ஆணைக்குழுவின் நியாயமான பரிந்துரைகள் அமுலாக வேண்டும்

0 1,296

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும்பொருட்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு தற்போது அவரையே குற்றவாளியாகக் கண்டிருக்கிறது. தான் வெளிநாடு சென்றபோது நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத்தவறினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

அத்துடன் நாட்டின் பாதுகாப்புக்குப் பொறுப்புக் கூற வேண்டிய முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட பல பாதுகாப்பு மற்றும் உளவுச் சேவைகளின் அதிகாரிகள் மீதும் ஆணைக்குழு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.
அதேபோன்று இத்தாக்குதலின் சூத்திரதாரிகள் மற்றும் அவர்கள் சார்ந்த முஸ்லிம் சமூகம் குறித்தும் பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சில மார்க்க பிரசார அமைப்புகளை தடை செய்தல், புர்கா தடை, மத்ரஸாக்களை கண்காணித்தல், சில முஸ்லிம் பிரமுகர்கள் மீதான விசாரணைகள் குறித்த பரிந்துரைகளும் முக்கியமானவையாகும்.

இதனிடையே முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத கருத்துக்களை முன்வைத்து நாட்டில் வன்முறைகள் தோற்றம் பெறக் காரணமாக அமைந்த பொது பல சேனா அமைப்பை தடை செய்யுமாறும் அதன் பொதுச் செயலாளரான ஞானசார தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
முஸ்லிம் சமயத்தில் மாத்திரமன்றி சகல மதங்களினதும் கல்வி போதிக்கும் முறைமைகளில் மாற்றங்களைக் கொண்டுவருமாறும் ஆணைக்குழு சிபாரிசுகளை முன்வைத்துள்ளது.

ஆணைக்குழுவின் அறிக்கையிலிருந்து இதுவரை வெளிவந்துள்ள தகவல்களை வைத்து நோக்குகின்ற போது, ஆணைக்குழு மிகவும் சுயாதீனமான முறையில் விசாரணைகளை நடாத்தி தனது பரிந்துரைகளை முன்வைத்துள்ளது என்பதை உணர முடிகிறது. எனினும் இவற்றை ஏற்றுக் கொள்ள முடியாது என கடந்த சில தினங்களாக பெரும்பான்மை சமூகத்திலிருந்து குரல்கள் ஒலிக்க ஆரம்பித்துள்ளன.

இந்த அறிக்கையை முற்றாக நிராகரிப்பதாகவும் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் ஞானசார தேரர் கூறியிருக்கிறார். அறிக்கை முழுக்க முழுக்க பெளத்த சமூகத்தையே குற்றஞ்சாட்டுகின்ற போக்கில் அமைந்துள்ளதாக அஸ்கிரிய பீடம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையை நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தலைவராகக் கொண்டு செயற்படும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. இந்த அறிக்கை முழுக்க முழுக்க ஆளும்கட்சியின் கொள்கைப் பிரகடனம் போன்றுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறு குறித்த அறிக்கையை மலினப்படுத்தும் வகையில் பெரும்பான்மை சமூகத்திலிருந்து கருத்துக்கள் மேற்கிளம்புவது கவலைக்குரியதாகும்.

தாக்குதல் நடந்து இரண்டு வருடங்கள் பூர்த்தியாகப் போகின்ற நிலையில் இதுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்படவில்லை. குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படவில்லை. ஆனால் இந்த சம்பவத்தை முன்னிறுத்தி ஆட்சி மட்டும் மாறியிருக்கிறது. அரசியல்வாதிகள் மட்டும் நன்மையடைந்திருக்கிறார்கள்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஒரு சமூகத்தை மாத்திரம் பாதிக்கவில்லை. அத்துடன் அதற்கு ஒரு சமூகம் மாத்திரம் பொறுப்புமல்ல. இலங்கையர்களாக நாம் அனைவரும் அதற்குப் பொறுப்புக் கூற கடமைப்பட்டுள்ளோம். அதேபோன்று நம்மில் உள்ள தவறுகளை திருத்திக் கொண்டு நாட்டை முன்னேற்றுவதும் நமது பொறுப்பாகும்.
எனவேதான் ஆணைக்குழு முன்வைத்துள்ள நியாயமான பரிந்துரைகளை ஏற்று, தவறுகளை திருத்தி சுபீட்சமானதொரு எதிர்கால இலங்கையைக் கட்டியெழுப்ப திடசங்கற்பம் பூணுவதே நம்முன்னுள்ள பணியாகும்.

உயிர்த்த ஞாயிறு சம்பவத்தை வைத்து இன்னுமின்னும் அரசியல் செய்வதையோ ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டுவதையோ கைவிட்டு இதனால் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கவும் உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவும் நிரபராதிகளை விடுதலை செய்யவும் திறந்த மனதுடன் செயற்படுவதே இன்று நம் அனைவரதும் கடமை என்பதை வலியுறுத்த விரும்புகிறோம். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.