பிற்போக்குவாதிகளின் பொய் பிரசாரங்களுக்கு பலியாகாதீர்

0 228

நாட்டில் கொவிட் 19 பரவல் உச்சபட்சத்தை அடைந்துள்ளது. நேற்று மாலை வரை நாட்டில் 368,111 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இவர்களில் 45,149 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதுடன் ஏனையோர் குணமடைந்துள்ளனர். நேற்று இரவு 8 மணி வரை நாட்டில் 6434 மரணங்கள் பதிவாகியுள்ளன. நேற்று முன்தினம் மாத்திரம் 170 பேர் மரணித்துள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்குள் மாத்திரம் 1000 மரணங்கள் பதிவாகியுள்ளன.

அமெரிக்காவில் நேற்று முன்தினம் 88 பேரும் இந்தியாவில் 282 பேரும் மரணித்துள்ள நிலையில் இலங்கையில் 170 பேர் மரணித்துள்ளமையானது நாட்டின் கொவிட் தொற்றின் பாரதூரமான நிலையை படம்பிடித்துக்காட்டுகிறது. எதிர்வரும் நாட்களில் நிலைமை மேலும் மோசமடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் இலங்கையில் டெல்டா பரவலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வைத்திய நிபுணர்கள் எதிர்வுகூறியுள்ளனர்.

ஏலவே அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகள் நிலைமையை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றன. ஏராளமான சுகாதாரத்துறை ஊழியர்கள் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணியாற்றும் 265 ஊழியர்கள் கொவிட் 19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 27 வைத்தியர்கள், 105 தாதியர்கள், 133 சிற்றூழியர்கள் உள்ளடங்குவதாக கணிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறே ஏனைய பல வைத்தியசாலைகளில் பணியாற்றும் சுகாதார ஊழியர்களும் பாரிய உயிராபத்துக்கு மத்தியிலேயே சேவையாற்றி வருகின்றனர். ராகம வைத்தியசாலையில் கடமையாற்றிய இளம் முஸ்லிம் வைத்தியர் ஒருவரும் நேற்று கொவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

அரசாங்கம் இதுவரை நாட்டை முடக்குவதற்கு தீர்மானிக்காத போதிலும் பொது மக்கள் சுயமாகவே வீடுகளில் முடங்கியுள்ளதை அவதானிக்க முடிகிறது. கொழும்பின் பல பகுதிகள் வெறிச்சோடியுள்ளன. சுமார் 30 க்கும் மேற்பட்ட வர்த்தக நகரங்களில் கடைகள் மூடப்பட்டுள்ளன. வர்த்தக சங்கங்கள் தாமாகவே முன்வந்து இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளன. பொது முடக்கம் ஒன்றை அறிவிப்பது நாட்டை பொருளாதார ரீதியாக பாதிக்கும் என்றும் அவ்வாறு முடக்கினால் மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டி ஏற்படும் என்ற காரணங்களால் அரசாங்கம் முடக்கத்தை அறிவிக்க பின்வாங்குவதாக தெரிகிறது. எனினும் சுகாதாரத்துறை ஊழியர்கள் முடக்கத்தை அறிவிக்குமாறு தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர்.

நாட்டின் தேசிய நிலைமை இவ்வாறிருக்க முஸ்லிம் சமூகத்திலும் கொவிட் தொற்றுப் பரவல் ஒப்பீட்டளவில் அதிகரித்தே செல்கிறது. தினமும் கொவிட் தொற்றினால் மரணித்தவர்களின் ஜனாஸா செய்திகளே சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றன. ஓட்டமாவடி மஜ்மா நகரில் நேற்று முன்தினம் மாலை வரை 1793 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. தற்போது தினமும் சராசரியாக 40 ஜனாஸாக்கள் அங்கு கொண்டுவரப்படுவதாக கூறப்படுகிறது.

இப் பின்னணியில்தான் முஸ்லிம் பிரதேசங்களில் உள்ள பள்ளிவாசல்கள், அரபுக் கல்லூரிகள் மற்றும் பொது கட்டிடங்களை கொவிட் 19 இடைநிலை சிகிச்சை மையங்களாக மாற்றியமைப்பது குறித்த கதையாடல்களும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சில பள்ளிவாசல்கள் இதற்கான ஏற்பாடுகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளன. மத்ரசாக்களை இதற்காக பயன்படுத்துவது குறித்து வக்பு சபை கலந்துரையாடல்களை நடாத்தி வருகிறது. இந்த முயற்சியை பலரும் வரவேற்கின்ற அதேநேரம் மேலும் சிலர் எதிர்ப்பதாகவும் அறிய முடிகிறது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இவ்வாறு பள்ளிவாசல்கள் கொவிட் மத்திய நிலையங்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நமது நாட்டிலும் ஏலவே சில முஸ்லிம் கல்வி நிலையங்களில் தொற்றாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலைகளில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் பள்ளிவாசல்கள், மத்ரசாக்களை இதற்காக வழங்குவதில் நாம் அச்சப்பட வேண்டியதில்லை. எனினும் அவற்றை சுகாதாரத்துறையினர் மிகச் சரியாக நிர்வகிப்பதை உறுதிப்படுத்த வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் பொறுப்பாகும்.

மறுபுறம் முஸ்லிம் சமூகத்தில் ஒரு குழுவினர் தடுப்பூசிக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுப்பதையும் அவதானிக்க முடிகிறது. இது மிகவும் ஆபத்தானதாகும். தடுப்பூசி பற்றிய மிகத் தெளிவான மார்க்க மற்றும் சுகாதார வழிகாட்டல்கள் உள்ள நிலையில், இவ்வாறான பிற்போக்குவாதிகளின் பொய்ப்பிரசாரங்களை நம்பி அநியாயமாக உயிர்களைப் பலிகொடுக்கின்ற நிலைக்கு முஸ்லிம் சமூகம் வந்துவிடக் கூடாது. எனவேதான் தமது மஹல்லாக்களில் உள்ள அனைவரும் தடுப்பூசியை ஏற்றிக் கொள்வதை உறுதிப்படுத்த வேண்டியது பள்ளிவாசல்களின் பொறுப்பாகும். இது விடயத்தில் மக்களை யாரும் நிர்ப்பந்திக்க வேண்டியதில்லை. ஆனால் விழிப்புணர்வூட்டுவது அவசியமாகும். இதுவே இந்த வைரஸ் தொற்றிலிருந்து ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதுகாப்பதற்கான வழியாகும். இன்றைய நாட்களில் ஆஷூரா நோன்பை நோற்கும் நாம் இந்தக் கொடிய நோயிலிருந்து பாதுகாப்புத் தேடுவோமாக.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.