பௌத்த சிங்­கள இன­வா­தத்­துக்குப் பலி­யாகும் முஸ்­லிம்கள்

0 622

கலாநிதி அமீரலி
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா

2009க்குப் பின்னர் படிப்­ப­டி­யாக வளர்ந்­து­வந்த பௌத்த சிங்­கள இன­வாதம் இப்­போது இந்த நாட்டின் பல்­லின அமைப்பை அடி­யோடு ஒழித்து ஓரின, ஒரே மத, ஒரே மொழி அமைப்­பாக மாற்றி அமைக்க அனைத்து முயற்­சி­க­ளையும் மேற்­கொள்­கின்­றது. அந்த முயற்­சி­களின் ஒரு வெளிப்­பாடே அரசாங்கம் அண்­மையில் அறி­வித்த புர்கா தடையும், மத­்ரஸா தடையும், புனர்­வாழ்வு நிலை­யங்­களின் திறப்பும். இந்த மூன்­றுக்கும் அரசு கூறும் ஒரே காரணம் நாட்டின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­காக என்­ப­தாகும். இது உண்­மையா?

முஸ்லிம் பெண்­களின் புர்கா, நிகாப் ஆகிய இரு ஆடை­க­ளிலும் சில பிரச்­சி­னைகள் உண்டு என்­பதை முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவற்றை சுமார் பன்­னி­ரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்­னரே அவுஸ்­தி­ரே­லி­யாவில் வெளி­யாகும் பத்­தி­ரிகை ஒன்றில் நான் சுட்­டிக்­காட்­டினேன். அந்தக் கட்­டு­ரையை இலங்­கை­யிலும் சிலர் தமிழில் மேற்கோள் காட்­டி­ய­போது பல கண்­ட­னங்கள் எழுந்­தன. இப்­போது எழுந்­துள்ள புதிய சூழலைக் கருத்­திற்­கொண்டு அப்­பி­ரச்­சி­னை­களை மீண்டும் வாச­கர்­க­ளுக்­காக விளக்க வேண்­டி­யுள்­ளது.

முத­லா­வ­தாக, புர்­காவும் நிகாபும் கடந்த முப்­பது அல்­லது நாற்­பது ஆண்­டு­க­ளுக்­குள்­ளேதான் இலங்­கையில் அறி­மு­க­மா­யின. 1979ஆம் வருட ஈரா­னிய இஸ்­லா­மிய (இஸ்­லா­மி­ய­மாக்­கப்­பட்ட) புரட்சி தோற்­று­வித்த “கறுப்பு அலை” முஸ்லிம் உல­கெங்கும் பரவத் தொடங்­கி­ய­போது அது இலங்­கை­யையும் விட்­டு­வைக்­க­வில்லை. இரண்­டா­வ­தாக, இந்த ஆடைகள் இலங்­கையின் பல்­லினக் கலா­சார, புவியியல் சூழ­லுக்கு அப்­பாற்­பட்­டவை. அவை பிறி­தொரு கலா­சார, புவியியல் சூழ­லுக்குள் தோன்­றி­யவை. எனவே சேலை­யையும் முக்­காட்­டை­யுமே கண்டு பரிச்­ச­யப்­பட்ட முஸ்லிம் அல்­லாத இனங்­களின் கண்­க­ளுக்கு இவை ஒரு­வித விநோத உணர்வை ஏற்­ப­டுத்­தி­யது உண்மை. அதனைத் தொடர்ந்து கறுப்பு நிற அபா­யாவும் முஸ்லிம் பெண்­களை கௌவத் தொடங்­கி­ய­துடன் மற்­றைய இனங்­க­ளி­களின் பார்வை ஒரு­வித வெறுப்­பு­ணர்­வுடன் மாறத் தொடங்­கிற்று. இந்த உடை­யைத்­த­விர முஸ்லிம் சமூ­கத்­துக்குள் 1980க்குப் பின்னர் ஏற்­பட்ட ஏனைய மத, கலா­சார அடிப்­ப­டை­யி­லான மாற்­றங்­களும் இணைந்து, இந்த முஸ்­லிம்கள் எந்த நாட்டில் வாழ்­கி­றார்கள் என்ற ஒரு கேள்­வியை மற்­றைய சமூ­கங்­க­ளி­டையே தோற்­று­வித்­தது. புர்­காவும் நிகாபும் அபா­யாவும் மற்ற இனங்­க­ளி­டையே பேசு பொரு­ளாக மாறின.

இருந்தும் இவ்­வு­டை­களை அணிந்த முஸ்லிம் பெண்­களின் நிலைப்­பாடு இன்­னொரு பிரச்­சி­யை­யையும் தோற்­று­வித்­தது. இந்தப் பெண்­களைப் பொறுத்­த­வரை எந்த ஆடையை அணி­வ­தென்­பது அவர்­களின் சுய­வி­ருப்பம். மற்­ற­வர்­களின் விருப்பு வெறுப்­பு­க­ளுக்­கேற்ப அவர்கள் அணி­ய­வேண்­டிய அவ­சி­ய­மில்லை. அது அவர்­களின் மனித உரி­மை­களுள் ஒன்று. இந்த வாதத்தை யாரும் மறுக்க முடி­யாது. நீதி­மன்­றங்­களும் அதனைச் சரி­காணும். ஆனால் அதில் ஒரு பிரச்­சினை உண்டு. அது சமூ­க­வி­ய­லுடன் தொடர்­பு­டை­யது.

மனி­தர்கள் ஒவ்­வொ­ரு­வரும் ஏதோ ஒரு சமூ­கத்­தி­லேதான் பிறக்­கி­றார்கள். மனிதன் ஒரு சமூகப் பிராணி. ஆகவே சமூ­கத்­துடன் உற­வா­டாமல் அவ­னது வாழ்க்­கையின் தேவை­களைப் பூர்த்­தி­செய்­வது கஷ்டம். அவ்­வாறு உற­வாடி வாழ்­வதை இஸ்லாம் தடை­செய்­கின்­றதா? அல்­லது சமூ­கத்­தை­விட்டும் ஒதுங்கி வாழ்­வதை அது ஆத­ரிக்­கின்­றதா? இல்­லையே. ஆதலால் பல்­லின மக்கள் வாழும் ஒரு சமூ­கத்தில் ஒரு­வரின் உடை சமூ­கங்­க­ளுக்­கி­டையே உள்ள உற­வையும் ஐக்­கி­யத்­தையும் பாதிக்­கு­மானால் ஒன்றில் அந்த உடையை மாற்ற வேண்டும் அல்­லது சமூ­கத்­தை­விட்டும் ஒதுங்கி வாழ­வேண்டும். இதைனை முஸ்லிம் சமூ­கமே தீர்­மா­னிக்க வேண்டும். எனவே இப்­பி­ரச்­சி­னை­யைப்­பற்றி ஒரு கலந்­து­ரை­யா­ட­லை­யா­வது முஸ்லிம் தலை­வர்கள் முன்­னெ­டுத்­தி­ருந்தால் இந்தப் பிரச்­சி­னைக்கு என்றோ ஒரு சுமு­க­மான முடிவைக் கண்­டி­ருக்­கலாம். தலை­வர்கள் விட்ட தவறால் அது இன்று அர­சாங்­கத்தின் தடைக்கு ஆளா­கி­யுள்­ளது. ஆனால் அந்தத் தடைக்கு அர­சாங்கம் கூறும் கார­ணத்­தையும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

அமைச்சர் கூறு­வ­து­போன்று புர்­காவும் நிகாபும் நாட்டின் பாது­காப்­புக்கு ஆபத்தை விளை­விக்கும் என்­பது உண்­மை­யானால் 1957இல் அன்­றைய அர­சாங்கம் பௌத்த துற­வி­களின் காவி உடையைத் தடை செய்­தி­ருக்க வேண்டும். ஏனெனில் ஒரு பௌத்த துற­விதான் தனது உடைக்குள் துப்­பாக்­கியை மறைத்து வைத்து பிர­தமர் பண்­டா­ர­நா­ய­க்காவைச் சுட்டுக் கொன்றார். அது­மட்­டு­மல்ல, இன்­றைய கொலைக்­க­ரு­விகள் பல உரு­வத்­திலும் பல அள­விலும் உற்­பத்­தி­யா­கின்­றன. அவற்றை மறைப்­ப­தற்கு புர்­காவோ நிகாபோ தேவை இல்லை. எனவே இந்­தத்­ தடை முஸ்­லிம்­களை வீணே பழி­வாங்கும் நோக்­கத்­துடன் சிங்­கள பௌத்த இன­வா­தி­களால் சோடிக்­கப்­பட்ட ஒரு தடை­யே­யன்றி வேறில்லை.

அது போன்­றதே 1000 குர்ஆன் பாட­சா­லை­க­ளுக்கு எதி­ரான தடையும். இது எந்த அள­வுக்கு ஆட்­சி­யா­ளர்­க­ளி­டையே மத­ரசா பற்­றிய அறி­யாமை நில­வுகிறது என்­பதைக் காட்­டு­கி­றது. மத்­ரஸா என்ற பெய­ருக்குள் எல்லா வகை­யான மார்க்கக் கல்­விக்­கூ­டங்­க­ளையும் அடக்­கி­யதால் ஏற்­பட்ட குள­று­ப­டியே இத்­த­டைக்கு வித்­திட்­டுள்­ளது. தடை­செய்­ய எத்தனிக்கும் குர்ஆன் பாட­சா­லை­க­ளுக்கும் உயர்­தர மத்­ர­ஸாக்­க­ளுக்­கு­மி­டையே மலைக்கும் மடு­வுக்­கு­முள்ள வேறு­பாடு உண்டு. குர்ஆன் பாட­சா­லை­களில் அரபு மொழி­யி­லுள்ள குர்­ஆனை வாசிக்­கக்­கூ­டிய அளவு வல்­ல­மை­யையும் இஸ்­லாத்தின் கட்­டாயக் கட­மைகள் ஐந்­தி­னையும் சீராகக் கடைப்­பி­டிக்க வேண்­டிய வழி­மு­றை­க­ளையும் மட்­டுமே சிறார்­க­ளுக்குக் கற்­பிக்­கப்­ப­டு­கின்­றது. இதுதான் அடிப்­ப­டை­வாதம் அல்­லது தீவி­ர­வாதம் என்று ஆட்­சி­யா­ளர்கள் கரு­து­வார்­க­ளே­யானால் அவர்கள் சுத்த ஞான­ சூனி­யர்­க­ளா­கத்தான் இருக்க முடியும். முஸ்­லிம்கள் தமது சிறார்­க­ளுக்கு ஊட்டும் இந்த ஆரம்ப மதக்­கல்­வியை எக்­கா­ரணம் கொண்டும் தவிர்க்கப் போவ­தில்லை. இந்தப் பாட­சா­லைகள் தடை­செய்­யப்­பட்டால் நிச்­ச­ய­மாக ஒவ்­வொரு வீடுமே ஒரு குர்ஆன் பாட­சா­லை­யாக மாறி, பெற்­றோர்­களே ஆசி­ரி­யர்­க­ளா­கவும் மாறுவர். எத்­த­னையோ ஆலிம்கள் மறு­மையை மன­தில்­வைத்து இல­வ­ச­மா­கவும் வீடு­ வீ­டாகச் சென்று கற்றுக் கொடுப்பர். அதையும் இந்த அரசு வீடு புகுந்து தடை­செய்­யுமா?

இவற்றைத் தவிர உயர்­தர மத்­ர­ஸாக்­களின் பாடத்­திட்­டங்­க­ளிலும் போதனா முறை­க­ளிலும் மாற்­றங்கள் தேவை என்­பதை மறுக்­க­வில்லை. அதைப்­பற்றி ஏற்­க­னவே பல முஸ்லிம் புத்­தி­ஜீ­விகள் வலி­யு­றுத்­தி­யுள்­ளனர். அந்த மாற்­றங்­களைப் புகுத்த வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து வல்­லு­னர்கள் வர­வேண்­டிய அவ­சி­யமும் இல்லை. ஏனெனில் இலங்­கை­யி­லேயே தகு­தி­வாய்ந்த முஸ்லிம் கல்­வி­மான்­களும் மார்க்க அறி­ஞர்­களும் இருக்கிறார்கள். அரசு விரும்­பினால் அதற்­கான உந்­து­தல்­களை அளித்து விரைவுபடுத்­தலாம். அதை­வி­டுத்து, இந்தக் கல்வி நிலை­யங்கள் மதத் தீவி­ர­வா­தத்­தையும் அடிப்­ப­டை­வா­தத்­தையும் வளர்க்­கின்­றன என்று ஆதா­ர­மில்­லாத குற்­றங்­களைச் சுமத்தி அவற்­றையும் அர­சாங்­கத்தின் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வர எத்­த­னிப்­பது வெறும் முட்­டாள்­த­ன­மே­யன்றி வேறில்லை.

இந்தக் குற்­றங்­களைச் சுமத்தும் ஆட்­சி­யா­ளர்கள் எவ­ரேனும் ஒரு முறை­யா­வது ஒரு மத­்ர­ஸா­வுக்குச் சென்று அங்கே என்ன நடக்­கின்­ற­தென்­பதைப் பார்த்­த­துண்டா? அங்கே கல்வி புகட்டும் ஆசி­ரி­யர்­க­ளு­டனோ கல்வி கற்கும் மாண­வர்­க­ளு­டனோ கலந்­து­ரை­யா­டி­ய­துண்டா? அல்­லது, அதன் பாட­வி­தா­னத்­தை­யேனும் படித்­த­துண்டா? அதுதான் போகட்டும், எந்த ஒரு அமைச்­ச­ருக்­கேனும் மத­்ர­ஸாக்­களின் தோற்றம், அவை உலக ரீதியில் அறிவு விருத்­திக்கும் நாக­ரிக வளர்ச்­சிக்கும் ஆற்­றிய பங்கு, அவை உரு­வாக்­கி­விட்ட அறி­ஞர்­க­ளி­னதும் இறை­ஞா­னி­க­ளதும் விப­ரங்கள் ஆகி­ய­ன­பற்­றிய அறி­வுண்டா? அவற்றை மூட­வேண்டும் என்று தெரு­விலே நின்று கூச்­ச­லிடும் பௌத்த துற­வி­க­ளுக்­கேனும் இந்த விப­ரங்கள் தெரி­யுமா? இவை எது­வுமே இல்­லாமல் மத­்ர­ஸாக்­களை கண்­மூ­டித்­த­ன­மாகக் கண்­டிப்­பது பௌத்த இன­வா­தத்­துக்கு முஸ்­லிம்­கள் ­மே­லுள்ள வெறுப்­பையே காட்­டு­கின்­றது. மத்­ர­ஸாக்­களே துரத்­தி­விட்ட ஒரு துட்­டனின் கொலை­காரச் செய்­கையை ஆதா­ர­மாகக் கொண்டு நூறாண்­டு­க­ளுக்கும் மேலாக இலங்கை முஸ்­லிம்­க­ளின் ஆன்­மிக வளர்ச்­சிக்கு ஓர் அர­ணாகத் திகழும் கல்­விக்­கூ­டங்­களில் அர­சாங்கம் கை வைப்­பது இந்த ஆட்­சியின் இஸ்­லா­மிய வெறுப்­பையே தெளி­வு­ப­டுத்­து­கி­றது.

எல்­லா­வற்­றை­யும்­விடப் பயங்­க­ர­மான ஒரு முடி­வுதான் அர­சாங்கம் திறக்­க­வி­ருக்கும் புனர்­வாழ்வு நிலை­யங்கள். அடிப்­ப­டை­வாதி, தீவி­ர­வாதி அல்­லது பயங்­க­ர­வாதி என்று எந்த முஸ்­லி­மை­யா­வது ஆட்­சி­யா­ளர்கள் சந்­தே­கப்­பட்டு இனங்­கண்­டு­விட்டால் அவரை அந்த நிலை­யங்­க­ளுக்குள் அடைத்துச் சில வரு­டங்­க­ளுக்கு அவரை மூளைச்­ச­லவை செய்­வதே இதன் நோக்கம். இந்த முயற்சி 2019 இல் பொது­பல சேனாவின் செய­லா­ளரின் தலை­மையில் கண்­டியில் நடை­பெற்ற ஒரு பகி­ரங்கக் கூட்­டத்­தினைத் தொடர்ந்து அன்­றைய ஜனா­தி­ப­தி­யிடம் அவர்கள் சமர்ப்­பித்த திட்­டத்தின் வெளிப்­பாடே. முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தி­க­ளையும் வ­ஹா­பி­க­ளையும் பௌத்த பீடத்­திடம் விடுங்கள், அது இவர்­களைத் திருத்தும் என்று கூறப்­பட்­டது. அவர்­க­ளுக்கு முன்­னு­தா­ர­ண­மாக விளங்­கு­வது சீன அரசு உய்கர் முஸ்லிம்களை முகாம்களில் அடைத்து மூளைச்கலவை செய்யும் முயற்சிகள். அந்த மூளைச்சலவையிலிருந்து வெளியேறும் முஸ்லிம்கள் அவர்கள் முஸ்லிம்களாகப் பிறந்தோம் என்ற ஞாபகத்தையே இழந்துவிடுகிறார்களாம் என்று பல செய்தி நிருபர்கள் சொல்லக் கேட்டதுண்டு. அதைத்தான் இங்கேயும் இனவாதிகள் செய்யத் துடிக்கின்றனர். இது முஸ்லிம் இன ஒழிப்புக்குச் சமனாகாதா?

இந்தத் திட்­டங்­க­ளுக்கு முஸ்­லிம்கள் உள்­ளி­ருந்தும் உல­க­ளா­விய ரீதி­யிலும் எதிர்ப்­புக்­களைத் தெரி­விக்க வேண்டும். இந்த முயற்­சி­களை இலங்­கையின் பௌத்த மக்கள் எல்­லா­ருமே ஆத­ரிக்­க­வில்லை. அவர்­க­ளுக்­குள்ளும் மனி­தா­பி­மா­னமும் ஜன­நா­யக உணர்வும் கொண்ட பல்­லா­யி­ரக்­க­ணக்­கானோர் இந்த ஆட்­சி­யா­ளர்­களின் அட்­ட­கா­சங்­களைக் கண்டு நொந்­துபோய் குமு­று­கின்­றனர். அவர்­க­ளு­டனும் கிறிஸ்­தவ இந்து மக்­க­ளு­டனும் இணைந்து தைரி­ய­மற்ற தமது தலை­வர்­களை ஒதுக்கிவிட்டு முஸ்லிம்கள் போராட வேண்டும். அந்தப் போராட்டத்தின் ஒலி சர்வதேச அரங்குகளையும் எட்டட்டும். ஜனாஸா போராட்டத்தின் வெற்றி இதற்கு ஒரு முன்னுதாரணமாக விளங்கட்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.