“தோல்வியுற்றுவரும் பேரினவாத நிகழ்ச்சி நிரல்’’

0 314

பேரா­சி­ரியர், மெள­லவி.
எம்.எஸ்.எம்.ஜலால்தீன் (கபூரி)

வர­லாற்று ரீதி­யாக இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பல்­வேறு பேரி­ன­வாத தாக்­கு­தல்­களும், நெருக்­கு­தல்­களும் ஒவ்­வொரு கால கட்­டத்­திலும் நடந்­தேறி வந்­துள்­ளன.
பிரித்­தா­னியர் ஆட்­சிக்­கா­லத்தின் இறு­திப்­ப­கு­தியில் 1915ஆம் ஆண்டு முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்ட ‘சிங்­கள முஸ்லிம் கலகம்’, ஆயி­ரக்­க­ணக்­கான உயிர்­களைக் காவு­கொண்­டது மட்­டு­மன்றி, பொரு­ளா­தார, சமய, கல்­வித்­து­றை­க­ளிலும் பல்­வேறு பாதிப்­புக்­களை ஏற்­ப­டுத்­திய மிக திட்­ட­மி­டப்­பட்ட கல­க­மாகும்.

1915 ஆம் ஆண்டு இடம்­பெற்ற இக்­கொ­டூர கல­கத்தின் பின் இலங்­கையில் வட­கி­ழக்­குக்கு வெளியே இது­வரை 35க்கும் மேற்­பட்ட பாரிய கல­கங்கள் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளமை ஆய்­வு­களின் மூலம் தெரிய வந்­துள்­ளது.

2019 இல் இடம் பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்­டு­வெ­டிப்பு சம்­ப­வத்தைத் தொடர்ந்து, இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்டு வரும் பேரி­ன­வாத நிகழ்ச்சி நிரலின் தற்­கால போக்கு பற்­றியே இக்­கட்­டுரை ஓர­ளவு ஆய்வு செய்ய முயல்­கின்­றது. 2019 உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புச் சம்­பவம் இடம் பெறு­வ­தற்கு முன்­னரே, குறிப்­பாக மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்­சிக்­கா­லத்­தி­லேயே முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான பேரி­ன­வாத நிகழ்ச்சி நிரல் ஆரம்­ப­மா­கி­விட்­டதை அப்­போது இடம்­பெற்ற பல்­வேறு சம்­ப­வங்­களின் மூலம் அறிந்து கொள்­ளலாம்.

இப்­பே­ரி­ன­வாத, நிகழ்ச்சி நிரலின் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­க­ளாக பெளத்த தீவி­ர­வாத மத­கு­ரு­வான ஞான­சார தேரரும், அவ­ரது பொது­பல சேனா அமைப்பும் மட்­டு­மன்றி, சிங்­கள ராவய, ஜாதிக ஹெல உரு­மய, சிங்­கள உரு­மய போன்ற இன­வாத அமைப்­பு­களும் அவற்றின் ஸ்தாப­கர்­களும் ஆய்­வா­ளர்­களால் அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளனர். முப்­பது வருடம் இலங்­கையில் நடை­பெற்­று­வந்த உள்­நாட்­டுப்போர் 2009இல் முழு­மை­யாக முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்­டபின், பெளத்த பேரி­ன­வாதம் மற்­றொரு எதிர்­மு­காமை உட­ன­டி­யாகத் தேடத்­தொ­டங்­கி­யது. அப்­போ­துதான் அவர்­க­ளுக்கு முஸ்­லிம்­களும், முஸ்­லிம்­க­ளது நவீன இஸ்­லா­மிய சிந்­த­னை­களின் பக்­க­மான ஆர்­வமும் தென்­படத் தொடங்­கி­யது இது­பற்­றிய கருத்­துக்­களை விரி­வஞ்சி விடுக்­கின்றேன்.

பாட்­டாலி சம்­பிக்க ரண­வக்­கவும் முஸ்­லிம்­களும்
தனது பல்­க­லைக்­க­ழக மாணவ காலத்­தி­லேயே ஒரு தீவி­ர­வாத மாண­வ­ராக விளங்­கிய சம்­பிக்க ரண­வக்க ஆரம்­பத்தில் ஜன­தா­வி­முக்தி பெர­முன இயக்­கத்தில் இணைந்து செயற்­பட்­ட­போதும் 1991ஆம் ஆண்­டின்பின் தனது இள­மைக்­கால நண்­ப­ரான அது­ர­லிய ரதன தேரர், நிசாந்த வர்ண சிங்க போன்­றோ­ருடன் இணைந்து ‘ஜனதா மித்­ரயோ’ என்ற இன­வாத அமைப்பை உரு­வாக்­கினார். 1993இல் நடந்த ஜனா­தி­பதி தேர்­தலின் சந்­தி­ரிக்கா குமா­ர­துங்­கவை ஆட்­சி­பீடமேற்ற இவ்­வ­மைப்பு முன்­னின்று செயற்­பட்­டது.
சிறிது காலத்­தின்பின் “சிஹல உரு­மய’’ என்ற சிங்­கள தேசி­யக்­கட்­சியில் இணைந்து கொண்டார். அதன்பின் சிஹல உரு­ம­ய­கட்சி பெளத்த தேரர்­களின் அதிக பிர­சன்­னத்­துடன் “ஜாதிக ஹெல உரு­மய கட்­சி­யாக மாற்றம் செய்­யப்­பட்டு 2005இல் நடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் மஹிந்த ராஜ­பக்ஷவை ஜனா­தி­ப­தி­யாக கொண்­டு­வர முழு­மூச்­சாக செயற்­பட்­டது.

மஹிந்த ராஜ­பக்ஷ, ஜாதிக ஹெல­உ­ரு­மய போன்ற இன­வா­தக்­கட்­சிகள், தீவி­ர­வாத பெளத்த பிக்­கு­களின் பூரண அனு­ச­ர­ணை­யுடன் ஆட்­சிக்கு வந்­ததால் முதலில் விடு­த­லைப்­பு­லி­களை முழு­மை­யாக துவம்சம் செய்­வதை முக்­கிய இலட்­சி­ய­மாகக் கொண்டு செயற்­பட்­டது. 2009இல் இக்­கு­றிக்கோள் பூர­ண­மாக நிறை­வேற்­றப்­பட்­ட­வுடன் தமது அடுத்த எதி­ரி­யாக முஸ்­லிம்­களை அடை­யா­ளப்­ப­டுத்தி முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான மும்­மு­னைத்­தாக்­கு­தலை ஆரம்­பித்­தது. இவ்­வி­ட­யத்தில் அப்­போ­தைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவோ அவ­ரது அர­சாங்­கமோ நேர­டி­யாக முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக களத்தில் குதிக்­காத போதும் பட்­டாலி சம்­பிக்க ரண­வக்க போன்ற தீவி­ர­வாத பெளத்த அர­சி­யல்­வா­திகள் களத்தில் நின்று செயற்­பட்­டார்கள்.

2008ஆம் ஆண்டு பாரா­ளு­மன்­றத்தில் சம்­பிக்க ரண­வக்க உரை­யாற்­றும்­போது இலங்கை முஸ்லிம் சமூ­கத்தை ‘வெளி­நாட்­ட­வர்­களே’ என்று பகி­ரங்­க­மாக அறி­விப்புச் செய்­ததன் மூலம் சம்­பிக்க ரண­வக்­கவின் உண்­மை­முகம் முஸ்­லிம்­க­ளுக்கு தெரிய வந்­தது. சம்­பிக்க ரண­வக்க முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான தனது தாக்­கு­தல்­களை வெறும்­பேச்சு மூலம் மட்­டு­மன்றி ஆய்­வுகள் வெளி­யீ­டுகள் மூலமும் தொடர்ந்து வெளிப்­ப­டுத்தி வந்தார்.

பெளத்த தேசி­ய­வாத வேட்­கை­யு­டனும், சிறு­பான்மை மக்­களின் அபி­லா­ஷ­கை­ளுக்கு எதி­ரா­கவும் பட்­டாலி சம்­பிக்க ரண­வக்க ஐந்து நூல்­களை எழு­தி­வெ­ளி­யிட்­டுள்ளார். இவற்றில் பின்­வரும் இரண்டு நூல்­களும் முழு­மை­யாக இலங்கை முஸ்லிம் சமூ­கத்தை சீண்டும் வகையில் எழு­தப்­பட்­டுள்­ளன.
1.நெக­ன­ஹிர சிங்­கள உரு­மய (Sinhala Heritage in the East, கிழக்கில் சிங்­கள பூர்­வீகம்)
2. Al- Jihad al queida (The Past, Present and the future of Islamic Fundamentalism)
இவ்­வி­ரண்டு நூல்­களில் முதல் நூலில் சிங்­கள பூர்­வீமும் தொல்­லியல் சான்­று­களும் சிறு­பான்மை இனங்­க­ளான தமிழ், முஸ்லிம் சமூ­கங்­களால் முழு­மை­யாக துவம்சம் செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் அவற்றை முழு­வதும் கண்­டு­பி­டித்து பெளத்­தர்­களின் சிங்­க­ள­வர்­களின் கிழக்கு மாகாண பூர்­வீ­கமும் தொல்­லியல் சான்­று­களும் மீண்டும் நிலை நிறுத்­தப்­பட வேண்டு என்ற கருத்தை சிங்­க­ள­வர்­களை உணர்ச்­சி­யூட்டும் வகையில் முன்­வைத்தார். இவ்­வா­றான கருத்­துக்கள் சம்­பிக்க ரண­வக்­கவின் நூல் வெளி­யீ­டு­க­ளுக்கு முன்பே, மிக ஆழ­மாக விமர்­ச­னங்­க­ளுக்கு உட்­பட்­டி­ருந்­தாலும் சம்­பிக்க ரண­வக்கவின் நூலே, நிகழ்­கால ராஜ­பக்ஷ அர­சாங்­கத்தின் வடக்கு கிழக்கு தொல்­லியல் செய­லணி ஒன்று பூரண அந்­தஸ்­துடன் உரு­வாக்­கப்­ப­டவும், சிங்­க­ள­வர்­களை மட்­டுமே உ-றுப்­பி­னர்­க­ளாகக் கொண்டு செயல்­ப­டவும் வழி­வ­குத்­தது என்று கூறலாம். அதன் தாக்­கமே பொத்­துவில் பிர­தே­சத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான பல நூறு ஏக்கர் நிலத்தை தொல்­லியல் சான்று மிக்க பிர­தே­ச­மாக பிர­க­டனம் செய்ய அர­சாங்கம் இன்று நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தாகும்.

சம்­பிக்க ரண­வக்கவின் மற்­றொரு நூலான, ‘அல் ஜிஹாதி அல் கைதா’ நூல் இலங்கை முஸ்­லிம்­களை குறிப்­பாக முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் கிழக்கு மாகாண முஸ்­லிம்­க­ளையும், அவர்­களின் தொல்­லியல் மர­பு­க­ளையும் வர­லாற்று பூர்­வீ­கத்­தையும் முழு­மை­யாக கேள்­விக்­குட்­ப­டுத்தி எழு­தப்­பட்ட நூலாகும்.

குறிப்­பாக உள்­நாட்­டுப்­போ­ரினால் பாதிக்­கப்­பட்ட வட­கி­ழக்கு முஸ்­லிம்­களின் பல்­க­லைக்கழக ­கல்வி மிக மோச­மான தாக்­கு­த­லுக்கு உள்­ளாகி சின்­னா­பின்­ன­மாக்­கப்­பட்­டி­ருந்­தது. ஒரு கால கட்­டத்தில் 1995 ல் தோன்­றிய தென்­கி­ழக்கு பல்­க­லைக்­க­ழகம், அதன் கல்வி நட­வ­டிக்­கைகள், அதன் நிர்­வாக அதி­கா­ரிகள், மாண­வர்கள் பற்­றிய பல்­வேறு சந்­தேக எண்­ணங்­க­ளையும் ஐயப்­பாட்­டையும் சிங்­க­ளவர் மத்­தியில் மிக வேக­மாக பரவச் செய்யும் வகையில் இந்நூல் எழு­தப்­பட்­டுள்­ளது. இலங்­கையில் காணப்­படும் முஸ்­லிம்­க­ளுக்கு மாத்­திரம் சொந்­த­மான மத்­ர­ஸாக்கள், அதன் கல்வி நட­வ­டிக்­கைகள் பற்­றியும் தென்­கி­ழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்தில் மட்டும் இயங்­கி­வரும் இஸ்­லா­மிய கற்கை, அரபு மொழிப்­பீடம் பற்­றியும் அதன் பாடத்­திட்­டங்கள் பற்­றியும் ஜாமிஆ நளீ­மிய்யா போன்ற உயர் இஸ்­லா­மிய கல்வி நிலை­யங்கள் பற்­றியும் மிகவும் கற்­ப­னை­யான விஷமக் கருத்­துக்­களை சம்­பிக்க ரண­வக்க இந்­நூலில் ஆங்­காங்கே இழை­யோ­ட­விட்­டுள்ளார். இவ்­விஷக் கருத்­துக்­களின் தாக்கம் இப்­போது ஓர­ளவு எமக்குத் தென்­ப­டு­கின்­ற­போ­திலும் எதிர்­கா­லத்தில் பயங்­கர கொரோனா தொற்று நோயாக அது உரு­வெ­டுக்கும் என்­பதை முஸ்ஸிம் சமூகம் அறிந்து கொள்ள வேண்டும்.

இவ்­வா­றான விட­யங்­களை நாம் ஆய்­வுக்கு உட்­ப­டுத்­தும்­போது இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான பேரி­ன­வாத தாக்­கு­தலின் நவீன உரு­வாக சம்­பிக்க ரண­வக்­கவை நான் பார்க்­கிறேன். உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் சம்­பவம் நடப்­ப­தற்கு முன்பே இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான பேரி­ன­வாத நிகழ்ச்சி நிரல் உத்­தி­யோகபூர்­வ­மாக ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டது.

டொக்டர் ஷாபி சிஹாப்தீன் விவ­காரம்
2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21 குண்­டுத்­தாக்­கு­தலை அடுத்து பெளத்த பேரின வாதத்தின் முழுக்­க­வ­னமும் இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரா­கவே திசை திருப்­பப்­பட்­டது. அதன் முதல் வேட்­டை­யாக குரு­நாகல் ஆஸ்­பத்­தி­ரியில் ஒரு வைத்­தி­ய­ராக பல ஆண்­டுகள் கட­மை­யாற்றிக் கொண்­டி­ருந்த ஒரு அப்­பாவி வைத்­தி­ய­ரான ஷாபி சிஹாப்தீன் இரை­யானார். குரு­நாகல் ஆஸ்­பத்­தி­ரியில் தொடர்ச்­சி­யாக இடம் பெற்று வந்த பல்­வேறு முறுகல் நிலை டொக்டர் ஷாபியை பலி­யெ­டுக்க கார­ண­மா­னது. தனது மனை­வியும் ஒரு டொக்­ட­ராக கட­மை­யாற்­றி­ய­துடன் ஓர­ளவு அர­சியல் ஈடு­பாடு கொண்­டி­ருந்த டொக்டர் ஷாபி ஒரு மகப்­பேறு மருத்­து­வ­ராக (VOG) இல்­லா­த­போதும் அவ்­வைத்­தி­ய­சா­லை­யி­லுள்ள மகப்­பேறு வைத்­தி­ய­ருக்கு ஒரு உதவி வைத்­தி­ய­ராக பல ஆண்­டுகள் கட­மை­யாற்றி பல கர்ப்­பி­ணிப்­பெண்­களின் மகப்­பேற்று சிகிச்­சை­யிலும் அதிக ஈடு­பாடு காட்டி வந்தார். அங்கு சிகிச்­சைக்கு வரும் பல சிங்­களப் பெண்­க­ளுக்கு டொக்டர் ஷாபி ஒரு பிள்­ளைப்­பேறு வைத்­திய நிபு­ண­ரா­கவே அவர்­க­ளது மனங்­களில் இடம் பிடித்­தி­ருந்­தது மட்­டு­மன்றி பல சவால்­க­ளுக்­குட்­பட்ட மகப்­பேறு அறுவைச் சிகிச்­சை­களை மேற்­கொண்டு மிகவும் வெற்­றி­க­ர­மாக சேவை செய்தமையால் ஆஸ்­பத்­தி­ரி­யிலும் வெளி­யிலும் நிலவி வந்த அவ­ருக்கு எதி­ரான தொழில் போட்டி கார­ண­மாக பல எதிர்ப்­பு­களை எதிர்­நோக்­கி­யி­ருந்தார்.

அவ­ரிடம் சிகிச்சை பெற்ற சில சிங்­களப் பெண்கள் தம்மை சட்­ட­வி­ரோ­த­மாக டொக்டர் ஷாபி கர்ப்­பத்­தடை செய்­த­தா­கவும், சிலர் தாம் நிரந்­த­ர­மா­கவே கர்ப்பம் தரிக்க முடி­யாத நிலைக்கு டொக்­டரால் ஆளாக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பிர­பல ஊட­கங்­களில் பகி­ரங்­க­மாக டொக்­டரை குற்­றஞ்­சாட்­டி­ய­துடன் பொலி­ஸிலும் முறைப்­பாடு செய்­தனர்.
இச்­சம்­ப­வத்தை டொக்டர் ஷாபிக்கு எதி­ராக மாத்­தி­ர­மன்றி முழு முஸ்லிம் சமு­தா­யத்­துக்கும் எதி­ராக திசை திருப்­பி­விட பேரி­ன­வாதம் மிகவும் ஆக்­ரோ­ஷத்­துடன் செயற்­பட்டு அதில் ஓர­ளவு வெற்­றியும் கண்­டது. டொக்டர் ஷாபி சுமார் 8000 சிங்­களப் பெண்­களை நிரந்­த­ர­மாக மல­டாக்கி உள்­ள­தாக உள்ளூர் வெளி­நாட்டு ஊட­கங்­களில் மிகப் பகி­ரங்­க­மாக அறிக்கை விடப்­பட்­ட­துடன் குறிப்­பிட்ட காலம் பிர­பல ஊட­கங்­களில் தொடர்ச்­சி­யாக வெளி­வந்த செய்­தி­யா­கவும் இது இடம்­பெற்­றது.

அது­மட்­டு­மன்றி டொக்டர் ஷாபி முன்னாள் அமைச்சர் றிசாத் பதி­யுதீனின் ஆத­ர­வாளர் என்­பதால் அவர் மீது கற்­ப­னையில் எழுந்த பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்கள் பேரி­ன­வா­தி­களால் சுமத்­தப்­பட்­டன. ஏப்ரல் 21 குண்­டுத்­தாக்­கு­த­லுக்கு சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு நிதி­யு­தவி செய்­தமை, சஹ்ரான் ஹாஷி­மோடு தொடர்பு, என்­பன போன்ற பல அநி­யா­ய­மான குற்றச் சாட்­டுக்கள் டொக்டர் ஷாபி மீது பேரி­ன­வா­தி­களால் இட்­டுக்­கட்­டப்­பட்டு, பிர­சா­ரப்­ப­டுத்­தப்­பட்­டன. அந்த நேரத்தில் குரு­நா­கலில் முஸ்­லிம்கள் குறிப்­பாக முஸ்லிம் பெண்கள் வெளியில் நட­மாடக் கூடத் தயங்­கினர். இந்த ஊடக பிர­சா­ரத்தால் முஸ்லிம் சமூ­கமே தலை குனிந்து நின்­றது. இதன்­மூலம் பேரி­ன­வா­திகள் தமது குறிக்­கோளில் ஓர­ளவு வெற்­றி­ய­டைந்­தி­ருந்­தனர். 2019 மே மாதம் 24 ஆம் திகதி டொக்டர் ஷாபி கைது செய்­யப்­பட்­டமை, அதன் பின் அவர் மீது வழக்­குத்­தாக்கல் செய்­யப்­பட்டு பிணையில் விடு­தலை செய்­யப்­பட்டு, இன்று வரை தமது வைத்­தியத் தொழி­லையும் தொடர்ந்து மேற்­கொள்ள முடி­யாமல் தனது சொந்த ஊரில் தனது குடும்­பத்­தோடு வாழ முடி­யாமல் தனது பிள்­ளை­களின் பாட­சாலைக் கல்வி வாழ்வும் சீர­ழிக்­கப்­பட்டு மிகவும் கவலையான நிலைமைக்கு இந்­தப்­பே­ரி­ன­வா­தி­களால் ஆக்­கப்­பட்­டுள்ளார். இலக்கு வைக்­கப்­பட்ட முஸ்லிம் சமூகம் இக்­கொ­டூர நிகழ்­வுகள் நினை­வு­க­ளி­லி­ருந்து ஓர­ளவு தம்மை சுதா­க­ரித்துக் கொண்­ட­போதும் முஸ்லிம் சமூ­கத்தின் ஒரு உறுப்­பி­ன­ரான டொக்டர் ஷாபி அந்த நரக வேத­னை­யி­லி­ருந்து இன்னும் மீள­வில்லை. பேரி­ன­வா­தி­களின் இலக்கு ஓர­ளவு தோற்­க­டிக்­கப்­பட்­ட­போ­திலும் அதற்கு டொக்டர் ஷாபி கொடுத்­த­விலை, அவ­ரது வாழ்வை மட்­டு­மன்றி அவ­ரது செல்­வங்­களின் வாழ்­வையும் சீர­ழித்­துள்­ளது. இவ்­வ­னைத்து குற்­றச்­சாட்­டுக்­க­ளி­லி­ருந்து டொக்டர் ஷாபி முற்­றாக விடு­விக்­கப்­படும் நாள் வெகு தூரத்­தி­லில்லை. முழு முஸ்லிம் சமு­தா­யமே அவ­ருக்­காக. இரு­கரம் ஏந்தி பிரார்த்­தித்தால் அவர் பூரண விடு­தலை அடையும் நாளே பேரி­ன­வா­தத்தின் பயங்­கரத் தோல்­வியின் மற்­றொரு வெற்றி நாளாகும்.

ஜனா­தி­பதி பத­வி­யேற்­­பின்­போது
இலங்­கையில் ஏழா­வது ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்ட கோத்­த­பாய ராஜபக் ஷ 2019 நவம்பர் 18 ஆம் திகதி பெளத்த மக்­களின் புனித பூமி­யாகக் கரு­தப்­படும் அனு­ரா­த­புர ருவன்­வெ­லி­சா­யவில் வைத்து ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்­ட­வுடன் அவ­ரது முத­லா­வது ஜனா­தி­பதி கன்­னி­யு­ரையில் பின்­வ­ரு­மாறு குறிப்­பிட்டார்.
“பெரும்­பான்மை சிங்­கள மக்­க­ளி­ட­மி­ருந்து எனக்கு கிடைக்­க­வுள்ள ஆத­ர­வுடன் நான் இந்த ஜனா­தி­பதி தேர்­தலில் வெற்­றி­பெ­றுவேன் என்று அறிந்­தி­ருந்தேன். எனினும் என்­னோடு வந்து (இவ்­வெற்­றியில்) இணைந்து கொள்­ளு­மாறு சிறு­பான்மை சமூ­கங்­க­ளிடம் கூறினேன். எனினும் அவர்­களின் ஆத­ரவு எனக்குக் கிடைக்­க­வில்லை. எவ்­வா­றெ­னினும் நான் எல்­லோ­ருக்­குமே ஜனா­தி­ப­திதான் என்­பதை இவ்­வி­டத்தில் உறுதி செய்து கொள்­கிறேன்.”

ஜனா­தி­ப­தியின் இவ்­வுரை பேரி­ன­வா­தி­களின் மனங்­களை மகிழ்­வித்­தன. குறிப்­பாக சிங்­கள மக்­களின் பெரும்­பான்மை ஆத­ர­வு­டன்தான், தான் ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்­ட­தாக குறிப்­பிட்­டது சிறு­பான்மை சமூ­கத்தைப் பொறுத்­த­வ­ரையில் அவர்­க­ளுக்­கான ஒரு எச்­ச­ரிக்­கை­யாகக் கரு­தப்­பட்­டாலும் பெளத்த பேரி­ன­வாதம் தமது ஜனா­தி­ப­தியின் உரை­யினால் மீண்டும் தமது புஷ்­டியை உயர்த்திக் கொண்­டன. கோத்­தா­ப­யவின் இவ்­வெற்­றிக்கு பின்னால் ஓரணி திரண்­டி­ருந்த பெளத்த மத­கு­ருமார் ஏனைய அர­சியல் வாதிகள், சிவில் செயற்­பாட்­டா­ளர்கள்.

அனை­வரும் இவ்­வெற்­றியை தமது வெற்­றி­யாக, பெளத்த பேரி­ன­வா­தத்தின் வெற்­றி­யாக தொடர்ந்து கொண்­டாடி வரு­கின்­றனர்.

எவ்­வா­றெ­னினும், கடந்த ஒன்­றரை வரு­டங்­க­ளுக்­குள்­ளா­கவே கோத்­த­ாபய அர­சாங்­கத்தின் பல­வீ­னங்­க­ளையும், இய­லா­மை­யையும் அறிந்­து­கொண்ட பெளத்த பேரி­ன­வாதம் இப்­போது தம் தலையில் தாமே மண்ணைப் போட்டுக் கொண்­ட­தாக தமது உள்­ளக்­கி­டக்­கையை வெளிப்­ப­டுத்தத் தொடங்­கி­விட்­டன. எந்­த­ள­வுக்கு என்றால் கோத்­த­ாப­யவின் வெற்­றிக்­காக முன்­னின்று செயற்­பட்ட பிர­பல பெளத்த மத குரு­வான முருத்­தெட்­டுவே ஆனந்­த­தேரர் சென்ற வாரம் நடாத்­திய ஒரு ஊடக மாநாட்டில் பின்­வ­ரு­மாறு கூறினார்.

“படு­மோ­ச­மான அர­சாங்­கத்தை உரு­வாக்­கு­வ­தற்கு முன்­னின்று செயற்­பட்­டதால் நர­கத்­திற்கு செல்ல நேரிடும் என நாட்டு மக்கள் எம்மை விமர்­சிக்­கின்­றார்கள். மக்கள் வழங்­கிய பெரும்­பான்மை பலம் தவ­றாக செயற்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது’’
இவ்­வா­றான கூற்­றுக்­களின் மூலம் பேரி­ன­வா­தத்தின் தோல்வி ஆரம்­ப­மாகி விட்­டதை நாம் அறிய முடி­கின்­றது.

முஸ்­லிம்­களின் உடல்­களை  தகனம் செய்­தமை
கொரோனா 19 தொற்று நோயினால் உயி­ரி­ழந்த அனை­வ­ரி­னதும் உடல்­களை அடக்கம் செய்­யாமல் தகனம் செய்ய வேண்டும் என அரசு, உறு­தி­யாக முடி­வெ­டுத்து தொடர்ந்து செயற்­ப­டுத்தி வந்­தது. இறந்த முஸ்­லிம்­களின் உடல்­களை எந்த நிலை­யிலும் தகனம் செய்­வது தமது மத நம்­பிக்­கை­க­ளுக்கும், செயற்­பாட்­டுக்கும் விரோ­த­மா­னது எனவும் தமது மதத்­தி­னரின் (தொற்­றினால்) உயி­ரி­ழந்த உடல்­களை அடக்கம் செய்ய அனு­ம­திக்­கு­மாறு அர­சாங்­கத்தின் காலில் விழுந்து முஸ்லிம் சமூகம் கெஞ்­சி­யது. சர்­வ­தே­சத்­தி­டமும் முறை­யிட்­டது. உலக சுகா­தார ஸ்தாப­னத்தின் வழி­காட்டல் அறிக்கை உடல்­களை அடக்கம் செய்­த­வற்கும் அனு­ம­தி­ய­ளித்­தி­ருந்­த­போ­திலும், அரசு எல்­லா­வற்­றையும் தூக்கி எறிந்­து­விட்டு தகனம் செய்­வ­தி­லேயே தொடர்ந்து செயற்­பட்டு வந்­தது. இச்­செ­யற்­பாடு முஸ்­லிம்கள் அனை­வ­ரி­னதும் மனங்­களை வெகு­வா­கப்­பா­தித்­தது. முஸ்லிம் சமூ­கமே ஒன்று திரண்டு வல்ல அல்­லாஹ்­விடம் இரு­க­ர­மேந்திப் பிரார்த்­தித்து, அழுது மண்­டி­யிட்­டது. எவ்­வா­றெ­னினும் முஸ்­லிம்­களின் 200 உடல்­க­ளுக்கு மேல் தகனம் செய்­யப்­பட்­டபின் இலங்­கைக்கு விஜயம் செய்த பாகிஸ்தான் பிர­தமர் இம்­ரான்­கானின் வேண்­டு­கோளை ஏற்று அரசு பல நிபந்­த­னை­க­ளுடன் அடக்கம் செய்­வ­தற்கும் அனு­ம­தி­ய­ளித்­தது. இலங்­கையில் குறிப்­பிட்ட ஒரே­யொரு மைய­வா­டி­யி­லேயே இது­வரை 3000க்கும் மேற்­பட்ட முஸ்­லிம்­களின் உடல்கள் அடக்கம் செய்­யப்­பட்­டுள்­ளன.

அண்­மையில் டெல்டா பிறழ்வின் கார­ண­மாக மிக அதிக உயி­ரி­ழப்­புக்கள் நாட்டில் பதிவாகின. தகன சாலை­களில் உடல்­களை தகனம் செய்ய முடி­யாமல் அரசு திண்­டா­டியது. அப்போது முஸ்­லிம்­களின் மர­ணித்த உடல்­களை அடக்கம் செய்­வது போன்று கொவிட் தொற்­றினால் உயி­ரி­ழப்­ப­வர்­களின் உடல்­களை அடக்கம் செய்­ய­லாமா? என அரசும், பெளத்த தீவி­ர­வா­தமும் தீவி­ர­மாக ஆலோ­சித்ததாக அறி­ய ­மு­டி­கின்­றது. இது பெளத்த பேரி­ன­வா­தத்­துக்கு கிடைத்த மற்­றொரு தோல்­வி­யாக வர­லாற்றில் பதிவு செய்­யப்­படும்.

முஸ்­லிம்­களின் காதி நீதி­மன்­றமும் விவா­க­ரத்து சட்­டமும்
“இலங்கை ஒரே நாடு ஒரே சட்டம்’’ என்ற தாரக மந்­தி­ரத்தை தூக்­கிப்­பி­டித்­துள்ள பௌத்த பேரி­ன­வாதம் முஸ்­லிம்கள் பல நூற்­றாண்­டு­க­ளாக இந்­நாட்டில் நடை­மு­றைப்­ப­டுத்தி வரும் காதி­நீ­தி­மன்ற கட்­ட­மைப்­பையும் முஸ்­லிம்­க­ளுக்­கான தனியார் விவா­க­ரத்து சட்­டத்­தையும் இல்­லா­தொ­ழிக்க இன்­று­வரை முனைப்­புடன் போரா­டி­வ­ரு­கின்­றது. இப்­போ­ராட்­டத்தின் முக்­கிய சூத்­தி­ர­தா­ரி­யாக அத்­து­ர­லிய ரதன தேரர் காணப்­ப­டு­கின்றார். இதற்­காக அரசும் பல முயற்­சி­களை எடுத்து ஆலோ­சனைக் குழுக்­களை நிய­மித்து பெளத்த பேரி­ன­வா­தி­களின் உள்­ளங்­களை மகிழ்­விக்க முயற்­சித்­த­போதும் இன்­று­வரை எதுவும் முடி­வா­க­வில்லை. என்னைப் பொறுத்­த­வ­ரையில் அர­சாங்­கத்தின் இம் முயற்­சிகள் மூலம் முஸ்லிம் சமூ­கத்தின் காதி­நீ­தி­மன்ற, விவா­க­ரத்து சட்­டங்­களில் சில முன்­னேற்­ற­க­ர­மான தீர்­வுகள் வரலாம் என உணர முடி­கின்­றது. இறைவன் இதிலும் எமது சமு­தா­யத்­துக்கு பூரண வெற்­றியைத் தரு­வா­னாக.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பழி முஸ்­லிம்­களின் மீது
2019 உயிர்த்த ஞாயி­று­தாக்­கு­தலில் முஸ்லிம் பெயர் தாங்­கிய சிலரே முழு­மை­யாக ஈடு­பட்­டதால், முழு முஸ்லிம் சமூ­கத்தின் மீதும் அதன் பழியை சுமத்­திய பேரி­ன­வாதம், அதற்­காக பல்­வேறு முயற்­சி­களை எடுத்து வரு­கின்­ற­து. இதற்­காக அமைக்­கப்­பட்ட விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையை முழு­மை­யாக முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக திசை திருப்­பி­விட பேரி­ன­வாதம் கங்­க­ணம்­கட்டிக் கொண்டு செயற்­பட்­டது. இதற்­கா­கவே நூற்­றுக்­க­ணக்­கான சோடிக்­கப்­பட்ட சாட்­சிகள் ஆணைக்­கு­ழு­வுக்கு பேரின வாதத்தால் அனுப்பி வைக்­கப்­பட்­டன. இப்­போது ஆணைக்­கு­ழுவின் அறிக்கை வெளி­வந்து, முஸ்லிம் சமூ­கத்தின் மீது தமது அறிக்­கையை ஓர­ளவு திசை திருப்­பி­விட்­டுள்­ள­போ­திலும், அறிக்­கை­யி­லுள்ள பல்­வேறு குறை­பா­டு­க­ளையும், அறிக்­கையை அரசு கையாளும் விதம் பற்­றியும் உள்­நாட்டில் மட்­டு­மல்ல, சர்­வ­தே­சத்­திலும் பல்­வேறு விமர்­ச­னங்­களும், கண்­ட­னங்­களும் தொடர்ந்து வெளிவரத் தொடங்கியுள்ளன.

அதிலும் விசே­ட­மாக இத்­தாக்­கு­தலில் முழு­மை­யாக பாதிக்­கப்­பட்ட கிறிஸ்­தவ கத்­தோ­லிக்க மக்­களின் ஆயர் கர்­தினால் மல்கம் ரஞ்சித் இவ்­வ­றிக்கை தொடர்­பிலும் அதை அரசு கையாளும் விதத்­திலும் தொடர்ந்து தமது சமூகம் சார்ந்த கண்­ட­னத்தை தெரி­வித்து வரு­வ­துடன் அதற்­கெ­தி­ராக பல சாத்­வீ­க­மான போராட்­டங்­க­ளுக்கும் தொடர்ந்து அழைப்பு விடுத்த வண்ணமுள்ளார். கர்­தி­னாலைப் பொறுத்­த­வரை இக்­கொ­டூர தாக்­கு­தலின் பின்னால், மறை­முக பயங்­கர சக்தி ஒன்று தொடர்­பு­பட்­டுள்­ள­தாக பூர­ண­மாக நம்­பு­வதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. குறிப்­பாக பத­விக்கு வந்­துள்ள அரசின் சில சக்­திகள் இத்­தாக்­கு­த­லுக்கு முழு­மை­யான காரண கர்த்­தாக்­க­ளாக இருந்துள்ளதாக அவரின் பல்வேறு அறிக்கைகள் மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளன.

இறு­தி­யாக கடந்த 13ஆம் திகதி கர்­தினால் நடாத்­திய ஊடக மாநாட்­டிலும் இச்­ச­தியின் பல்­வேறு அம்­சங்­களை மிக அழ­காக தெளி­வு­ப­டுத்­தி­யுள்ளார். குறிப்­பாக அரசு, ஆணைக்­குழு அறிக்­கையை மீள் பரி­சீ­லனை செய்ய தமது அமைச்­சர்கள் கொண்ட குழுவை நிய­மித்­தனர். குண்­டு­தா­ரி­க­ளுக்கும், இரா­ணுவ புல­னாய்வு பிரி­வுக்­கு­மி­டை­யி­லான கடந்த கால நெருங்­கிய தொடர்­புகள் குண்­டுத்­தாக்­கு­தலில் நேரடியாக பங்குபற்றிய சாராஜெஸ்மினை இந்தியாவுக்கு தப்பிச் செல்ல உதவியமை, இவ்வறிக்கையை பிழையாக வழிநடத்த அரசும், ஜனாதிபதியும் முயற்சிக்கின்றமை, சட்டத்துறைக்கும், நீதித்துறைக்கும் ஜனாதிபதியால் விடுக்கப்படும் அழுத்தம், அச்சுறுத்தல் என்பனபற்றியெல்லாம் கர்தினால் பல்வேறு கேள்விகளை இவ் ஊடக மாநாட்டில் எழுப்பியுள்ளார்.

சுருக்கமாக கர்தினாலும், கத்தோலிக்க சபையும் கத்தோலிக்க மக்களும் இக்குண்டுத்தாக்குதலின் பின்னணியில் முஸ்லிம் பெயர் தாங்கிய சில குழுவினர் மட்டுமன்றி, நிகழ்கால அரசின் பயங்கர மறைகரமொன்று உள்ளதாகவும், அதன் மூலமே இந்த அரசாங்கம் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்துள்ளதாகவும் பூரணமாக நம்புவதை ஊடக அறிக்கை மூலம் அறிய முடிகின்றது.

எது எப்படியோ உண்மைகள் விரைவில் வெளிவரத்தான் போகின்றது. இதற்கு சில மாதங்கள் ஆகலாம், வருடங்கள் ஆகலாம். அப்போது பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரல் சுக்கு நூறாகத்தான் போகின்றது. அதுவரை வல்ல அல்லாஹ்விடம் இருகரமேந்தி ‘துஆ’ செய்வோம்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.