சட்டத்தையே அவமதித்துச் சிறைசென்ற கைதி சட்டச் செயலணிக்குத் தலைவரா?

0 636

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்­தி­ரே­லியா

இதற்கு முன்னர் நான் வெளி­யிட்ட ஓரிரு கட்­டு­ரை­களில் இந்த நாட்டின் அர­சி­ய­லைப்­பற்றி விமர்­சிக்­கின்­ற­போ­தெல்லாம் பார­தி­யாரின் ஒரு கவிதை வரியை மேற்கோள் காட்டி வந்தேன். அதனை மீண்டும் ஒரு­முறை மேற்­கோள்­காட்ட வேண்­டி­யுள்­ளது. “பேய் அர­சாண்டால் பிணந்­தின்னும் சாத்­தி­ரங்கள்” என்றான் அந்தப் புர­ட்சிக் கவிஞன். அது இலங்­கையில் நாளாந்தம் நிஜ­மாகி வரு­வதை அர­சியல் அவ­தா­னிகள் உணர்வர். அந்த நிஜத்தின் மிக அண்­மை­யான வடி­வத்­தைத்தான் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்­சவின் ஒரே நாடு ஒரே சட்டச் செய­லணி வெளிப்­ப­டுத்­து­கி­றது. சட்டம் சார்ந்த ஒரு விட­யத்­துக்கு சிபார்சு வழங்க சட்­டத்­தையே அவ­ம­தித்த ஒரு­வரை தேர்ந்­தெ­டுத்­ததை எவ்­வாறு நியா­ய­மாக்­கலாம்? அதைப்­பற்­றிய ஒரு கண்­ணோட்­டந்தான் இக்­கட்­டுரை.

ஒரே நாடு ஒரே சட்­டத்தின் பின்­னணி
ஒரே நாடு ஒரே சட்டம் என்ற இந்த மந்­திரம் மிக அண்­மையில் சோடிக்­கப்­பட்­ட­தொன்று. அதன் தோற்றம் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் இறுதிக் காலத்­தி­லேதான் இடம்­பெற்­றது. அதுவும் நமது முஸ்லிம் தலைவர்களின் மகத்­தான கைங்­க­ரி­யத்­தினால் முஸ்லிம் சமூ­கத்தின் தனித்­துவ அடை­யா­ளங்­களை அழிப்­ப­தற்­கென்றே உரு­வாக்­கப்­பட்ட ஒரு மந்­திரம். எனவே இதனை உரு­வாக்­கி­யதில் முஸ்­லிம்­க­ளுக்கும் பங்­குண்டு என்­பதை கவ­லை­யுடன் ஏற்க வேண்­டி­யுள்­ளது.

முஸ்­லிம்­களின் தனித்­துவ அடை­யா­ளங்­களுள் ஒன்­றுதான் அவர்களின் திரு­மணம் விவா­க­ரத்து சம்­பந்­த­மான சட்­டக்­கோவை. அந்தக் கோவைக்குள் காதி நீதி­மன்­றங்­களும் அடங்கும். அந்தச் சட்­டக்­கோவை பிரித்­தா­னியர் இலங்­கையை ஆண்­ட­போது வடி­வ­மைக்­கப்­பட்டு, இலங்கை சுதந்­திரம் அடைந்­தபின் 1951ஆம் ஆண்டு நாடா­ளு­மன்ற மசோ­தா­மூலம் சட்­ட­மாக்­கப்­பட்­டது. காலத்­துக்­குக்­காலம் இச்­சட்­டத்தில் சில திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட்­ட­போ­திலும் அவை கால­மாற்­றங்­களை உணர்ந்த திருத்­தங்­க­ளாக அமை­ய­வில்லை. குறிப்­பாக முஸ்லிம் பெண்­களின் உரி­மை­க­ளுக்கு அச்­சட்டம் உரிய அந்­தஸ்தை வழங்­கத்­த­வறி விட்­டது. முஸ்லிம் பெண்கள் கல்­வி­யிலே உய­ராது வீடு­க­ளுக்­குள்­ளேயே பொற்­கூண்டுக் கிளி­க­ளாகப் பறந்து திரிந்து பின்னர் திரு­மணம் என்ற பெயரில் கண்­கா­ணாத யாரோ ஒரு­வ­னு­டைய பொறுப்பில் தள்­ளப்­பட்டு படுக்கை அறைக்குள் தாசி­யா­கவும் சமை­ய­ல­றைக்குள் எஜ­மா­னி­யா­கவும் வாழ்ந்த ஒரு காலத்தில் பெண்­களின் உரி­மை­க­ளைப்­பற்றி யாரும் பேச­வு­மில்லை அவற்றை ஒரு பொருட்­டாக ஆண்கள் மதிக்­க­வு­மில்லை. அந்த நிலை 1970க்குப் பின்னர் மிக வேகமாக மாற்­ற­ம­டை­ய­லா­யிற்று. முஸ்லிம் பெண்­க­ளி­டையே ஏற்­பட்ட துரி­த­மான கல்வி வளர்ச்சி முஸ்லிம் சமூ­கத்தில் ஒரு புரட்­சி­யையே தோற்­று­வித்­தது எனலாம். அதைப்­பற்றி இங்கே விப­ரிக்கத் தேவை­யில்லை.

அந்தப் புரட்­சி­யினால் முஸ்லிம் பெண்­களே நடை­மு­றை­யி­லுள்ள திரு­மண, விவா­க­ரத்துச் சட்­டத்தில் மாற்றம் வேண்­டு­மெனக் குர­லெ­ழுப்­பினர். அந்தக் குரலின் விளை­வா­கத்தான் நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தலை­மையில் 2009ஆம் ஆண்டு ஒரு விசா­ர­ணைக்­குழு நிய­மிக்­கப்­பட்டு அக்­கு­ழு­வுக்குள் முஸ்லிம் பெண்கள் சிலரும் உள்­ள­டக்­கப்­பட்டு பத்து வரு­டங்­க­ளின்பின் 2019இல் அக்­குழு அதன் சிபாரி­சு­களை நல்­லாட்சி அர­சாங்­கத்­திடம் சமர்ப்பித்­தது. அந்தச் சிபாரி­­சுகள் முஸ்லிம் பெண்­களின் முழுக்­கோ­ரிக்­கை­க­ளையும் ஏற்­கா­விட்­டாலும் சில வர­வேற்­கத்­தக்க மாற்­றங்­களை உள்­ள­டக்கி இருந்­தது. அந்த மாற்­றங்­களை முற்­றாக எதிர்த்­தது முற்று முழு­தாக ஆண்­க­ளையே அங்­கத்­தவர்களாகக் கொண்டு இயங்கும் அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா. அதன் எதிர்ப்­புக்கு ஆத­ரவாக இயங்­கினர் நல்­லாட்சி அர­சாங்­கத்தில் இருந்த முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள். அவர்களின் ஆத­ர­வுக்குக் காரணம் உல­மாக்­களின் ஆத­ர­வில்­லாமல் எதிர்­வரும் தேர்தலில் அவர்கள் தோல்­வியை எதிர்கொள்ள நேரிடும் என்ற பயம். அப்­போ­தி­ருந்த நீதி அமைச்­சரும் மிகவும் சாது­ரி­ய­மாக மர்சூப் அறிக்­கையின் தலை­வி­தியை முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களின் தலையில் சுமத்­தி­விட்டு ஒதுங்கிக் கொண்டார். மர்சூப் அறிக்­கையும் நீதி அமைச்­சரின் அலு­வ­ல­கத்தின் ஒரு மூலையிற் கிடந்து தூசு பிடிக்­க­லா­யிற்று.

அந்த இடை­வெ­ளியைப் பயன்­ப­டுத்­தித்தான் அப்­போது நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்த அது­ர­லியே ர­தன தேரர் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற மந்­தி­ரத்தை உச்­ச­ரித்து முஸ்லிம் திரு­மண விவா­க­ரத்துச் சட்­டத்தை முற்­றாக நீக்க வேண்­டு­மென்ற ஒரு தனியார் மசோ­தாவை முன்­மொழிந்தார். அதி­லி­ருந்­துதான் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற மந்­திரம் தேர்தலில் சூடு­பி­டிக்கத் தொடங்­கிற்று. அந்த மந்­தி­ரத்தை தனது தேர்தல் விஞ்­ஞா­ப­ன­மாகக் கொண்டே பிர­சாரம் செய்து 2019 ஜனா­தி­பதித் தேர்தலில் கோத்­தா­பய ராஜ­பக்ச வெற்­றி­யீட்­டினார். அன்று அந்த இடை­வெளி ஏற்­ப­டா­வண்ணம் நீதியரசர் மர்சூப் வழங்கிய சிபாரி­சு­களை முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் ஒரே குழு­வா­க ­நின்று நிறை­வேற்றி இருந்தால் அந்த மந்­திரம் நாடா­ளு­மன்­றத்தில் உச்­ச­ரிக்­கப்­பட்­டி­ருக்­குமா? அது தேர்தல் பிர­சா­ரத்தில் இடம் பெற்­றி­ருக்­குமா? எனவே முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களும் உல­மாக்­களும் சேர்ந்து உரு­வாக்­கி­யதே இந்த மந்­திரம் எனக் கூறுவேன். முஸ்­லிம்­க­ளி­டையே நாட்டின் போக்­கினை உணர்ந்து தூர­நோக்­குடன் செயற்­படும் தலை­மைத்­துவம் இல்லை என்­பதை நான் பல சந்தர்ப்பங்­களில் வலி­யு­றுத்­தி­யுள்ளேன். அதற்கு ஒரே நாடு ஒரே சட்டம் சிறந்த உதா­ரணம்.

அது­ர­லிய ர­தன தேரர் ஒரே நாடு ஒரே சட்டம் என்­ற­துடன் அந்த மந்­தி­ரத்தை நிறுத்­திக்­கொள்ள, ஞான­சார தேரர் அதை இன்னும் நீட்டி ஒரே நாடு ஒரே சட்டம் ஒரே இனம் என்னும் அள­வுக்குக் கொண்டு சென்றார். அது 2019 ஜூன் மாதம் ஏழாம் திகதி கண்­டியில் நடை­பெற்ற ஒரு பகி­ரங்கக் கூட்­டத்தில் இலங்கை சிங்­க­ளவர்களுக்­கு­ மட்­டுமே சொந்­த­மான நாடு, மற்­றைய இனங்­க­ளெல்லாம் சிங்­க­ளவர்களின் தயவில் வாழும் வாடகைக் குடி­களே என்று பேசி­யதால் உறு­தி­யா­னது. இது­வரை ஜனா­தி­ப­தியோ பிர­த­மரோ மற்ற எந்­த­வொரு அமைச்­சரோ ஞான­சா­ரரின் கூற்றை நிரா­க­ரித்துப் பேசி­ய­தில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலும்
முஸ்­லிம்கள் பழி­வாங்­கப்­ப­டு­தலும்
உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் சஹ்ரான் தலை­மை­யின்கீழ் தேசிய தௌஹீத் ஜமாஅத் கும்­பலால் நிறை­வேற்­றப்­பட்­டது என்­பது யாவரும் அறிந்­ததே. ஆனால் அந்தப் படு­பா­தகச் செய­லுக்குப் பின்னால் ஒரு முக்­கி­ய­மான சூத்­தி­ர­தாரி உண்டு என்­பதை கத்­தோ­லிக்கப் பேராயர் மல்கம் ரஞ்ஜித் அவர்கள் வலி­யு­றுத்­திக்­கொண்டே வரு­கிறார். இவர் ஜனா­தி­பதி கோத்­தா­ப­ய­வினால் நிய­மிக்­கப்­பட்ட விசா­ர­ணை ஆணைக்­கு­ழுவின் 22 பாகங்­க­ளைக்­கொண்ட அறிக்­கையின் பிர­தி­களை வாசித்­த­பின்­னரே இவ்­வாறு வலி­யு­றுத்­து­கிறார் என்­பதை மறத்­த­லா­காது. அத்­துடன், பேராயர் அந்தச் சூத்­தி­ர­தா­ரியின் விப­ரங்கள் ஜனா­தி­ப­தி­யினால் வேண்­டு­மென்றே அர­சியல் இலாபம் கருதி மறைக்­கப்­ப­டு­கின்­ற­தென்றும், விசா­ர­ணைக்­கு­ழுவின் அனைத்து சிபாரி­சு­க­ளையும் அவர் அமுல்­ப­டுத்த மறுக்­கிறார் என்றும் மேலும் குற்றம் சாட்­டு­கிறார். உதா­ர­ண­மாக, ஞான­சார தேரரின் பொது பல சேனா இயக்­கத்­தையும் சில முஸ்லிம் இயக்­கங்­க­ளையும் தடை­செய்­யு­மாறு அக்­குழு சிபாரி­சு­செய்ய முஸ்லிம் இயக்­கங்­க­ளை­மட்டும் தடை­செய்து பொது பல சேனாவை சுதந்­தி­ர­மாக நட­மாடவிட்­டுள்­ளதன் அந்­த­ரங்கம் என்­னவோ? அதே­போன்று விசா­ர­ணைக்­குழு சில உள­வுத்­துறை அதி­கா­ரி­க­ளுக்­கெ­தி­ராக சட்­ட­ ந­ட­வ­டிக்கை மேற்­கொள்­ளு­மாறு பணிக்க அதை­யிட்டு ஜனா­தி­பதி எந்தக் கரி­ச­னை­யு­மின்றி ஊமை­யாக இருப்­பதன் கார­ணந்தான் என்­னவோ? இவை­யெல்லாம் போரா­யரின் குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு மேலும் வலுவூட்டுகின்­றன என்­பதை மறுக்­க­லாமா? பேரா­யரின் குற்­றச்­சாட்­டுகள் ஆதா­ர­மற்­றவை என்றால் ஏன் அந்த விசா­ரணை அறிக்­கையை எந்தத் தணிக்­கையும் செய்­யாது மக்கள் பார்­வைக்­காக வெளிப்­ப­டுத்த முடி­யாது? எனினும் சஹ்ரான் கும்­பலின் கொலைச் செய­லுக்குப் பரி­கா­ர­மாக முழு முஸ்லிம் இனத்­தையே இன்று பழி­வாங்கிக் கொண்­டி­ருக்­கிறார் ஜனா­தி­பதி.

இது­வரை சுமார் முந்நூறுக்கும் அதி­க­மான முஸ்­லிம்கள் வெறும் சந்­தே­கத்தின் பே­ரிலும் அற்ப கார­ணங்­க­ளுக்­கா­கவும் பயங்­க­ர­வாதத் தடைச் சட்­டத்­தின்கீழ் கைது செய்­யப்­பட்டு பாது­காப்புத் துறை­யி­னரின் பல­வ­கை­யான இம்­சை­க­ளுக்கும் ஆளாகி சிறை­க­ளுக்குள் வாடிக்­கொண்­டி­ருக்­கின்­ற­ன­ரெனத் தக­வல்கள் கசிந்­துள்­ளன. அவர்களுள் மனித உரிமைச் சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லா, இளம் கவிஞன் அஹ்னாப் ஜசீம், சமயப் பிரசாரகர் ஹஜ்ஜுல் அக்­பர், முன்­னைய மேல்­மா­காண ஆளுனர் அசாத் சாலி, நாடா­ளு­மன்ற அங்­கத்­தவர் றிஷாத் பதி­யுதீன் (அவர் இப்­போது பிணையில் விடு­தலை செய்யப்­பட்­டுள்ளார்) ஆகி­யோரும் அடங்­குவர்.

சிறை­க­ளுக்குள் வாடும் முஸ்­லிம்கள் ஒரு­பு­ற­மி­ருக்க சிறை­க­ளுக்கு வெளியே வாழும் முஸ்­லிம்கள் அனு­ப­விக்கும் கஷ்­டங்­களோ அனந்தம். நாடா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்ட குர்ஆன், இஸ்லாம் சம்­பந்­த­மான நூல்கள், மத்­ர­ஸாக்கள், முஸ்­லிம்­களின் ஆடைகள் பற்­றிய கட்­டுப்­பா­டு­களும் தடை­களும், பௌத்­தத்தின் பெயரால் மாட்­டி­றைச்சி உண்­பதைத் தடை­செய்­யாமல் மாடு­களை அறுப்­ப­தற்கு மட்­டு­மான தடை, முஸ்­லிம்கள் சுதந்­தி­ர­மாக வியா­பாரம் செய்­வ­தற்­கான இடை­யூ­றுகள், அகழ்­வா­ராய்ச்சி என்ற போர்­வையில் முஸ்­லிம்­களின் காணி­களைப் பறிப்­ப­தற்­கான முயற்சி, பள்­ளி­வா­சல்­க­ளுக்­கெ­தி­ரான தடைகள், ஒரு வரு­டத்­துக்கும் மேலாக உலக மருத்­துவ நிபுணர்களின் ஆலோ­ச­னை­க­ளை­யெல்லாம் புறந்­தள்­ளி­விட்டு முஸ்­லிம்­களின் கொவிட் ஜனா­சாக்­களை அடக்­க­வி­டாமல் எரித்­தமை ஆகி­ய­ன­வெல்லாம் முஸ்லிம் இனத்­தையே பழி­வாங்கும் நோக்கம் என்­பதை மறுக்க முடி­யுமா?

ஜனா­தி­ப­தியின் தொடர் நாட­கத்தின் ஒரு உப ­கதை
கடந்த ஜனா­தி­பதித் தேர்தலில் முஸ்­லிம்கள் ஒட்­டு­மொத்­த­மாக கோத்­தா­ப­யவை ஒதுக்­கினர் என்­பது உண்மை. எல்லா சிறு­பான்மை இனங்­க­ளுமே அவரை ஒதுக்­கி­னா­லும்­கூட சிங்­கள மாகா­ணங்­களில் வாழும் முஸ்­லிம்­களின் பகிஷ்­க­ரிப்பை அவரால் தாங்­கிக்­கொள்ள முடி­ய­வில்லை. ஆதலால் தனிப்­பட்ட குரோதம் முஸ்­லிம்­க­ளின்மேல் அவ­ருக்கு உண்டு. எனினும் அந்தக் குரோ­தத்தை சாது­ரி­ய­மாக நடத்­திக்­காட்ட அவரின் நெருங்­கிய நண்­ப­ரான அலி சப்­ரியை பின்­க­தவால் அமைச்­ச­ர­வைக்குள் நுழைத்­து­விட்டு முஸ்­லிம்­களை அவரை வைத்­துக்­கொண்டே நசுக்கும் ஒரு நாட­கத்தை ஜனா­தி­பதி அரங்­கேற்றி வரு­கிறார். தான் பௌத்த சிங்­க­ள­வரின் வாக்­கு­க­ளா­லேயே வெற்­றி­ய­டைந்­தவன் என்­றாலும் எல்லா இனங்­க­ளுக்­குமே நான் ஜனா­தி­பதி என்று அவர் வெற்­றி­வாகை சூடி­ய­பின் கூறி­னாலும் கடந்த இரண்டு வரு­ட­கால வர­லாறு அவர் பௌத்த சிங்­க­ளவர்களுக்கு மட்­டு­மேதான் ஜனா­தி­ப­தி­யாக இயங்­கு­கிறார் என்­ப­தையே உணர்த்துகி­றது. இது­வரை முஸ்­லிம்­களின் குறை­களுள் எதை­யா­வது அவர் தலை­யிட்டுத் தீர்த்­து­வைத்­துள்­ளாரா? இல்­லவே இல்­லையே.

அவ­ரு­டைய தொடர் நாட­கத்தின் ஓர் உப­க­தை­யா­கவே ஞான­சா­ரரின் தலை­மை­யி­லான ஒரே நாடு ஒரே சட்­டத்தின் செய­ல­ணியைக் கரு­த­வேண்­டும். ஆனால் நாடகம் தொடரும். இந்­தக்­க­தையின் முக்­கிய கதா­பாத்­திரம் ஞான­சாரர். இவ­ரைப்­பொ­றுத்­த­வரை சூபித்­து­வத்­தைத்­த­விர மற்ற எல்லா முஸ்லிம் மதக்­கொள்­கை­க­ளுமே அடிப்­ப­டை­வா­தத்தை போதிப்­பன. அவற்­றி­லி­ருந்­துதான் முஸ்லிம் தீவி­ர­வா­திகள் பெரு­கு­கின்­றனர் என்­பது இவரின் புதுமைச் சித்­தாந்தம். எனவே முஸ்­லிம்­களை மூளைச்­ச­லவை செய்­ய­வேண்டும் எனவும் இவர் கூறி­யுள்ளார். அது­மட்­டு­மல்ல, இவரும் இவ­ரது பொது பல சேனாவும் கடந்த சில வரு­டங்­க­ளாக அடுக்­க­டுக்­காக நடை­பெற்ற முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான கல­வ­ரங்­க­ளுக்கும் வன்­மு­றை­க­ளுக்கும் தூண்­டு­கோ­லாகச் செயற்­பட்­டவர்கள். இவர் நீதி­மன்­றத்தின் கட்­ட­ளை­களை அவ­ம­தித்­த­தற்­காக ஆறு­வ­ருடச் சிறைத்­தண்­ட­னைக்கு ஆளா­னவர். முன்­னைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேனா, தனக்கு அர­சியல் இலாபம் கிடைக்கும் எனக்­க­ருதி இவரை அன்று மன்­னித்து விடு­தலை செய்­தி­ருக்­கா­விட்டால் இவர் இன்­று­வரை சிறைக்­குள்­ளேதான் இருந்­தி­ருப்பார். இப்­போ­துள்ள புதிய ஜனா­தி­ப­தியோ இவ­ரையே ஒரே நாடு ஒரே சட்டம் என்ற மந்­தி­ரத்தை நடை­மு­றையில் அமு­லாக்க விரும்­பி­யது இவரின் அறிவை உணர்ந்தா அல்­லது இவரால் இன்­னு­மொரு நாட­கத்­துக்குக் கதை எழு­தவா என்று தெரி­ய­வில்லை. எப்­படி இருப்­பினும் இந்த வில்­லனின் அர்த்­த­மற்ற வாதங்­க­ளுக்கு ஆமா போடு­வ­தற்­காக நான்கு முஸ்லிம்க­ளையும் இந்தச் செய­ல­ணிக்குள் ஜனா­தி­பதி நுழைத்­துள்ளார்.

செய­ல­ணியின் அந்­த­ரங்க நோக்கம்
ஏற்­க­னவே கூறி­ய­து­போன்று முஸ்­லிம்­களின் திரு­மண விவா­க­ரத்துச் சட்­டத்தை காதி­மன்­றங்­க­ளுடன் சேர்த்து முற்­றாக நீக்­கு­வதே இந்­தச்­செ­ய­ல­ணியின் நோக்கம். ஆனால் அது சட்டம் சம்­பந்­தப்­பட்ட ஒரு விடயம். அதனைச் சீராக ஆராய்ந்து செயற்­ப­டுத்­து­வ­தற்கு சட்டம் தெரிந்த ஒரு­வ­ரிடம் இப்­பொ­றுப்பு சுமத்­தப்­பட வேண்டும். அந்தப் பொறுப்பைத் தாங்க நீதி அமைச்சர் அலி சப்­ரி­யை­விட வேறு யாரும் மந்­திரி சபையில் இல்லை. அலி சப்ரி அச்­சட்டத்தில் திருத்­தங்­களை ஏற்­ப­டுத்த முனையும் அதே வேளை அதை முற்­றாக நீக்­கு­வ­தற்குத் தயங்­கு­வது ஜனா­தி­ப­திக்குத் தெரியும். என­வேதான் இந்த அமைச்­சரை ஒதுக்­கி­விட்டு ஞான­சா­ரரை அவர் நிய­மித்­துள்ளார். ஜனா­தி­ப­தியின் இன்­னு­மொரு அந்­த­ரங்க நோக்கும் இதற்குள் அடங்கும்.

நாட்டின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்தி பொரு­ளா­தாரச் செழிப்பை உரு­வாக்கி ஒரு மகோன்­னத இலங்­கையை உரு­வாக்­குவேன் என்று கூறிக்­கொண்டு பத­வியைக் கைப்­பற்றி அதன் அதி­கா­ரங்­க­ளையும் பலப்­ப­டுத்­திக்­கொண்ட ஜனா­தி­பதி கோத்­தா­பய கடந்த இரண்டு வரு­டங்­க­ளாகக் கண்­ட­தெல்லாம் தோல்­விதான். நாட்டை இரா­ணு­வ­ம­ய­மாக்­கி­யது மட்­டுமே அவர்கண்ட சாதனை. அது அவ­ருக்கு சாத­னை­யாகத் தெரிந்­தாலும் மக்­களைப் பொறுத்­த­வரை அது ஒரு வேதனை. அவரின் தோல்­வி­க­ளுக்கு கோவிட் நோயையே காரணம் கூறு­வதை ஏற்க முடி­யாது. அவ­ரு­டைய மாபெரும் தோல்வி பொரு­ளா­தாரத் துறையில் என்­பதை அவ­தா­னிகள் உணர்வர். பொருத்­த­மான கொள்­கை­களை வகுத்து சீராக அவற்றை அமுல்­ப­டுத்தத் தவ­றி­யதன் விளை­வாக விவ­சா­யிகள் தொடக்கம் ஏழைத் தொழி­லா­ளிகள் வரை நாட்டின் பொரு­ளா­தா­ரத்தின் முது­கெ­லும்­பாக விளங்கும் உற்­பத்­தி­யாளர்களும் உண­வின்றித் தவிக்கும் கோடா­னு­கோடி குடி­யா­னவர்களும் இன்று வீதிக்கு வந்து ஆர்ப்­பாட்­டங்­களில் குதிக்கத் தொடங்­கி­விட்­டனர். ஜனா­தி­ப­திக்கு வாக்­க­ளித்த பௌத்த சிங்­கள மக்­களே இன்று அவர்களின் தவறை உணர்ந்து ஆட்­சி­யிலே மாற்றம் காணத் துடிக்­கின்­றனர். இதை உணர்ந்த ஜனா­தி­பதி சில தினங்­க­ளின்முன் பகி­ரங்­க­மா­கவே தமது ஆத­ர­வாளர்களிடம் மன்­னிப்புக் கோரினார். ஆனாலும் மக்கள் மன்­னிக்கும் மனப்­பாங்கில் இன்­றில்லை.

இந்த நிலையில் ராஜ­பக்ச ஆட்­சியின் வெளிநாட்­டுக் ­கொள்கை சில புதிய பிரச்­சி­னை­களைத் தோற்­று­வித்­துள்­ளது. அவற்றுள் ஒன்று தமி­ழி­னத்தின் நிலைமை பற்­றி­யது. அதற்கு ஒரு தீர்­வு­காணும் முக­மாக மாகாணத் தேர்தலை­யா­வது நடத்­து­மாறு இந்­தி­யாவும் அதற்கு ஆத­ர­வான மேற்கு நாடு­களும் அழுத்தம் கொடுக்­கின்­றன. இந்தச் சூழலில் தேர்தல் என்­பது ஆட்­சி­யி­னரின் தற்­கொ­லைக்குச் சமன். அவர்கள் தோல்­வியைத் தழு­வு­வது உறுதி. எனவே எந்த ஒரு தேர்தலையும் நடத்­த­மு­டி­யாத அமை­தி­யற்ற ஒரு நிலைக்கு நாட்டை மாற்ற முடி­யு­மானால் அமை­தி­யின்­மையைச் சாட்­டாக வைத்து இரா­ணுவ ஆத­ர­வுடன் ஆட்­சியை நீடிக்­கலாம். அந்த நிலை­மையை எப்­படி ஏற்­ப­டுத்­து­வது?

முஸ்லிம் சமூ­கத்­தையே நாட்டின் எதி­ரி­க­ளெனப் படம்­பி­டித்­துக்­காட்­டு­பவர்கள் ஞான­சா­ரரும் அவரின் பொது பலசேனா பரி­வா­ரங்­களும். கோத்­தா­ப­யவும் அவர்களின் சேவையை இப்­போது நாடி­நிற்­கிறார். ஆக­வேதான் அவர் அந்த இயக்­கத்தைத் தடை செய்­ய­வில்லை. முஸ்­லிம்­களின் கலாசார அடை­யா­ளங்­களுள் ஒன்­றா­கிய திரு­மண விவா­க­ரத்துச் சட்­டத்தை முற்­றாக நீக்­கு­கையில் அது முஸ்­லிம்­க­ளி­டையே ஏமாற்­றத்­தையும் ஆட்­சி­யின்மேல் வெறுப்­பையும் உண்­டு­பண்ணும் என்­பது திண்ணம். ஆனால் அந்த வெறுப்பு சில பொறுப்­பற்ற நபர்களின் நட­வ­டிக்­கை­களால் அசம்­பா­வி­தங்­களை ஏற்­ப­டுத்­து­மாயின் அதனைத் துரும்­பாகப் பாவித்தே ஞான­சாரர் அவரின் பொது பலசேனாவை தூண்­டி­விட்டு இன்­னு­மொரு கல­வ­ரத்தை உண்டு பண்­ணுவார். அதுவே போதும் ஜனா­தி­ப­திக்கு. அந்த அமை­தி­யின்­மையை கார­ணம்­காட்டி தேர்தல்­களே இல்­லாமல் ஆட்­சியை இரா­ணு­வத்தின் ஆத­ர­வோடு நீடிக்கச் செய்­யலாம். இதுவே அவ­ரது நாட­கத்தின் இன்­னு­மொரு நோக்கம்.

மீள வழி
இது முஸ்லிம் சமூ­கத்­துக்கு ஒரு சோதனைக் காலம். ஆனால் அவர்களின் முக்­கிய பிரச்­சினை தர­மான தலை­மைத்­துவம் இல்­லா­மையே. கத்­தோ­லிக்க மக்­க­ளுக்கு நீதி­கேட்டு பேராயர் துணிந்து போரா­டு­வ­துபோல் முஸ்­லி­ம­க­ளுக்­காகப் போராட யாரும் இல்லை. ஜம் இய்யத்துல் உல­மா­வுக்குத் தெரிந்­த­தெல்லாம் இறை­வ­னிடம் கையேந்­து­வதே. இருக்­கின்ற அர­சியல் தலைவர்களோ சாத்­தா­னு­ட­னா­வது பேரம்­பேசி தங்­க­ளது நலன்­க­ளையே உயர்த்தப்­பார்க்­கின்­றனர். இல்­லா­விட்டால் 20ஆம் திருத்­தத்தை ஆத­ரித்து வாக்­க­ளித்­தி­ருப்­பார்­களா? அவர்கள் செய்த கைங்­க­ரி­யத்தால் முழுச்­ச­மூ­க­முமே இன்று நட்­டாற்றில் தள்­ளப்­பட்­டுள்­ளது. இப்­பொ­ழுது கத்­தோ­லிக்க மக்­களின் பிரச்­சினை பாப்­பாண்­ட­வரின் செவிக­ளையும் எட்­டி­யுள்­ளதை அவர் பேரா­ய­ருக்கு அனுப்­பிய மட­லி­லி­ருந்து தெரி­கி­றது. பாப்­பாண்­ட­வரின் ராஜ­தந்­திரம் எப்­படி ராஜ­பக்ச அரசைப் பாதிக்கும் என்­பதை காலம்தான் உணர்த்தும். ஆனால் முஸ்­லிம்­க­ளுக்கோ ஒரு பாப்­பாண்­ட­வ­ரில்லை.

அவர்களுக்­குள்ள ஒரே­யொரு வெளி அரங்கு உலக முஸ்லிம் நாடு­களின் கூட்­டு­ற­வுத்­தா­பனம் மட்­டுமே. அத­னு­டைய செல்­வாக்கோ மிகவும் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஒன்று. அண்­மையில் பல புலம்­பெயர் முஸ்­லிம்­களின் அயரா முயற்­சியால் இலங்கை அர­சுக்­கெ­தி­ராக ஒரு பிரே­ர­ணையை அந்தத் தாபனம் வெற்­றி­யுடன் நிறை­வேற்­றி­யது. அதற்­குமேல் அது ஏதா­வது செய்­யுமா என்­பது நிச்­ச­ய­மில்லை. இருந்­த­போதும் இலங்கை முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைக்­கான தீர்­வு­களை இலங்­கைக்­குள்­ளே­யேதான் தேட­வேண்­டி­யுள்­ளது.
அதற்கு அடிப்­படைத் தேவை புதிய ஒரு தலை­மைத்­துவம். அந்தத் தலை­மைத்­துவம் முஸ்­லி­மா­கத்தான் இருக்க வேண்­டு­மென்­பது அவ­சி­ய­மில்லை. அது பௌத்­த­மா­கவோ கிறித்­த­வ­மா­கவோ சைவ­மா­கவோ முஸ்­லி­மா­கவோ நாத்­தி­க­மா­கவோ இருக்­கலாம். அதன் வெளி­வ­டி­வ­மல்ல முக்­கியம், உள்­நோக்­கமும் கொள்­கை­க­ளுமே. முஸ்­லிம்கள் இந்­நாட்டின் இன்­றி­ய­மை­யாத ஒரு சமூகம், அச்­ச­மூக மக்­க­ளுக்கு எல்லாப் பிர­ஜை­க­ளுக்­கு­முள்ள உரி­மை­களும் கட­மை­களும் உண்டு, நாட்டின் ஜன­நா­யக வளர்ச்சிப் போராட்­டத்தில் அவர்களின் பங்கைத் தவிர்க்க முடி­யாது என்ற மனப்­பாங்கில் எந்த தலை­மைத்­துவம் உரு­வா­கின்­றதோ அதன் பின்­னா­லேதான் முஸ்­லிம்கள் அணி­தி­ரள வேண்டும். அவ்­வா­றான ஒரு தலை­மைத்­து­வத்தை நாடே இன்று வேண்டி நிற்­கின்­றது.

அது உரு­வா­கு­வ­தற்­கான சாயல்கள் தென்­ப­டு­கின்­றன. பல சிவில் அமைப்­புகள் அதற்­காகப் பாடு­ப­டு­கின்­றன. அவற்றை இனங்­கண்டு அணுகி முஸ்லிம் சமூ­கத்தை அவைபால் வழிப்­ப­டுத்தல் முஸ்லிம் ஆண் பெண் புத்­தி­ ஜீ­வி­களின் இன்­றைய கடமை. அதுவே இன்­றுள்ள நிலை­மை­யி­லி­ருந்து மீள்­வ­தற்­கான ஒரே வழி.
இலங்கை முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­க­ளைப்­பற்றி அலசவும் தீர்வுக்கு வழிதேடவும் இலங்கைக்கு வெளியே இருந்து இணையவழி மகாநாடுகள் நடைபெறும் இவ்வேளையில் இலங்கைக்குள்ளிருந்து எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்படாமல் இருப்பதை என்னென்று விளக்குவதோ?-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.