பௌத்த சிங்கள சினேக மனோபாவம் இஸ்லாமோபோபியாவாகியது ஏன்?

0 381

கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா

சென்ற வார தொடர்ச்சி…

மீட்­சி­யுண்டா?
மாற்றம் ஒன்றே மாறா­தி­ருப்­பது என்­பது ஒரு பிரஞ்சுப் பழ­மொழி. எனவே இந்த இஸ்­லா­மோ­போ­பிய அலையும் ஒரு நாள் மாறும். ஆனால் அது மாறும்­வரை இந்த நாடும் மக்­களும் காத்­தி­ருப்­பதா அல்­லது அதை விரைவில் மாற்ற வழி­வ­குப்­பதா என்­பதே இன்று எல்­லா­ரையும் எதிர்­நோக்கும் ஒரே கேள்வி.

முதலில், இஸ்­லா­மோ­போ­பியா இழைத்த தீங்­கு­க­ளைப்­பற்றிச் சிந்­திக்க வேண்டும். முஸ்­லிம்கள் பட்ட துன்­பங்­களும் அவர்கள் அடைந்த இழப்­பு­களும் ஒரு புற­மி­ருக்க, நாடே அடைந்த இழப்­புகள் கணி­ச­மா­னவை. இஸ்­லா­மோ­போ­பி­யாவின் மிகப் பெரிய தாக்­கத்தை இன்று இலங்­கையின் பொரு­ளா­தாரம் அனு­ப­விக்­கி­றது. முஸ்­லிம்கள் இந்த நாட்டின் மிகச்­சி­றந்த முயற்­சி­யாளர்கள் என்­பதில் மாற்றுக் கருத்து இருக்க முடி­யாது. பண்­டைக்­கா­லத்­தி­லி­ருந்தே இந்த நாட்டின் உள்­நாட்டுச் சந்­தையை விருத்தி­ செய்­தவர்கள் முஸ்லிம் வியா­பா­ரிகள். மழை­யென்றும் வெய்­யி­லென்றும் இர­வென்றும் பக­லென்றும் பாராது ஊரூராய் அலைந்து தமது சில்­லறை வியா­பா­ரத்­தின்­மூலம் நாட்டு நுகர்வோரை பண்­டங்­களால் இணைத்­தவர்கள் முஸ்­லிம்கள் என்­பதை வர­லாறு கூறும். அது ஒரு புற­மி­ருக்க, இன்­றையப் பொரு­ளா­தா­ரத்தை இஸ்­லா­மோ­போ­பியா எவ்­வாறு பாதிக்­கின்­றது என்­ப­தையும் உண­ர­வேண்டும்.

கொவிட்-19 கொள்ளை நோயினால் உல­கமே கடந்த வருடம் பொரு­ளா­தார வீழ்ச்­சியை அனு­ப­வித்­தது. அந்த நோய் இன்னும் தீர்ந்­த­பா­டில்லை. ஆனால் பொரு­ளா­தாரம் மீட்­சி­பெற வேண்டும். இல்­லையேல் பஞ்­சமும் பட்­டி­னியும் பெரும்­பா­லான மக்­களை வாட்டி அது ஓர் அர­சியல் பிர­ள­யத்­தையே உண்­டு­பண்­ணலாம். ஆனால் பொறுப்­பற்ற ஒரு போரினால் பாதிக்­கப்­பட்ட நாடு கடன் பளுவினால் முடங்கிக் கிடக்­கி­றது. ஒரு­வ­ரிடம் பட்ட கடனை அடைக்க இன்­னொ­ரு­வ­ரிடம் கடன்­பட வேண்­டிய ஒரு துர்ப்பாக்­கிய நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளது. வங்­கா­ள­தே­சத்­துக்குப் பிர­த­மரும் ஓமா­னுக்கு இராஜாங்க அமைச்­ச­ரு­மாகப் பிச்­சைப்­பாத்­தி­ர­மேந்திச் சென்­றது எதற்­காக? கட­னா­ளி­யாக வாழ்ந்த எவரும் செல்வம் திரட்­டி­ய­தில்லை. அதே உண்­மைதான் ஒரு நாட்­டுக்கும். இந்தச் சந்­த­தி­பட்ட கடனை இறுக்கும் பொறுப்பை வருங்­காலச் சந்­த­தி­க­ளுக்கு விட்டுச் செல்­வது தர்மமா­காது. எனவே தாம் பட்ட கடனைத் தாமே இறுக்க வேண்டும். உழைப்பின் மூலம் இலாபம் சம்­பா­தித்து அந்த இலா­பத்தைக் கொண்டே கடனை இறுப்­பது கடமை. அந்த உழைப்பை எவ்­வாறு பெருக்­கு­வது?

எந்த ஒரு நாடும் ஒற்­று­மை­யின்றிப் பிள­வு­பட்­டி­ருக்கும் நிலையில் அதன் பொரு­ளா­தாரம் துரித வளாச்­சியைக் காண்­பது கஷ்டம். அதிலும் இலங்­கை­போன்ற பல்­லினச் சமூக அமைப்­புள்ள நாட்டில் இனங்­க­ளுக்­கி­டையே பிள­வி­ருந்தால் வளர்ச்சி தடைப்­படும். மக்­க­ளை ­வி­டவும் மகத்­தான சொத்து வேறில்லை. அந்த மக்­களைக் கொண்­டுதான் வறு­மையால் பீடிக்­கப்­பட்டுக் கிடந்த வங்­கா­ள­தேசம் இன்று அதன் பொரு­ளாதாரத்தை இலங்­கைக்குக் கடன் கொடுக்கும் அள­வுக்கு வளர்த்துள்­ளது. ஆனால், ஏற்­க­னவே சிங்­கள தமிழ்ப் பிளவால் பின்­ன­டைந்த இலங்கை, இப்­போது இஸ்­லா­மோ­போ­பியா வளர்க்கும் பௌத்த முஸ்லிம் பிளவால் இன்னும் பின்­ன­டைய வேண்­டுமா?

இலங்­கையின் இன்­றைய தேவை பாரிய வெளி­நாட்டு முத­லீடும் உல­க­ளா­விய சந்­தையும். சீனா­வி­டமும் இந்­தி­யா­வி­டமும் பணமும் உண்டு, சந்­தையும் உண்டு. அவர்கள் கடனும் தரு­வார்கள் முத­லீடும் செய்­வார்கள். எனினும் அந்த இரு ராட்­சத முத­லை­க­ளிடம் சிக்­கு­வது நாட்டின் இறறைமைக்கே ஆபத்து என்­பதை அர­சாங்கம் உணர்ந்தும் அவர்களி­டமே தஞ்­ச­ம­டை­வது மடமை. அதே சமயம், இன்­றைய மத்­திய கிழக்கு அரபு நாடுகள் மிகை­யான சேமிப்பை குவித்­து­வைத்­துள்­ளன. ஓமா­னிடம் கடன் கேட்­டுப்­போ­னது அதனை உறு­திப்­ப­டுத்­த­வில்­லையா? அந்த நாடு­களின் முத­லீ­டு­களும் சந்­தையும் இலங்­கைக்கு அவ­சியம். ஆனால் அவை இஸ்­லா­மிய நாடுகள். இங்­கேதான் இஸ்­லா­மோ­போ­பியா ஒரு பிரச்­சி­னை­யா­கின்­றது.

இலங்கை முஸ்லிம் சமூகம் இந்த நாட்டில் இஸ்லாம் வகிக்கும் நிலை­மையை மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்குக் காட்டும் ஒரு சாளரம். அந்தச் சாள­ரத்­தி­னூ­டாக அன்­றைய இலங்கை அர­சுகள் முஸ்­லிம்­களை மத்­தி­ய ­கி­ழக்குக்குக் காட்டி அதன் மூலம் பெற்ற நன்­மைகள் ஏராளம். இஸ்­லா­மோ­போ­பி­யாவை இந்த அரசு அர­சியல் லாபம் கருதிக் கட்­டுப்­ப­டுத்­தா­விட்டால் அதனால் ஏற்­படும் நட்­டங்­களைத் தவிர்க்க முடி­யாது. உதா­ர­ண­மாக, அண்­மையில் ஜெனி­வாவில் நடை­பெற்ற மனித உரிமைச் சபையின் வாக்­கெ­டுப்பில் சில முஸ்லிம் நாடுகள் இலங்­கைக்குச் சார்­பாக வாக்­க­ளிக்­கா­த­தற்கும் இலங்கை முஸ்­லிம்­களின் கொவிட்-19 ஜனா­ஸாக்­களை அர­சாங்கம் தகனம் செய்ய அனு­ம­தித்­த­தற்கும் தொடர்புண்டு என்­பதை மறுக்க முடி­யாது. அது மட்­டு­மல்ல, எவ்­வாறு புலம்­பெ­யர்ந்த தமிழர்கள் மேற்கு நாடு­களின் அர­சு­க­ளுக்கு இலங்­கைக்கு எதி­ராக அழுத்தம் கொடுக்­கி­றார்­களோ அதே­போன்று பெரு­கி­வரும் புலம்­பெயர் முஸ்­லிம்­களும் அரபு நாடு­க­ளுக்கும் உலக முஸ்லிம் நாடு­க­ளுக்கும் இனிமேல் அழுத்தம் கொடுக்­கலாம். ஆகவே அர­சாங்கம் இஸ்­லா­மோ­போ­பி­யாவை கட்­டுப்­ப­டுத்­துதல் அவ­சியம்.

அதே சமயம் முஸ்­லிம்­க­ளுக்கும் ஒரு முக்­கிய கடமை உண்டு. 1980 களுக்கு முன்­னுள்ள நிலைக்கு சமூ­கத்தின் மனோ­பாவம் மாற வேண்டும். அது எவ்­வாறு என்­ப­தற்­கான வழி­வ­கை­களை சமூ­கத்தின் ஆண், பெண் புத்­தி­ஜீ­வி­களே முன்­னின்று வகுக்க வேண்டும். அதற்கு முதற்­ப­டி­யாக சம­யமே கலா­சாரம் அல்ல என்­ப­தையும் கலா­சா­ரத்தின் ஓர் அங்­கமே சமயம் என்­ப­தையும் மதத் தலைவர்களுக்கும் அவர்களின் பக்தர்களுக்கும் விளங்­க­வைக்க வேண்டும். முஸ்­லிம்­களின் பேச்­சு­வ­ழக்கு, நடை உடை பாவனை, கலை வடி­வங்கள், பொழுது போக்­குகள் யாவையும் கலா­சா­ரத்­தினுள் அடங்கும். அவை தேசிய கலாசா­ரத்­துடன் இணைந்­த­தாக அமை­யும்­போது இனங்­க­ளி­டையே சௌஜன்ய உறவு வளரும், வளர்க்கப்­பட வேண்டும். அதை­யொட்­டிய சில நிகழ்­வு­களை முஸ்லிம் இளைஞர்கள் ஒழுங்கு செய்து மற்­றைய இனங்­களின் வர­வேற்பைப் பெற­வேண்டும். அதே­போன்று மத நல்­லி­ணக்க மகா­நா­டுகள் முஸ்­லிம்­களால் ஏற்­பாடு செய்­யப்­பட்டு அது வரு­டா­வ­ருடம் நாட்டின் சகல பகு­தி­க­ளிலும் வருடந்தோறும் புத்திஜீவிகளால் நடத்தப்பட வேண்டும்.

அவற்­றை­யெல்லாம் விடவும் முக்­கி­ய­மான ஒரு தேவை புதிய அர­சியல் தலை­மைத்­துவம். சமூ­கப்­பற்றும், நாட்­டுப்­பற்றும், அறிவும், தூர­ சிந்­த­னையும், மனி­தா­பி­மா­னமும் கொண்ட ஒரு தலை­மைத்­து­வத்தை உரு­வாக்­கு­வது முஸ்லிம் புத்­தி­ஜீ­வி­களின் தலை­யாய கடமை. அவ்­வா­றான தகை­மைகள் கொண்ட பல இளைஞர்கள் இன்று முஸ்­லிம்­க­ளி­டையே இருக்­கி­றார்கள். அவர்களைத் தேடிப்­பி­டித்து சந்தர்ப்பம் வழங்­கு­வது சமூ­கத்தின் கடமை. அப்­ப­டிப்­பட்­டவர்களின் வழி­காட்­ட­லின்றி இஸ்லாமோபோபியாவை விரட்ட முடியாது. (முற்றும்) – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.