மஜ்மா நகர் மக்களுக்கு மாற்றுக் காணி வழங்கப்படுமா?

0 1,837

எச்.எம்.எம்.பர்ஸான்

இலங்­கையில் கொவிட் 19 தொற்­றினால் மர­ணிக்கும் முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்கள் ஓட்­ட­மா­வடி, மஜ்மா நகரில் அடக்கம் செய்­யப்­பட்டு வரு­வதை நாம் அறிவோம். நமது குடும்­பத்­தினர், உற­வி­னர்கள், நண்­பர்கள், பிர­தே­சத்­த­வர்கள் என சுமார் மூவா­யி­ரத்­துக்கும் அதி­க­மானோர் அங்கு அடக்கம் செய்­யப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.

ஜனா­ஸாக்கள் எரிக்­கப்­பட்­டதால் மிகவும் கவ­லையில் இருந்த முஸ்­லிம்கள், அடக்கம் செய்ய அனு­ம­திக்­கப்­பட்­ட­வுடன் ஆறு­த­ல­டைந்­தனர். இதற்­காக மட்­டக்­க­ளப்பு மாவட்டம் கோற­ளைப்­பற்று மேற்கு ஓட்­ட­மா­வடி பிர­தேச செய­லகம் மற்றும் பிர­தேச சபை பிரி­வு­க­ளுக்கு உட்­பட்ட மஜ்மா நகர் கிரா­மத்தில் அமைந்­துள்ள காணி அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டது.

சில நூறு ஜனா­ஸாக்கள் மட்­டுமே அடக்கம் செய்­யப்­படும் என்ற நம்­பிக்­கையில் உட­ன­டி­யா­கவே மஜ்மா நகர் மக்கள் தமது காணி­களை வழங்­கு­வ­தற்கு முன்­வந்­தனர். இதற்­காக அவர்­க­ளுக்கு மாற்றுக் காணிகள் வழங்­கப்­படும் என்றும் உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டது.
எனினும் தற்­போது அங்கு 14.5 ஏக்கர் காணி மொத்­த­மாக ஜனாஸா அடக்­கத்­திற்­காக சுவீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இவை பல­ருக்குச் சொந்­த­மான காணி­க­ளாகும். அந்த வகையில் காணி­களை இழந்த மக்­க­ளுக்கு உறு­தி­ய­ளிக்­கப்­பட்­ட­வாறு பதில் காணி­களை வழங்க வேண்­டி­யது அர­சி­யல்­வா­திகள், அதி­கா­ரி­களின் கட­மை­யாகும்.

இந்த விவ­காரம் தொடர்பில் பாதிக்­கப்­பட்ட மக்­களைச் சந்­தித்து விடிவெள்ளிக்­காக அவர்­க­ளது கருத்­துக்­களை கேட்டோம்.

ஏ.எல்.சமீம்

ஏ.எல்.சமீம் (மஜ்மா நகர் கிராம அபி­வி­ருத்தி சங்க தலைவர்)
கல்­குடா தொகுதி பள்­ளி­வா­சல்­களின் மைய­வா­டி­களில் இடப்­பற்­றாக்­குறை ஏற்­பட்­டி­ருக்கும் நிலையில் ஜனா­ஸாக்­களை நல்­ல­டக்கம் செய்ய மஜ்மா நகரில் பத்து ஏக்கர் காணி ஒதுக்­கப்­பட்­டி­ருந்­தது.

அந்தக் காணி­யில்தான் கொரோனா தொற்­றினால் மர­ணிக்கும் நபர்­களை நல்­ல­டக்கம் செய்ய பிர­தேச சபை அனு­மதி வழங்­கி­யது. அந்த இடத்தை நிபுணர் குழு­வினர் பார்­வை­யிட வரு­வ­தாக நாம் அறிந்தோம்.

கொரோனா தொற்றால் மர­ணிக்கும் நபர்­களை அடக்கம் செய்­வ­தாக இருந்தால் அந்தப் பகுதி சன­ந­ட­மாட்டம் இல்­லா­த­தாக இருக்க வேண்டும் என்று நிபுணர் குழு­வினர் அறி­வு­றுத்­தல்­களை விடுத்­தி­ருந்­தனர்.

எப்­ப­டி­யா­வது முஸ்­லிம்­களின் உடல்­களை அடக்கம் செய்ய வேண்டும் என்ற நிலையில் ஒரு­மித்த கருத்­தோடு முஸ்லிம் சமூகம் இருந்­ததால் நாங்கள் அந்தப் பகு­தியில் குடி­யி­ருந்த நபர்­களின் இருப்­பி­டங்கள், ஆட்டுத் தொழு­வங்கள், விவ­சாய செய்­கைகள் அனைத்­தையும் இர­வோடு இர­வாக அகற்­றினோம்.

குறித்த இடத்தை பார்­வை­யிட்ட நிபுணர் குழு­வினர் அந்த பத்து ஏக்கர் நிலம் பொருத்­த­மில்லை என்றும் அதற்கு அரு­கி­லுள்ள தனி­யா­ருக்கு சொந்­த­மான மேட்­டு­நில காணியே பொருத்தம் என்றும் தெரி­வித்­தனர்.

நிபுணர் குழு மஜ்மா நகர் காணியை பார்­வை­யிட்ட போது அதில் முத­லா­வது ஜௌபர் என்­ப­வ­ரு­டைய காணி­யைத்தான் அடை­யாளம் கண்­டனர். அவர்கள் நீதி­யாக நடந்து கொண்­டார்கள். காணிச் சொந்­தக்­காரர் ஜௌபரை அழைத்து அவ­ரது விருப்­பத்தை கேட்­டனர். அவர் எதையும் எதிர்­பார்க்­காமல் முஸ்லிம் சமூ­கத்தின் நல­னுக்­காக அந்தக் காணியை விட்டுக் கொடுத்தார்.

அல்­லாஹ்வின் உத­வி­யுடன் அந்த இடத்தில் ஜனா­ஸாக்­களை அடக்­கு­வ­தற்கு அவர் நூறு வீதம் உடன்­பட்­டதன் மூலம்தான் அன்று தேசி­யத்தில் ஒரு பாரிய பிரச்­சி­னைக்கு தீர்­வாக அமைந்­தது.

அதற்­க­மைய வாழைச்­சே­னையைச் சேர்ந்த முகம்மட் ஜௌபர் என்­ப­வ­ருக்கு சொந்­த­மான மூன்று ஏக்கர் காணி அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்டு அதில் மார்ச் மாதம் ஐந்தாம் திகதி முத­லா­வது ஜனாஸா நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது.

பின்னர் கொரோனா மர­ணங்கள் அதி­க­ரித்­த­மையால் அதன் அரு­கி­லுள்ள ஏனைய நபர்­களின் காணி­களும் பெறப்­பட்­டன. இது­வரை 14 நபர்­களின் 14.5 ஏக்கர் காணிகள் கொரோனா உடல்கள் நல்­ல­டக்கம் செய்­யவும் அதன் பாது­காப்பு வல­யத்­துக்­கா­கவும் எடுக்­கப்­பட்­டுள்­ளன.

தேசி­யத்­திலும், சர்­வ­தே­சத்­திலும் ஓட்­ட­மா­வடி மஜ்மா நகர் புகழ் பெற்­றுள்­ளது. ஆனால் காணியை இழந்து தவிக்கும் அந்த ஏழை­களை யாரும் கண்­டு­கொள்­ள­வில்லை. அவர்கள் இலை­மறை காய்­க­ளாக சமூ­கத்தில் வாழ்ந்து வரு­கின்­றனர்.
காணியை இழந்த நபர்­க­ளுக்கு எப்­ப­டி­யா­வது காணி­களைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று எங்­க­ளு­டைய கிராம அபி­வி­ருத்திச் சங்கம் பல்­வேறு முயற்­சி­களை மேற்­கொண்­டது. அது கைகூ­டாத நிலை­யில்தான் நாங்கள் அண்­மையில் ஓட்­ட­மா­வடி பிர­தேச செய­லா­ள­ரிடம் மாற்றுக் காணியை பெற்றுக் கொடுக்­கும்­படி மகஜர் ஒன்­றினை கைய­ளித்­துள்ளோம்.

மஜ்மா நகரில் முன்­னூறு உடல்­கள்தான் அடக்கம் செய்­யப்­படும் என்று எதிர்­பார்த்தோம். ஆனால் தற்­போது மூவா­யி­ரத்தை தாண்டிச் செல்­கி­றது.

கல்­குடா முஸ்லிம் மக்கள் நிலப்­பற்­றாக்­கு­றையால் தவிக்­கின்­றனர். அதனால் தான் ஜனாஸா நல்­ல­டக்­கத்தை கிண்­ணியா – வட்­ட­மடு பகு­திக்கு மாற்­றுங்கள் என்று கேட்­கிறோம். ஆனால் இன்னும் இங்­கேயே அடக்கம் தொடர்­கி­றது.

ஓட்­ட­மா­வடி மஜ்மா நகரில் ஜனாஸா நல்­ல­டக்­கத்தை நிறுத்த மறுக்கும் சிலர் அங்கு அடக்கம் செய்­யப்­ப­டு­வது அரச காணி­யி­லேயே என்றும் இன்னும் அரச காணிகள் அங்கு தாரா­ள­மாக உள்­ளன என்றும் உண்­மைக்குப் புறம்­பான செய்­தி­களை பரப்பி வரு­கின்­றனர்.

ஆனால் அது மக்­க­ளுக்குச் சொந்தமான காணி­யாகும் அதில் அவர்கள் காலா­கா­ல­மாக விவ­சாயம் செய்து வந்­துள்­ளனர். அதே­போன்று அங்கு மக்கள் குடி­யி­ருந்­த­மைக்­கான ஆதா­ரங்­களும் உள்­ளன.

அர­சாங்­கத்தால் ஒப்பம் வழங்­கப்­ப­ட­வில்லை என்ற கார­ணத்தைக் காட்டி அது அரச காணி என்று சிலர் வாதி­டு­கின்­றனர். அப்­படிப் பார்த்தால் காவத்­த­முனை, கேணி­நகர், நாவ­லடி போன்ற பகு­தி­களில் வசிக்கும் ஏரா­ள­மான நபர்­க­ளுக்கு இன்னும் ஒப்­பங்கள் வழங்­கப்­ப­ட­வில்லை. அங்கு மக்கள் குடி­யி­ருக்­கி­றார்கள். ஒப்பம் வழங்­கப்­ப­ட­வில்லை என்­ப­தற்­காக வேண்டி காலா­கா­ல­மாக வாழ்ந்து வரும் நபர்­களை எழுப்­பி­வி­டு­வது நியா­யமா? என்று நான் கேட்­கிறேன்.

மஜ்மா நகர் ஒரு மீள் குடி­யேற்ற கிரா­மாகும். அந்தப் பகுதி மக்­க­ளுக்கு அதி­கா­ரிகள் திட்­ட­மிட்டு ஒப்­பங்கள், உறு­திகள் வழங்­காமல் உள்­ளார்கள். அனால் அங்­குள்ள மக்கள் காலா­கா­ல­மாக ஒப்­பங்­க­ளுக்கு விண்­ணப்­பித்து வரு­கி­றார்கள்.
எனவே, காணி­களை இழந்து நிர்க்­க­திக்­குள்­ளா­கி­யுள்ள நபர்­க­ளுக்கு சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரிகள் கூடுதல் கவனம் செலுத்தி மாற்றுக் காணி­களை வழங்க நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.

எம்.ஏ.முகைதீன் (விவ­சாயி):
மஜ்மா நகரில் கொரோனா தொற்றால் மர­ணிக்கும் நபர்­களை நல்­ல­டக்கம் செய்யும் காணி விவ­சாயம் செய்­யப்­பட்ட, மக்கள் குடி­யி­ருந்த காணி­க­ளாகும். அந்தக் காணியில் ஒரு பகுதி எங்­க­ளது பரம்­பரை காணி­யாகும். அந்தக் காணிக்குள் 1971 ஆம் ஆண்டு ஓட்­ட­மா­வடி பிர­தேச சபையால் நிர்­மா­ணிக்­கப்­பட்ட கிணறு ஒன்று இப்­போதும் உள்­ளது.

எம்.ஏ.முகைதீன்

1979 ஆம் ஆண்டு ஏற்­பட்ட சூறாவ­ளியால் அப்­போது அங்கு வசித்து வந்த குடும்­பத்தின் பிள்ளை ஒன்று மர­ணித்த சம்­ப­வமும் பதி­வா­கி­யுள்­ளது. அந்திக் குடும்­பத்­தினர் தற்­போது காவத்­த­முனை பகு­தியில் வசித்து வரு­கின்­றனர்.

 

நான் அந்தக் காணியை 1990 ஆம் ஆண்­டு­முதல் பரா­ம­ரித்து வரு­கிறேன். பயங்­க­ர­வாத தாக்­கு­த­லினால் அப்­போது எங்­க­ளு­டைய குடி­யி­ருப்­புகள் தீயில் எரிந்து சாம்­ப­லா­கின. ஆதனால் அந்தக் காணிக்கு அர­சாங்­கத்தால் வழங்­கப்­பட்ட ஒப்­பங்­களும் தீயில் சாம்­ப­லா­கின. அதன் சில பகு­திகள் என்­னிடம் இப்­போதும் உள்­ளது.
அத்­துடன், நாங்கள் பயிர்ச் செய்கை செய்த போது வாழைச்­சேனை கம­நல சேவைகள் நிலை­யத்தில் உரம் பெறு­வ­தற்­காக பணம் கட்­டிய பற்­றுச்­சீட்டு மற்றும் பள்­ளி­வா­ச­லுக்கு வழங்­கிய நன்­கொடை பணத்­துக்­கான பற்­றுச்­சீட்டு உட்­பட இன்னும் பல ஆதா­ரங்கள் எம்­மிடம் இன்றும் உள்­ளன.

ஏ.எல்.முகம்­மது முத்து
நான் அந்தக் காணியை சுமார் பதி­னைந்து வரு­டங்­க­ளாக பரா­ம­ரித்து வரு­கிறேன். அந்தக் காணிக்கு ஒப்பம் கோரி விண்­ணப்­பித்­துள்ளேன். எனது காணியை நில அளவை அதி­கா­ரிகள் பார்­வை­யிட்டு அதற்­கான அடை­யாள கல்­லி­னையும் இட்டுச் சென்­றுள்­ளனர். இந்­நி­லை­யில்தான் எனது காணி ஜனாஸா அடக்­கத்­துக்­காக எடுக்­கப்­பட்­டுள்­ளது. எங்­க­ளுக்கு தரு­வ­தற்கு எங்கும் காணி இல்லை என்றால் இதைப்­பற்றி நாங்கள் சிந்­திக்க மாட்டோம். ஆனால் மாற்றுக் காணி­களை வழங்க வேறு இட­முள்­ளது. அத­னால்தான் நாங்கள் மாற்றுக் காணி­களை கேட்டு பிர­தேச செய­லா­ள­ரிடம் மகஜர் ஒன்­றினை கைய­ளித்­துள்ளோம்.

ஏ.எல்.முகம்­மது முத்து

ஜனாஸா அடக்கம் ஆரம்­பித்த ஆரம்ப காலப் பகு­தியில் எங்­களை ஓட்­ட­மா­வடி பிர­தேச சபை அழைத்து உங்­க­ளுக்கு பத்து நாட்­க­ளுக்குள் மாற்றுக் காணி தருவோம் என்று வாக்­கு­றுதி வழங்­கி­னார்கள். ஆனால் இது­வரை எங்­க­ளுக்கு காணி வழங்­கப்­ப­ட­வில்லை.
அந்தக் காணியில் தான் நான் பயிர் செய்து எனது வாழ்­வா­தா­ரத்தை அமைத்துக் கொண்டேன். இப்­போது அந்தக் காணியை இழந்த நிலையில் எனது வாழ்­வா­தாரம் இழக்­கப்­பட்ட நிலையில் உள்ளேன்.

அங்கு ஜனாஸா நல்­ல­டக்கம் செய்­யப்­ப­டு­வதை வைத்து வெளியூர் தன­வந்­தர்கள் மூலம் பல்­வேறு உத­விகள் கிடைப்­ப­தாக நாங்கள் அறி­கிறோம். ஆனால் இதுவரை எங்களுக்கு எந்தவித நிவாரணமும் கிடைக்கவில்லை.

எங்களது காணிக்கு நாங்கள் பணம் கேட்கவில்லை. எங்களுக்கு பணம் தேவையில்லை. மாற்றுக் காணிதான் தேவை. காணிகள் வழங்குவதற்கு இடம் இருக்கிறது. அதனால் தான் நாங்கள் காணி கேட்டு மகஜர் கொடுத்துள்ளோம் என்றார்.

இவர்களைப் போன்று காணிகளை இழந்த பலரையும் நாம் தொடர்பு கொண்டோம். அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் நினைத்தால் எங்களுக்கு காணிகளை வழங்க முடியும் என்று தங்களின் ஆதங்கங்களை வெளியிட்டனர். இவ்வாறு காணிகளை இழந்து தங்களது வாழ்வாதாரங்களை இழந்த நிலையில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள நபர்களுக்கு மாற்றுக் காணிகள் வழங்கப்பட வேண்டும். இதற்கான அழுத்தங்களை தேசிய ரீதியாக செயற்படும் முஸ்லிம் மக்களும் அமைப்புகளும் வழங்க முன்வர வேண்டும். இதில் நம் அனைவருக்கும் பொறுப்பிருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.