அரசியல் களத்தில் முஸ்லிம் பெண்கள்: காலத்தின் கட்டாயம்

0 749

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா

இக்­கட்­டு­ரையில் நீண்­ட­ கா­ல­மாக என் மனதில் தேங்­கிக்­கி­டந்த ஒரு விட­யத்தை விடிவெள்ளி மூலம் விவா­தத்­துக்கு உட்­ப­டுத்த விரும்­பு­கிறேன். இது பெண்­ணி­னத்தின் விடு­தலைப் போராட்­டத்­தைப்­பற்றி என் தந்தை கவிஞர் அப்துல் காதர் லெப்பை அவர்கள் நான் பல்­க­லைக்­க­ழக மாண­வ­னாக இருந்த காலத்­தி­லி­ருந்தே என் சிந்­த­னையில் விதைத்­து­விட்ட கருத்­துக்கள். ஆயினும் அவை பின்னர் இவ்­வி­டயம் பற்றி நான் எழுத்­து­ வ­டிவில் சந்­தித்த பல நூலா­சி­ரியர்களின் சிந்­த­னை­களால் வளப்­ப­டுத்­தப்­பட்டு என் சிந்­த­னைக்கு அவை மேலும் உர­மூட்­டின. அந்தச் சிந்­த­னை­யையே இங்கே வாசகர்கள் முன் சமர்ப்பிக்­கின்றேன். வழ­மை­போன்று எனது கருத்­துக்­களை எல்­லோ­ராலும், அதிலும் பழ­மையில் ஊறிய பண்­டிதர்களாலும் அவர்களின் பாமரச் சீடர்களாலும் ஜீர­ணிக்க முடி­யா­தென்­ப­தையும் ஞாப­கப்­ப­டுத்த விரும்­பு­கிறேன். ஆனால் இலங்கை முஸ்லிம் சமூ­கத்தின் விடிவெள்ளியாக ஆண், பெண் புத்­தி­ஜீ­விகள் இணைந்த ஒரு இளம் சமு­தாயம் இன்று உரு­வா­கி­யுள்­ளதை வெகு­ தொ­லை­வி­லி­ருந்தே என்னால் பார்க்க முடி­கி­றது. அந்தச் சமு­தா­யத்­துக்கே இந்தக் கட்­டுரை சமர்ப்பணம்.

முத­லா­வ­தாக, முஸ்லிம் சனத்­தொ­கையில், ஏன் உலக சனத்­தொ­கை­யி­லேயே பாதிப்பேர் பெண்கள். அதே சமயம் மற்­றைய பாதிப்­பே­ரையும் உல­குக்குக் கொண்­டு ­வந்­தவர்களும் பெண்­களே. இருந்தும், அந்த இனம் ஏன் இது­வரை உலக விவ­கா­ரங்­க­ளுக்குத் தீர்வு காண்­பதில் பாதிப் பங்­கி­னை­யா­வது ஆற்­றா­தி­ருக்­கின்­றனர்? அவர்களைப் ­ப­டைத்த தெய்­வத்தின் அநீ­தியா அல்­லது ஆண் பாதியின் அடங்­காத அதி­கார ஆசையா? முஸ்­லிம்­களைப் பொறுத்­த­வரை அது இறை­வனின் நிய­தி­யாக இருக்­கவே முடி­யாது. ஏனெனில் அது அல்­லாஹ்வின் பண்­புக்கு எதி­ரா­ன­தாக முடியும். இது­பற்றி முஸ்லிம் மார்க்க அறிஞர்களால் விளம்­ப­ரப்­ப­டுத்­தப்­ப­டாத ஓர் உண்­மையை இங்கே உணர்த்த வேண்­டி­யுள்­ளது. அல்­லாஹ்வின் தொண்­ணூற்­றொன்­பது பண்புப் பெயர்களில் இரண்டு மிகவும் பிர­பல்­ய­மா­னவை. ஒரு நாளைக்கு குறைந்­தது பதி­னேழு முறை­யா­வது முஸ்­லிம்கள் தமது ஐவேளைத் தொழு­கையில் உச்­ச­ரிக்கத் தவ­ற­மாட்­டார்கள். அல்-­றஹ்மான் (அரு­ளாளன்), அல்-­றஹீம் (அன்­பு­டையோன்) என்­ப­னவே அவை. இந்த இரு பெயர்களும் றஹ்ம் என்ற மூன்று எழுத்­துக்­களைக் கொண்ட ஒரு வேற்­பெ­யரின் வழி­யாக உரு­வா­னவை. அதன் பொருள் கர்ப்பப்பை. அந்தக் கர்ப்பப்பை ஆண்­க­ளி­ட­மில்லை, பெண்­க­ளுக்கே உரிய ஒன்று. இஸ்லாம் சிலை வணக்­கத்தை வெறுப்­பதை யாவரும் அறிவர். விவா­தத்­துக்­காக அது சிலை வணக்­கத்தை ஆத­ரிப்­ப­தாக ஏற்றுக் கொண்டால் மேற்­கூ­றிய இரண்டு பண்புப் பெயர்களையும் சித்­த­ரிக்கச் செதுக்­கப்­பட்ட சிலைகள் ஆண் வடிவில் அமைந்­தி­ருக்­குமா பெண் வடிவில் அமைந்­தி­ருக்­குமா? எந்த இடத்­துக்குப் பெண்ணை இஸ்லாம் உயர்த்தி வைத்­துள்­ளது என்­ப­தற்கு இதை­வி­டவும் ஓர் ஆதாரம் வேண்­டுமா?

இஸ்லாம் தோன்­று­வ­தற்­கு முன் இபுறாஹிம் தன் மனைவி ஹாஜ­றாவை வனாந்­த­ரத்தில் தவிக்­க­விட்டுச் செல்ல, தனது சிசு இஸ்­மா­யி­லுக்­காக தன்­னந்­த­னியே நீர் தேடி ஓடோடி அலைந்து அப்­பிள்­ளையைப் பரா­ம­ரித்த அந்தப் புனி­த­வ­தியின் வர­லாற்றை ஆணா­திக்­க­வா­திகள் எவ்­விதம் எடை­போ­டு­வரோ? முற்­கா­லத்தில் இஸ்­லாத்தின் தூதர் அவர்கள் தாயின் பாதங்­க­ளிலே தனை­யனின் சொர்க்கம் என்று கூறி­ய­தற்கும் அந்தத் தாயின் வர­லாறு ஒரு கார­ண­மாக அமைந்­தி­ருக்­காதா?

இஸ்­லாத்தை முதன் முதலில் தழு­விய ஒரு ஜீவன் ஆணல்ல, கதீஜா என்ற பெண் என்­பது வர­லாறு. ஆனால் அந்த வர­லாற்றை நுணுக்­க­மாக ஆராய்ந்தால் ஒரு முக்­கி­ய­மான கேள்வி எழு­கின்­றது. அதா­வது, அந்தக் கதீஜா உயி­ருடன் இருந்­தி­ருந்தால் இஸ்லாம் முதலில் மதீ­னாவில் காலூன்றி இருக்­குமா மக்­காவில் காலூன்றி இருக்­குமா? ஹிஜ்றா என்ற ஒரு நிகழ்வே இஸ்­லா­மிய வர­லாற்றில் ஏற்­பட்­டி­ருக்­குமா? நட­வாத ஒன்­றைப்­பற்றித் திட­மாக எத­னையும் கூற­மு­டி­யாது. ஆனால் இங்கே ஒரு பெண்ணின் வர­லாற்று முக்­கி­யத்­து­வத்தை உணர இக்­கேள்­விகள் அவ­சி­ய­மா­கின்­றன. அவற்றை கேட்­ப­திலே தவ­றில்லை. சிசு­வி­லேயே பெண்­களை மண்­ணுக்குள் புதைத்த ஒரு சமு­தா­யத்தில் ஓர் உயர் குலத்தில் பிறந்து, தொழில் அதி­ப­தி­யாக உயர்ந்து, அநாதை முகம்­மதை தனது ஊழி­ய­னாக்கி, பின்னர் அந்த அநா­தை­யையே கடி­ம­ணஞ்­ செய்து, அவ­ரது இறை­தூ­துக்கு இடர் வந்­த­போ­தெல்லாம் ஒரு தூணாக நின்று அவரைப் பாது­காத்த அந்த மாத­ர­சியின் வாழ்க்­கை­யிலே முஸ்லிம் ஆணினம் கற்­க­வேண்­டிய பாடங்கள் பல உண்டு. நபி­க­ளாரின் தொழில் அதி­பதி ஒரு பெண். அவர் இறை­வனின் உண்மைத் தூதன் என்­பதை உணர்ந்து உல­குக்கு முதலில் உணர்த்தியதும் அந்தப் பெண்ணே. அந்தப் பெண் இல்­லா­தி­ருந்­தி­ருந்தால் இஸ்­லாத்தின் வர­லாறே வேறு திசையில் சென்­றி­ருக்கும் என்­பது எனது வாதம். எனவே அந்த அற்­புதப் பெண்­ணி­னத்தை ஆண்­டாண்டு கால­மாக அடி­மை­க­ளாக மாற்­றி­யது இறை­யல்ல அதன் பிர­கி­ருதி ஆண்வர்க்கம். அந்த வர்க்கம் பூட்­டிய அடிமைத் தளை­களை உடைத்­துக்­கொண்டு இன்று வெளி­வரப் புறப்­பட்­டு­விட்­டது பெண் இனம். அதனைச் சாத­னையில் படைத்துக் காட்­டு­கி­றார்கள் பிற­நாட்டு முஸ்லிம் பெண்கள். ஆனால் வெறும் போத­னை­யுடன் அமைதி காண்­கி­றது இலங்­கையின் முஸ்லிம் சமு­த­ாயம். இனி அதைப்­பற்றிச் சில கூறுவோம்.

இலங்கை முஸ்­லிம்­களின் வர­லாற்­றிலே 1970கள் ஒரு திருப்­பு­முனை. அந்தத் திருப்­பு­மு­னைக்குக் காரணம் அப்­போது பணி­பு­ரிந்த கல்வி அமைச்சர் பதி­யுத்தீன் மஹ்மூத் அவர்கள். அவர் பணி­யாற்­றி­யதோ ஒரு தலை­வியின் கீழ். எத்­த­னையோ ஆண் அமைச்சர்கள் அவரை அப்­ப­த­வி­யி­லி­ருந்து நீக்க முயன்­ற­போதும் அவ­ருக்குப் பக்­க­ப­ல­மாக நின்ற அந்தப் பெண் பிர­த­மரை முஸ்லிம் பெண்­ணினம் போற்­றா­விட்­டாலும் மறக்க முடி­யாது. பல நூற்­றாண்­டு ­கா­ல­மாக வர்த்தக சமு­தா­ய­மெனச் சாயம்­பூ­சப்­பட்­டி­ருந்த முஸ்­லிம்­களை குறைந்­த­பட்சம் ஓர் ஆசி­ரிய சமு­தா­ய­மா­க­வேனும் மாற்ற முனைந்த முன்­னோடி பதி­யுத்தீன். இங்கே அவரின் துதி­பா­டாமல் நடை­பெற்ற சில நிஜங்­களை முன்­வைத்து இக்­கட்­டுரை தொடரும். ஏனெனில் அவரின் சேவையே இக்­கட்­டுரைப் பொருளின் தேவையை உணர்த்தி நிற்­கி­றது.

ஆண்­டாண்டு கால­மாக முதலில் பெற்­றவர் வீட்­டுக்­குள்ளும் பின்னர் புரு­ஷனின் வீட்­டுக்­குள்­ளு­மாகச் சிற­கொ­டிந்த பற­வை­களாய் அல்­லது விட்­டில்­களாய் திரிந்து, படுக்கை அறைக்குள் தாசி­க­ளா­கவும் குசி­னிக்குள் சமை­யற்­கா­ரி­க­ளா­கவும் வாழ்ந்து அந்த வாழ்­வுதான் முஸ்லிம் பெண்­ணி­னத்­துக்கு இஸ்லாம் வழங்­கிய சிறப்­பான வாழ்­வென்று பள்ளி வாசல்­க­ளிலும் பொது மேடை­க­ளிலும் ஆணினம் விமர்சித்­த­ வே­ளையில் சொந்­தக் ­காலில் நின்று ஒரு குடும்­பத்­தையே பொறுப்­பேற்று வழி ­ந­டத்­தக்­ கூ­டிய ஒரு வாய்ப்பை கல்­வி ­மூலம் வழங்க நினைத்து பெண்­க­ளுக்கு கல்வி வாசலை திறந்­து­விட்ட ஒரு தலைவன் பதி­யுத்தீன். சிரேஷ்ட பாட­சாலை கல்­வித்­த­ரா­தரப் பரீட்­சையில் தேறு­வ­தற்கு ஆறு பாடங்­களில் சித்­தி­ய­டைய வேண்­டு­மென்­றி­ருந்த காலத்தில் ஐந்து பாடங்­களில் மட்டும் சித்­தி­ய­டைந்த முஸ்லிம் பெண்­க­ளுக்கு ஆசி­ரியத் தொழில் வழங்­கி­யதைக் கண்டு மனம் புழுங்கி நேரி­லேயே அவ­ரி­டம்­சென்று முறைப்­பட்டேன். அதற்கு அவர் அன்று கூறிய காரணம் எந்த அள­வுக்கு தூர­ நோக்குச் சிந்­த­னை­யுடன் அவர் செயற்­பட்டார் என்­பதை எனக்கு வலி­யு­றுத்­திற்று. நான் அவ­ளுக்­காக அந்தத் தொழிலை வழங்­க­வில்லை, அவ­ளது பிள்­ளை­க­ளுக்­காக என்று கூறி உத்­தி­யோகம் பார்க்கும் ஒரு பெண் தன் பிள்­ளையை கடைச் சிப்­பந்­தி­யா­கவோ வய­லிலே களை­பி­டுங்­கவோ அனுப்­ப­மாட்டாள். மாறாக கல்­வி­யின்­ பக்கம் திருப்பி விடுவாள் என்ற தொனிப்­பட விளக்­கினார். அதனைச் செவி­ம­டுத்த நானோ அவ­ரின்முன் ஊமை­யானேன். அந்தச் சமூகத் தொண்டன் தொடக்­கி ­வைத்த புரட்­சியின் விளை­வாக உரு­வா­னதே இன்று முஸ்­லிம்­க­ளி­டையே நட­மாடும் கல்­வி­மான்­களும், பேரா­சி­ரியர்களும், நிபுணர்களும், உத்­தி­யோ­கத்தர்களும். புத்­தி ­ஜீ­வி­களும். அந்தப் படை­யிலே கணி­ச­மான அளவு பெண்­களும் உள்­ளனர். பதி­யுத்தீன் முஸ்­லிம்­களின் கல்­விக்­காக ஆற்­றிய சேவை­க­ளை­யெல்லாம் பட்­டி­யல்­போட்டு விப­ரிப்­பது இக்­கட்­டு­ரையின் நோக்­க­மல்ல. ஆனால் அவர் தொடக்­கி­விட்ட புரட்சி முஸ்லிம் பெண்­களைப் பொறுத்­த­வரை தொட­ராமல் நிறுத்­தப்­பட்­டுள்­ள­தையே இங்கு வலி­யு­றுத்த வேண்­டி­யுள்­ளது.

முஸ்லிம் பெண்­களின் ஆற்­ற­லையும் அவர்களின் சமூ­கத்­தைப்­பற்­றிய சிந்­த­னை­க­ளையும் அவர்களின் எழுத்து வடி­வி­லான ஆக்­கங்கள் துல்­லி­ய­மாக எடுத்­துக்­காட்­டு­கின்­றன. அவர்கள் படைக்­கின்ற சிறு­க­தைகள், கவி­தைகள், நாவல்கள், கட்­டு­ரைகள் எல்­லாமே புது­மை­ காணத் துடிப்­பதை உணர்த்துகின்­றன. ஆனால் அத்­துடன் அவர்களின் பணி முடிந்­து­விட்­டதா? இலங்­கையின் இன்­றைய இக்­கட்­டான ஒரு சூழலில் முஸ்லிம் சமூகம் எதிர்­நோக்கும் சவால்­களை விளங்கிக் கொண்டு அதனை பொருத்­த­மான ஒரு வழியில் நடத்திச் செல்­லக்­கூ­டிய தலை­மைத்­துவம் இல்­லா­தி­ருப்­பது அவர்களின் சிந்­த­னைக்குத் தென்­ப­ட­வில்­லையா? முஸ்­லிம்­க­ளுக்­கென்றே உரு­வான தனிப்­பட்ட கட்­சி­களின் மேடை­க­ளிற்­ கூட ஒரு பெண்ணைக் காண­மு­டி­யாமல் இருக்­கி­றதே ஏன்? ஆண் தலை­மையோ முஸ்­லிம்­க­ளுக்கு இழைக்­கப்­படும் அநீ­தி­க­ளைக்­கூட பகி­ரங்­கத்தில் பேசு­வ­தற்குத் தயங்கி நிற்பதுடன் ஆட்சியாளர்களின் ஆசீர்வாதங்களையும் சன்மானங்களையும் தமது மௌனத்துக்குப் பரிசாக எதிர்பார்த்து நிற்கிறது. இந்தக் கேவலமான ஒரு நிலைமையிலேதான் ஏன் பெண்ணினம் அத்தலைமைக்குப் போட்டிபோடக்கூடாது என்ற கேள்வியை இக்கட்டுரை முன்வைக்கிறது? மாவட்ட மட்டத்திலோ மாகாண மட்டத்திலோ அப்போட்டி ஆரம்பமாகி நாடாளுமன்றம்வரை தொடர வேண்டும். அது சாத்தியப்படலாம். ஏனெனில் முஸ்லிம் வாக்காளர் பட்டியலில் அரைவாசி பெண்களே. இருந்தும் இதனை வெறும் பெண்ணினப் போராட்டமாகக் கருதாமல், ஆண்களும் பெண்களும் கலந்த ஓர் இளம் சந்ததியின் கூட்டுப் போராட்டமாகக் கருத வேண்டும். அவ்வாறான ஒரு கலப்புத் தலைமை உருவாகிவிட்டால் அதுவே பதியுத்தீன் ஆரம்பித்த புரட்சியை பூரணமாக்கும். ஒரு சிந்தனைக் கவிஞனின் தாகமும் சாந்தி காணும். முஸ்லிம் பெண்கள் அரசியல் களமிறங்குவது காலத்தின் கட்டாயம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.