மாடறுப்பு தடைகோஷமும் வக்பு சபையும்

0 192

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்­தி­ரே­லியா

ராஜ­பக்ஷ அரசு மாட­றுப்­புக்குத் தடை­வி­தித்து அதனை அமுல்­ப­டுத்த உள்­ளூராட்சி மன்­றங்­க­ளையும் நிய­மித்­துள்­ளது. ஆனால் இது­வரை இத்­தடை சட்­ட­மாக்­கப்­ப­ட­வில்லை. ஆகவே சட்­ட­மாக்­கப்­ப­டாத ஒன்றை ஒரு பிர­தமர் அமுல்­ப­டுத்த முடி­யுமா? இதுதான் ஜன­நா­ய­கமா? இத­னைப்­பற்றி சட்­ட­வல்­லு­னர்கள் சிந்­திக்­க­வேண்டும். இதற்கு நீதித்­துறை வழி­யாகப் பரி­காரம் உண்டா?
ஆனால், அதை­வி­டவும் முக்­கி­ய­மான ஒரு விடயம் என்­ன­வெனில், அந்தத் தடையைத் தொடர்ந்து வக்பு சபையும் பள்­ளி­வாசல் காணி­களில் ஆடு மாடுகள் அறுப்­பதை நிறுத்­து­மாறு கட்­ட­ளை­யிட்­டுள்­ளது. முத­லா­வ­தாக, மாட­றுப்புத் தடை எப்­போதோ இந்த அர­சினால் முன்­னெ­டுக்­கப்­பட்டு, அதனால் எழும் பொரு­ளா­தாரப் பிரச்­சி­னை­க­ளைப்­பற்றி கால்­நடை வளர்ப்பு வல்­லு­னர்­களும் பொரு­ளி­ய­லா­ளர்­களும் எடுத்து விளக்­கி­யதன் பின்னர் அதனை அமுல்­ப­டுத்­து­வதில் இன்­று­வரை தாம­த­மாக இருந்­து­விட்டு இப்­போது மறு­ப­டியும் சடு­தி­யாக அந்­தத்­த­டையை கொண்­டு­வந்­ததன் இர­க­சியம் என்ன? இதன் அர­சியல் பின்­ன­ணியை விளங்­க­வேண்­டி­யுள்­ளது. அதற்­கு­முன்னர், வக்பு சபையின் கட்­ட­ளை­யைப்­பற்­றியும் அச்­ச­பையின் தூர­நோக்­கற்ற முடி­வு­க­ளைப்­பற்­றியும் வாச­கர்கள் அறிதல் வேண்டும்.
சில முஸ்லிம் பகு­தி­களில் பள்­ளி­வாசல் காணிகள் மாட்டுத் தொழு­வங்­க­ளா­கவும் இறைச்சிக் கிடங்­கு­க­ளா­கவும் மாறி­யுள்­ளன என்ற உண்மை வக்பு சபை­யி­ன­ருக்கு எப்­போது தெரி­ய­வந்­தது? ராஜ­பக் ஷவின் தடைக்குப் பின்­னரா? அதற்கு முன்­னரா? முன்­னரே தெரிந்­தி­ருந்தால் ஏன் அச்­சபை இது­வரை இப்­பி­ரச்­சி­னை­யைப்­பற்றி மௌன­மாக இருந்­தது? பின்­னர்தான் தெரி­ய­வந்­த­தென்றால் இச்­ச­பையின் பொடு­போக்குத் தன­மான நிர்­வா­கத்தை வன்­மை­யாகக் கண்­டிக்க வேண்­டி­யுள்­ளது. அர­சாங்­கத்தின் தடை­யுத்­த­ர­வுக்குப் பணிந்தே இச்­சபை இப்­போது இத்­த­டையை விதித்­துள்­ளது. இல்­லா­விடின் இப்­பி­ரச்­சி­னை­யைப்­பற்றி அது சிந்­தித்தும் இருக்­கா­தென்­பது தெளிவா­க­வில்­லையா?
பள்­ளி­வாசல் நிலங்கள் பிற மதத்­தி­னரின் வணக்­கஸ்­தல நிலங்­க­ளைப்­போன்று புனி­த­மா­னவை. அவற்றை தினந்­தோறும் சுத்­தப்­ப­டுத்தி அழ­கு­ப­டுத்­து­வது இறை­வ­னது தலத்­துக்கு மனி­தர்கள் செய்­ய­வேண்­டிய கடமை. அதை­வி­டுத்து அந்தக் காணி­களை மாட்டுத் தொழு­வங்­க­ளாக கசாப்புக் கடைக்­கா­ரர்­களின் தேவை­க­ளுக்­காகப் பயன்­ப­டுத்­து­வது இறை­வனை அவ­ம­திக்கும் ஒரு செயல் என்­பது ஒரு புற­மி­ருக்க, அதனால் மாசு­ப­டுத்­தப்­படும் சுற்­றச்­சூ­ழலைப் பொறுக்க முடி­யுமா? எனவே இந்தத் துஷ்பிர­யோ­கத்தை எப்­போதோ வக்பு சபையும் ஜமி­யத்துல் உல­மாவும் தலை­யிட்டுத் தடுத்­தி­ருக்க வேண்டும். அதை விடுத்து இப்­போது அர­சாங்­கத்தின் தடைக்­குப்­ப­ணிந்து வக்பு சபை இக்­கட்­ட­ளையைப் பிறப்­பித்­தது முஸ்லிம் தலை­மைத்­து­வத்தின் தூர­நோக்­கற்ற செயற்­பா­டு­க­ளுக்கு ஒரு சிறந்த உதா­ரணம். இதுதான் முஸ்லிம் சமூ­கத்தின் ஒரு நிரந்­தரப் பிணி­யாக மாறி­யுள்­ளது. சமூக நடை­மு­றை­களில் செய்­ய­வேண்­டிய சீர்­தி­ருத்­தங்­களை தாமா­கவே உணர்ந்து செய்­யாமல் இன்­னொ­ரு­வ­ரு­டைய கண்­ட­னங்­க­ளுக்கும் அழுத்­தங்­க­ளுக்கும் பயந்து மேற்­கொள்­வதால் முஸ்லிம் சமூகம் நாட்டின் நன்­மை­யைக்­க­ருதி தாமாக முன்­வந்து செயற்­ப­டாமல் மற்­ற­வரின் வற்­பு­றுத்­த­லாலும் எதிர்ப்­பி­னாலும் செயற்­படும் ஓர் இன­மாக இனங்­கா­ணப்­பட்­டுள்­ளது. இதற்குச் சிறந்த இன்னோர் உதா­ரணம் ஒலி­பெ­ருக்­கியில் தொழு­கைக்­காக அழைப்­பது. அந்த ஒலி பள்­ளி­வா­சல்­க­ளுக்கு அண்­மையில் வாழும் முஸ்லிம் அல்­லா­த­வர்­க­ளுக்கும் சில சம­யங்­களில் முஸ்­லிம்­க­ளுக்­கும்­கூட பிரச்­சி­னை­யாக அமையும் என்­பதை உணர்ந்து பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள் தாமா­கவே முன்­வந்து அந்த வழக்­கத்தை நிறுத்தி இருந்தால் பிற்­கா­லத்தில் அதனால் ஏற்­பட்ட எத்­த­னையோ சர்ச்­சை­களை தடுத்­தி­ருக்­கலாம். ஆனால் தூர­நோக்­கற்ற தலை­மைத்­து­வங்­க­ளுக்கு அவ்­வாறு சிந்­திக்கும் வல்­லமை இல்­லா­மற்­போ­னது முஸ்லிம் சமூ­கத்தின் துர்ப்பாக்­கி­யமே.
மந்தை அறுப்புத் தடை இப்­பொ­ழுது ஏன் மறு­வாழ்வு பெற்­றது? இதன் அர­சியல் பின்­னணி என்ன?
ராஜ­பக் ஷ ஆட்­சிக்கு பொது மக்­க­ளி­டையே இருந்த ஆத­ரவு கடந்த இரு வரு­டங்­களில் விரை­வாகச் சரி­வ­டைந்­துள்­ளது. அந்த ஆட்­சியைத் தெரி­வு­செய்த பௌத்த சிங்­கள மக்­களே அர­சின்மேல் நம்­பிக்கை இழந்­துள்­ளனர். தொற்று நோய் ஆபத்தின் மத்­தி­யி­லும்­கூட அம்­மக்கள் தொடர்ந்தேர்ச்­சி­யாக ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­ப­டு­வதை இது தெளிவாக உணர்த்­து­கின்­றது. இந்த நிலையில் பழை­ய­படி அந்த ஆத­ரவை வளர்ப்­ப­தற்­காக இரண்டு வழி­களை இவ்­வ­ரசு கையாள்­கின்­றது. அவற்றுள் ஒன்று பசில் ராஜ­பக்­ ஷவை நிதி­மந்­தி­ரி­யாக்கி அவர்­மூலம் வாழ்க்கைச் செலவு குறை­வ­தற்கு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வது. ஆனால் இன்று நாடு எதிர்­நோக்­கி­யுள்ள கடன் பளுவும் நிதிப் பற்­றாக்­கு­றையும் புதிய மந்­தி­ரியின் கைகளைக் கட்­டி­வைத்­துள்­ளன. நாட்டின் பொரு­ளா­தாரம் வங்­கு­றோத்து அடையும் நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளது. ஆதலால் பொரு­ளா­தார நிலைமை சீர­டையும் காலம் விரைவில் வரப்­போ­வ­தில்லை.
இரண்­டா­வது வழி இன­வாதம். இன­வா­தமே கடந்த எழு­பது ஆண்­டு­க­ளுக்கும் மேலாக இலங்கை அர­சு­க­ளுக்கு ஆயுள் வழங்­கி­யுள்­ளது. ராஜ­பக் ஷ குடும்பம் ஆட்­சிக்கு வந்­ததே அந்த இன­வா­தத்தின் நன்­கொடை என்­பதை யாவரும் அறிவர். அவர்கள் ஆட்­சி­யே­றிய நாளி­லி­ருந்து முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான பௌத்த சிங்­கள இன­வா­தத்தின் அட்­ட­கா­சங்கள் இடை­ய­றாது தொடர்ந்­தன. அதனால் முஸ்­லிம்கள் அடைந்த துன்­பங்­க­ளையும் நட்­டங்­க­ளையும் இங்கே பட்­டி­ய­லிட விரும்­ப­வில்லை. இருந்தும் கடந்த சில மாதங்­க­ளாக அந்தப் புயல் ஓர­ளவு தணிந்து மீண்டும் பௌத்த சிங்­கள முஸ்லிம் உறவு சீர­டையத் தொடங்­கி­யுள்­ள­தாக சமூக வலைத்­த­ளங்கள் இடை­யி­டையே சுட்­டிக்­காட்­டு­கின்­றன. ஆனால் அதை பௌத்த பேரி­ன­வா­திகள் விரும்­ப­வில்லை. எனவே மந்தை அறுப்புத் தடையை தியாகத் திரு­நா­ளுக்கு முன்னர் அமு­லாக்க முனை­வது அந்த இன­வாதப் பசியை அடக்­கவே. முஸ்­லிம்கள் இத்­த­டையால் கொதித்­தெ­ழு­வார்கள், அப்­போது அத்­த­ரு­ணத்தைப் பாவித்து மீண்டும் ஒரு கல­வ­ரத்தை உரு­வாக்கி பௌத்த சிங்­கள மக்­களின் ஆத­ரவைப் பெறலாம் என்ற நோக்­கி­லேயே இத்­தடை இப்­போது மறு­பி­றவி எடுத்­துள்­ளது. இந்த இடத்­தி­லேதான் முஸ்லிம் தலை­மைத்­துவம் விழிப்­புடன் செயற்­ப­ட­வேண்­டி­யுள்­ளது. எக்­காரணம் கொண்டும் எந்த முஸ்­லி­மா­வது இத்­த­டை­யை ­மீறிச் செயற்­ப­டு­வதை முஸ்லிம் தலை­மைத்­துவம் அனுமதிக்க கூடாது.
நீண்ட காலத்­துக்கு இத்­த­டையை அமுல்­ப­டுத்­து­வது கஷ்டம். இன்று மாட்­டி­றைச்­சியை அதிகம் விரும்பிச் சாப்­பி­டு­பவர்கள் முஸ்லிம் அல்­லா­த­வர்­களே. அது மட்­டு­மல்ல சுற்­றுலாத் துறையை வளர்க்க விரும்பும் ஓர் அர­சாங்கம் வெளிநாட்­ட­வர்­களின் மாட்­டி­றைச்சிப் பசியை எவ்­வாறு பூர்த்தி செய்­வது? இறக்­கு­ம­தி­மூ­லமே அதை நிறைவு செய்ய வேண்டும். அதனால் அன்னியச்செலாவணி நெருக்கடி கூடுமேயன்றி குறையப் போவதில்லை. இன்னும், பாலுக்காக மந்தைகளை வளர்க்கும் உள்நாட்டு இடையர்கள் பால்மடி வற்றிய மந்தைகளை என்ன செய்வார்கள்? அவர்கள் அந்த மந்தைகளை இறைச்சிக்காக விற்றுப் பெறும் வருமானம் இத்தடையால் பாதிக்கப்படாதா? ஆகவே இந்தத் தடை நீண்டகாலம் நீடிக்காது. முஸ்லிம்கள் தற்போது பொறுமையுடன் அத்தடைக்குக் கீழ்ப்படிவதே சிறந்த புத்தி. மாட்டிறைச்சி வியாபாரிகள் மாற்றுத் தொழில்களைத் தேடுவது நன்று.
எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த ஆட்சி மாறுவதற்கான வழிவகைகளை முஸ்லிம்கள் இப்போதிருந்தே சிந்திக்க வேண்டும். அதற்கு புத்திஜீவிகளே முன்னின்று வழிகாட்ட வேண்டும். இதற்கிடையில் 20ஆம் திருத்தத்துக்கு வாக்களித்த முஸ்லிம் கோடரிக்காம்புத் தலைவர்கள் மீண்டும் ஒரு துரோக நாடகத்தை நடாத்த இருப்பதாகச் செய்திகள் வெளிவருகின்றன. இவர்கள் முஸ்லிம் சமூகத்துக்குக் கிடைத்த ஒரு சாபக்கேடு.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.