சீன மாலையில் ஜொலிக்கும் இந்து சமுத்திர முத்து

0 139

கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா

முன்­னுரை
முன்­னொரு காலத்தில் இலங்கை மங்­கை­யரின் வத­னங்­களின் வசீ­க­ரத்தைக் கண்டு மயங்­கிய அரே­பியா இந்த நாட்டை செம்­ப­வளப் பூமி (ஜெசீ­ரதுல் யாகூப்) என அழைத்­தனர். பிற்­கா­லத்து வர­லாற்­றா­சி­ரி­யர்­களோ இந்து சமுத்­தி­ரத்தின் முத்து என இலங்­கையை வரு­ணித்­தனர். பிரித்­தா­னிய எழுத்­தா­ளர்கள் இந்­தி­யாவின் கழுத்து மாலையில் தொங்கும் பதக்கம் என்­றனர். இன்றோ இந்­தி­யாவின் கோகினூர் இரத்­தினம் பிரித்­தா­னி­யா­வசம் சிக்­கி­ய­து­போன்று இலங்­கை­யெனும் இந்து சமுத்­திர முத்து சீன ராஜ­தந்­தி­ரத்­தினால் சீனாவின் கழுத்து மாலையில் ஜொலித்துத் தொங்­கு­கி­றது. இந்த முத்து எவ்­வாறு சீனாவின் அணி­க­ல­னாக மாறி­யது? அதனை இலங்கை அர­சினர் சீனா­விடம் அடகு வைத்­த­னரா விற்­று­விட்­ட­னரா? அதனை சீனா­வி­ட­மி­ருந்து காப்­ப­தற்கு யார் யார் முயற்­சிக்­கின்­றனர் என்­ப­ன­வற்றைச் சுருக்­க­மாக இக்­கட்­டுரை ஆராய்­கி­றது.

உள்­நாட்டுப் போரும் சீன நுழைவும்
இலங்­கையில் உள்­நாட்­டுப்போர் தொடங்­கிய காலம் தொட்டு இது­வரை இடம்­பெற்ற அத்­தனை அர­சியல் நிகழ்­வு­க­ளி­னதும் மாற்­றங்­க­ளி­னதும் பின்­ன­ணியில் இழை­யோடி நிற்கும் ஓர் அம்சம் இலங்­கைக்குள் படிப்­ப­டி­யாக ஊடு­ருவி பார்க்கும் இட­மெல்லாம் நீக்­க­மற நிறைந்து நிற்கும் சீனச் செல்­வாக்கு. இதனை செல்­வாக்­கென சாதா­ர­ண­மாக விப­ரிப்­ப­தை­விட சீன வலை­வீச்­சென விதந்­த­ழைப்­பது பொருந்தும். அந்த வலைக்குள் சிக்­குண்டு தவிக்­கி­றது இந்த நாடு. இது எப்­போது யாரால் எவ்­விதம் ஆரம்­பிக்­கப்­பட்­டது?

தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளுடன் இலங்கை அரசு ஆயு­தப்போர் செய்யத் தொடங்­கி­ய­போது புலி­களை ஒரு பயங்­க­ர­வாதக் கும்­ப­லாகக் கணித்து, அவர்­களின் இயக்­கத்­தையும் பயங்­க­ர­வாத இயக்­க­மாகக் கருதி, அதற்­கெ­தி­ராகத் தடை­வி­தித்து, அந்த இயக்­கத்தைத் தோற்­க­டிப்­ப­தற்­காக ஆயு­தங்­க­ளையும் வழங்­கி­யது அமெ­ரிக்கா. ஆயு­த­மேந்­திய பயங்­க­ர­வாதம் உல­க­ளா­விய ரீதியில் பர­வத்­தொ­டங்­கி­யதால் அமெ­ரிக்­காவும் அதன் நேச­நா­டு­களும் அதற்­கெ­தி­ராகப் போர் தொடுத்த காலம் அது. இலங்­கை­யிலே அப்­பொ­ழுது ஆட்­சியில் அமர்ந்­தி­ருந்த ஜே. ஆர். ஜெய­வர்த்­தன, அமெ­ரிக்க முத­லா­ளித்­து­வத்தின் செல்­லப்­பிள்­ளை­யாக இருந்­த­மையால் இலங்­கை­யு­ட­னான அமெ­ரிக்­காவின் நேச உறவு வலு­வ­டை­ய­லா­யிற்று.

புலி­க­ளுக்­கெ­தி­ரான அமெ­ரிக்க ஆத­ரவு ஜெய­வர்த்­த­ன­வுக்குப் பிறகும் 2005இல் மகிந்த ராஜ­பக்ச ஜனா­தி­ப­தி­யாகப் பத­வி­யேற்ற காலம்­வரை தொடர்ந்­தி­ருந்­தது. எனினும், புலி­க­ளுக்­கெ­தி­ரான போர் ஒரு முடி­வற்ற தொடர்­க­தை­யாக நீண்டு கொண்டே சென்­றதும், சமா­தானப் பேச்சு வார்த்­தைகள் பலன் தரா­மற்­போ­னதும் மகிந்த ஆட்­சியை எவ்­வ­ழி­யி­லா­வது, யாரிடம் கடன்­பட்­டா­வது, உலக சந்­தையில் ஆயு­தங்­களை வாங்கிப் புலி­களைக் கூண்­டோடு அழிப்­ப­தற்குத் தூண்­டி­யது. மகிந்­தவின் இளையோன் நந்­த­சே­னாவை பாது­காப்புச் செய­லா­ள­ராக நிய­மித்து அவ­ரது தலை­மையில் ஆயு­தப்போர் ஒரு கொடூர வடி­வத்­தைப்­பெற்று புதிய உத்­வே­கத்தை அடைந்­தது. ஆயி­ரக்­க­ணக்­கான அப்­பாவித் தமி­ழர்கள் அரச இரா­ணுவப் படை­க­ளுக்குப் பலி­யா­கினர். மனித உரிமை மீறல்கள் இரு­த­ரப்­பிலும் கட்­ட­விழ்த்து விடப்­பட்­டன. வடக்கும் கிழக்கும் மயான பூமி­யாக மாறின. அரச படை­க­ளுக்கும் புலி­களின் தாக்­கு­தல்­க­ளுக்­கு­மி­டையில் முஸ்லிம் சமூ­கமும் சிக்கித் தவித்­தது. இதனைக் கண்­டித்த அமெ­ரிக்­காவும் அதன் மேற்கு நேச நாடு­களும் ராஜ­பக்ச அர­சுக்கு வழங்­கிய ஆத­ரவை நிறுத்­த­லா­யின. இது சீனா­வுக்குக் கிடைத்த ஓர் வரப்­பி­ர­சாதம். சீனச் செல்­வாக்கு இங்­கேதான் இலங்­கையில் கால்­ப­திக்கத் தொடங்­கி­யது.

அமெ­ரிக்கா இழைத்த வெற்­றி­டத்தை இந்­தியா நினைத்­தி­ருந்தால் நிரப்பி இருக்­கலாம். உதா­ர­ண­மாக, 1971இல் சேகு­வ­ராவின் மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினர் திரு­மதி பண்­டா­ர­நா­யக்­காவின் அரசைக் கவிழ்க்க முயன்­ற­போது முதன் முதலில் கைகொ­டுத்து உதவி அந்த அரசைக் காப்­பாற்­றி­யது இந்­தியா அல்­லவா? ஆனால் இந்தப் போர் தமி­ழ­ருக்­கெ­தி­ராக நடை­பெற்­றதால் இலங்கை அர­சுக்கு ஆத­ர­வாகத் தலை­யிட்டு தமிழ்­நாட்டின் ஆத­ரவை புது­டில்லி இழக்க விரும்­ப­வில்லை. அது­மட்­டு­மல்­லாமல், சீனாவின் பிராந்­திய ஆதிக்க அபி­லா­ஷை­க­ளையும் இந்­திய ராஜ­தந்­தி­ரிகள் குறை­வா­கவே அப்­போது மதிப்­பிட்­டி­ருந்­தனர்

சீனாவின் எழுச்சி
1976 க்குப் பின்னர் சீனாவில் ஏற்­பட்ட பொரு­ளா­தாரப் புரட்சி அந்த நாட்­டையே உலகின் மிகப்­பெ­ரிய கைத்­தொ­ழிற்­சா­லை­யாக மாற்­றி­யமை யாவரும் அறிந்த விடயம். சீனாவின் பொரு­ளா­தார வளர்ச்சி வியத்­தகு வேகத்­துடன் உயர்ந்து, அதன் மொத்த அளவும் அமெ­ரிக்­கா­வி­னது பொரு­ளா­தா­ரத்­தையும் விஞ்சி நின்­றது. வறுமை விரட்­டப்­பட்டு நாடு செழித்­தது. அமெ­ரிக்கா உட்­பட பல மேற்கு நாடு­களின் முத­லீட்­டா­ளர்­களும் வர்த்­தக நிறு­வ­னங்­களும் சீனா­வுக்குப் படை­யெ­டுக்­க­லா­யினர் ஆனாலும் சீனப் பொது­வு­டமைக் கட்­சியின் அர­சியல் அதி­காரம் மட்டும் அணு­வ­ளவும் குறை­ய­வில்லை. சந்தைப் பொறி­மு­றை­யி­லான பொரு­ளா­தா­ரத்தை சீனா தழு­விய போதிலும் சந்­தைகள் கிளிக்­கூண்டுச் சந்­தை­க­ளா­கவே அரசின் கட்­டுப்­பாட்­டினுள் இயங்­கின. என­வேதான் பொரு­ளி­ய­லா­ளர்கள் சீனப் பொரு­ளா­தா­ரத்தை பறவைக் கூண்டுப் பொரு­ளா­தாரம் என அழைக்­க­லா­யினார். எனினும் ஒரு காலத்தில் உலகின் எல்லாப் பாதை­களும் ரோமா­பு­ரியை நோக்கிச் சென்­ற­துபோல் 1980 களுக்­குப்­பி­றகு அனைத்துப் பாதை­களும் சீனாவை நோக்­கியே செல்­ல­லா­யின.

இத்­த­னைக்கும் மத்­தியில், அரை நூற்­றாண்­டுக்கும் மேலாக உல­கையே ஆட்­டிப்­ப­டைத்த பனிப்­போரும் முடி­வுக்கு வந்த ஒரு காலம் அது. இந்த சூழ­லி­லேதான் சீனத்­த­லை­மைத்­துவம் சீனாவை ஒரு வல்­ல­ர­சாக மாற்றி உலக ஆதிக்­கத்­தையே கைப்­பற்ற முடி­வெ­டுத்­தது. அது சாத்­தி­ய­மாக வேண்­டு­மாயின் முதலில் சீனாவின் வெளி­நாட்டுப் போக்­கு­வ­ரத்துப் பாதைகள் தடை­க­ளற்­ற­தாகப் பாது­காக்­கப்­பட வேண்­டி­யி­ருந்­தது. மத்­திய காலத்தில் எவ்­வாறு தரை மார்க்­க­மான ஒரு பட்­டுப்­பாதை சீனப் பொருள்­களை மத்­திய கிழக்­கி­னூ­டாக ஐரோப்­பா­வரை கொண்டு சென்­றதோ அதே­போன்று இப்­போது நீர்­மார்க்­க­மான ஒரு பட்­டுப்­பாதை உரு­வாக்­கப்­பட வேண்­டி­யி­ருந்­தது. உல­கத்தைக் கட்டி ஆளும் ஆசை அன்று சீனா­வுக்கு இருக்­க­வில்லை. இருந்­தி­ருந்தால் 14 ஆம் நூற்­றாண்டில் சீன முஸ்லிம் தள­பதி செங் ஹே இலங்­கையின் கோட்டை ராஜ­தா­னிக்குள் நுழைந்து அதன் அர­சனை நீக்­கி­ய­போது சீனா இலங்­கையை முற்­றாகக் கைப்­பற்றி இருக்­கலாம். சீனா­வுக்கு உலக அதி­கார ஆசை அப்­போது இருக்­க­வில்லை. ஆனால் இன்று அந்த ஆசை உண்டு. எனவே, அந்தப் புதிய பாதை பொரு­ளா­தார ரீதியில் மட்­டு­மல்ல ராஜ­தந்­திர ரீதி­யிலும் முக்­கி­யத்­துவம் பெற்­றது. மேலும், அந்­தப்­பாதை இந்து சமுத்­தி­ரத்­தி­னூ­டாகச் செல்­ல­வேண்டி இருந்­ததால் முதலில் அந்தச் சமுத்­தி­ரத்தில் சீனாவின் ஆதிக்கம் நிலை­நாட்­டப்­பட வேண்­டி­யது அவ­சியம்.

இந்து சமுத்­திரம் யாருக்­கு­ரி­யது?
இந்து சமுத்­திரம் நீண்­ட­கா­ல­மாக இந்­தி­யா­வுக்கே சொந்­த­மா­ன­தொன்று என்று வர­லாறும் புவி­யி­யலும் கூறு­கின்­றன. அத­ன­லேதான் காலஞ்­சென்ற புகழ்­பூத்த இந்­திய வர­லாற்­றா­சி­ரியன் கவளம் மாதவன் பணிக்கர் இந்து சமுத்­தி­ரத்தை இந்­தியா கட்­டி­யா­ளா­விட்டால் இந்­தியா பொரு­ளா­தாரச் செழிப்­ப­டை­வதும், வர்த்­தக வளம்­பெ­று­வதும், கைத்­தொழில் வளர்ச்சி காண்­பதும், அர­சியல் ஸ்திரம் அடை­வதும் கடினம் என்று 1945 இல் எழுதி வைத்தார். சுதந்­தி­ரத்­துக்குப் பின்னர் ஆட்­சிக்கு வந்த அத்­தனை இந்­திய அர­சு­களும் அதனை ஒரு தாரக மந்­தி­ர­மாகக் கொண்­டி­ருந்­தன. இருந்­த­போதும், இந்­தி­யாவின் வட­மு­னையின் பாது­காப்­பி­லேயே அதிகம் கவனம் செலுத்­திய இந்­தியா தென்­மு­னை­யி­லி­ருந்தும் எதிர்­கா­லத்தில் நெருக்­க­டிகள் வளரும் என்­பதை சரி­யாக எடை­போ­ட­வில்லை. சீனாவின் எழுச்­சியும் அதன் உல­கா­திக்க ஆசையும் தென் முனை­யி­லி­ருந்து இந்­தி­யா­வுக்கு ஏற்­பட்ட ஒரு புதிய தலை இடி. இந்­தி­யா­வுக்கு மட்­டுமா?

சீனாவின் மொத்த உலக வர்த்­தகப் பெறு­ம­தியில் 60 சத­வீதம் தென் சீனக்­க­டலின் ஊடா­கவும், இந்து சமுத்­தி­ரத்தின் ஊடா­கவும் செல்­கின்­றது. உல­கத்தின் மூன்­றி­லி­ரண்டு பங்கு எண்ணெய் பொருள்கள் இந்து சமுத்­தி­ரத்­தி­னூ­டாக நகர்­கின்­றன. மத்­திய கிழக்கின் பொரு­ளா­தா­ரத்தில் எவ்­வாறு பார­சீ­கக்­குடா முக்­கி­யத்­துவம் வகிக்­கி­றதோ அதே­போன்று இந்து சமுத்­திரம் உலக பொரு­ளா­தா­ரத்தின் உயிர் நாடி­யாகத் திகழ்­கி­றது. அத்­துடன் இந்து சமுத்­தி­ரக்­கரை 40 நாடு­களைத் தொட்டு நிற்­கின்­றது. உலக சனத்­தொ­கையில் 40 சத­வீ­த­மான மக்கள் அந்த நாடு­களில் வாழ்­கின்றர் அமெ­ரிக்­கா­வுக்கும் அதன் நேச நாடு­க­ளான ஜப்பான், அவுஸ்­தி­ரே­லியா போன்ற நாடு­க­ளுக்கும் இந்து சமுத்­தி­ரத்தின் பாது­காப்பும் அதன் சுதந்­தி­ரமும் இன்­றி­ய­மை­யா­த­தொன்று. எனவே அந்தச் சமுத்­தி­ரத்தை இந்­தியா தன்­னு­டை­யது மட்­டு­மென்று இக்­கா­லத்தில் உரிமை கொண்­டா­ட­லாமா?

சீனாவின் கால­டியில் இலங்கை
அது ஒரு புற­மி­ருக்க, இலங்கை அர­சுக்கு அமெ­ரிக்கா வழங்­கிய ஆத­ரவு நிறுத்­தப்­பட்­டதும் அந்த இடை­வெ­ளியை நிரப்ப சீனா ஓடோ­டி­வந்­தது. போரா­யு­தங்­களும் பணமும் ராஜ­பக்ச ஆட்­சிக்குச் சீனா­வி­லி­ருந்து வந்து குவிந்­தன. அது­மட்­டு­மல்ல, சீனப் போர் விமா­னங்­களை ஓட்­டு­மாறு சீனாவின் தோழனாய் மாறிய பாகிஸ்­தா­னையும் சீனா கேட்டுக் கொண்­டது. இதனால் புலிகள் தோற்­க­டிக்­கப்­பட்­டனர். ராஜ­பக்ச வெற்­றி­வாகை சூடினார். சீனா வாழ்த்­தி­யது. இலங்­கையோ நன்­றிக்­க­ட­னாக சீனாவின் கால­டியில் வீழ்ந்­தது. சீனப் பொறிக்குள் சிக்­கி­யது இலங்கை.

அதன் பிறகு அம்­பாந்­தோட்டைத் துறை­முக அபி­வி­ருத்தி, மத்­தளை விமான நிலையம், சங்­கி­ரிலா உல்­லாச விடுதி, தாரா­ள­மான கட­னு­தவி என்­ற­வாறு சீனாவின் கால்கள் இலங்­கையில் ஆழ­மாகப் பதி­ய­லா­கின. இந்­தியா வெகுண்­டது. எனவே இந்­தி­யாவைத் திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்­காக கொழும்புத் துறை­முக கிழக்குக் கொள்­கலன் அபி­வி­ருத்­தியை இந்­தி­யா­வுக்கும் ஜப்­பா­னுக்கும் வழங்க அரசு முன்­வந்­தது. ஆனால் அதையும் தடுப்­ப­தற்­காக சீனத்தின் தூண்­டு­தலால் தொழிற் சங்­கங்­களும் பௌத்த துற­வி­களும் அய­ராத ஆர்ப்­பாட்­டத்தில் இறங்­கினர். அர­சாங்கம் பயந்­தது. தனது முடிவை மாற்றி, அந்த மகள் சம்­ம­திக்­கா­ததால் இந்த மகளை உனக்குக் கட்டி வைக்­கிறோம் என்­ப­துபோல் துறை­மு­கத்தின் மேற்குக் கொள்­கலன் அபி­வி­ருத்­தியை இந்­தி­யா­வுக்கு வழங்­கி­யது. அதை இது­வரை இந்­தி­யாவோ ஜப்­பானோ ஏற்­க­வில்லை.

கொழும்புத் துறை­முக நகரா? கொழும்­பிலே சீனத் துறை­முக நகரா?
இறு­தி­யாக, சீனா தன் சொந்தச் செலவில் தனது நாட்டு முயற்­சி­யா­ளர்­க­ளையும் தொழி­லா­ளி­க­ளையும் தொழில் நுட்­பத்­தையும் கொண்டு உரு­வாக்­கிய கொழும்புத் துறை­முக நகர் விரைவில் பூர்த்­தி­யா­கப்­போ­கி­றது. அந்த நக­ருக்குள் நடை­பெ­றப்­போகும் பொரு­ளா­தார, நிதி, முத­லீ­டுகள் அனைத்தும் அரசின் எந்தக் கட்­டுப்­பா­டு­க­ளு­மற்ற சுயா­தீ­ன­மா­ன­ ஒரு குழுவின் நிர்­வா­கத்­தின்கீழ் நடை­பெறும் வகையில் சட்­ட­மி­யற்­றப்­பட்­டுள்­ளது. அதனை எதிர்த்துத் தொட­ரப்­பட்ட வழக்­கு­களை உச்ச நீதி­மன்றம் இப்­பொ­ழுது விசா­ரிக்­கின்­றது. ஆனால் நீதித்­து­றையே அர­சியல் மய­மாக்­கப்­பட்ட இலங்­கையில் அந்த வழக்­குகள் யாருக்குச் சார்­பாகத் தீர்க்­கப்­படும் என்­ப­தைப்­பற்றி விப­ரிக்க வேண்­டி­ய­தில்லை. ஆனாலும் ஒன்­று­மட்டும் உண்மை. நூற்றுக்கணக்­கான கோடி டொலர்­களைச் செலவு செய்து தானே உரு­வாக்­கிய அந்த நகரை இலங்கை உட்­பட மற்­றவர் பய­ன­டைய சீனா அனு­ம­திக்கப் போவ­தில்லை. அந்த நக­ருக்குள் சீன மொழி நட­மா­டு­வதை அர­சாங்கம் தடுக்­குமா? சீன மொழி விளம்­ப­ரங்­களும், சீனத்துக் கிளி­களும், களி­யாட்­டங்­களும் அந்தச் சொர்க்க பூமிக்குள் ஜொலித்து விளங்­கு­வதை பௌத்த துற­விகள் ஏற்­பார்­களா? அந்தத் தனி உலகால் இலங்­கையின் இதர பகு­தி­களும் மக்­களும் என்ன பய­னை­ய­டையப் போகின்­றனர் என்­பதை பொறுத்­தி­ருந்­துதான் பார்க்க வேண்டும். அதை கொழும்புத் துறை­முக நகர் என்­ப­தை­விட கொழும்­பிலே இயங்கும் சீனத் துறை­முக நக­ரென்­பது பொருந்தும்.

நாட்டின் இறை­மையைக் காப்பேன் என்று ஜனா­தி­ப­தி­யா­கிய நந்­த­சேன கோத்­தா­பய ராஜ­பக்ச அந்த இறைமை இந்த நக­ருக்குள் செல்­லு­ப­டி­யா­காது என்­பதை இப்­போது உண­ரா­விட்­டாலும் விரைவில் சீனா அவ­ருக்கு அதை உணர்த்தும். சீனப் பொறிக்குள் சிக்­கிய இலங்­கைக்கு அடி­ப­ணி­வ­தை­விட வேறு வழியும் இல்லை.

பிராந்­திய இரா­ஜ­தந்­திரச் சுழிக்குள் இலங்கை
இந்­தியா, அமெ­ரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், அவுஸ்­தி­ரே­லியா ஆகிய நாடு­க­ளுக்கு இந்து சமுத்­திரம் தடை­யற்ற ஒரு நீர்­வ­ல­ய­மாக இருப்­பது அந்த நாடு­களின் வளர்ச்­சிக்கும் பாது­காப்­புக்கும் மிக அவ­சியம். சீனாவின் இரா­ஜ­தந்­திர மாலையில் இலங்கை, வங்­கா­ள­தேசம், பாக்­கிஸ்தான், மியன்மார் போன்ற நாடு­களின் கரை­யோரத் தளங்கள் ஒவ்­வொன்றும் ஒவ்­வொரு முத்­துக்­க­ளாகும். அந்தத் தளங்­களை ஆயுதப் பலம்­கொண்ட தளங்­க­ளாக சீனா மாற்றி இந்து சமுத்­தி­ரத்­தினைக் கட்­டி­யாள விரும்­பு­கி­றது என்ற பயம் மேலே குறிப்­பிட்ட நாடு­க­ளுக்­குண்டு. இந்த நிலையில் சீனத்தின் செல்லப் பிள்­ளை­யாக இன்­றைய இலங்கை அரசு மாறு­வதை அவை கவ­லை­யுடன் நோக்­கு­கின்­றன. அந்தக் கவ­லையின் ஒரு விளைவே அண்­மையில் ஜெனி­வாவில் இலங்­கைக்கு ஏற்­பட்ட ஏமாற்­றமும் தோல்­வியும். அண்­மையில் இஸ்­லா­மிய உலகக் கூட்­டு­றவு வெளிப்­ப­டுத்­திய இலங்­கைக்கு எதி­ரான கண்­டன அறிக்கை இன்­னுமோர் உதா­ரணம். அதைப்­பற்றி அடுத்த கட்­டு­ரையில் ஆரா­யப்­படும்.

யானைகள் மோதி­னாலும் மோகத்­தினால் கட்டிப் புரண்­டாலும் நசுங்­கு­வது புல், என்­பது உலக வல்­ல­ர­சு­களின் வர­லாற்றில் மறுக்­க­மு­டி­யாத ஓருண்மை. இலங்கை போன்ற சிறிய நாடுகள் வல்­ல­ர­சு­களின் எடு­பி­டிக்­குள்­ளி­ருந்து தப்பி ஏதா­வது நன்மை பெற­வேண்­டு­மாயின் அதற்­கு­ரிய முக்­கிய தேவை சிறந்த அர­சியல் சாணக்­கியம். இலங்­கையின் இன்­றைய அர­சாங்­கத்தில் அது பற்­றாக்­கு­றை­யாக உள்­ளது என்­பதை ஜெனிவா வெளிப்­ப­டுத்­திற்று.

இந்து சமுத்­தி­ரத்தில் இந்­தி­யாவை முன்­னி­றுத்­திய சீனா­வுக்­கெ­தி­ரான பனிப்­போ­ரொன்று இப்­போது நடை­பெ­று­கின்­றது. அது வெஞ்­ச­ம­ராக மாறக்­கூ­டாது என்­ப­தையே உலகம் விரும்­பு­கி­றது. ஆனாலும் எதிர்­பா­ராத நிகழ்­வுகள் அப்­ப­டி­யான ஒரு போரை ஒரு குறிப்­பிட்ட எல்­லைக்குள் சில குறிப்­பிட்ட நோக்­கங்­க­ளுக்­காகத் தொடக்­கலாம். அந்த எல்­லை­யாக இலங்கை அமை­யக்­கூ­டாது என்­பதே எமது எதிர்­பார்ப்பு.

சீனாவின் கட­னாளி
இலங்­கையின் பொரு­ளா­தாரம் மிகவும் மோச­மான ஒரு நெருக்­க­டிக்குள் தள்­ளப்­பட்­டுள்­ளது. அந்த நெருக்­க­டி­யைப்­பற்றி இங்கே விப­ரிப்­பது கட்­டு­ரையின் நோக்­குக்கு அப்­பாற்­பட்­டது. ஆனால் அது சம்­பந்­த­மாக ஒன்றை மட்டும் உணர்த்த வேண்­டி­யுள்­ளது. கொரோ­னாவின் தாக்­கமும் போரினால் பட்ட கடனும் சேர்ந்து இலங்­கையின் தேசிய வரு­மா­னத்தைப் பாதித்­துள்­ளன. எனவே ஒரு­வ­ரிடம் பட்ட கடனை அடைக்க இன்­னொ­ரு­வ­ரிடம் கடன் பெற­வேண்­டிய நிலையை இலங்கை அர­சாங்கம் எதிர்­நோக்­கி­யுள்­ளது. சீனாவோ கேட்­டதும் கொடுக்கும் வள்­ள­லாக இலங்­கைக்குத் தேவை­யான கட­னு­த­வி­களை வழங்க முன்­வந்­துள்­ளது. அந்­தக்­க­டனை தடுப்­ப­தெப்­படி? பொரு­ளா­தாரம் துரித வளர்ச்சி காணா­த­பட்­சத்தில் ஏதோ ஒன்றை விற்­கவோ அடகு வைக்­கவோ நேரிடாதா? அம்பாந்தோட்டையை அடகு வைத்தது அதனால்தானே. கொழும்புத் துறைமுக நகரும் அவ்வாறு மாறலாம் என்பதில் இன்னும் சந்தேகமா?

பாதுகாப்பும் அபிவிருத்தியும்
நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தாமல் அபிவிருத்தியை ஏற்படுத்த முடியாது என்று அண்மையில் சமல் ராஜபக்ச கூறியுள்ளார். அந்தப் பாதுகாப்பு நாட்டுக்கு வெளியேயிருந்து வரும் ஆபத்துகளுக்கெதிராகவா? உள்ளேயிருந்து எழும் எதிர்ப்புகளுக்கெதிராகவா? என்பதை அவர் தெளிவுபடுத்தவில்லை. சீனாவின் எல்லை கடந்த ஊடுருவல் நாட்டின் பாதுகாப்புக்கு ஒரு பிரச்சினை என்பதை மறுக்க முடியுமா? அவுஸ்திரேலியப் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் சீனப் போர்ப்பறையின் சத்தம் ஓங்கி ஒலிக்கிறதென அண்மையில் கூறியிருந்தார். அந்த ஒலி இலங்கையிலும் கேட்கிறதோ தெரியாது. எதுவாக இருப்பினும் பாதுகாப்பு என்பது அரசுக்குப் பாரிய செலவை ஏற்படுத்தும் ஒரு துறை. தற்போது பாதுகாப்பு என்ற போர்வைக்குள் அரசுக்கெதிராக எழும் எதிர்ப்புகளையெல்லாம் முறியடிக்கும் ஒரு தந்திரமாகவே பாதுகாப்புப்படை பலப்படுத்தப்பட்டு வருவது கண்கூடு. அதனால் பாதிப்படைவது அபிவிருத்தியே. அபிவிருத்திக்கு முடக்கவேண்டிய பணத்தையெல்லாம் படைகளுக்கென்று ஒதுக்கினால் அபிவிருத்தி ஏற்படுமா? உள்நாட்டுப் பிரச்சினைகளைச் சுமுகமாகப் பேசித்­தீர்த்தால் ஏன் படைகள் மேல் பணத்தை விர­ய­மாக்க வேண்டும்? உலக அள­வி­லும்­கூட இன்று பசிக்கும் வறு­மைக்கும் கோடிக் கணக்­கான மக்கள் பலி­யா­வது அபி­வி­ருத்­திக்குத் தேவை­யான வளங்கள் ஆயு­தங்­களை உற்­பத்தி செய்­வ­தற்கும் படை­களைப் பெருக்­கு­வ­தற்கும் செல­வா­கு­வதால் என்­பதை அர­சி­யல்­வா­திகள் என்று உணர்­வார்­களோ? இதை வேறொரு சந்­தர்ப்­பத்தில் விரிவாக ஆராய்வோம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.