கொவிட் 19 தடுப்பூசியும் விளக்கங்களும்

0 54

விடியல் இணையத்தளத்தின் ஏற்பாட்டில் ‘ கொவிட் 19 போலிச் செய்திகள் மற்றும் தடுப்பூசிகள் தொடர்பான கட்டுக்கதைகளிலிருந்து பாதுகாப்பாக இருப்போம்’ எனும் தொனிப்பொருளிர் சமயத் தலைவர்களுக்கான இணையவழி செயலமர்வொன்று அண்மையில் இடம்பெற்றது.

இதில் வளவாளராக கலந்துகொண்ட பேராதனை பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட நுண்ணுயிரியல் பேராசிரியர் பஸீஹா நூர்தீனஇ கொவிட் – 19 வைரஸ் பரவல் மற்றும் தடுப்பூசி தொடர்பில் முன்வைத்த கருத்துக்களின் தொகுப்பு

(சிப்னா சிராஜ்)

வைரஸின் பரவல்

கொவிட் 19 தொற்றுள்ள ஒருவரிடம் இருந்து இந்த வைரஸ் மூக்கு மற்றும் வாயின் மூலம் வெளியேறுகின்ற சிறுதுளிகளினால் அதிகளவு வெளியேறுகின்றன.  மேலும்  உடலில் இருந்து வெளியேறுகின்ற கழிவான மலம் மூலம் சிறிய அளவில் வைரஸ் வெளியேறுகின்றன. தொற்றுள்ள ஒருவரின் மூக்கின் மூலம் வெளியேற்றப்படுகின்ற வைரஸ் உள்ள சிறுதுளிகள் இன்னொருவரின் சுவாசப்பாதையை சென்றடைவதன் மூலம் நேரடியாக தொற்றலாம். அல்லது அத்தகைய சிறுதுணிக்கைகள் பரவிய வளியை சுவாசிப்பதன் மூலம் தொற்று ஏற்படலாம்.

மேலும் இவ்வைரஸ் ஆனது கைப்பிடிகள், தொலைபேசி தொடுதிரைகள், கணினி திரைகள் மற்றும் பொருட்களின் மேற்பரப்புகளை தொடுவதன் மூலமும் பரவலடையக்கூடியது.

மூக்கின் மூலம் சிறுதுளிகளாக வைரஸை வெளியேறி பரவுவதை தடுப்பதற்காகவே தொற்று ஏற்பட்டவர்களுக்கு முகக்கவசம் அணிய வலியுறுத்தப்படுகிறது. அச்சிறுதுளிகளில் இருந்து பாதுகாப்பு பெறவே ஏனையவர்களுக்கு சமூக இடைவெளியை பேணவும் முகக்கவசம் அணியும்படியும் கூறப்படுகிறது. கைகளில் இருந்து மூக்கு அல்லது வாயினூடு தொற்று றே்படுவதை தடுக்கும் பொருட்டே அடிக்கடி கைகளை கழுவிக்கொள்ளும்படி பணிக்கப்படுகிறது.

தொற்றின் வரலாறு

 1. நோய் அரும்புகாலம் (முதல் 5 நாட்கள்)

பொதுவாக தொற்று ஏற்பட்ட முதல் ஐந்து நாட்கள் எவ்வித அறிகுறியும் தென்படாத நோய் அரும்புகாலமாக காணப்படும்.

 1. தீவிர கட்டம் ( 5 தொடக்கம் 10 நாட்கள் வரை)

ஐந்து நாட்களின் பின் தலைவலி, தொண்டைவலி, காய்ச்சல், தசைகளில் வலி ஏற்படல்  போன்ற ஆரம்ப அறிகுறிகள் வௌிக்காட்டப்படும். இவ்வறிகுறிகள் தோன்றிய பின் நோய்நிலை அதிகரிக்கும். பின் பெரும்பாலானோருக்கு வைரஸின் அளவு குறையகுறைய படிப்படியாக குணமடையும்.

 1. அதி தீவிர கட்டம் ( பல நாட்கள் மற்றும் வாரங்கள்)

தீவிர கட்டத்தை தாண்டும் போது சுவாசிப்பதில் சிரமம், இதய துடிப்பு வேகம் அதிகரித்தல் மற்றும் உடலின் ஒட்சிசன் அளவில் வீழ்ச்சி போன்ற அறிகுறிகள் தெரியவாரம்பித்து நோய் அதி தீவிர கட்டத்தை அடையும். பலருக்கு நோய் நிலைமை அதிகரித்து வைரஸின் அளவு உடலில் குறைகையில் குணமடையவர்.

அதி தீவிர நிலைக்கு உள்ளாகும் சாத்தியம் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், நீரிழிவு போன்ற தொற்றா நோய் உள்ளவர்கள், இதயம் கம்பந்தப்பட்ட நோய்கள் இருப்பவர்கள், ஏற்கனவே ஆஸ்துமா போன்ற சுவாச உபாதையுள்ளவர்கள், நெடுநாள் புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு காணப்படுகிறது. மேலும் ஒப்பீட்டு ரீதியில் பெண்களை விட ஆண்களே இந்நிலையை அடைகின்றனர்.

இந்நிலையின் அதி உச்சகட்டமாக மரணம் சம்பவிக்கும். இந்நோய் நிலைமையின் போது தொற்று ஏற்பட்டவரின் உடலில் வைரஸின் அளவு குறையாமல் காணப்படும்.கொவிட் 19 வைரஸ் தொற்று ஏற்பட்ட பின் சிலருக்கு எந்த அறிகுறிகளையும் வெளிக்காட்டாமல் இருக்கவும்கூடும்.

தடுப்பூசி என்பது

குறித்த ஏதேனும் தொற்று ஏற்பட்ட  ஒருவர் குணமடையும் போது அவருக்கு அந்நோய்க்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தி உடலில் இயற்கையாகவே  உருவாக்கப்பட்டும். தடுப்பூசி என்பது எமது உடலினுள் நோயில்லாமல், ஆனால் தொற்று ஏற்படும் போது ஏற்படும் நோயெதிர்ப்பை உருவாக்குவதாகும். இதுவே தடுப்பூசி என்பதன் சுருக்கமான விளக்கம் ஆகும்.

தடுப்பூசிகளின் உருவாக்கம்

சாதாரணமாக தடுப்பூசியொன்றை கண்டுபிடித்து உருவாக்குவதற்கு  10 தொடக்கம்  வருடங்கள் வரையில் ஆகலாம். தடுப்பூசியொன்று சந்தைப்படுத்த முதல் விலங்குகள் மற்றும் மனிதர்கள் மீது நான்கு கட்டங்களில் பரிசோதிக்கப்படும்.

 1. முன்சிகிச்சை கட்டம்

முதல் இரண்டு வருடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியானது விலங்குகளுக்கு உட்செலுத்தப்படும். விரங்குகளின் மீது அவை ஏற்படுத்துகின்ற பாதுகாப்பு, நோய் தடுப்பு ஆற்றல் என்பவை மதிப்பிடப்படும். இதன் பின் மனிதர்கள் மேல் மூன்று கட்டங்களாக பரிசோதிக்கப்படும்.

 1. முதல் கட்டம்

ஆரோக்கியமான வளர்ந்தோருக்கு உட்செலுத்தப்பட்டு நோயெதிர்ப்பு சக்தி உருவாவது உறுதிசெய்யப்படுவதோடு வேறு துலங்கல்கள் தென்படுவதை அவதானிப்பர்.

 1. இரண்டாம் கட்டம்

வெவ்வேறு வயதினருக்கு குறித்த தடுப்பூசி உட்செலுத்தப்படும். இதன் போது முதலாம் கட்டத்தில் வௌிக்காட்டப்பட்ட நோயெதிர்ப்பு சக்தி மேலும் உறுதிசெய்யப்படும்.

 1. மூன்றாம் கட்டம்

தொற்றுள்ளவர்களில் சிலருக்கு பிரயோகிக்கப்பட்டு அவதானங்கள் மேற்கொள்ளப்படும். இதன் பின்னரே தடுப்பூசிகள் உற்பத்திசெய்யப்படும்.உலகின் பல நிறுவனங்கள் உருவாக்கும் தடுப்பூசிகள் உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் உணவு மற்றும் மருந்து அதிகாரசபை (FDA) வழங்கும் அனுமதியை பெற்ற பின்னரே மக்களுக்கு விநியோகிக்க தகுதிபெறுகிறது.மேற்குறிப்பிடப்பட்ட படிமுறைகள் அனைத்தையும் குறுகிய காலத்தில் சுமார் ஒன்றரை வருடங்களில் துரித செயன்முறைக்கு உட்படுத்தியே கொவிட் 19 இற்கான தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டன. இலங்கையில் இவ்வருடம் பெப்ரவரி மாதம் முதல் கொவிட் 19 இற்கெதிரான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுவருகின்றன.

கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்ட முறை

 • இலங்கையில் ஆரம்பத்தில் இத்தடுப்பூசிகள் தொற்று அபாயம் அதிகமாக காணப்படும் சுகாதார ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது.
 • பின்னர் அதி தீவிர கட்டத்தை அடையும் அபாயம் உள்ள 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.
 • அதன்பின் 30 தொடக்கம் 60 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்டது.
 • அதனை தொடர்ந்து 20 முதல் 30 வரை, 18 முதல் 20 வரை அதன் பின் 12 முதல் 18 வரை வயதெல்லையினருக்கு முறையே தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.

கொவிட் 19 தடுப்பூசிகள்

கொவிட் 19 தடுப்பூசிகளில் பெரும்பாலானவை இரண்டு தடுப்பூசிகளை கொண்டவை. சைனாபார்ம், அஸ்ட்ராசெனிகா, மொடர்னா, பைஸர் பயோடெக், ஸ்புட்னிக் போன்றவற்றுடன் இன்னும் பல தடுப்பூசிகள் உலக சுகாதார ஸ’தாபனத்தின் அனுமதியை பெற்றே நமது நாட்டிலும் உலக நாடுகளிலும் வழங்கப்படுகின்றன.

உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் உணவு மற்றும் மருந்து அதிகாரசபை (FDA) வழங்கும் அனுமதியை பெறாத எந்த தடுப்பூசியும் வழங்கப்பட முடியாது. இலங்கையில் இத்தடுப்பூசிகள் தேசிய மருந்துகள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் அனுமதியூடே வழந்கப்படுகின்றன.

கொவிட் 19 தடுப்பூசி மூலம் எதிர்பார்ப்பது என்ன?

 1. அதி தீவிர நோய்நிலைமை மற்றும் மரணமடைவதை விட்டும் பாதுகாக்ககூடியதாக இருத்தல் வேண்டும்.
 2. சாதாரண நோய்நிலைமையை விட்டும் பாதுகாக்கும்.
 3. வைரஸ் நோய்தொற்றில் இருந்து குணமடைந்த ஒருவருக்கு மீண்டும் அத்தொற்று ஏற்படுவதை விட்டும் பாதுகாக்கும்.

தடுப்பூசியும் தொற்று கட்டுப்பாடும்

சீனாவின் வூஹானில் இனம்காணப்பட்ட கொவிட் 10 வைரஸ் ஆனது இன்றைக்கு பல மாற்றங்களுக்கும் திரிபுகளுக்கும் உட்பட்டு டெல்டா, அல்பா, லம்டா வகைகளாக உருமாறியுள்ளன.

ஆரம்ப வைரஸ் வகைக்கு உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள் திரிபுபட்ட புதிய வகைகளுக்கு எதிர்ப்பை வழங்கும் வீதம் குறைவாகும். புது வகை திரிபு தொற்றேற்பட்ட ஒருவருக்கு வழங்கப்பட்ட தடுப்பூசி குறைவான நோயெதிர்ப்பையே வழங்கும்.

இதன் காரணமாய் முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவிக்கொள்ளல், சமூக இடை வெளியை இயன்றவரை பேணிக்கொள்ளல், சன நெரிசலான இடங்களை தவிர்த்தல், வீடுகளை காற்றோட்டமாகவும் சூரியவொளி படும் வகையிலும் பராமரித்தல், ஆரோக்கியமான உணவு வேளைகளை திட்டமிடல் மற்றும் உடற்பயிற்சிகள் இவையனைத்திற்கும் மேலாக நேர்மறையான எண்ணங்களை உருவாக்கிக்கொள்ளல் போன்ற விடயங்களை முடிந்த அளவில் பேண வலியுறுத்தப்படுகிறீர்கள்.

பெறப்பட்ட தடுப்பூசி எவ்வளவு காலத்திற்கு பாதுகாப்பை வழங்கும் என எதிர்வுகூறக்கூடிய அளவிற்கு இன்னும் இத்தடுப்பூசிக்கான காலம் கடக்கவில்லை என்பதை கருத்திற்கொள்ள வேண்டும்.

COVAX திட்டம்

உலக சுகாதார ஸ்தாபனம் முகம்கொடுக்கின்ற பாரிய சவாலாக இக்கொவிட் 10 பெறுந்தொற்று நாணப்படுகிறது. எனவே அவர்களின் COVAX திட்டத்தின் மூலம் இவ்வருட இறுதிக்குள் இரண்டு பில்லியன் தடுப்பூசிகளை உருவாக்கி அனைத்து வறிய நாடுகளுக்கும் விநியோகித்துவருகிறது.

இலங்கைக்கும் மேற்குறிப்பிட்ட திட்டத்தின் மூலமும் தடுப்பூசிகள் நன்கொடையாக வழங்கப்பட்டன.

அல்பா திரிபு காணப்படுகையில் எடுக்கப்பட்ட தரவுகள்

விளைவு பைஸர்பயோன்டெக் அஸ்டரா ஸெனிக்கா
1ஆம் தடுப்பூசி 2ஆம் தடுப்பூசி 1ஆம் தடுப்பூசி 2ஆம் தடுப்பூசி
அறிகுறிகள் தென்படும் நோய்நிலைமை 55 இலிருந்து 70 % 85 இலிருந்து 95% 55 இலிருந்து 70% 70 இலிருந்து 85%
வைத்தியசாலையில் அனுமதிக்கப்படல் 75 இலிருந்து 85% 90 இலிருந்து 99% 75 இலிருந்து 85% 80 இலிருந்து 99%
மரணம் சம்பவித்தல் 70 இலிருந்து 85% 95 இலிருந்து 99% 75 இலிருந்து 85% 75 இலிருந்து 99%
தொற்றுக்குள்ளாதல் 55 இலிருந்து 70% 70 இலிருந்து 90% 55 இலிருந்து 70% 65 இலிருந்து 90%
இரண்டாம் முறையும் பரவலடைதல் 45 இலிருந்து 50% தகவல் இல்லை 35 இலிருந்து 50% தகவல் இல்லை

மேற்குறிப்பிட்ட சுகாதார நடைமுறைகளை முற்றும் முழுதாக பின்பற்றுவதுடன் சமய ரீதியில் நேர்மறை விடயங்களை பேணுதல் முக்கியமாகிறது. மேலும் போலி தகவல்களை பரப்புதலையும் அதற்கு ஆதரவளிப்பதையும் முற்றிலும் தவிர்த்துக்கொள்ளல். – Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.