ஜனா­ஸாக்­களை அடக்­கி­னாலும் போராட்டம் அடங்­கக்­கூ­டாது

0 489

கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா

ஏறத்­தாழ ஒரு வருட கால­மாக ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்­கையின் கீழ் அமு­லாக்­கப்­பட்­டு­வரும் முஸ்லிம் கொரோனாப் பிரே­தங்­களின் கட்­டாய தக­னத்­தினால் முஸ்­லிம்கள் வடித்த கண்­ணீ­ருக்கும் பட்ட மன­வே­த­னை­க­ளுக்கும் பிரார்த்­த­னை­க­ளுக்கும் விடை கிடைத்­த­து­போன்று அடக்கம் செய்யும் அனு­ம­தியைத் தாங்­கிய வர்த்­த­மானி அறிக்கை வெளி­யா­கி­யுள்­ளது. எனினும் கடவுள் அனு­ம­தித்தும் பூசாரி தடை செய்­வ­து­போன்று சுகா­தார அமைச்சு அதி­கா­ரிகள் பல கார­ணங்­களைச் சொல்லி இன்னும் அந்த வர்த்­த­மானி அமு­லா­கு­வதைத் தாம­த­மாக்கி வரு­கின்­றனர்.

இந்தத் தடங்­கல்­க­ளுக்குப் பின்னால் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான பௌத்த பேரி­ன­வாதச் சக்­திகள் இயங்கிக் கொண்­டி­ருக்­கின்­றன என்­பது வெள்­ளி­டை­மலை. இதனால் எழு­கின்ற ஒரு முக்­கி­ய­மான கேள்வி என்­ன­வெனில் இலங்­கையை உண்­மை­யி­லேயே ஆள்­கின்­ற­வர்கள் ராஜ­பக்­சாக்­களும் அவர்­களின் அமைச்­சர்­க­ளுமா அல்­லது அவர்­களை ஆட்­டு­கின்ற பேரி­ன­வாதச் சக்­தி­களா என்­பதே. அன்­றொரு நாள் முன்­னைநாள் பிர­தமர் ஜோன் கொத்­த­லா­வலை மர­ணப்­ப­டுக்­கையில் கிடந்த பிர­தமர் பண்­டா­ர­நா­யக்­காவைப் பார்த்து, “நாயை நான் வாசலில் கட்டிப் போட்டேன். நீ அவிழ்த்து விட்டாய். அது உன்­னையே கடித்து விட்­டது” என்று கூறி­னாராம். அதே போன்று நாட்டைச் சீர­ழிக்கும் பௌத்த பேரி­ன­வாதச் சக்­திகள் ஜனா­தி­ப­தியின் வாசஸ்­த­லத்­தி­னுள்ளும் பிர­த­மை­ரைச்­சுற்­றியும் வட்­ட­மிட்­டுக்­கொண்டே இருக்­கின்­றன. அதன் விளை­வுகள் என்­ன­வா­குமோ என்­பதை பொறுத்­தி­ருந்­துதான் பார்க்­க­வேண்டும்.

ஜனா­தி­பதி நந்­த­சேன கோத்­தா­பய ராஜ­பக்ச அவர்கள் ஜனா­தி­பதித் தேர்­தலில் வென்­ற­பின்னர் தனது சத்­தி­யப்­பி­ர­மா­ணத்தை ஜன­நா­யக மர­பு­க­ளுக்­கேற்ப கோட்டை நாடா­ளு­மன்­றத்தில் எடுக்­காமல், அந்த மர­பையே புறந்­தள்­ளி­விட்டு, அனு­ரா­த­பு­ரத்தில் பௌத்த சம்­பி­ர­தா­யங்­களின் முறைப்­படி எடுத்­தமை இலங்­கையின் நாடா­ளு­மன்ற ஜன­நா­யக மர­பு­க­ளுக்கு வீழ்ந்த முத­லா­வது அடி என்­பதை ஞாப­கத்திற் கொள்ளல் வேண்டும். அன்­றி­லி­ருந்தே இலங்­கையின் ஜன­நா­யகம் படிப்­ப­டி­யாக மறையத் தொடங்­கிற்று என்­பதை இன்று நடை­பெறும் இரா­ணுவம் சூழ்ந்த பௌத்த ஏதேச்­ச­தி­காரம் எடுத்­துக்­காட்­ட­வில்­லையா? அந்த பௌத்த ஏதேச்­ச­தி­கா­ரத்தின் துஷ்ட லீலை­களில் ஒன்­றா­கவே ஜனா­தி­ப­தியின் வர்த்­த­மானி அமு­லா­கு­வ­தற்கு இடை­யூ­றாக நிற்கும் நிர்­வாகத் தடங்­கல்­க­ளையும் கரு­த­வேண்டும்.

இந்த நிலையில், முஸ்­லிம்­களை எதிர்­நோக்கும் ஒரு முக்­கிய கேள்வி இதுதான். அதா­வது காலந் தாழ்த்­தி­யா­வது ஜனா­ஸாக்­களை நல்­ல­டக்­கம்­செய்யும் உரிமை கிடைத்து விட்டால் (அதற்­காக யாருக்கு நன்றி கூற­வேண்டும் என்­பதை ஏற்­க­னவே ஒரு கட்­டு­ரையில் நான் விளக்­கி­யுள்ளேன்) அத்­துடன் முஸ்­லிம்­களின் போராட்­டங்­களும் ஓய்ந்­து­வி­டுமா என்­பதே.

சுதந்­திர இலங்­கையில் ஆளும் கட்­சி­யுடன் இணைந்­தாற்தான் முஸ்­லிம்­க­ளுக்குச் சுபீட்­ச­முண்டு என்ற ஒரு கருத்தை முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களும், மதத் தலை­வர்­களும், சமூ­க­நல ஆர்­வ­லர்­களும் மக்­க­ளி­டையே விதைத்­து­விட்­டுள்­ளனர். அவ்­வா­றான ஓர் இணைப்­பினால் முஸ்லிம் சமூகம் அடைந்த நன்­மை­களைப் பட்­டி­ய­லிட்டு அதற்­கான ஆதா­ர­மா­கவும் காட்­டு­கின்­றனர். இந்தக் கருத்­துக்குப் பின்னால் மறைந்­துள்ள ஒரு முக்­கி­ய­மான கேள்­விக்கு அவர்­களுள் யாரும் இது­வரை விடை­ய­ளித்­த­தாகத் தெரி­ய­வில்லை. அதா­வது, இவ்­வ­ளவு நன்­மை­களும் இந்­நாட்டின் பிர­ஜை­க­ளான சிறு­பான்­மை­யி­ன­ருக்கு வழங்­கப்­பட்ட மனி­தா­பி­மான அடிப்­படை உரி­மை­களா அல்­லது முஸ்லிம் என்ற இன­மொன்­றுக்கு அர­சியல் இலாபம் கருதி கொடுக்­கப்­பட்ட சலு­கை­களா?

சலு­கைகள் அர­சியல் மாற்­றங்­க­ளுக்­கேற்ப நிலைக்­கலாம் அல்­லது பறி­போ­கலாம். சலு­கை­க­ளுக்­காகச் சட்­டத்­தின்­மூலம் போராட முடி­யாது, அர­சியல் ரீதி­யாக மன்­றா­டலாம். ஆனால் உரி­மைகள் பறிக்­கப்­ப­டும்­போது அதை எதிர்த்து உலக நீதி­மன்­றம்­வரை சென்று போரா­டலாம். அந்த உண்­மை­யைத்தான் ஜனாஸா எரிப்­புக்­கெ­தி­ரான போராட்டம் தெளி­வு­ப­டுத்­து­கி­றது. கொரோ­னாவால் உயிர் நீத்த முஸ்­லிம்­களை நல்­ல­டக்கம் செய்­வது உலக முஸ்­லிம்­களின் அடிப்­படை உரிமை. அவ்­வாறு அடக்கம் செய்­வதால் தொற்று பர­வு­வ­தற்கு வாய்ப்­பில்லை என்­பதை இலங்­கையைத் தவிர்ந்த உலக நாடுகள் எல்­லாமே உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளன. ஆனால், அதனை ஒரு அடிப்­படை மனித உரி­மை­யாக ஐ. நா.வின் மனித உரிமை ஆணை­யாளர் வெரோ­ணிக்கா மிச்சேல் பெச்லற் என்ற பெண்­மணி தனது அறிக்­கையில் குறிப்­பி­டும்­வரை நமது முஸ்லிம் தலை­வர்கள் அர­சியல் மன்­றாட்டம் நடத்­தி­னார்­களே ஒழிய உரிமைப் போராட்டம் நடத்­த­வில்லை.

இந்த நிலை மாற­வேண்டும். இன்று சிறு­பான்­மை­யி­ன­ராக வாழும் பிர­ஜை­களின் மனி­தா­பி­மான, ஜீவா­தார, அடிப்­படை உரி­மைகள் பௌத்த பேரி­ன­வா­தத்தின் வலி­யு­றுத்­தலால் ஆட்­சி­யா­ளர்­களால் திட்­ட­மிட்ட வகையில் சூறை­யா­டப்­ப­டு­கின்­றன. அந்த உரி­மை­களுள் ஒன்­றுதான் முஸ்­லிம்­களின் ஜனாஸா அடக்க உரி­மையும். அதனைத் திருப்பி முஸ்­லிம்­க­ளிடம் ஒப்­ப­டைப்­பது தவிர்க்க முடி­யா­தது. ஆட்­சி­யினர் அதனைப் பண­ய­மாக வைத்து சர்­வ­தேச மட்­டத்தில் அர­சியல் லாபம் திரட்ட நினைப்­பது வேறு­வி­டயம். ஆனால் அந்த உரி­மையை மீட்­டு­விட்டோம் என்ற இறு­மாப்­புடன் திரும்­பவும் பழைய குருடி கதவைத் திறடி என்ற கதை­போன்று முஸ்­லிம்கள் ஆட்­சி­யா­ள­ருடன் இணைந்து போவதே நன்­மை­யென்று கரு­தினால் அதை­வி­டவும் ஒரு முட்­டாள்­தனம் இருக்க முடி­யாது. அவ்­வா­றான கருத்தே எட்டு முஸ்லிம் உறுப்­பி­னர்­களை அன்று நாடா­ளு­மன்­றத்தில் 20ஆம் திருத்தப் பிரே­ர­ணையை ஆத­ரித்து வாக்­க­ளிக்க வைத்­தது. இந்தத் துரோ­கத்தை அவர்­களால் எவ்­வா­றுதான் நியா­யப்­ப­டுத்த முடி­யுமோ?

ஆனாலும் ஒன்­று­மட்டும் உண்மை. பேரி­ன­வா­திகள் முஸ்லிம் உறுப்­பி­னர்­களின் ஆத­ரவு தேவை­யில்லை என்­றி­ருப்­ப­த­னா­லேதான் எதி­ர­ணியில் இந்த மந்­திகள் குந்திக் கொண்­டி­ருக்­கின்­றன. நாளைக்கே சில சலு­கை­க­ளைக்­காட்டி வாவென்­ற­ழைத்தால் தாவிப்­பாயும் தன்மை கொண்­ட­வர்கள் இத்­த­லை­வர்கள். எனவே இவர்கள் அனை­வ­ரையும் ஒதுக்­கி­விட்டு முஸ்­லிம்கள் தாம் இந்­நாட்டின் பிர­ஜைகள் என்ற அடை­யா­ளத்­துடன் ஒரு தனி­வ­ழியில் நின்று போரா­ட­வேண்டி இருக்­கி­றது. அந்தப் போராட்டம் உரி­மை­க­ளுக்­கான போராட்­ட­மாக, நீதிக்­கான போராட்­ட­மாக, சம அந்­தஸ்­துக்­கான போராட்­ட­மாக ஏனைய மக்­க­ளுடன் இணைந்து, இன மத மொழி வேற்­று­மை­களைக் களைந்து, நடத்­தப்­ப­ட­வேண்­டிய ஒரு போராட்டம். அண்­மையில் நடந்­தே­றிய பொத்­துவில் தொடக்கம் பொலி­கண்டி வரை­யி­லான நடை­ப­வனி அவ்­வா­றான ஒரு உரிமைப் போராட்­டத்தின் முதல் அத்­தி­யாயம் என்று கூறினும் பொருந்தும்.

முஸ்லிம் என்ற அடை­யா­ளத்தை முன்­னி­லைப்­ப­டுத்தி நடத்­தப்­பட்ட அர­சி­யலே முஸ்­லிம்­களின் இன்­றைய பிரச்­சி­னை­க­ளுக்­கெல்லாம் காரணம். அதனைத் தவிர்த்து, பிர­ஜைகள் என்ற அடை­யா­ளத்தை முன்­னி­லைப்­ப­டுத்திப் போரா­டினால் அப்­போ­ராட்டம் அதே பிரச்­சி­னை­களை எதிர்­நோக்கும் சகல இனத்­த­வர்­க­ளையும் முஸ்­லிம்­கள்பால் ஈர்க்கும். அது ஒரு தேசியப் போராட்­ட­மா­கவும் மாறலாம். அதுவே இன்­றையத் தேவை.

நாடு பல கோணங்­க­ளி­லி­ருந்தும் பார­தூ­ர­மான பிரச்­சி­னை­களை இன்று எதிர்­நோக்­கி­யுள்­ளது. பொரு­ளா­தார வங்­கு­றோத்து, வறு­மையின் கோரப்­பிடி, இயற்கைச் சூழலின் சீர­ழிவு, பொதுச் சுகா­தாரச் சீர்­கேடு, வெளி­நாட்டு நெருக்­கடி, ஊழல் நிறைந்த அர­சியல், அடக்­கு­முறை ஆட்சி என்­ற­வாறு ஒரு நீண்ட பிரச்­சினைப் பட்­டி­ய­லையே தொகுத்­து­வி­டலாம். ஆனாலும் பௌத்த பேரி­ன­வா­தி­களின் ஏதோ ஒரு மாத்­தி­ரை­யினால் மயக்­க­முற்­ற­வர்­கள்­போன்று பெரும்­பான்மை இனம் இவற்றைக் கண்டும் காணா­த­துபோல் தூங்கிக் கொண்­டி­ருக்­கி­றது. அது விழிக்கும் நேரம் தூரத்தில் இல்லை. அவர்களை விழிக்கவைக்க வேண்டிய பொறுப்பு இன்று சிறுபான்மைப் பிரஜைகளின் தலையில் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த உண்­மையை முஸ்­லிம்கள் உணர்ந்தால் ஒரு புதிய தலை­மைத்­து­வத்தின் கீழ் சகல இனங்­க­ளு­டனும் கைகோர்த்து இலங்­கையை அதன் ஜன­நா­யகப் பாதைக்குத் திருப்பி இலங்­கையர் என்ற போர்­வையில் நாட்டை மீண்டும் கட்­டி­யெ­ழுப்பப் போரா­டலாம். ஜனா­ஸாக்­களை அடக்கும் உரி­மையைத் திருப்பிப் பெற்­ற­தனால் முஸ்லிம் பிர­ஜை­களின் ஏனைய பிரச்­சி­னை­களும் எப்­ப­டியோ தீர்ந்­து­விடும் என அல்­லாஹ்­விடம் அண்­ணாந்து கர­மேந்தி அவன் தலைமேல் பாரத்தைப் போட்டு அமை­தி­யுடன் இருக்க முடி­யாது. நபி­களார் அப்­படி இருந்­தி­ருந்தால் இஸ்­லாமே பரவி இருக்­காது. அவ­ரது வாழ்க்கை முழு­வ­துமே ஒரு போராட்டக் காவியம். எனவே தொடர்ந்தும் போரா­டியே இந் நாட்டின் உயி­ரோட்­ட­முள்ள பிர­ஜை­க­ளாக வாழ­வேண்டி இருக்­கி­றது. ஜனாஸாக்களை அடக்கினாலும் போராட்டம் அடங்கக் கூடாது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.