அரசியல் இலாபத்தை புறம்தள்ளிசமூகத்துக்காக ஒன்றிணைவோம்

பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான்

0 535

அரசியல் இலாபத்தை புறம்தள்ளி சமூகத்துக்காகவும் சமூகத்தின் அபிவிருத்திக்காகவும் ஒன்றிணைவது அனைவரினதும் கடமையென முன்னாள் மீள்குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் வடக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கே. காதர் மஸ்தான் தெரிவித்தார்

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாவற்குளம் கிராமத்தில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக காணப்பட்ட தாய்-சேய் நிலையத்துக்கு 20 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டதுடன் அக்கிராமத்திலுள்ள பாடசாலை சுற்றுமதில் அமைப்பதற்காக 7 லட்சம் ரூபா நிதியும் ஒதுக்கப்பட்டு குறித்த வேலைத் திட்டங்களை  ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

தமிழ் பேசுகின்ற சிறுபான்மை மக்களாக நாம் இருக்கின்றோம் என்பதோடு எமக்குள் பல்வேறான பிரிவுகளும் காணப்படுகின்றன.

நாம் ஒரு சிறிய சமூகமாக இருந்தாலும் ஒரு பலமான சமூகமாக இருக்க நமக்குள் இருக்கின்ற பிரிவினைகளை களைந்து அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் அபிவிருத்தியை நோக்கிப் பயணிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

நமது ஒவ்வொரு பிரதேசத்திற்கும் பல்வேறான தேவைப்பாடுகள் காணப்படுகின்றன. அவற்றை ஒரு தனிநபரால் செய்துமுடிக்க முடியாது. பலரது ஒத்துழைப்புகளும் அங்கே தேவைப்படும். எனவே, ஒரு வேலைத்திட்டம் கொண்டு வரப்படுகின்றபோது அதன் நன்மைகளை கருத்திற்கொண்டு அதற்காக தமது ஆதரவை வழங்க வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கின்றேன்.

நாட்டின் அரசியல் நிலைமையானது வலுவிழந்துள்ள நிலையிலும் எம்மால் கடந்த காலங்களில் செயற்படுத்தப்பட்ட அனைத்து வேலைத்திட்டங்களையும் நாம் நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.

தற்போதைய சூழ்நிலையில் பலரும் தங்களது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்குப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனாலும் நாம் எதிர்கால சமூகத்தின் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக போராடிக் கொண்டிருக்கின்றோம்.

என்னால் கூடுமானவரை நாம் அரசியலுக்கு வரமுன்னர் எவ்வாறான சேவைகளை மக்களுக்கு வழங்கியிருக்கின்றோம் என்பதை பலரும் அறிவர். ஆனாலும் அரசியலுக்கு வந்ததன் பின்னர் அந்த சேவையினை மேலும் விஸ்தரித்திருக்கின்றோம். நாம் அரசியலில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் நலன் கருதிய சேவைகளை செய்து கொண்டே இருப்போம் என்றார்.

குறித்த நிகழ்வில் கிராம பொது  அமைப்புக்களின் தலைவர்கள்,  நிர்வாக உறுப்பினர்கள், பொது மக்கள் ஆதரவாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.