இரு மாதங்களாக கடலில் தத்தளித்து சென்னையில் கரை சேர்ந்த வாழைச்­சேனை மீன­வர்கள்

0 683

எச்.எம்.எம்.பர்ஸான்

வாழைச்­சேனை துறை­மு­கத்­தி­லி­ருந்து கடந்த செப்­டம்பர் மாதம் 26 ஆம் திகதி ஆழ்­க­ட­லுக்கு மீன்­பி­டிக்க சென்ற நான்கு மீன­வர்கள் தொடர்பில் கடந்த இரு மாதங்­க­ளாக எந்­த­வித தக­வல்­களும் கிடைத்­தி­ராத நிலையில், தற்­போது அவர்கள் இந்­தி­யா­வி­லுள்ள துறை­முகம் ஒன்றில் நவம்பர் 28 ஆம் திகதி பாது­காப்­பாக கரை­சேர்ந்­துள்­ள­தாக அந்­நாட்டு ஊட­கங்கள் செய்தி வெளியிட்­டுள்­ளன. எனினும் இவர்கள் இது­வரை இலங்­கை­யி­லுள்ள தமது குடும்­பத்­தி­ன­ருடன் எந்­த­வித தொடர்­பி­னையும் ஏற்­ப­டுத்­த­வில்லை என்றும் எப்­போது நாடு வந்து சேரு­வார்கள் என்ற ஏக்­கத்தில் தாம் காத்­தி­ருப்­ப­தா­கவும் குடும்­பத்­தினர் தெரி­விக்­கின்­றனர்.

இவ் விடயம் தொடர்­பாக காணாமல் போன மீன­வர்­களின் உற­வி­னர்­களை “விடி­வெள்ளி”க்­காக நேரில் சந்­தித்துப் பேசினோம்.

“காணா­மல்­போன நான்கு பேரி­னதும் போட்­டாவைப் பார்த்­த­வு­டன்தான் மன­சுக்குள் நிம்­மதி வந்­தது” எனக் கூறு­கிறார் வாழைச்­சேனை ஹைராத் வீதியில் வசித்­து­வரும் படகின் உரி­மை­யாளர் வீ.ரீ.எம்.பதுர்தீன்.

“எனது 75 இலட்சம் ரூபாய் பெறு­ம­தி­யான Imul A 0093 PLE எனும் நீல நிறப் படகில் கடந்த செப்­டம்பர் மாதம் 26 ஆம் திகதி 21 வய­து­டைய எனது மகன் முகம்மட் றிஸ்கான் உட்­பட நான்கு மீன­வர்கள் மீன்­பி­டிக்க ஆழ்­க­ட­லுக்குச் சென்­றனர். இவ்­வாறு மீன்­பி­டிக்கச் சென்ற அவர்கள் ஒரு வாரத்தில் கரைக்குத் திரும்­பு­வது வழக்கம். ஆனால் அவர்கள் சென்ற திக­தி­யி­லி­ருந்து ஒரு வாரம் கடந்தும் திரும்­பா­ததால் நாங்கள் அவர்­களைத் தேடும் முயற்­சியில் ஈடு­பட்டோம்” என்று கவ­லை­யுடன் சம்­ப­வத்தை விப­ரித்தார் படகு உரி­மை­யாளர்.

“பட­குடன் காணாமல் போன நான்கு நபர்­க­ளையும் மீட்­டெ­டுக்க நாங்கள் ஓடாத ஓட்­ட­மில்லை, படாத பாடு­மில்லை. அவர்­களை கண்­டு­பி­டிப்­ப­தற்கு இது­வரை சுமார் எட்டு இலட்சம் ரூபாய் வரை செலவு செய்­துள்ளேன். ஆனால் நாங்கள் இன்னும் தைரியம் இழக்­க­வில்லை.

இந்த நிலை­யில்தான் எங்­க­ளுக்கு சந்­தோ­ச­மான செய்தி ஒன்று இந்த மாதம் திங்­கட்­கி­ழமை 29 ஆம் திகதி கிடைத்­தது. காணாமல் போன நான்கு மீன­வர்­களும் பட­குடன் இந்­தியா – சென்­னையில் கரை ஒதுங்­கிய போது பிடிக்­கப்­பட்ட போட்டோ ஒன்று எங்­க­ளது வட்ஸ் அப்­புக்கு வந்­தது. அதைப் பார்த்­ததும் எங்­க­ளுக்கு போன உயிர் திரும்பி வந்­தது போல் இருந்­தது. இவ்­வாறு சென்­னையில் கரை­யொ­துங்­கி­யுள்ள நான்கு மீன­வர்­க­ளையும் அர­சாங்கம் அவ­ச­ர­மாக நாட்­டுக்கு அனுப்பி வைக்க நட­வ­டிக்கை மேற்­கொள்ள வேண்டும்.

நான்கு மீன­வர்­களின் குடும்­பத்­தி­னர்­களும் சொல்ல முடி­யாத துய­ரங்­க­ளுடன் தமது நாட்­களைக் கடத்தி வரு­கின்­றனர். சென்ற மாதம் வாழைச்­சே­னைக்கு வந்த கடற்­றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவா­னந்தா, இம் மீன­வர்­களை அவ­ச­ர­மாக மீட்டுத் தரு­வ­தாக வாக்­கு­றுதி வழங்­கி­யுள்ளார். அல்­லாஹ்வின் உத­வியால் மீன­வர்கள் நான்கு பேரும் விரைவில் வீடு வந்து சேர்­வார்கள் என்று நாங்கள் எதிர்­பார்த்துக் கொண்­டி­ருக்­கிறோம்” என்றார் படகு உரி­மை­யாளர்.

இப் படகில் சென்ற ஓட்­ட­மா­வடி பாலை நகர் பள்­ளி­வாசல் வீதியில் வசித்து வரும் மீனவர் எச்.எம்.ஹைதர் என்­ப­வரின் பிள்­ளை­க­ளையும் நாம் சந்­தித்தோம். “சுமார் இரண்டு மாதங்கள் கடந்தும் எங்­க­ளது தந்தை இன்னும் வீடு வர­வில்லை. எங்­க­ளது தந்தை காணா­மல்­போன நாளி­லி­ருந்து நாங்கள் கடும் மன உளைச்­ச­லுக்கு ஆளாகி உள்ளோம்.
எங்­க­ளது தந்­தை­யுடன் காணா­மல்­போன நான்கு மீன­வர்­களும் ஒரு மாதத்­துக்கு முன்னர் அந்­தமான் தீவு கடற்­ப­ரப்பில் இருப்­ப­தாக எங்­க­ளுக்கு தகவல் கிடைத்­தது. பின்னர் சில நாட்­க­ளுக்கு பின்னர் அவர்கள் பற்­றிய எவ்­வித தக­வல்­களும் கிடைக்­க­வில்லை. தற்­போது அவர்கள் கரை ஒதுங்­கி­யுள்ள புகைப்­படம் ஒன்று கிடைத்­துள்­ளது. அதனைப் பார்த்து நாங்கள் மிகவும் சந்­தோ­சத்தில் உள்ளோம். எங்­க­ளது தந்­தையின் குரலை கேட்­க வேண்டும் போல் இருக்கிறது. அதற்கு சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரிகள் வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்தித் தர வேண்டும்” என அவர்கள் தமது ஆதங்­கத்தை முன்­வைத்­தனர்.

காணாமல் போன மற்­றொரு மீனவர் றியாலின் சகோ­தரி அசனார் நிஸாயா கூறு­கையில், “நாங்கள் குடும்­பத்தில் ஐந்து பேர். கட­லுக்குச் சென்று காணாமல் போன எனது தம்பி றியால்தான் எங்­க­ளது குடும்­பத்தில் கடைசிப் பிள்ளை. அவர்தான் குடும்­பத்தை கவ­னிப்­பது. அவ­ருக்கு இப்­போ­துதான் பத்­தொன்­பது வயது. இந்த வயதில் குடும்பச் சுமைகள் அவ­ருக்கு அதி­க­மாக உள்­ளது. எங்­க­ளது தந்தை மர­ணித்து எட்டு மாதங்­கள்தான். தாயும் நோய் கார­ண­மாக 6 வரு­டங்­க­ளாக படுக்­கையில் உள்ளார். எனது தம்பி நல­முடன் வீடு வர வேண்டும் என்­றுதான் நாங்கள் பிரார்த்­த­னை­க­ளுடன் இருக்­கிறோம். தம்­பியின் போட்­டோவை பார்த்­த­தி­லி­ருந்து நாங்கள் நிம்­ம­தி­ய­டைந்­துள்ளோம். அவரும் மற்­றைய மீன­வர்­களும் எந்த ஆபத்­துக்­க­ளு­மின்றி நாட்­டுக்கு வர வேண்டும்” என்றார்.
“சோத­னை­யிலும், வேத­னை­யிலும் தான் நாங்கள் இன்று வரை வாழ்ந்து வரு­கின்றோம். எனது கணவர் கட­லுக்குப் போனவர் இன்னும் வர­வில்லை. வறு­மையில் வாழ்ந்து வரும் எங்­களை எங்­க­ளது குடும்­பத்­தி­னரும் அய­ல­வர்­க­ளும்தான் கவ­னித்து வரு­கின்­றனர். எனது கணவர் நல­முடன் வீடு வர வேண்டும் என்­றுதான் நாங்கள் என்றும் பிரார்த்­த­னை­க­ளுடன் இருக்­கிறோம்” என மீரா­வோ­டையில் வசித்து வரும் மீனவர் எம்.எச்.எம்.கலீல் என்­ப­வரின் மனைவி எம்­மிடம் தெரி­வித்தார்.

குறித்த நான்கு மீன­வர்­களும் இந்­தி­யாவின் சென்னை, திரு­வள்ளூர் மாவட்டம், காட்டூர் அதானி துறை­மு­கத்­துக்குள் கடந்த திங்கட்கிழமை (29) நுழைந்­துள்­ள­தா­கவும் அவர்­களை இந்­திய கட­லோர காவல் படை­யினர் கைது செய்து விசா­ரணை நடத்தி வரு­வ­தா­கவும் ஊட­கங்கள் செய்தி வெளியிட்­டுள்­ளன.

தாம் பய­ணித்த முதல் நாளி­லேயே நடுக்­க­டலில் வைத்து படகின் இயந்­திரம் பழு­தா­கி­ய­தா­கவும், அங்­கி­ருந்து தமது படகு அந்­தமான் தீவு­களைச் சென்­ற­டைந்­த­தா­கவும் மீன­வர்கள் பொலி­சா­ருக்கு வாக்­கு­மூ­ல­ம­ளித்­துள்­ளனர். பின்னர் அங்­கி­ருந்து காற்று வாக்கில் சென்னை காசி­மேடு மீன்­பிடித் துறை­முகம் வந்­த­தா­கவும் அங்கிருந்து காசிமேடு படகு மூலம், அவர்கள் காட்டூர் அதானி துறைமுகத்திற்குள் நுழைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் விசாரணைகள் முடிவடைந்த பின்னர், சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகம் ஊடாக இவர்கள் இலங்கை திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிய வருகிறது.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.