வ­தற்கு இப்­போது என்­னிடம் கண்ணீர் கூட இல்லை. இவ்­வா­றா­ன­தொரு துயரம் வேறு எந்தப் பெண்­ணுக்கும் நேரக் கூடாது. உங்­களைக் கும்­பிட்டுக் கேட்டுக் கொள்­கிறேன். கொரோ­னா­வி­ட­மி­ருந்து பாது­காப்­பாக இருந்து கொள்­ளுங்கள். நான் மீண்டும் ஒரு தட­வை­யா­வது எனக்கு என்­னு­டைய கண­வரின் முகத்தைப் பார்த்துக் கொள்ளக் கிடைக்­குமா என்­றுதான் இப்­போது இங்கு காத்துக் கொண்­டி­ருக்­கிறேன்” என்று ஒரு பெண்­மணி அழுது புலம்­பினார். அவர் இந்தப் பிண­வ­றையில் நான் சந்­திக்க நேர்ந்த ஒரு இளம்பெண். அவ­ரது அழுகை ஓலம் பிண­வறை முழு­வதும் எதி­ரொ­லித்துக் கொண்­டி­ருந்­தது.

அதே கராப்­பிட்­டிய மருத்­து­வ­னையின் பிண­வறை ஊழியர் ஒருவர் தனது அனு­ப­வத்தை என்­னிடம் இவ்­வாறு தெரி­வித்தார்.

“இர­வா­கும்­போது எனது மொத்த உடலும் வலிக்கும். கொரோனா சட­லங்­களைத் தள்­ளு­வண்­டியில் நானேதான் தூக்கி வைக்க வேண்­டி­யி­ருக்கும். கொரோனா சட­லங்­களைத் தொட்டுத் தூக்கக் கூட யாரும் அருகில் வரு­வ­தில்லை. நோய் தொற்றி விடும் என்ற பயம்தான் காரணம். ஒரு நாளைக்குக் குறைந்­தது இரு­பது, இரு­பத்­தைந்து கொரோனா சட­லங்கள் தவ­றாமல் இங்கு வரும். ஒரு நாள் நாற்­பது சட­லங்கள் வந்­தன. நான் இங்கு பிணங்­களை அறுப்­பதைச் செய்து வரு­கிறேன். அன்று மாத்­திரம் நான் தனி­யாக இரு­பத்­தைந்து சட­லங்­களை அறுக்க நேர்ந்­தது. எப்­ப­டியும் குறைந்­தது ஒரு நாளைக்கு பத்து, பன்­னி­ரண்டு சட­லங்­களை நான் அறுக்க வேண்­டி­யி­ருக்கும். கொவிட் நியூ­மோ­னி­யா­வினால் மர­ணிக்கும் இளம் வய­து­டை­ய­வர்­களின் சட­லங்­களைக் கட்­டா­ய­மாக அறுத்துப் பார்க்க வேண்­டி­யி­ருக்கும். நான் ஒவ்­வொரு சட­லத்தை அறுக்கும் முன்பும் கட­வு­ளுக்கு பூ வைத்து பூஜை செய்து, விளக்­கேற்றி விட்­டுத்தான் அறுக்­கிறேன்.

கடந்த பதி­னான்கு வரு­டங்­க­ளாக நான் பிண­வ­றையில் பிணங்­களை அறுக்கும் வேலையைச் செய்து வரு­கிறேன். எனது வறு­மையின் கார­ண­மாக இந்த பிணம் அறுக்கும் வேலையைச் செய்­கி­றேனே ஒழிய விருப்­பத்­தோடு நான் இதைச் செய்­வ­தில்லை. இது மிகவும் சாபம் பிடித்த தொழில். நான் கொரோனா சட­லங்­களை அறுப்­ப­தனால் எனது குழந்­தை­களின் முகங்­களைப் பார்த்தே ஐந்து மாதங்­க­ளா­கின்­றன. வீட்­டுக்குப் போக­வே­யில்லை. என்னைக் காணும்­போது நெருங்­கிய நண்­பர்கள் கூட பின்னால் நகர்ந்து போய் விடு­கி­றார்கள். நண்­பர்கள், உற­வி­னர்கள் கூட என்னைத் தள்­ளியே வைத்­தி­ருக்­கி­றார்கள். அவற்றை யோசித்துப் பார்க்­கும்­போது மிகுந்த கவலை தோன்­று­கி­றது.

எனது தொழில் ஜீவி­தத்தில் மிகவும் மோச­மான காலத்தை இப்­போது கடந்து கொண்­டி­ருக்­கிறேன். இது­வ­ரையில் கொரோனா தொற்றி மர­ணித்த ஆறு குழந்­தை­களை நான் அறுத்­தி­ருக்­கிறேன். எத்­தனை வருட கால அனு­பவம் இருந்த போதிலும், ஒரு குழந்­தை­யொன்றின் சட­லத்தைக் கைகளில் ஏந்­தி­யதும் எனது கை கால்கள் வலு­வி­ழந்து போய் விடு­கின்­றன. மிகுந்த மன உளைச்­சலை உணர்வேன்.

நான்கு நாட்­க­ளுக்கு முன்பு கொரோனா தொற்றி மர­ணித்த இரு­பத்­தெட்டு வய­தான நிறை­மாத கர்ப்­பிணித் தாயொ­ரு­வரின் சட­லத்தை இங்கு கொண்டு வந்­தார்கள். பிர­சவம் நிகழ்ந்­தி­ருக்­க­வில்லை. அந்தத் தாயின் வயிற்­றுக்குள் பூரண வளர்ச்­சி­ய­டைந்த குழந்தை இருந்­தது. அதைக் கையில் எடுத்த பிறகு வேறு இடத்தில் வைக்க எனக்கு மனம் இட­ம­ளிக்­க­வில்லை. அந்தக் குழந்­தையைத் தாயின் கால்­க­ளி­ரண்டின் அரு­கி­லேயே வைத்­தி­ருந்தேன்.

அந்தச் சட­லத்தைப் பொறுப்­பேற்க ஒரு இளைஞர் வந்தார். அவரைக் கட்­டுப்­ப­டுத்த என்னால் முடி­ய­வே­யில்லை. சட­லத்தைக் காண்­பித்­ததும் என்­னையும் தள்ளிக் கொண்டு போய் கால்­க­ள­ருகே வைக்­கப்­பட்­டி­ருந்த குழந்­தையைக் கையி­லேந்தி அர­வ­ணைத்து முத்­த­மிட்டுக் கொண்­டே­யி­ருந்தார். ‘கிரு­மி­யி­ருக்கும், முத்­த­மி­டா­தீர்கள்’ என்று நான் கத்­தினேன். அவர் அந்தச் சட­லங்­க­ளி­ரண்­டையும் பார்த்து அழுது புலம்­பி­யதைக் கண்டு நான் செய்­வ­த­றி­யாது நின்று கொண்­டி­ருந்தேன். எனது கண்­க­ளி­லி­ருந்தும் கண்ணீர்

வழிந்து கொண்­டி­ருந்­தது.
வேறு வியா­திகள் தொற்றி மர­ணிப்­பதைக் காட்­டிலும் இவ்­வா­றான திடீர் மர­ணங்கள் மிகுந்த கவ­லையைத் தரு­பவை. வீட்­டி­லி­ருந்து பத்­தி­ர­மாக பிர­ச­வத்­துக்­காக வந்த பெண் கடை­சியில் பிண­வ­றையில் துணிப்­பொதி போல கிடக்­கிறார். அந்த இளைஞர் என்­னிடம் ஒரு வேண்­டு­கோளை முன்­வைத்தார். அப்­போது சட­லத்தைப் பெட்­டி­யி­லிட்டு ஆணி­ய­டிக்கும் வேலை மாத்­தி­ரமே மீத­மி­ருந்­தது. திரு­மண வைப­வத்தின் போது தனது மனைவி கட்­டி­யி­ருந்த சேலையை அந்தச் சட­லத்­துக்கு அணிவிக்க முடி­யுமா என்று கேட்டார்.
நான் அதையும் செய்து கொடுத்தேன். அந்தச் சட­லத்­துக்கு ஆடை­ய­ணி­வித்து, குழந்­தைக்கும் அழ­கான ஆடை­யொன்றை அணி­வித்தேன். நான் ஆடை­ய­ணி­வித்து முடிக்­கும்­வரை அந்த இளைஞர் அழுது கொண்டே தனது மனை­வியின் தலையைத் தடவிக் கொடுத்துக் கொண்­டி­ருந்தார். இங்­கி­ருப்­பவை கொரோனா மர­ணங்கள் என்­பதால் யாரையும் உள்ளே நுழைய நாங்கள் அனு­ம­திப்­ப­தில்லை. ஆனாலும், அவ­ருக்கு அனு­ம­தி­ய­ளிக்­கா­தி­ருக்க எனது மனம் அன்று இட­ம­ளிக்­க­வில்லை. அதன் பிறகு வந்த இரண்டு நாட்கள் எனக்கு உறக்கம் வர­வே­யில்லை. இப்­போதும் எனக்கு அந்தச் சம்­பவம் நினை­வுக்கு வந்து கொண்­டே­யி­ருக்­கி­றது. தொடக்­கத்தில் கொரோனா தொற்­றிய முதி­ய­வர்­க­ளது சட­லங்­களே நிறைய வந்­தன. இப்­போது இளை­ஞர்­க­ளது சட­லங்கள் நிறைய வரு­கின்­றன. சில நாட்கள் இந்தப் பிண­வ­றையில் சட­லங்கள் கொசுக்­களைப் போல நிறைந்­தி­ருக்கும்.

குடும்­பத்­த­வர்கள் இந்த இடத்தில் அழுது புலம்­பு­வதைப் பார்த்துக் கொண்­டி­ருப்­ப­துதான் மிகவும் கஷ்­ட­மாக இருக்­கி­றது. சிலர் சட­லத்தைப் பார்த்து விட்டு இந்த இடத்­தி­லேயே மார­டைப்பு வந்து நெஞ்சைப் பிடித்துக் கொண்டு உயி­ரி­ழந்­தி­ருக்­கி­றார்கள். மிக அண்­மை­யிலும் அவ்­வா­றா­னதோர் சம்­பவம் நடந்­தது. கொரோனா தாக்கி மர­ணித்த கண­வனைப் பார்க்க மனை­வியும், மகளும் வந்­தி­ருந்­தார்கள். கண­வனின் முகத்தைப் பார்த்­த­துமே மனைவி நெஞ்சைப் பிடித்துக் கொண்டு விழுந்து விட்டார். திடீர் மார­டைப்பால் அந்தத் தாய் மர­ண­ம­டைந்­தி­ருந்தார். மக­ளுக்குப் பத்து வயது.

இவற்­றை­யெல்லாம் காணும் அள­விற்கு நான் போன ஜென்­மத்தில் நிறைய பாவம் செய்­தி­ருக்கக் கூடும் என்று நினைக்­கிறேன். பத்தே வய­தான அந்தச் சிறுமி தனது அம்­மா­வி­னதும், அப்­பா­வி­னதும் சட­லங்­க­ளுக்கு முன்னால் எந்­த­ளவு துய­ரங்­களைத் தாங்கிக் கொண்­டி­ருந்­தி­ருக்கக் கூடும்? இவற்­றை­யெல்லாம் கண்டு கண்டே இரவில் நித்­திரை வரு­வ­தே­யில்லை. பசியை நான் உணர்­வ­தே­யில்லை. எனது வறு­மையின் கார­ண­மா­கத்தான் இவற்­றை­யெல்லாம் பொறுத்துக் கொண்டு இந்தத் தொழிலைச் செய்து வரு­கிறேன்” என்றார்.

மற்­று­மொரு பிண­வறை ஊழியர் தனது அனு­ப­வத்­தையும் பகிர்ந்து கொண்டார்.
“பெரும்­பா­லான நாட்­களில் இர­வா­கும்­போது என்னைக் காய்ச்சல் பீடித்­தது போல உணர்வேன். இந்தச் சட­லங்­களைத் தூக்கித் தூக்­கியே தாங்க முடி­யாத அளவு உடல் வலி­யெ­டுக்கும். கொரோனா சட­லங்கள் என்று பார்க்­காமல் அந்தச் சட­லங்­க­ளையும் குளிப்­பாட்டித் தூய்­மை­யாக்­கித்தான் பிணப்­பெட்­டியில் நாங்கள் இடுவோம். சில சட­லங்கள் பல நாட்­க­ளாக இங்­கேயே கிடப்­பதால் அவற்றின் தோல் தனி­யாகக் கழன்று வந்த சந்­தர்ப்­பங்­களும் இருக்­கின்­றன. இங்கு குளிர்­ப­தன வச­தியும் குறை­வா­கவே இருக்­கி­றது. சில சட­லங்­களை யாருமே உரிமை கோர மாட்­டார்கள்.

அண்­மையில் பாட­சா­லைக்குப் போகும் சிறு­மியின் சட­ல­மொன்று வந்­தது. கொரோனா தாக்கி மர­ண­ம­டைந்த சடலம் அது. அதன் தாய் அவ­ளது குழந்தைப் பரா­யத்­தி­லேயே மர­ணித்து விட்­டி­ருந்தார். தந்­தைதான் கைக்­கு­ழந்­தை­யி­லி­ருந்தே அவளை வளர்த்து வந்­தி­ருக்­கிறார். அந்தச் சட­லத்தை அறுக்க நேர்ந்­தது. அறுத்துப் பார்த்து, குளிப்­பாட்டித் தூய்­மை­யாக்கி, பெட்­டியில் இட முன்பு தூர இருந்தே பிள்­ளையைப் பார்த்து விட்டுப் போய் விடு­மாறு தந்­தை­யிடம் கூறி­யதும் அவர் சட­லத்தைப் பார்த்து நிலத்தில் விழுந்து புரண்டு ஓல­மிட்டு அழுதார். பொலிதீன் உறையால் சட­லத்தை மூட முற்­பட்ட போது ஓடி வந்து சட­லத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டு ஒப்­பாரி வைத்து அழுதார்.

அவர் அழு­ததைக் கண்டு எனக்கும் அழுகை வந்­தது. எனக்கும் ஒரு மகள் இருக்­கிறாள். அந்தத் தந்­தையின் கவ­லையை விவ­ரிக்க என்­னிடம் வார்த்­தைகள் இல்லை. கொரோனா சட­லங்­களின் அருகில் யாரையும் நெருங்க விட வேண்டாம் என்று எமக்கு உத்­த­ர­விட்­டி­ருக்­கி­றார்கள். இருந்­தாலும் நான் அந்தத் தந்­தைக்கு வேண்­டிய மட்டும் தனது மகளின் அருகில் இருக்க இட­ம­ளித்தேன். அந்தத் தந்தை தனது மகளின் தலையைத் தடவித் தடவி என்­னென்­னவோ கூறிக் கொண்­டி­ருந்தார். நான் அந்தச் சட­லத்தைப் பெட்­டி­யி­லிட்டு ஆணி­ய­டிக்க முற்­பட்ட வேளையில், திரும்­பவும் அவர் ஓடி வந்து என்­னிடம் அவ­ரது புகைப்­ப­ட­மொன்றைத் தந்தார்.

“என்­னு­டைய மகள் ஒரு­நாளும் தனி­யாகத் தூங்­கி­ய­தில்லை ஐயா. அம்மா கால­மா­ன­தி­லி­ருந்து நான் இவளைத் தனி­யா­கத்தான் வளர்த்து வந்தேன். இருந்தாலும் இந்த நோயிடமிருந்து இவளை என்னால் பாதுகாக்க முடியாமல் போய் விட்டது. நான் சாகும்வரை இந்த வேதனையை அனுபவித்துக் கொண்டேயிருப்பேன். நான் சாகும்வரைக்கும் அவளுடைய தனிமையைப் போக்க இவற்றை அவளின் நெஞ்சின் மீது வைத்து மூடுங்கள்” என்று கூறி என்னிடம் அவரது புகைப்படம் ஒன்றையும், கரடி பொம்மையொன்றையும் ஒப்படைத்தார். இது எனது இந்தத் தொழில் வாழ்க்கையில் மறக்கவே முடியாத, எனக்கு அடிக்கடி நினைவுக்கு வரும் சம்பவமாகும்.

நான் எவ்வளவுதான் சடலங்களை அறுத்திருந்த போதிலும், இங்கு அனுபவிக்க நேரும் சில சம்பவங்களை என்னால் தாங்கிக் கொள்ள முடியாத வேளைகளில் ஒரு ஓரமாகப் போய் அழுது தீர்த்த சந்தர்ப்பங்கள் நிறைய உண்டு. இந்தளவு துயரங்களைத் தாங்கிக் கொண்டுதான் நாங்கள் இவையனைத்தையும் செய்து வருகிறோம். தொழிலொன்று இல்லாமல் வாழ முடியாது என்பதனால்தான் உண்மையிலேயே இந்தத் தொழிலைச் செய்து வருகிறேன். தமது சொந்தங்களை கொரோனா அரக்கன் பறித்துக் கொள்ளாதவரைக்கும் இந்த நோயின் பயங்கரத்தையும், அந்த வலியையும் எமது மக்கள் உணர்வதேயில்லை” என்றார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.